சிறப்புப்பக்கங்கள்

ஜெட் லீ - பாயும் புலி

பாலகணேசன்

One must keep on and on to succeed  

- Basic slogan of shaolin skills

மதுரை அமிர்தம் திரையரங்கில் Once upon a time in China என்கிற சீன டப்பிங் படம் ஒன்று வெளியாகி இருந்தது. ஜாக்கிசான் படங்கள் பரவலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்த காலகட்டம் அது. குறிப்பாக ஜாக்கியின் Armour of God வகையறா ஆக்‌ஷன் படங்கள் வசூலை அள்ளிக் குவித்துக்கொண்டிருந்த காலகட்டம். அவ்வப்போது ஷாவோலின் துறவிகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படங்களும் வெளிவரும். ஆனால் அதில் ஜாக்கியின் நகைச்சுவை கலந்த சண்டைகளை தவிர வேறொன்றும் மனதில் பதியாது. பெரும்பாலும் அந்தமாதிரி படங்களை தவிர்த்துவிடுவோம். அந்த நேரத்தில்தான் ஜெட்லி நடித்த இந்தப்படம்  வெளியானது.

மொட்டைத் தலையில் சம்பந்தமில்லாமல் பின்புறம் தொங்கும் சடையும், பழைய காலத்து மஹாராஜாக்கள் தங்கள் அங்கவஸ்திரத்தின் முனையை கையில் சுருட்டி பிடித்திருப்பதைப் போல் உடையும், எவ்வளவு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தாலும் அலட்டிக் கொள்ளாத சாந்தமான நடையும் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் ஜெட்லி நடித்திருப்பார். வழக்கமாய் ஜாக்கியின் படங்களில் இப்படி கதாபாத்திரங்கள் வரும். ஒன்று அவர்கள் நல்லவர்களாக இருந்து கொல்லப்படுவார்கள். அல்லது வில்லனாக இருப்பார்கள். இங்கே கதாநாயகனே அவர்தான்.

எந்தவொரு விளையாட்டுத் தனமும் இல்லாமல் ஒரு நிஜ யுத்தமே சண்டைக் காட்சிகளில் நடப்பதைப் போல் உணர்ந்தோம். குறிப்பாக மூங்கில் கழிகள் கொண்டு இவர்கள் ஆடும் நர்த்தனம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வலிமை பெற்றிருந்தன. அதிவேகமாய் நகரும், துள்ளும், தாவும், அடிக்கும், பதிலடி கொடுக்கும் அந்த சண்டைக் காட்சிகள் பார்த்ததும் பிடித்தன. ஜெட்லி-யும் எங்கள் மத்தியில் பேசு பொருளானார்.

ஜெட்லி-யின் சண்டைக் காட்சிகள் வூ - ஷூ (Wu -Shu) என்கிற தற்காப்புக் கலையை அடிப்படையாகக் கொண்டவை. வூ - ஷூ கலைகளைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குங்ஃபூ அளவிற்கு இந்த தற்காப்புக் கலையின் பெயர் பரிச்சயமில்லை. குங்ஃபூ-விற்கும் இதற்கும் சண்டை இடும் முறையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. ஆனால் இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் உள்ளார்ந்த தத்துவங்கள்தான்.

தற்காப்புக் கலைகள் வெறும் உடல் வலுவாக்கும் பயிற்சிகள் மட்டும் இல்லை. அதையும் தாண்டி மனதையும் வலுவாக்கும் பொக்கிஷங்கள். இதை Ying & Yang   என்று அழைப்பார்கள். இதுதான் வூ - ஷூ கலையின் அடிப்படை.இந்த கலையில் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே நிபுணத்துவம் பெற்று தன் பத்தொன்பதாம் வயதில் அதிலிருந்து ஓய்வு பெற்று பின்னர் திரைத்துறையில் புகுந்து  புகழ்பெற்றவர்தான்  ஜெட்லி. சர்வதேச  வூ- ஷூ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வருடம் முதல் தொடர்ந்து ஐந்து வருடங்கள் இவர்தான் சாம்பியனாக இருந்தார். அந்த காலகட்டத்தில் இவர் கற்றுக்கொண்ட, உபயோகப்படுத்திய அசைவுகளும், நுணுக்கங்களும்-தான் Shaolin Temple படத்தில் அறிமுகமானபோது இவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

 ப்ரூஸ்லி-யின் சண்டைக்காட்சிகள் குறிப்பிட்ட எந்தவொரு கலையையும் மையப்படுத்தியதில்லை. அது ஒரு கலவையான, ப்ரூஸ் லீ தனக்கென வடிவமைத்துக் கொண்ட ஒரு விஷயம். ஜாக்கிசானின் சண்டைக் காட்சிகளில் குங்ஃபூ பிரதானமாக இருந்தாலும் அதில் அவர் சரிசமமாக கலக்கும் நகைச்சுவைதான் அதை நாம் மீண்டும் மீண்டும் பார்க்க வைப்பதாய் இருக்கிறது. ஆனால் ஜெட்லி அப்படியல்ல. நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் அவர் எந்தவித பாசாங்கும் இல்லாத உண்மையான தற்காப்புக் கலையின் அசைவுகளை தன் படங்களில் பயன்படுத்துகிறார். இதனாலேயே அவர் பங்குபெறும் சண்டைக் காட்சிகள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது.

இதைவிட முக்கியமாக ஷவோலின் துறவிகள் முன்னர் பயன்படுத்தி, தற்போது வழக்கத்திலேயே இல்லாத புராதன ஆயுதங்களை தேடிப்பிடித்து தன் படங்களில் பயன்படுத்துவதை தனது கடமையாகவே கொண்டுள்ளார் ஜெட்லி. ஒரு துறவி வாசித்துக் கொண்டிருக்கும் புல்லாங்குழலும், எப்போதும் இடுப்பில் சொருகியிருக்கும் கைவிசிறியும் எந்நேரமும் ஆயுதமாக அவர்களால் பயன்படுத்தப்படும் வண்ணம் உலோகத்தால் செய்யப்பட்டது.இந்த ஆயுதங்கள் ஜெட்லியின் படங்களில் எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய Huo Yuanjia என்கிற  படத்தை காணலாம். இந்த Huo Yuanjia சீனாவின் மிக முக்கியமான ஒரு தற்காப்புக் கலை நிபுணர். இவரது வேடத்தில் நடித்தது கிட்டத் தட்ட ஜெட்லியின் மிகப்பெரிய கனவு நனவான சம்பவம். அதேபோல் Once upon a time in china  பட வரிசையில் இவர் யாரையுமே அந்த தற்காப்பு கலையை உபயோகப்படுத்தி கொல்வது போல காட்சிகள் இருக்கவே இருக்காது. அந்த தீயவனுக்கு தக்க பாடம் கற்பித்துவிட்டு அவனை மன்னிப்பது போலவே காட்சிகள் இருக்கும். அவர் கற்ற அந்தக்  கலையின் வெளிப்பாடு அது.

ஜெட்லியின் தந்தை ஜெட்லிக்கு இரண்டு வயதிருக்கும்போதே இறந்துவிட்டார். எட்டு வயதாக இருக்கும்போது ஒரு கோடைகால பள்ளி சிறப்பு பயிற்சி முகாமில் இவரின் திறமை ஆசிரியர்களால் கண்டறியப்பட பீஜிங் வூ-ஷூ குழுவில் சேர்க்கப்பட்டார். அங்கே இவரின் பயிற்சியாளராக இருந்த Wu-Bin கிட்டத்தட்ட தன் மகனைப் போல ஜெட்லியை கவனித்துக்கொண்டார். சமயங்களில் ஜெட்லியின் வீட்டிற்கு  தேவையான சமையல் பொருட்களையும் கூட இவரே வாங்கித் தந்தார். 19 வயது வரை ஜெட்லி தற்காப்புக் கலை விளையாட்டில் கண்ட எல்லா வெற்றிக்கும் காரணகர்த்தாவாக இவரே திகழ்ந்தார். இடையில் இரண்டே வருடங்கள் மட்டும் ஜெட்லி குங்ஃபூ கற்றுக்கொண்டார். எதிர்பாராவிதமாக ஜெட்லிக்கு ஒரு விபத்து நேரிட இனிமேல் கால்களை நடப்பதற்கு மட்டுமே ஜெட்லி பயன்படுத்த முடியும் என மருத்துவர்கள் கைவிரித்த சம்பவமும் அதே 19-வது வயதில் நடந்தது. அந்த சோதனையை வெல்வதற்கும் அவர் கற்றுக்கொண்ட Wu-Shu கலையே அவருக்கு  துணைபுரிந்தது. ஒருமுறை ஜெட்லி தன் குழுவினரோடு அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் முன்னிலையில் தற்காப்புக் கலை டெமோ செய்து காண்பிக்க அதைக்கண்டு வியந்த அதிபர் ஜெட்லியை தனது பாதுகாவலராக பணிபுரிய வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த ஜெட்லி,‘ நான் தனிப்பட்ட எவரையும் பாதுகாக்க விரும்பவில்லை. நான் வளர்ந்து பெரியவனான பின்பு ஒரு பில்லியன் மக்கள் தொகை கொண்ட மொத்த சீன மக்களையும் பாதுகாக்க விழைகிறேன்..’ என்றாராம்.

மேலும் இளம் வயதிலேயே அவர் 45-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து குங்ஃபூ டெமோ செய்து காட்டிய அனுபவம் இருந்ததால் ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது அவரால் மிக எளிதாக அந்த புதிய சூழ்நிலையை கையாள முடிந்தது. ‘1980-களில் அமெரிக்கச் சிறுவர்கள் வீடியோ கேமில் துப்பாக்கி வைத்து சுட்டுக் கொண்டிருந்தார்கள். 1990-களில் அந்த வீடியோ கேம்-களின் வடிவம் மாறி அதில் தற்காப்பு கலைகளை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுக்கள் புகழ்பெற ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் ஹாலிவுட்டில் இந்த தற்காப்புக் கலைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் வெளிவர ஆரம்பிக்க,‘ இந்த வித்தைகளை உண்மையில் செய்யும் ஆட்களும் கூட இருக்கிறார்கள்..’ என்கிற உண்மை அவர்களுக்கு தெரியவந்தது. அதனால் நான் நடித்த படங்கள் எளிதில் அவர்களை சென்றடைந்தது‘ என ஹாலிவுட்டில் தான் அடைந்த வெற்றியைப் பற்றி ஜெட்லியே கூறுகிறார்.

ஜெட்லி நடித்த Danny The Dog என்கிற படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த படம். மார்கன் ஃப்ரீமேன் என்கிற ஜாம்பவானுடன்  நடித்து நம்மை திருப்தி செய்வது மிக மிகக் கடினம். அதை இந்தப் படத்தில் ஜெட்லி அட்டகாசமாக செய்திருப்பார். அதேபோல் ஹீரோ என்கிற படத்தில் சரிசமமான பலம்பொருந்திய வில்லனோடு இவர் மோதுவதுபோல் இருவரும் இணைந்து கற்பனை செய்து பார்க்கும் சண்டைக் காட்சியும் மிகவும் குறிப்பிடத்தக்கது. The Forbidden Kingdom  ஜாக்கிசானோடு இவர் இணைந்து  நடித்த படம். அதில் குரங்கு ராஜாவாக இவர் செய்யும் சேட்டைகள் மறக்க முடியாதது. 

ஆனாலும் ஜெட்லி என்றவுடன் என் நினைவுக்கு உடனே வருவது Dare Devil  என்கிற படத்தில் ஒரு டேபிளை வைத்து தன்னைத் தாக்குவதை தடுக்கும் வில்லனை அடிக்க அதிவேகமாக அந்த டேபிளின் நான்கு கால்களையும் கைகளால் உடைத்துவிட்டு, படபடவென முன்னேறி டேபிளின் மையப்பகுதியில் இவர் குத்தும் காட்சி.

விலங்குகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மனிதன் கண்டறிந்த இந்த தற்காப்புக் கலைகள் பின்னர் நாடுகளைப் பிடிக்க உதவும்  ஆயுதமானது. பின்னர் இடையில் வெறும் ஒலிம்பிக் பதக்கங்கள்  பெற்றுத் தரும் விளையாட்டாக மட்டுமே இருந்து இப்போது திரைப்படங்கள் மூலமாக புத்துயிர் பெற்றிருக்கிறது. இந்த அபூர்வ கலையை எக்காலத்திலும் அழிய விடக்கூடாது என்று முன்னெடுக்கும் பலரில் ஜெட்லியும் குறிப்பிடத்தகுந்த ஒருவர். அவர் இந்த கலையை வெறும் காசாக மாற்றும் கருவியாக மட்டும் எண்ணாமல் அதை நீண்ட நெடுங்காலம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய  அவசியத்தை உணர்ந்தும் செயல்படுகிறார்.

சண்டைக் கலைகளில் நன்கு  தேர்ச்சி பெற்ற ஒருவர் ஒரு சிறந்த நடிகராகவும் மின்னுவது அவரது திறமையை பறைசாற்றும் சான்று. விலங்குகள் மற்றும் பறவைகளின் உடல்மொழிகளை அடிப்படையாக வைத்துதான் பெரும்பாலான ஷாவோலின் சண்டை முறைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆக மனிதன் இயற்கையோடு வாழ்ந்த காலகட்டங்களில் அவன் கூர்ந்து கவனித்த விலங்குகளின் அசைவுகள் அவனுக்கு மிகுந்த உதவிகரமாக இருந்திருக்கின்றன. இயற்கை சமநிலையை அவன் உணர்வதற்கான வாய்ப்பையும் இது ஒருசேர வழங்கியிருந்தது. ஆனால் இன்றைய சீனாவின் வளர்ச்சி தனக்கு பயமளிக்கிறது என்று வெளிப்படையாக வருத்தப்படுகிறார் ஜெட்லி.

‘ சீனா கடந்த இருபது வருடங்களில் அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி மிகுந்த வேகமாக நடப்பதுதான் எனக்கு கவலையளிக்கிறது. எப்படி மிக மெதுவான வளர்ச்சி தவறோ அதேபோல்தான் மிக வேகமான வளர்ச்சியும். ஒரு சமநிலை (Balance)) எப்போதும் இருத்தல் வேண்டும். குறிப்பாய் இந்த தற்காப்பு  கலைகளை மக்களிடையே அதிகளவில்  கொண்டு சேர்ப்பதன் மூலம் Ying மற்றும் Yang  இரண்டையும் பலப்படுத்தி ஒரு சமநிலையை மக்களிடம் ஏற்படுத்தலாம்.  சமநிலை இருந்தால் உலகில் அமைதி மிக எளிதில் உண்டாகும்.’ - என்கிற இவரின் வார்த்தைகள் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

ஜூலை, 2016.