2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு நாள் எப்போதும் போல நான் ஜெயமோகனின் இணையத் தளத்தை வாசிக்க திறந்தேன். அவர் சென்னை வருவதாக சொல்லியிருந்தார். ஒரு குறுகுறுப்பில் என் இல்லத்திற்கு வர இயலுமா என அழைப்பு விடுத்தேன். எதிர்பார்க்கவேயில்லை. வருவதாக அவர் பதில் அனுப்பினார். நான் வியப்பானதற்கு காரணம் அதுதான் அவருக்கு நான் அனுப்பிய முதல் தனிக் கடிதம். மிகுந்த பரபரப்புடன் அவர் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு சென்றேன். இரு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் தயக்கத்துடன் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். “இருங்க ..இப்ப கிளம்பிரலாம்” என எழுந்தார். நான் தயக்கத்துடன் அவரது நண்பர்களைப் பார்த்தேன் - “அது பரவாயில்ல...நாம திரும்பற வரைக்கும் அவங்க இங்க இருப்பாங்க .. நாம போலாமா?”. நான் சற்று பதட்டமடைந்து “சார், ஒரு நிமிஷம், நான் டாக்சி சொல்லிடறேன் இப்ப ” என்றேன்.
“நீங்க எப்டி வந்தீங்க ?”
“என்னோட பைக்ல சார்”
“அப்ப வாங்க , அதுலயே போயிடலாம்”- படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டார். இரு நொடிகள் திகைத்து பின் ஓடிச் சென்று என் பைக்கை எடுத்து வந்தேன். தமிழின் புனைவெழுத்து தன் அதிகபட்ச எல்லைகளை தாண்டிச் செல்லுமாறு அதன் எல்லைகளை மாற்றியமைத்த ஒரு எழுத்தாளர், இந்திய மரபு, பண்பாட்டையும், தத்துவ விசாரங்களையும், சிந்தனை முறைகளையும், தரிசனங்களையும் தமிழ் படைப்புலகில் பேசுபொருளாக்கி தமிழ் நாவல் மரபிற்கு புது வடிவம் கொடுத்த எழுத்தாளர், செவ்வியல் காப்பியத்தன்மையை அதன் ஆத்மா மாறாமல் நவீன இலக்கியத்திற்குள் மீள்வடிவம் செய்து சாதித்த எழுத்தாளர், புதிய வாசகனின் ஆர்வத்தையும், சமரசமின்மையையும் ஒருங்கே கொண்டு இயங்கும் விரிவான விமரிசன முறையை நவீன இலக்கியத்தில் நிலை நாட்டிய ஒரு எழுத்தாளர், எல்லாவற்றுக்கும் மேலாக என் மனதிற்கு மிக நெருக்கமான எழுத்துகளை எழுதிக் குவித்தவர் - என் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து, தோளில் கைவைத்தபடி வருவதை என்னால் நம்பவே இயலவில்லை.
அன்று தொடங்கி இத்தனை ஆண்டுகளில் அவருடன் எத்தனையோ பயணங்களில் உடன் சென்றிருக்கிறேன் . நெடிய பயணங்கள், அபூர்வமான தருணங்கள், சவாலான சூழல்கள் , சுவாரசியமான உரையாடல்கள் என வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த முதல் பைக் பயணத்தில் அவர் எனக்களித்த வியப்பு இன்னும் குறையவில்லை.
அவரைச் சுற்றி இருப்பவர்கள் முதலில் அவரது வாசகர்கள் இல்லை என்றால் அதிர்ச்சி அடைய வேண்டாம். நான் பார்த்த வரையில் அவர் என்னை மட்டுமல்ல , தொடர்ந்து இரு முறைக்கு மேல் அவரை வந்து சந்திக்கும் யாரையும் “இவர் என் நண்பர்” என்றுதான் பிறருக்கு அறிமுகம் செய்து வைப்பார். “என் வாசகர்” என்ற மொழியுடன் அவர் இதுவரை எவரையும் அறிமுகம் செய்வித்ததில்லை. வாசகர்களாய் வருபவர்கள் நண்பர்களாய் ஆகிவிடுகிறார்கள். அவரைச் சுற்றிலும் நண்பர்கள்தான்.
நண்பர்கள் குழுவாக சேர்ந்தால் என்ன நிகழுமோ அவையனைத்தும் இங்கும் நிகழும். சேர்ந்தாற்போல் மூன்று நிமிடங்களுக்கு மேல் வெடித்து சிரிக்காத ஒரு சந்திப்பும் இதுவரை நிகழ்ந்ததில்லை. கோதாவரி நதி பயணம், காஷ்மீர் பள்ளத்தாக்கு பயணம், ஆகும்பே பயணம், வட கிழக்கு பயணம் - என இந்தியப் பயணங்களில் பயணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களது ஓட்டுனர்கள் குழம்பித் தவிப்பார்கள். பாடல்களே கேட்காமல், திரைப்படங்களும் பார்க்காமல், மதுவும் அருந்தாமல் பத்து, பதினைந்து நாட்களாக இப்படி முழுவதும் பேசி , “கெக்கே பிக்கே” என்று சிரித்தபடியே வரும் ஒரு பயணக் குழுவை அவர்கள் சந்தித்ததே இல்லையே ?
ஜெயமோகன் இதை சாத்தியப்படுத்தும் மிக சுவாரசியமான உரையாடல்காரர். ஆழமும், விரிவும் கொண்ட விஷயங்களை அவர் பேசும்போது முழுமையாக நம்மை தன்வசப்படுத்தி விடுவார். ஒரு முறை நாம் கேட்டு உணர்ந்தவற்றை மீள் சிந்தனை செய்தால் இவ்வளவா என்று நாமே வியந்து கொள்வோம். ஆனால் அத்தனை கனமான விஷயங்களும் சிரிப்பின்றி பேசப்பட்டதே இல்லை.
ஜெயமோகனிடமிருந்து தொற்றிக் கொள்வது அவரது அபாரமான நகைச்சுவை உணர்வு. கண்களில் குறும்புடன் , உடல் முழுதும் பொங்கி, உரக்க வரும் கடோத்கஜ சிரிப்பு ஜெயமோகனைத் தவிர நான் கண்ட அளவில் இன்னொரு தமிழ் எழுத்தாளருக்கு சாத்தியமில்லை என்றே நினைத்திருந்தேன், பவா செல்லத்துரையை சந்திக்கும் வரை. இங்கு நகைச்சுவை என்பது நண்பர்கள் குழுவில் ஒருவரை ஒருவர் பகடி செய்து கொள்ளுதலும், விளையாட்டுக்களும்தான். நதி கண்டதும் முதலில் இறங்கி அடுத்து வருபவர் மீது நீரை வாரி இறைப்பது, புல்வெளி சரிவுகளில் உருட்டி விடுவது, பின்னங்கழுத்தில் பனிக்கட்டியைப் போட்டு விட்டு ஓடுவது, கையில் வைத்திருக்கும் முறுக்கை பிடுங்கித் தின்பது, பயணத்தின் இரவுகளில் பேய்க் கதைகளை சொல்லி பயமுறுத்துவது என நண்பர் ஜெயமோகன் முற்றிலும் வேறொருவர். மிக முக்கியமான ஒன்றுண்டு. பகடியில் ஜெயமோகனுக்கு விதிவிலக்கு கிடையாது. குழுவில் அதிகமும் பகடி செய்யப்படுவது அவர்தான். புதிய வாசகர்கள் பலரும் அவர் எங்களால் பகடி செய்யப்படுவதை முதல்முறை பார்க்கும்போது நிலையழிந்து போவார்கள். சமூக நிகழ்வுகளில், விமரிசனங்களில் கடும் எதிர்வினை ஆற்றக்கூடிய ஜெயமோகன் நண்பர்களது கிண்டல்களை ஏற்று சிரித்துவேறு தொலைப்பதை பார்ப்பவர்கள் ஆப்பிரிக்க பாலையில் இறக்கிவிடப்பட்ட பனிக்கரடியாகத்தான் சிறிது நேரம் உணர வேண்டியிருக்கும். எழுத்தாளர் ஜெயமோகனின் பிரும்மாண்டத்தை அவர் நண்பர் ஜெயமோகனாக சுமந்து நின்றதில்லை எங்களுடன். மாறாக , அவரது எழுத்தாளுமை நண்பர்களுக்கான ஆசிரியர் இல்லாத பள்ளிச் சூழல். அப்படியான வகுப்புகள்தாம் எவ்வளவு இனியவை.... கேலிகள், கிண்டல்கள், சீண்டல்கள், விளையாட்டுகள், பகிர்வுகள் - அப்படித்தானே கற்றுக் கழித்தோம் நம் பள்ளி நாட்களை ....நல்லாசிரியனே களித் தோழனாகவும் அமைவது ஒரு வரம். நான் வரம் பெற்றவன்.
ஜனவரி, 2017.