சிறப்புப்பக்கங்கள்

ஜனதா: காணாமல் போன கட்சி!

ஆர்.முத்துகுமார்

ஜனதா. எமர்ஜென்சிக்குப் பிறகான தேர்தலில் இந்திராவை வீழ்த்தவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி. உண்மையில், அது ஒற்றைக்கட்சி அல்ல. ஜனசங்கம் உள்ளிட்ட பல்வேறு சித்தாந்தங்களைப் பேசுகின்ற கட்சிகளின் ஒருங்கிணைவு. மக்களின் நம்பிக்கையைக் குறுகிய காலத்தில் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய அந்தக் கட்சி, அதே வேகத்தில் கரைந்து, உடைந்து, பிரிந்து காணாமல் போனது அரசியல் அதிர்ச்சி மட்டுமல்ல, வரலாற்று ஏமாற்றமும்கூட. உண்மையில் ஜனதாவின் தோற்றத்துக்கு யார் காரணம்? மறைவுக்கு என்ன பின்னணி?

0

எழுபதுகளின் மத்தியில் எமர்ஜென்சியை அமல்படுத்திய பிரதமர் இந்திரா மீண்டும் தேர்தலை நடத்துவாரா என்ற சந்தேகம் கட்சிகளை ஆக்கிரமித்திருந்த நிலையில் திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்டது. சட்டென்று சுதாரித்த எதிர்க்கட்சிகள் இந்திராவை வீழ்த்த ஆயத்தமாகின. அப்போது இந்திரா எதிர்ப்பு சக்திகளுக்கு வழிகாட்டிவந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் வகுத்த வியூகம்தான் ஜனதா.

ஒற்றை எதிரியை வீழ்த்த ஒற்றைக் கட்சி, ஒற்றைச் சின்னம் என்பது இந்திராவைத் தேர்தல் களத்தில் வீழ்த்த ஜெ.பி வகுத்த வியூகம். அதைச் செயல்படுத்த சித்தாந்தம், செயல்பாடு, கட்டமைப்பு ரீதியாக வெவ்வேறு துருவங்களில் இயங்கிய பாரதிய ஜன சங்கம், ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட் கட்சி, பாரதிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளை ஜனதா என்ற பெயரில் ஒன்றுதிரட்டினார் ஜெ.பி. அதன் தலைவராக மொரார்ஜியும் துணைத்தலைவராக சரண்சிங்கும் தேர்வாகினர். வழிகாட்டியாக ஜெ.பி இருந்தார். பொதுச்செயலாளர்களாக அத்வானி, மதுலிமாயி உள்ளிட்டோர் தேர்வாகினர். 28 பேர் கொண்ட தேசிய செயற்குழு உருவாக்கப்பட்டது.

மூன்றில் இருபங்கு காவி, ஒரு பங்கு பச்சை நிறம் கொண்ட கொடியையும், பாரதிய லோக்தளத்தின் ஏர் உழவன் சின்னத்தையும் ஏற்பதென முடிவானது. அப்போது ஜெகஜீவன் ராமின் ஜனநாயக காங்கிரஸ், சிபிஎம், அகாலிதளம், திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் ஜனதாவுக்குக் கிடைத்தது. 1977 பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 542 தொகுதிகளில் ஜனதா 391 தொகுதிகளில் போட்டியிட்டது. குறிப்பாக, உ.பி, ம.பி, ராஜஸ்தான், பீகார், குஜராத், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஜனதா வலுவாக இருந்தது. 

எமர்ஜென்சி கால அத்துமீறல்களை முதன்மையான தேர்தல் பிரச்னையாக முன்வைத்து ஜே.பி உள்ளிட்ட ஜனதா தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஜனநாயகத்தை முன்வைக்கும் ஜனதா, சர்வாதிகாரமாக இயங்கும் இந்திரா காங்கிரஸ் ஆகிய இரண்டில் எது தேவை என்பதை வாக்காளர்களாகிய நீங்களே முடிவுசெய்யுங்கள் என்று அறைகூவல் விடுத்தார் ஜெ.பி.

தேர்தலின் முடிவில் இந்திரா வீழ்த்தப்பட்டார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட ஜனதா தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 295 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக்கட்சிகளும் கணிசமாக வென்றிருந்தன. அப்போது ஜனதா கட்சியின் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. மொரார்ஜி, சரண்சிங், ஜெகஜீவன்ராம் என்று பலரும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டத் தொடங்கினர். ஆனால் இறுதி முடிவை ஜெ.பியே எடுத்தார். அவரது தேர்வு மொரார்ஜி தேசாய்.

19 அமைச்சர்களைக் கொண்ட மத்திய அரசை அமைத்தார் மொரார்ஜி. ஜனதா அரசில் சரண் சிங், ஜெகஜீவன் ராம், ராஜ் நாராயண், பிஜூ பட்நாயக், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். முதலில் சரண்

சிங்கும் பிறகு ஜெகஜீவன் ராமுக்கும் துணைப் பிரதமர் பதவி தரப்பட்டது. தமிழ்நாட்டைச்  சேர்ந்த பா.ராமச்சந்திரனும் அமைச்சராகியிருந்தார். அப்போது தமிழ்நாட்டில் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் உள்ளிட்ட ஜனதா வேட்பாளர்கள் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிடாமல் ராட்டையில் நூல் நூற்கும் பெண் சின்னத்தில் போட்டியிட்டே வெற்றிபெற்றிருந்தனர். ஆனாலும் ஜனதா எம்.பிக்களாகவே கருதப்பட்டனர்.

எமர்ஜென்சி அத்துமீறலுக்கு எதிரான ஷா கமிஷன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிஷன் என்று நகர்ந்த ஜனதா அரசுக்குள் ஆர்.எஸ்.எஸ்ஸை முன்வைத்து ஆரம்பச் சிக்கல் எழுந்தது. முன்னாள் ஜனசங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகாக்களில் பங்கேற்பதாகவும், மத்திய அமைச்சர்களாக அத்வானி, வாஜ்பாய் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி நிதி திரட்டுவதாகவும் ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டினர். முக்கியமாக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருப்பவர் ஜனதாவில் உறுப்பினராகத் தொடரக்கூடாது என்ற கருத்து கட்சிக்குள் தீவிரமடைந்தது.

இதற்கிடையே மொரார்ஜி -&சரண் சிங் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஆட்சியையே காவு வாங்கத் தயாரானது. மொரார்ஜி அரசைக் கவிழ்க்கும் வகையில் சஞ்சய் காந்தியுடன் கைகுலுக்கினார் சரண் சிங். அதன்மூலம் ஆட்சி கவிழ்வது உறுதியாகவே, பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மொரார்ஜி. பிறகு இந்திரா காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமரானார் சரண் சிங். அந்த அரசுக்கு இந்திரா காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன.

ஜனதாவிலிருந்து விலகி சரண் சிங்கின் பின்னால் அணி திரண்டவர்கள் மதச்சார்பற்ற ஜனதா என்று தங்கள் கட்சிக்குப் பெயர் வைத்தனர். ஆனால் ஆட்சியைத் தக்கவைக்கமுடியவில்லை. எமர்ஜென்சி அத்துமீறல்களை விசாரிக்க மொரார்ஜி அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் வேகமெடுக்கவே, ஆத்திரமடைந்த இந்திரா இருபதே நாள்களில் சரண்சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்தார். அதன்பிறகு மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அப்போது சந்திரசேகர் தலைமையில் ஜனதாவும் ராஜ் நாராயண் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாவும் தேர்தல் களத்துக்கு வந்தன. தமிழ்நாட்டில் அதிமுகவும் ஜனதாவும் கூட்டணி அமைத்தன. நானூறுக்கும் அதிகமான இடங்களில் ஜனதா போட்டியிட்டது. சரண் சிங், ராஜ் நாராயண் வழிநடத்திய மதச்

சார்பற்ற ஜனதா வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சுமார் 300 இடங்களில் போட்டியிட்டது.

தேர்தல் பிரசாரத்தில் மூன்றாண்டுகால ஜனதா  அரசின் சாதனைகளுக்கு ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா என்ற இரு கட்சிகளும் சொந்தம் கொண்டாடின. தேர்தலின் முடிவில் இந்திரா காந்தி ஆட்சியைப் பிடித்தார். ஜனதாவுக்கு 31 இடங்களும் மதச்சார்பற்ற ஜனதாவுக்கு 41 இடங்களும் கிடைத்தன. ஜனதா சார்பில் வெற்றிபெற்றவர்களுள் ஜெகஜீவன் ராம், சந்திரசேகர், வாஜ்பாய், சுப்ரமணியன் சுவாமி, ராம் ஜெத்மலானி ஆகியோர் முக்கியமானவர்கள். மதச்சார்பற்ற ஜனதாவின் சார்பில் வெற்றிபெற்றவர்களுள் தேவிலால், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் முக்கியமானவர்கள்.

என்ன ஒன்று, 1977 தேர்தலில் ஜனதா வென்றபோது அதில் 93 பேர் முன்னாள் ஜன சங்கத்தினர். ஆனால் 1980 தேர்தலில் வெறும் 16 பேர் மட்டுமே முன்னாள் ஜனசங்கத்தினர். ஜனதாவின் தோல்விக்கு ஆர்.எஸ்.எஸ்ஸும் முன்னாள் ஜன சங்கத்தினருமே காரணம் என்று சொல்லி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட முன்னாள் ஜனசங்கத்தினரை வெளியேறவேண்டுமென்ற நிர்பந்தம் எழுந்தது.

வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்ததால் இனியும் ஜனதாவில் நீடிப்பதில்லை என்று முடிவுசெய்த முன்னாள் ஜனசங்கத்தினர் ஜனதாவிலிருந்து வெளியேறி பாரதிய ஜனதாவை ஆரம்பித்தனர். அதன்மூலம் ஜே.பி உருவாக்கிய ஜனதா, மூன்றே ஆண்டுகளில் ஜனதா, - மதச்சார்பற்ற ஜனதா, - பாரதிய ஜனதா என்று மூன்று கூறுகளாகப் பிரிந்தது. இடைப்பட்ட காலங்களில் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஹரியானா, ஒரிசா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மத்தியில் இருந்த ஜனதா ஆட்சி கவிழ்ந்ததும், ஜனதா கட்சி உடைந்ததும் ஜனதா கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும் தடைக்கல்லை உருவாக்கியது.

என்றபோதும், அடுத்தடுத்த தேர்தல்களில் ஜனதா கட்சியைப் போட்டியிடச் செய்து, அதன்மூலம் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் சந்திர சேகர் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரம் காட்டினர். 1984 மக்களவைத் தேர்தலில் 207 இடங்களில் போட்டியிட்ட ஜனதா கட்சி வெறும் 10 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. பிறகு லோக் தளம் கட்சி ஜனதா கட்சியுடன் இணையவே, அதன் தலைவர் அஜீத் சிங் ஜனதா கட்சியின் தலைவரானார்.

எண்பதுகளின் இறுதியில் ராஜீவ்- வி.பி.சிங் இடையிலான மோதலால் ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது ஜனதாவை ஜனதா தளத்தில் இணைக்க முடிவானது. அப்படி  சில ஜனதா தலைவர்கள் ஜனதா தளத்தில் இணைந்தபோது, அந்த இணைப்புக்கு எதிராக தேவே கௌடா, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் ஜனதாவாகவே இயங்கினர்.

முக்கியமாக, ஜனதா கட்சியின் ஏர் உழவன் சின்னத்தை ஜனதா தளத்துக்குப் பெறுகின்ற முயற்சியில் அதன் தலைவர்கள் இயங்கியபோது, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அதைத் தடுத்து நிறுத்தினர். அதனால் ஜனதா தளம் வேட்பாளர்கள் சக்கரம்  சின்னத்தில் போட்டியிட்டே வெற்றிபெற்றனர். அந்தத் தேர்தலில் ஜனதா தளம் வென்று கூட்டணி ஆட்சியை அமைத்தது. வி.பி.சிங் பிரதமரானார். அவரது அரசில்  முன்னாள் ஜனதாவினர் பலரும் அமைச்சர்களாக்கப்பட்டனர்.

வி.பி.சிங் அரசை திடீரென பாஜக கவிழ்க்க, சந்திரசேகர் பிரதமரானார். அத்தோடு, தனது  கட்சிக்கு சமாஜ்வாதி ஜனதா என்று பெயர் வைத்தார். பிறகு அவரது ஆட்சியும் குறுகிய காலத்தில் கவிழ்க்கப்பட்டது. 1991 மக்களவைத் தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சந்திர சேகர் உள்ளிட்ட ஐவர் வெற்றிபெற்றனர். அதன்பிறகு ஜனதா கட்சி முற்றிலுமாகச் சுருங்கிப்போனது.

என்றாலும், ஜனதா கட்சியை சுப்ரமணியன் சுவாமி தலைமையேற்று நடத்தினார். ஆனால் தேர்தல் களத்தில் அந்தக் கட்சிக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லாமல் போனது. 1998 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மதுரையில் ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் சுப்ரமணியன் சுவாமி. அதே சுவாமி 1999 மக்களவைத் தேர்தலில் அதே மதுரையில் சுமார் இருபதாயிரம் வாக்குகளுடன் நான்காமிடம் பெற்றார். அதன்பிறகும் ஜனதா கட்சியின் தலைவராகத் தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமி 2013இல் ஜனதா கட்சியைப் பாஜகவில் இணைத்துவிட்டார். அதன்மூலம் ஜனதா கட்சி என்ற அரசியல் கட்சியின் ஆயுட்காலம் முழுமையாக முடிவுக்கு வந்தது.

என்றாலும், எமர்ஜென்சி காலத்திலும் ஜனதாவின் ஆட்சிக்காலத்திலும் ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களாக, எமர்ஜென்சி எதிர்ப்பு யுத்தத்தின் தளபதிகளாக, ஜெ.பியின் அரசியல் மாணவர்களாகச் செயல்பட்ட பலரும் பின்னாளில் இந்திய அளவிலும் மாநில அளவிலும் ஆளுமைமிக்க தலைவர்களாக உருவெடுத்தனர்.

சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவரானார். கிருஷ்ணகாந்த், பைரோன்சிங் ஷெகாவத், வெங்கையா நாயுடு ஆகியோர் குடியரசுத் துணைத்தலைவர் பொறுப்புக்கு வந்தார்கள். சந்திரசேகர், தேவே கௌடா, வாஜ்பாய், மோடி ஆகியோர் பிரதமர்களாக உருவெடுத்தனர். ஒய்.பி. சவாண், ஜெகஜீவன் ராம், தேவிலால், அத்வானி ஆகியோர் துணைப் பிரதமர்களாக உருவெடுத்தனர்.

கர்ப்பூரி தாக்கூர், பிஜூ பட்நாயக், ராமகிருஷ்ண ஹெக்டே, முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார், கல்யாண் சிங் உள்ளிட்டோர் முதலமைச்சர் களாக உருவெடுத்தனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ராம் விலாஸ் பாஸ்வான், முரளி மனோகர் ஜோஷி, சுப்ரமணியன் சுவாமி, சரத் யாதவ், அஜீத் சிங், ராம் ஜெத்மலானி, ஜெய்பால் ரெட்டி என்று மிகப்பெரிய எண்ணிக்கையில் மத்திய அமைச்சர்களானார்கள்.

ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா, ஜனமோர்ச்சா, ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம், லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரிய லோக் தளம், சமதா என்று ஜனதாவிலிருந்து கிளைத்தும் உடைந்தும் பிரிந்தும் பல கட்சிகள் உருவாகின. அந்த வகையில் ஜனதா என்ற கட்சி வெகு குறுகிய காலமே அரசியல் களத்தில் இருந்து காணாமல் போய்விட்டாலும், வீழ்த்தவே முடியாத கட்சி என்று சொல்லப்பட்ட ஆகப்பெரிய கட்சியைத் தேர்தல் களத்தில் தோற்கடித்து, மாற்று அரசை உருவாக்கமுடியும் என்று இந்திய அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையைப் பாய்ச்சிய கட்சி என்ற அடிப்படையில் ஜனதாவுக்கு இந்திய அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் காத்திரமான இடம் உண்டு!

(ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு', “இந்துத்வ இயக்க வரலாறு', ‘திராவிட இயக்க வரலாறு', ‘தமிழக அரசியல் வரலாறு' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.)

செப்டம்பர், 2022