அது 2007ம் ஆண்டு முதன்முறையாக டி 20 என்ற கிரிக்கெட்டின் மிகப்பெரிய டோர்னமெண்ட் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. டி 20 உலகக் கோப்பை!
விளையாட்டின் தன்மையே என்னவென்று புரியவில்லை...! பசங்க போய் விளையாடிவிட்டு வரட்டும் என்று சீனியர் வீரர்கள் இல்லாமல் அனுப்பப்பட்ட இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. எந்த பிரஷரும் இல்லாமல் ஆடிய அந்த அணி ஃபைனலுக்கு வந்துவிட்டது. எதிரில் நிற்பது கிரிக்கெட்டில் பரம விரோதியான பாகிஸ்தான்!
முதல் பேட்டிங் முடிந்து 157 ரன்களும் குவித்துவிட்டார்கள். பவுலிங் போடத் தொடங்கி போட்டி இப்படியும் அப்படியுமாக மாறி மாறி ஏறி இறங்கி கடைசி ஓவர் வரை வந்துவிட்டது. கடைசி ஓவரை யாரைப் போட வைக்கலாம் என்ற யோசனையின் முடிவில் தோனி அழைத்த நபர் ஜோகிந்தர் ஷர்மா. அதுதான் எம்.எஸ். தோனி என்ற சூப்பர் ஹீரோவின் அறிமுகம்!
ஆறு பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற இலக்கு. இத்தனைக்கும் ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. ஆனால், ஜோகியை அழைத்தார் தோனி! அன்று தொடங்கியது தோனியின் சர்ப்ரைஸ்! ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதன் உச்சம்தான் எம்.எஸ்,தோனி சொல்லப்படாத கதை என்ற சினிமா!
பயோபிக் வகைப்படங்களில் தோனி தனி ரகம்! ஒரு சாதனையாளரின் கதையை அவருடைய அந்திமக் காலத்தில் எடுத்து அடுத்த தலைமுறைக்கு சொல்லும் விஷயம்தான் பயோபிக் வகைப்படங்கள். ஆனால், தோனி மட்டும்தான் அவர் களத்தில் இருந்த காலத்திலேயே எடுக்கப்பட்ட படம்! படம் எடுக்கப் பட்ட காலத்திலும் அவர் மைதானங்களில் பல சுவாரஸ்யங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒரு பயோபிக் படம் என்பது எப்போது உருவாகிறது? ஒரு விளையாட்டு வீரரின் உச்சகட்டமான சாதனைப் புள்ளியில்தான் பயோபிக் என்ற விருட்சத்தின் விதை விழுகிறது. அப்படிப்பார்த்தால் தோனி படத்துக்கான புள்ளி எது?
படம் தொடங்கும் புள்ளி 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டி... இந்தியாவும் இலங்கையும் ஆடும் போட்டியில் வழக்கமான இடத்துக்கு முன்னதாகவே களம் இறங்குகிறார் தோனி. அந்த இடத்தில் அப்படியே ஃப்ரீஸ் பண்ணி தோனி பிறந்த ஆஸ்பத்திரிக்குப் போகிறது கதை.
அங்கே வைத்து முதலில் ஆண் குழந்தை பிறந்ததாக தோனியின் அப்பாவிடம் சொல்பவர்கள், பிறகு பெண் குழந்தை என்கிறார்கள். முடிவில் ஆண் குழந்தைதான் என்று அறிவிக்கப்படுகிறது. அடுத்து பள்ளியில் படிக்கும் காலத்தில் கால்பந்து கீப்பராக விளையாடும் தோனி அதைத் துறந்து கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக மாறுகிறான்... கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, வழக்கமாக பின் வரிசையில் இறங்குவதை மாற்றி வலுக்கட்டாயமாக தன்னை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்கிக் கொண்டு டபுள் செஞ்சுரி விளாசுகிறான்... துலீப் டிராஃபி போட்டிக்கான நேரத்துக்குப் போக முடியாமல் மிஸ் பண்ணுகிறார்(இங்கு பெரிய மனிதனாகி விட்டதால் ர் விகுதி!) அங்கிருந்து மனம் உடைந்து சேஃப் ஸோன் என்று அப்பா நினைக்கும் ரயில்வே வேலையைத் தேர்வு செய்கிறார்... ஆனால், அந்த வேலைக்குள் அடைந்து கொள்ள முடியாமல் அல்லாடி ஒரு கட்டத்தில் கிரிக்கெட் தான் வாழ்க்கை என்று முடிவெடுத்து ரயில்வே வேலையைத் துறக்கிறார்... போராடி இந்திய அணியில் இடம் பிடிக்கிறார்... டி 20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வென்று கோப்பையைக் கைப்பற்றுகிறார் என்று இந்தக் கதைக்குள் அத்தனை விதைகள் ஒளிந்திருக்கின்றன.
கூடுதலாக புனைவாகச் சொல்லப்பட்ட காதல் கதை(கள்) இன்னொருபக்கம்!
பயோபிக் வகைப் படங்களில் கதை என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதுபோல திரைக்கதை என்றும் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அந்த மனிதனின் வாழ்வில் இயற்கை எழுதிய திரைக்கதையைத்தான் ஒரு திரைக்கதை ஆசிரியர் திரும்ப எழுத வேண்டும். ஆனால், இயற்கை எழுதிய திரைக்கதையில் எதை மாண்டாஜாகக் கடந்து செல்ல வேண்டும்... எதை பிரதான சரடாக விவரித்துச் சொல்ல வேண்டும் என்பதை திரைக்கதை ஆசிரியர் தீர்மானிக்கலாம்.
தோனியில் அதைச் சரியாகத் தீர்மானிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அதனாலேயே விளையாட்டில் வேகத்துக்குப் பெயர் பெற்ற தோனியின் வாழ்க்கைக் கதை இன்னிங்ஸ் இன்னிங்ஸாக நீண்டு கொண்டே போகிறது. அதிலும் சம்பவங்களை அடுக்கி வைத்தது போல இருக்கிறதே தவிர சங்கிலிக் கோர்வையாக இல்லை. தனித்தனி எபிசோட்களாக இருக்கின்றன. ஆனால், கதையின் இயல்பிலேயே இருக்கும் ஈர்ப்புத் தன்மையால் படம் இழுத்துக் கொண்டு போகிறது.
க்ளைமாக்ஸில் வரும் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக் காட்சிகளில் போட்டியைப் பார்க்கும் ஆடியன்ஸ்களாக வருபவர்களின் உணர்வு நம்மையும் தொற்றிக் கொள்வதில் இயக்குனர் நீரஜ் பாண்டே வெற்றி கண்டிருக்கிறார். அதேபோல தோனியை பிரதி எடுத்தது போல நடித்திருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத் உணர்வுகளை அழகாகக் கடத்தியிருக்கிறார். அதனால் படம் முடியும்போது நாமே கோப்பையை வென்றது போல நிறைவோடு எழுந்து கொள்கிறோம்.
ஆனால் இந்த தோனியில் சொல்லப்படாத கதை ஒன்று இருக்கிறது. ஒரு இளைஞனின் கிரிக்கெட் கனவுகளுக்கு குடும்பம் எப்படித் துணை நிற்கிறது என்ற கதை அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. அப்பாவின் கவலைகளில் உள்ள நியாயம்... மகனின் கனவுகளுக்கு ஆதரவு தரும் அம்மாவின் கரிசனம்... அக்காவின் சப்போர்ட்... அவர்கள் வீட்டுக்குள் நடத்திய எந்த உரையாடலும் படத்தில் இல்லை.
தோனியின் முதல் போட்டியைப் பார்த்த உடனேயே அவருக்காக ஸ்பான்சர் தேடி அலையும் நண்பரின் கதை சொல்லப்படவே இல்லை. அவருடைய மன உணர்வுகள், தோனி கிட் கிடைத்தவுடன் அந்த நண்பரைத்தான் தேடி ஓடி வருகிறார். இருவருக்கும் இடையிலான உறவை முழுமையாகச் சொல்லவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.
லோக்கலாக விளையாடும் மாநிலங்களுக்கு இடையிலான ஒரு போட்டியில் எதிரணியில் இறங்கி தோனியின் அணியை துவம்சம் செய்யும் யுவராஜ் சிங் முன்னதாகவே தேசிய அணிக்குள் போய்விடுகிறார். ஆனால், கால ஓட்டத்தில் தோனியின் தலைமையின் கீழ் ஆட வேண்டிய சூழல் யுவராஜ் சிங்கிற்கு வருகிறது. இந்த இருவருக்கும் இடையிலான உறவுக்குள் ஒரு பெரிய சினிமாவே ஒளிந்திருக்கிறது. ஆனால், அது பற்றிய ஒரு வார்த்தை கூட இந்தக் கதைக்குள் இல்லை.
அதேபோல தோனியின் காதல் கதைகள் தனியாக இருக்கிறது. தோனியின் அக உணர்வுகளுக்கான களம் அது. ஆனால், இரண்டு கதைகளிலுமே பெண்கள்தான் தோனியிடம் கெஞ்சுகிறார்கள். அதுதான் அவர் குணம் என்றால் எதற்காக இரண்டு கதைகள்? கற்பனையாகத்தான் புனையப்பட்டிருக்கிறது என்னும்போது இன்னமும் அழகான எபிசோடாக அந்தக் காதலைச் சொல்லியிருக்கலாமே!
இருந்தாலும் இப்படம் சமகாலத்து நாயகனுக்குச் செய்யப்பட்டிருக்கும் உண்மையான ட்ரிப்யூட்தான்!
ஜூன், 2020.