சிறப்புப்பக்கங்கள்

ஜாக்கியின் தமிழ்க்குரல் - இன்னா மாமே!

ஆர்.ஆர்.தயாநிதி

முரளிகுமார்.. தமிழ் சினிமா டப்பிங் உலகில் பிரபலமான பெயர்.. காரணம் இவர் உதவி இல்லாமல் ஜாக்கிசானால் தமிழ் பேச முடியாது. 25 வருடங்களுக்கும் மேலாக ஜாக்கிசானின் அத்தனை படங்களிலும் அவருக்காக தமிழ் டப்பிங் குரல் கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர்.  நடிப்பு ஆர்வம் இவரை திரைப்படக் கல்லூரியில் கொண்டு சேர்க்க, அங்கு இயக்கம் கற்க வந்த ஆபாவாணனோடு நட்பாகி, அவரது முதல் படமான ஊமைவிழிகளில் துணை இயக்குனரானார். அவரது அடுத்த படமான செந்தூரப்பூவே வில் வாய் பேச முடியாத ஊமை கதாப்பாத்திரத்தில் நடித்த முரளிகுமாருக்கு டப்பிங் பேசுதல் முழு நேர தொழிலானது ஒரு சுவாரஸ்யமான முரண். அதை தொடர்ந்து இணைந்த கைகள் படத்தில் நடித்ததோடு கதாநாயகன் அருண்பாண்டியனுக்கும் குரல் கொடுத்திருந்தார். அது பரவலான வரவேற்பைப் பெறவே டப்பிங் துறைக்குள் நுழைந்தார்.

அந்த டப்பிங் ஸ்டுடியோவிற்கு ஜாக்கிசானின் சீன படமொன்று மொழிமாற்றம் செய்து ஈஙஈ யாக வெளியிடுவதற்கான வாய்ப்பு வர, அப்போது ஜாக்கிசானுக்கு குரல் கொடுத்த முரளிகுமார், ஒரிஜினலில் இல்லாத நகைச்சுவை வசனங்களை சேர்த்து பேச , அந்த புதிய பாணி எல்லோருக்கும் பிடித்து போக, அதன் பிறகு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அத்தனை ஜாக்கிசான் படங்களுக்கும் இவர் மட்டுமே குரல் கொடுத்த சாதனைக்கு சொந்தக்காரரானார்.

ஜாக்கிசான் போக, பாண்ட், வில் ஸ்மித் போன்ற பல ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு இவர் குரல் கொடுத்திருந்தாலும் அவர்களுக்கான அடுத்தடுத்த படங்களுக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு இவரை தேடி வரவில்லை. ஆனால் ஜாக்கிசானின் அத்தனை படங்களின் வாய்ப்பும் இவர் வீட்டு கதவையே தட்டியது. இவர் கைங்கர்யத்தால் ஜாக்கிசான் ‘இன்னா மாமே’ என்று மெட்ராஸ் பாஷை பேச குஷியாகி போனார்கள் ரசிகர்கள்.

இப்படி மொழி மாற்று படங்களுக்கு டப்பிங் பேசுவதில் பிஸியானவரை ‘நாட்டாமை’ பொன்னம்பலம், ‘ரன்’ அதுல் குல்கர்னி, ‘சண்டக்கோழி’ லால் என பல வில்லன் நடிகர்களுக்கு குரல் கொடுக்க வைத்தனர் தமிழ் சினிமா இயக்குனர்கள். அதில் ’ரன்’ படத்தில் அதுல் குல்கர்னிக்கு குரல் கொடுத்தமைக்கு 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த டப்பிங் கலைஞருக்கான மாநில அரசின் விருது இவருக்கு கிடைத்தது.

டப்பிங் தவிர பல திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

ஜூலை, 2016.