சிறப்புப்பக்கங்கள்

சொல்லப்படாத கதைகள்

சிறப்புப் பக்கங்கள்

அந்திமழை இளங்கோவன்

நீயொரு கொலைகாரன், ஒரு கொலைகாரன் சந்தோஷமாக இருக்க முடியுமானால் நீ சந்தோஷமாக இரு' என்று எழுதப்பட்ட கடிதத்தை தன்னை ஆசை நாயகியாக வைத்துக் கொண்டிருந்தவனிடம் விட்டுவிட்டு ஒரு பையில் தனது துணிகளோடு அழகாக உடையணிந்து புறப்பட்டாள் அந்த 35 வயது பெண்மணி. பெயர் அன்னா பிரகோவா. மாஸ்கோ நகரத்தின் வெளியே உள்ள யாசென்கி இரயில் நிலையத்தில் ஒரு சரக்கு இரயிலின் குறுக்கே பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாள். வருடம் 1872, ஜனவரி. அப்பெண்மணி லியோ டால்ஸ்டாயின் தூரத்து உறவினர். அன்னா பிரகோவா குற்றம் சாட்டிய ஆண் நண்பர் டால்ஸ்டாயின் தோழரும் கூட.

உருத்தெரியாமல் போன அன்னா பிரகோவா உடல் பிரேதப் பரிசோதனை செய்யும் போதும் பிற இறுதி நிகழ்வுகளின் போதும் லியோ டால்டாய் உடன் இருந்தார். இன்னொரு பெண்ணின் மேல் மோகம் கொண்ட லியோ டால்ஸ்டாயின் நண்பர், அன்னா பிரகோவாவை பிரிகிறேன் என்று அறிவித்ததன் பின்னால் அன்னாவின் தற்கொலை நிகழ்கிறது.

நினைவிலிருந்து அழிக்க முடியாத இந்த சம்பவம் லியோ டால்ஸ்டாயின் புகழ் பெற்ற ‘அன்னா கரீனினா' வின் முக்கிய கச்சாப்பொருள்.

கதை:2

‘அவர் மிகவும் தன்மையாக நடந்து கொண்டார். அவர் திரும்ப வந்தாலும் நாங்கள் வருத்தப்பட மாட்டோம்' ராபர்ட் கொள்ளையடித்த வங்கியில் பணிபுரிந்த பெண்ணின் வாக்குமூலம் இது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த ராபர்டின் வாழ்வு விவாகரத்திற்கு பின் மாறியது. விவாகரத்தின் போது அவரது இளம் மகளை மனைவியிடம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, சோகத்தில் ஹெராயின் பழக்கத்திற்கு ஆளானார். போதைப் பழக்கத்திற்கு அதிக பணம் தேவைப்பட்டது. அந்த தேவையைப் பூர்த்தி செய்ய கொள்ளையடிக்க தொடங்கினார் ராபர்ட். இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கொள்ளையடிக்கும் ராபர்ட் அச்சமயங்களில் மிக மென்மையாகச் செயல்படுவாராம். பின்னர் பிடிபட்ட ராபர்ட் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் பென்பிரிட்ஜ் சிறையில் அடைக்கப்பட்டார். 1980 இல் அங்கிருந்து தப்பித்தவர் வந்து சேர்ந்த இடம் மும்பை. தாராவியில் குடியிருந்த அவர் கள்ள பாஸ்போர்ட் மற்றும் கள்ள நோட்டுகள் அடிக்கும் வேலைகளைச் செய்தார்.

மெல்போர்ன், மும்பை, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் வாழ்ந்த ராபர்ட், 1990 இல் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு மீண்டும் ஆஸ்திரேலியாவின் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் அவர் தனது தாராவி அனுபங்களை அடிப்படையாக வைத்து நாவல் எழுதினார். சிறை அதிகாரிகள் இரண்டு முறை அவர் எழுதிய நாவலைப் பறித்து அழித்தார்கள். மூன்றாவது முறை அதை திரும்ப எழுதினார் ராபர்ட்.

2003இல் வெளியான அந்த நாவல் மிகப் பெரிய வெற்றியடைந்து 41 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. ‘சாந்தாராம்' என்ற அந்த நாவல் கிரிகோரி டேவிட் ராபர்டின் வாழ்வை அளவில்லா புகழ் வெளிச்சத்தின் முன் நிறுத்தியது. ஒரு முறை இந்து நாளிதழுக்கான பேட்டியில் ராபர்ட்டிடம் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் என்ன? என்று கேட்டபோது ‘உன்னை அறிந்து கொள்; உன்னை ஆளுமை செய்; நீயாகவே இரு' என்றார்.

‘என் வாழ்வில் நடந்த சில விஷயங்களை அப்படியே எழுதியிருக்கிறேன், மற்ற விஷயங்களை என்னுடைய அனுபவத்தை வைத்து கற்பனையாக உருவாக்கியிருக்கிறேன்‘ என்ற ‘சாந்தாராம்' ஆசிரியர் ராபர்ட்டின் வார்த்தைகள் பெரும்பாலான கதையாசிரியர்களுக்கு பொருந்தும்.

நாவல்களை விட அதன் பின்னால் உள்ள கதைகள் என்னை எப்போதும் வசீகரித்து வந்தன. பல எழுத்தாளர்களுடனான தனி உரையாடல்களில் நிறைய சம்பங்கள் வந்து விழும். இங்கே அதை நான் பதிவு செய்வது முறையல்ல.

மேல் நாட்டில் Making of the Movie என்று வெளியிடுவார்கள். அதை போல் தமிழில் நாவல்கள் பிறந்த கதையை பதிவு செய்யவேண்டுமென்ற நீண்ட நாள் ஆசை இந்த சிறப்புப் பக்கங்களில் நிறைவேறுகிறது.

 நாவல்கள் உணர்வு குவியல்களையும், காலத்தின் மணத்தையும் தருகின்றன. வெறும் வரலாற்று நூலால் இதைச் செய்ய முடியாது

- டோரிஸ் லெஸ்ஸிங்

உங்கள் உலகம், உங்கள் சக மனிதர்கள். உங்கள் சொந்த உணர்வுகள், உங்கள் விதி ஆகியவற்றைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள கற்பனையில் எழுதப்பட்ட படைப்பு உதவி செய்கிறது.

- உருசுலா கே.லீ.கின்

உங்கள் மனதுக்கு அது யோசிப்பது பிடிபடும்வரை காத்திருந்தால், நீங்கள் ஒரு நாவல் எழுதலாம்

- ஜேம்ஸ் எம்.கெயின்

மேலுள்ள மூன்று வாசகங்களும் நாவலாசிரியனின் படைப்புப் பணியை ரத்தின சுருக்கமாக கூறுகின்றன.

நவீன தமிழின் முன்னணி நாவலாசிரியர்கள் தங்கள் நாவல்களுக்கு பின்னால் உள்ள கதையை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறார்கள். முதற்கட்டமாக 22 நாவலாசிரியர்களின் நாவல் பிறந்த கதைகள் இந்த சிறப்பிதழில் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து தமிழின் அத்தனை நாவலாசிரியர்களின் கதைகளையும் வெளியிட விரும்புகிறோம்.

தமிழ்ப் படைப்புகளையும், படைப்பாளர்களையும் கொண்டாட வேண்டிய தருணமிது.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

ஜனவரி, 2022