தமிழ் திரை இசையில் சாஸ்திரீய இசையோ, பாமர மக்கள் ரசிக்கும் இசையோ எதுவானாலும் அதில் சிகரத்தைத் தொட்டவர் மாபெரும் இசை மேதை ஜி.ராமநாதன்.
திருச்சிக்கும் லால்குடிக்கும் இடையில் இருக்கும் பிச்சாண்டர் கோவில் என்ற கிராமத்தில் கோபால அய்யரின் மகனாக 1910 -ஆம் ஆண்டு ஜி. ராமநாதன் பிறந்தார். அவரது சிறு வயதிலேயே அன்னை, தந்தை இருவரும் ஒருவர் பின் ஒருவராக இயற்கை எய்திவிட்டனர். பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ராஜா மடத்துக்கு தன் அண்ணன் சுந்தரம், தம்பி தங்கைகளுடன் இடம் பெயர்ந்தார் அவர். அண்ணன் சுந்தரம் ஹரி கதை செய்வதில் ‘ராஜா மடம் சுந்தர பாகவதர்‘ என்று பிரபலம் அடைய அதிலிருந்துதான் ஜி.ராமநாதனின் இசைப் பயிற்சியும் தொடங்கியது. மிகப்பெரிய ஹார்மோனியக் கலைஞராகவும் அவர் வளர்ச்சி அடைந்தார்.மேடை நாடகமான காலவரிஷி திரைப்படம் ஆனபோது ஜி.ராமநாதனுக்கு அதன் இசையை ஒருங்கிணைக்கும் பொறுப்பு கிடைத்தது. அதன் பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் பங்குதாரராக இருந்த ஏஞ்சல் பிலிம்ஸ் பரசுராமர் என்ற படத்தைத்தயாரித்த போது அதன் முழுமையான இசை அமைப்பாளர் ஆனார். ஜி.ராமநாதன். இப்படம் வெளியான ஆண்டு 1940. இதிலிருந்து தமிழ்த் திரையுலகில் இவரது இன்னிசை ஆட்சி ஆரம்பமானது.
மாடர்ன் தியேட்டர்ஸின் அடுத்தபடமான உத்தமபுத்திரனில் இவரது ராஜ்யத்தின் விதை ஊன்றப்பட்டது. அதில் தழுவல் மெட்டுக்களே தயாரிப்பாளர் விருப்பத்தின் பேரில் போடப்பட்டிருந்தாலும் ஜி.ராமநாதன் சுயமாகப் போட்ட மெட்டுதான் செந்தமிழ்நாடென்னும் போதிலே என்ற பாரதியின் பாடல். இது ஓர் அருமையான ராகமாலிகைப் பாடல். இதற்கிடையில் பாபநாசம் சிவனிடமும் உதவியாளராகச் சேர்ந்து தன்னை மெருகேற்றிக்கொண்டார் ஜி.ராமநாதன். அடுத்து பக்ஷிராஜா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஆரியமாலா. ஆர்யாமாலாவின் வெற்றி தந்த அடுத்த வாய்ப்பு அன்றைய உச்ச நட்சத்திரம் எம்.கே. தியாகராஜ பாகவதருடன்... அது சிவகவி. பாடல்களை பாபநாசம் சிவன் அவர்கள் எழுதி இசை அமைக்க, பின்னணி இசையை ஜி.ராமநாதன் கவனித்துக் கொள்வது என்று தீர்மானிக்கப் பட்டு ‘சிவகவி‘ படம் ஆரம்பமானது. ஆனால் ஒரு சம்பவம் ஜி. ராமநாதனே முழு இசை அமைப்பையும் கவனித்துக்கொள்ள வைத்தது.
பாடலை எழுதி அதற்கான மெட்டையும் மைத்துவிட்டு தியாகராஜ பாகவதரிடம் அதனை பாடிக்காண்பித்தார் பாபநாசம் சிவன். கேட்டுவிட்டு,“நன்றாகத்தான் வந்திருக்கிறது. ஆனால்.. எதற்கும் ராமநாதனிடமும் இதனைக் காட்டி ஏதாவது திருத்தங்கள் இருக்கிறதா என்று கேட்டுவிடலாமே,“என்றாராம் தியாகராஜ பாகவதர்.
“என்னுடைய பாட்டிலேயே திருத்தம் சொல்லக்கூடிய அளவுக்கு ராமநாதன் இருக்கிறான் என்றால் இனிமேல் நான் பாட்டை எழுதிக் கொடுக்கறதோட நிறுத்திக்கறேன்.” - என்று பாடல்களுக்கும் இசை அமைக்கும் பொறுப்பை ராமனாதனிடமே கொடுத்துவிட்டாராம் பாபநாசம் சிவன்!
சிவகவி படத்தில் இடம்பெற்றதுதான் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து‘ பாடல். இந்த வெற்றிப் பாடலை விஜயநாகரி, புவனகாந்தாரி ஆகிய ராகங்களைக் கையாண்டு ஜி. ராமநாதன் படைத்திருக்கிறார்.
இதன் பிறகு ஜி. ராமநாதனின் இசையில் வெளிவந்த ஜகதலப் பிரதாபனில் வரும் ‘தாயைப் பணிவேன்‘ என்ற பாடல் முக்கியமானது.
அடுத்து கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரான எம்.கே. தியாகராஜ பாகவதரின் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை பெற்றார் ஜி. ராமநாதன். அப்படம் ஹரிதாஸ். மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடி சாதனை படைத்தது. மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல் இப்படத்தில் வந்து பெரும்புகழ் பெற்றது. தமிழ் சினிமாவின் பாடல்களைப் பற்றிப் பேசுகையில் முதன்மையாக பேசவேண்டிய பாடல் இதுதான்.
பின்னர் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, பொன்முடி போன்ற படங்களில் முத்திரைபதித்த இவர், அடுத்து இசை அமைத்தது மந்திரிகுமாரி(1950). வாராய்.. நீ வாராய்... உலவும் தென்றல் காற்றினிலே ஆகிய ஜிக்கி, திருச்சி லோகநாதன் இருவரும் பாடிய பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. இப்படத்தில் ஜிக்கிக்கு இவர் பாட வாய்ப்பளித்த போது அவருக்கு வயது 13தான். இந்த நிலையில்தான் புதுயுகம் என்ற சொந்தப்படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டார் ஜி.ராமநாதன். இதற்கு முன்பாக அவர் கூட்டுத்தயாரிப்பில் எடுத்த ஒரு படமும் தோல்வியை அடைந்திருந்தது. 1951 , 1952, 1953 - ஆகிய வருடங்கள் ஜி. ராமநாதனின் வாழ்க்கையில் சோதனையான கால கட்டங்கள் என்கிறார்கள். பின்னர் வந்த தூக்குத்தூக்கி படப் பாடல்கள் பெரும் புகழ்பெற்றன. டி.எம்.எஸ் முதலில் சிவாஜிக்குப் பின்னணி பாடிய படம் இது.சீர்காழி கோவிந்தராஜனையும் வாய்ப்பு தந்து வளரச்செய்தவர் ஜி.ராமநாதன் தான். கே.வி. மகாதேவன் இசை அமைத்த ‘அல்லி பெற்ற பிள்ளை‘ என்ற படத்தில் ஒரு சோகமான சூழலுக்கு பின்னணி பாட அழைப்பு வந்தபோது சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக்கொண்டார் ராமநாதன்.‘எஜமான் பெற்ற செல்வமே என் சின்ன எஜமானே... பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே‘ இப்பாடலைக் கேட்டால் இன்றும் துயரம் சூழ்ந்துகொள்கிறது. 1955-வெளிவந்த ‘சதாரம்‘ - ஜெமினி கணேசன், கே.ஆர். ராமசாமி, பி. பானுமதி நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற டி.எம். சௌந்தரராஜன் பாடிய ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’ என்ற ஷண்முகப்ரியா ராகப் பாடல், ‘நான் பெற்ற செல்வம்.‘ படத்தில் கவி. கா.மு. ஷெரீப் எழுதிய வரிகளுக்கு ‘சிந்துபைரவி‘ ராகத்தை கையாண்டு உருவான காலத்தால் அழியாத அந்தக் காவியப் பாடல்தான் ‘வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். வையகம் இதுதானடா.’ - என்ற பாடல்.
அதே ஆண்டு ராமநாதனின் இசைக்கு இன்னொரு வெற்றிமகுடத்தைச் சுமந்து வந்தான் ‘மதுரை வீரன்’. ‘வாங்க மச்சான் வாங்க.’ என்ற பாடல் அதில் பெருமளவுக்கு பாமரர்களையும் கவந்து புகழ்பெற்றது.
- டி.எம்.எஸ் - ஜிக்கி இருவர் குரல்களில் ‘நாடகமெல்லாம் கண்டேன் உனது ஆடும் விழியிலே’ - இன்றளவும் மக்கள் நினைவில் இருந்து மங்காத ஒரு பாடல். அம்பிகாபதியில் சிந்தனை செய்மனமே, சக்கரவர்த்தி திருமகளில்,‘எண்ணமெல்லாம் இன்பக்கதை பேசுதே..’ என அவரது வெற்றிக்கதை தொடர்ந்தது.
அடுத்து வந்த முக்கியமான படம் உத்தமபுத்திரன். இது பழைய உத்தமபுத்திரனின் ரீமேக்தான். இதற்கும் ராமநாதனே இசை. யாரடி நீ மோகினி, காத்திருப்பான் கமலக்கண்ணன், முல்லைமலர் மேலே மொய்க்கும் வண்டு போலே.. அனைத்தும் காலத்தால் அழியா வைரத்துண்டுகள்..
வீரபாண்டிய கட்டபொம்மன் வந்தபோது அதில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் அடைந்தன. அஞ்சாத சிங்கம் என் காளை, இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே.. என இப்பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் புகழ் அடைந்தன. கப்பலோட்டிய தமிழனில் ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ ‘வந்தே மாதரம் என்போம்’ - ‘வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்’ ‘காற்றுவெளியிடைக் கண்ணம்மா’ ‘நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி’ - ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ பாடலும் ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை’ ‘ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என பாரதியின் பாடல்களை நிலைத்திருக்க வைத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.
1962 -இல் ஜி.ராமநாதனின் இசையில் அவரது சொந்தத் தயாரிப்பான ‘பட்டினத்தார்’ வெளிவந்தது. இன்னொன்று தெய்வத்தின் தெய்வம். அதில், நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை என்று மனமுருகிப் பாடுகிறார் சுசீலா. 1963-ல் கடைசியாக அருணகிரிநாதர் படத்துக்கு இசை அமைத்துக் கொண்டிருந்தபோது காலமானார் இந்த இசைச்சக்கரவர்த்தி. நீ இல்லாத உலகில் நிம்மதி இல்லை என்று இசை ரசிகர்கள் உருகினார்கள்.
(தகவல்கள் உதவி: பி.ஜி.எஸ்.மணியன்)
ஜனவரி, 2014.