ரஜினிகாந்த் 
சிறப்புப்பக்கங்கள்

சொல்லப்படாத கதை

பாரதிமணி

தமிழ்நாட்டில்  பாராளுமன்றத் தேர்தல் திருவிழா, சிலபல 'விக்கல்'களுடன் சென்ற மாதம் 18 - ம் தேதி இனிதே முடிவுக்கு வந்தது.  எல்லா அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இன்னும் காயாத தங்கள் இடதுகை சுட்டுவிரல் மைக்கறையை கேமராவுக்குக் காட்டிவிட்டு சந்தோஷமாக வீடு போய்ச்  சேர்ந்தனர்.

பாமரமக்களும் 'என் காசைத்தானே திருப்பிக் குடுக்கறான்....வாங்கினாத் தப்பில்லே!' என்று, கொஞ்சநஞ்சமிருந்த குற்றவுணர்ச்சியையும் துடைத்தெறிந்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு விரைந்தனர். சூப்பர் ஸ்டாரை முதல் தடவையாக மிக அருகில் சந்திக்க நேர்ந்த மை வைக்கும் அதிகாரி திகைத்துப்போய்,  அவரது வலதுகை சுட்டுவிரலில் மை வைத்து விட்டாராம்...சரி,  அவருக்குத்தான் எக்ஸைட்மெண்ட்.... 45 வருடங்களாக ஓட்டுப்போடும் ரஜினிகாந்த்,  ஏன் தன் வலதுகை விரலை நீட்டினார்? எனக்கு ஏனோ அமிதாப் பச்சன் 2016 ல் தன் குடும்பத்துடன் ஓட்டுப் போட்டுவிட்டு தத்தம் நடு விரல்களை காண்பித்தது நினைவுக்கு வந்தது!

தேர்தல் முடிவு இம்மாதம் இருபத்துமூன்றாம் தேதிதான் வெளிவர இருக்கிறது. எத்தனை எத்தனை பெரிய தலைகள்  உருண்டு இளம் தளிர்கள் வரப்போகின்றன என்று, முடிவில்தான் தெரியும். கட்சி விசுவாசத்தைத் தாண்டி எனக்கு ஒரு ஆசை உண்டு.  தென்சென்னையில் போட்டியிடும் என் நண்பர் சுமதி தங்கபாண்டியன் (என் ஓட்டைப்  பெறாமலே) வெற்றி வாகை சூட வேண்டும். அவரது நல்ல தமிழும் ஆங்கிலமும் பாராளுமன்றச் சுவர்களில்  எதிரொலிக்க வேண்டும்! என் ஆசைகள் நிறைவேறாமல் போனதேயில்லை!

நான் பாட்டுக்கு பெங்களூர் தெற்குத் தொகுதியில் என் வாக்கைப் பதிவு செய்துவிட்டு ஒரு செல்ஃபி கூட எடுக்காமல் வீடு வந்து சேர்ந்தேன். வயதாகி கையில் ஒரு கம்பும் வைத்திருந்தால் கிடைக்கும் மரியாதையே தனி! நான் காரில் இருந்து இறங்கியதுமே ஒருவர் வீல் சேரை கொண்டு வந்தார். என்னால் நடக்க முடியும் என்று சொல்லி மரியாதையோடு மறுத்து விட்டேன். எனக்கு முன்னால் நின்றிருந்த பெண்மணிக்கு மை வைத்த அதிகாரி பிக்காசோ மாதிரி சுட்டுவிரலில் ஓவியமே வரைந்து தள்ளிவிட்டார். என் முறை வந்ததும், 'Just a dot...ஒரு புள்ளி வைத்தால் போதும். நான் மறுபடியும் ஓட்டுப்போட வர மாட்டேன்!' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். பாவம்... புள்ளி வைத்தவருக்கு கோலம் போட முடியவில்லை!

தமிழச்சி தங்கபாண்டியன்

நான் 1957 - ல் இருந்து 62 வருடங்களாக என் ஜனநாயகக் கடமையைச் செவ்வனே ஆற்றி வருகிறேன். நான் ஓட்டுப் போட்ட பலருக்கும் வெற்றியையே தேடிக் கொடுத்திருக்கிறேன்.  ஒரு சிலர் தோற்றும் போயிருக்கிறார்கள். புதுடில்லி லோக்சபா தொகுதியில் நான் ஜெயிக்க வைத்தவர்கள் சுசேதா கிருபளானி, அடல் பிஹாரி வாஜ்பாய்,  ஜக்மோகன், கே.சி பந்த், லலித் மாக்கன் (குடியரசுத் தலைவர்  சங்கர்தயாள் சர்மாவின் மாப்பிள்ளை), ஹிந்தி நடிகர் ராஜேஷ் கன்னா, பல்ராஜ் மதோக் போன்றவர்கள். இவர்களில் நான் களம் இறங்கி தேர்தல் வேலை செய்தது, மதோக் அவர்களுக்கு மட்டுமே.

திரு. பல்ராஜ் மதோக் என்கிற பெயரை உங்களில் பலர் இப்போதுதான் கேள்விப்பட்டிருக்கவேண்டும். இந்த நல்ல மனிதர்தான், இந்தமுறை ஆட்சிக்கு வருமா வராதா என்று அரசியல் வல்லுநர்களும், டி.வி.புகழ் ஜோசியர்களும் ஹேஷ்யம்
சொல்லும் மோடியின் பாரதிய ஜனதா என்கிற கட்சியைப் பத்துமாதம் சுமந்து, பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்கி, ஒருநாள் மற்றவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, கவனிப்பாரின்றி தனிமையில் தன் வயோதிகத்தைச் சுமந்து உயிரைவிட்டவர். He shot into fame in his younger years and faced a lonely and unceremonious death 3 years ago!

நான் படித்த டெல்லி PGDAV கல்லூரியில்  பல்ராஜ் மதோக் சரித்திரப் பேராசிரியராக இருந்தார்.  அங்கு வேலை பார்த்த மற்ற பேராசிரியர்களும் பாரதிய
ஜனசங் காரியக்கமிட்டி உறுப்பினர்களாகவே இருந்தார்கள். ஹிந்திக்கு Dr. விஜயகுமார் மல்ஹோத்ரா, பொருளாதாரத்துக்கு Prof. Bhai Mahavir.  பாய் மஹாவீர் மத்திய பிரதேசத்தின் ஆளுநராகவும், பேராசிரியர் விகே மல்ஹோத்ரா, Chief Executive Councillor (Delhi's Chief Minister) ஆக சில வருடங்கள் பணியாற்றினார்.  

பல்ராஜ் மதோக், அத்வானி வாஜ்பாய்க்கெல்லாம் முன்னத்தி ஏராக இருந்தார். நேரு கஷ்மீருக்கு  அளித்த தனிச் சலுகைகளை Articles 35A, 370 - க்கு எதிராக முதல் போர்க்குரல் உயர்த்தியவர் பல்ராஜ். ஷேக் அப்துல்லா அவரை ஆயுள் பரியந்தம் கஷ்மீருக்குள் வரக்கூடாது என்று  ஸ்ரீநகரில் இருந்து வெளியேற்றினார். தில்லி வந்த பல்ராஜ், சியாம பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்தியாயா இவர்களுடன் சேர்ந்து பாரதிய ஜன சங் அமைப்பை 1951 - ல்  உருவாக்கினார். கட்சி தொடங்குவதற்கான எல்லா ஆரம்பப்பணிகளையும் தானே முன்னின்று வழிநடத்தினார். தலைவருக்கான தேர்தல் நடந்தபோது, தான் ஒதுங்கிக்கொண்டு, தன் ஆசானும் சீனியருமான சியாமப்ரசாத் முகர்ஜியின் பெயரை ஒருமனதாக  வழிமொழிந்தார். முகர்ஜி, உபாத்யாயா, மதோக் மூவரும் ஆரம்பகால பாரதிய ஜனசங்கின் மும்மூர்த்திகளாகத் திகழ்ந்தனர். 1953 - ல் முகர்ஜி கஷ்மீர் சிறையில் இறந்தபிறகு, மதோக் பாரதிய ஜனசங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 15 வருடங்கள் அவர் தலைவர் பதவியில் நீடித்தார். இந்திரா காந்தியின் எமெர்ஜென்ஸியின்போது 18 மாதங்கள் தில்லி திஹார் ஜெயிலில் அடைபட்டுக்கிடந்தவர். 1951 - ல் மாணவர்களின் அமைப்பான Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) தொடங்கி அதன் நிறுவன தலைவராகவும் இருந்தார்.

பல்ராஜுக்கு தமிழர்களைப் பிடிக்கும். அவரிடம் கற்ற எட்டுத் தமிழ் மாணவர்களை மாதமொருமுறை அவரது நியூ ராஜேந்திரநகர் வீட்டுக்கு அழைப்பார். இது நான் கல்லூரிப்படிப்பு முடித்து, வேலைக்குப் போனபிறகும் தொடர்ந்தது.   (அதில் நான் ஒருவன் தான், சோப்ளாங்கி!) அவர் மனைவி கமலாவும் தில்லி பல்கலைக்கழகத்தில் ஒரு ப்ரொபசர். அவர் வீட்டில் அரசியல், காதல் உட்பட எல்லா விஷயங்களும் பேசலாம். அவரே கடைக்குப்போய் சமோசா மட்ரி, குல்ஃபி போன்றவற்றை வாங்கிவருவார். 'உங்களுக்கு ஏன் கோபம் அடிக்கடி வருகிறது?' என்று கேட்டால்,'போன ஜென்மத்தில் துர்வாசராக இருந்தேன்!' என்று சிரித்துக்கொண்டே
சொல்வார். 1961 - ம் ஆண்டு பல்ராஜ் லோக்சபா உபதேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் பாரதிய ஜனசங் தலைவர். நானும் நண்பர்களும் அவருக்காகக் கொடியேந்தி, வீடுவீடாகப்போய் நோட்டீஸ் கொடுத்தோம்.  பிரசார சமயத்தில் என் நாடகம் ஒன்று நடந்தது. நாடகம் பார்க்க வந்தவரை இடைவேளையில் மேடையேற்றி, நாடகம் பார்க்க வந்த தமிழ்க் கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். தேர்தலில் என் ஆசிரியர் ஜெயித்தார். எம்.பி.க்களுக்கான வீட்டை வேண்டாமென்று சொல்லிவிட்டு, தன்
சொந்தவீட்டிலேயே இருந்தார். இவர் தலைமையில் பாராளுமன்றத்தில் 35 உறுப்பினர்கள் இருந்தனர். அது இரண்டாகக் குறைந்தது, வாஜ்பாய் காலத்தில்! சூதுவாது தெரியாத ஒரு குழந்தையைப்போல பழகுவார். ரௌத்ரம் பழகியவர்! மதோக் தனிமனித ஒழுக்கத்தில் தீவிரமாக இருப்பவர். அடிக்கடி
தேநீர் அருந்துவதைத் தவிர அவரிடம் வேறு எந்த 'நல்ல' பழக்கங்களும் கிடையாது. மற்றவர்களும் அப்படியே இருக்கவேண்டுமென்று விரும்புபவர். நான் அவர் வீட்டுக்குப் போகும்போது பாக்கெட்டிலிருக்கும் சிகரெட் பாக்கெட்டை கடாசிவிட்டு, வாயைக் கொப்பளித்த பின் தான் போகமுடியும்!

பல்ராஜ் மதோக் ஒரு நல்ல இந்தியர். அரசியல்
சாணக்கியத்தனம் சிறிதுமில்லாத வெள்ளந்தி மனசு. ஆனால் முன்கோபக்காரர். முகத்துக்கு நேரே எதையும் பேசிவிடுவார். He was always the right man in the wrong place!  அவர் தன் வாழ்நாளில் மூன்றுபேரை அரசியல்வாதிகளாக மனதார வெறுத்தார். அதில் முதன்மையானவர், பிரதமர் நேருஜி. அவரது கஷ்மீர் கொள்கைகளில் இருந்த ஓட்டைகளை துவைத்துக் காயப்போடுவார். கஷ்மீர், இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி...அதற்குத் தனி அந்தஸ்து கொடுத்தது ஷேக் அப்துல்லா - நேருவின் சூழ்ச்சி...பிற்காலத்தில் அது இந்தியாவுக்குத் தீராத தலைவலியைக் கொடுக்கும் என்பது, அவரது வாதம். (இப்போது அந்தத் தலைவலி தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது!) அவர் வகுப்பெடுக்கும்போது, போரடித்தால்,  ஒரு போக்கிரி மாணவன், 'சார், இன்று காலைப் பத்திரிகைகளில் வந்த நேருவின் பேட்டி பற்றி உங்கள் கருத்தென்ன?' என்று கேட்பான். அவ்வளவுதான்! அன்றைய பாடம் அரோஹரா!  ஆக்ரோஷமான பேச்சு .... உரத்து இருக்கும்.... அதில் உண்மை இருக்கும்...ஆனால் வரம்பு மீறாது!

பல்ராஜ் மதோக்

அவருக்குப் பிடிக்காத மற்ற இருவர், மதோக் ஆரம்பித்த ஜனசங்கில் ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் முயற்சியால் திணிக்கப்பட்டவர்கள். காந்திஜி கொலைவழக்கினால் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.க்கு தன் குரலை எழுப்ப ஓர் அமைப்பு தேவைப்பட்டது. கோல்வால்கர் சொற்படி அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அட்வானி இருவரையும் பாரதிய ஜனசங்கில் சேர்த்துக்கொண்டார், மதோக். இதில் முகர்ஜியின் பங்கும் இருந்தது.

பிற்காலத்தில் அரசியல் நேர்மைக்கு ஆதர்சபுருஷராக இருந்த வாஜ்பாய், தன் வாலிபகாலத்தில் ஒரு 'தீராத விளையாட்டுப்பிள்ளை'யாகத்தான் இருந்தார். A political Tomboy! ஆங்கிலத்தில் சொல்வதுபோல, Every Politician had a past!

ஆரம்பகால வாஜ்பாய் லீலைகளை மதோக் வெகுவாக வெறுத்தார். அதைக் களங்கமாகவே பார்த்தார். தனிமனித ஒழுக்கமில்லாத மனிதன் மனிதனே அல்ல. ஒழுக்கமில்லாதவனுக்கு பொதுவாழ்வில் இடமில்லையென்பது அவர் வாதம். கோல்வால்கருக்குத் தான் எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

"Some time back when I was the president of Jana Sangh, Jagdish Prasad Mathur, in-charge of the central office who was staying with Atal Behari at 30, Rajendra Prasad Road, -our Party Office-  had complained to me that Atal had turned this house into a den of immoral activities. Everyday n*w g***s were coming there. Things were getting out of hand. I called Atal to my residence and in a closed room inquired from him about matters raised by Mathur. The explanation he offered further confirmed the facts conveyed by Mathur. I suggested to him that he should get married, otherwise, he was bound to get a bad name, and the reputation of Jan Sangh too would suffer.'' (p. 25).

கடிதத்தைப்படித்த கோல்வால்கர் மதோக்கிடம், 'எனக்கும் இதெல்லாம் முன்பே தெரியும். பலர்
சொல்லியிருக்கிறார்கள். கட்சியின் எதிர்காலத்தைக் கருதி, நீலகண்டனாக கழுத்தில் விஷத்தை வைத்துக் கொண்டு பொறுத்திருக்கிறேன்!' என்று சொல்லி யிருக்கிறார்.

வாஜ்பாயின் வாய்ச் சாலகத்துக்கு ஈடு இணையே இல்லை. அதையும் மதோக் பாராட்டத் தவறியதில்லை.  அவரது அறுபது வருட நண்பர் கே.ஆர். மல்கானி சொல்கிறார்: 'Vajpayee's oratory has been his trump card!' ராஜஸ்தானில் ஒரு தேர்தல் கூட்டத்துக்கு ஆறுமணிநேரம் தாமதமாக வந்தார். கூட்டம் பொறுமையிழந்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது... தனக்குப் போட்ட மாலையைக் கழற்றி கூட்டத்தை நோக்கி வீசினார். ஒரு நிமிடம் அமைதி... பிறகு மெதுவாக நடந்து மைக்கின் முன் போய், 'Main haar nahin....Jeet lene aayaa hun! என்று கர்ஜித்தார். ஒட்டுமொத்தக் கூட்டமும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தது! Haar என்பதற்கு மாலை.... தோல்வி....என்று இரு பொருளுண்டு. 'மாலை பெற அல்ல...வெற்றிபெற வந்திருக்கிறேன்!' என்றும், 'தோல்வி பெற அல்ல....வெற்றிபெற வந்திருக்கிறேன்!' என்றும் பொருள் கொள்ளலாம்!

மதோக் தன் நெருங்கிய சகா தீன்தயாள் உபாத்யாயா கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜஸ்டிஸ் சந்திரசூட் கமிட்டி சரியாக ஆய்வு நடத்தவில்லை என தனது புத்தகத்தில்  பகிர்ந்திருக்கிறார்:

இதையெல்லாம் நாங்கள் அவரைப் பார்க்கப்போகும்போது சொல்லிப் புலம்புவார்! வாஜ்பாயை கதாநாயகனாக கொண்டாடும் என்னைப் போன்ற பலருக்கு இது ஒரு நெருடல் தான்! என்ன செய்வது?....உண்மை சுடும்! இன்னொரு கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தால், He was basically an honest and straightforward man with some aberrations! He enjoyed all good things in life! அது தவறில்லையே! வாஜ்பாய் சொல்ல மறந்த
ஒரு வாக்கியம்:: 'நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல...........!'

ஆனால் மதோக் நடத்தியது அரசியல் கட்சி. ஆன்மீக மடம் அல்ல! ஆன்மீகமும் அரசியலும் ஒத்துப்போகாது.... தமிழ்நாட்டில் ரஜினிகாந்த்தை தவிர!

The hatred between him and Advani/Atal is mutual. அவர்களும் இதே அளவுக்கு பல்ராஜை வெறுத்தார்கள்.  எல்.கே. அட்வானியை Boneless Wonder என்று குறிப்பிடுகிறார் மதோக்.  அட்வானி ஒரு மேடையில், 'மதோக் ஸாப் நிலை தடுமாறிவிட்டார். பைத்தியம் பிடித்துவிட்டது.
சிகிச்சைக்காக ஆக்ரா கொண்டுசெல்லவேண்டும்!' என்று பேசியிருக்கிறார். இதே அட்வானி 1973 - ம் ஆண்டு கட்சியின் நிறுவனர் பல்ராஜ் மதோக்கை பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கிறார். கட்சி நீக்கத்துக்குப்பிறகு ஜனசங் தொண்டர்களும் தலைவர்களும் மதோக்கை வந்து பார்க்கவே அஞ்சினார்கள்....புதிய தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோவென்ற பயத்தில்!  இவர் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டார். மனநலம் பிறழ்ந்தவர் என்ற அவச்சொல்லும் பரப்பப்பட்டது. வயதான மதோக்கிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, நமக்குக் கிடைக்கும்
சித்திரம், வீடுகளில் இருக்கும் வயோதிக தாத்தா தான். 'இப்போது எதுவுமே சரியில்லை. என் காலத்தில் எல்லாமே ஒழுங்காக நடந்தது. பா.ஜ.க. வின் கட்சிக்கொள்கைகள், கொடி எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பழைய ஜனசங் வாருங்கள். என்னிடம் எல்லாவற்றுக்கும் மருந்து இருக்கிறது!' என்கிற போக்கில் பேசுவார். He had become stagnant in the past!

தனிமையில் உழன்று, 2016 - ம் ஆண்டு மதோக் காலமானது, தில்லிப் பத்திரிகைகளில் 7 - ம் பக்கச் செய்தியானது. அவரது மரணச் செய்தி எனக்குப் பல மாதங்களுக்குப் பிறகே தெரியவந்தது. பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் எழுபதுகளிலேயே மற்றவர்களை அனுசரித்துப் போகமுடியாத பல்ராஜ் மதோக் என்பவரை ஒரு போகிப் பண்டிகையில் (அங்கே Lohri) வைத்து எரித்துவிட்டது! 1973 - ல் பல்ராஜ் மதோக்கை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி ஆணை பிறப்பித்தார், அட்வானி. அதே அட்வானியை 45 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரமாக எந்த ஆணையுமின்றி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர், அமித்ஷாவும் மோடியும்! என்னேயொரு நகைமுரண்!

அடுத்த வருடம் பல்ராஜ் மதோக்கின் நூற்றாண்டுவிழா வருகிறது. இப்போது பா.ஜ.க.வில் மதோக்கை வேரோடு வெறுத்த வாஜ்பாயும் இல்லை... அட்வானியும் இல்லை. மாற்றுக்
கட்சித் தலைவர்களான சர்தார் படேல், அம்பேட்கர் போன்றவர்களுக்கு சிலையெடுத்து நூற்றாண்டுவிழா கொண்டாடும் பாரதிய ஜனதா கட்சி 2020 - ல் தன்னைக் குழந்தையாக வளர்த்தெடுத்த இந்த நல்ல மனிதரின் நூற்றாண்டுவிழா கொண்டாடுமா?.................. தெரியவில்லை!

மே, 2019.