சிறப்புப்பக்கங்கள்

சேவை பெறும் உரிமைச் சட்டம்!

புதிய அரசு என்ன செய்யவேண்டும்?  

அறப்போர் ஜெயராமன்

அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் எந்தக் கட்சியும் செய்யவேண்டிய செயல்திட்டங்கள் எனச் சிலவற்றைப் பட்டியலிடுகிறார் ‘அறப்போர் இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியம். நிலப்பட்டா தொடங்கி வாரிசு சான்றிதழ் வாங்குவது வரை லஞ்சம் வாங்குவது மலிந்து இருக்கிறது. சான்றிதழ்கள் வழங்குவதற்கான அதிகபட்சக் காலக்கெடு இருந்தும் அலுவலர்கள் அதனைப் பின்பற்றுவது இல்லை. இதனைச் சீர்படுத்துவதற்கு சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்.

ஊழல் விசாரணைக்கான லோக் ஆயுக்தா இதுநாள்வரை உண்மை கண்டறியும் குழுவாக மட்டுமே இயங்கிவருகிறதே ஒழிய அவர்களால் அந்த உண்மையை வைத்துச் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கமுடியாது. இதை அதிகாரமிக்க தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும்.

டெண்டர் முறைதான் தமிழக ஊழல்களின் ஊற்றுக்கண். அதனால் டெண்டர் எடுப்பதை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் கொண்டுவரவேண்டும்.

கிராமங்களின் வளர்ச்சியில் கிராமசபைகளின் பங்கு முக்கியமானது. நிர்வாகத்தில் மக்களின் பங்கு அதிகரிக்கும்போது இயல்பாகவே ஒரு கட்டமைப்பு சிறந்து விளங்கும். அதுபோல நகரசபைகளின் வழியாக மக்களின் தேவைகளை அவர்களே அரசின் ஓர் அங்கமாக இருந்து நிறைவேற்றிக்கொள்வதைச்

சட்டபூர்வமாக்க வேண்டும்.

மேலும், கொரோனா தொற்று சர்வதேசப் பரவலுக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்துமே தங்களது சுற்றுச்சூழல் துறையை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை சுற்றுச்சூழல் துறை வலுப்படுத்தப்பட வேண்டும். இன்றளவும் இந்தத் துறைக்கு என நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் யாருமில்லை, அவுட்

சோர்ஸிங் செய்யப்படுகிறார்கள். துறைக்கான திறன்வாய்ந்த பொறியாளர்களை நியமிக்கவேண்டும்.கொசஸ்தலை, கூவம் பாலாறு, பக்கிங்கம் என சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே 3600 நீர்நிலைகள் இருக்கின்றன. வருடாந்திர மழையும் தேசிய சராசரியைவிட நமக்கு அதிகமாகவே பெய்கிறது. ஆனால் குப்பைகொட்டுவது, கழிவுகளை வெளியேற்றுவது போன்ற நீர்நிலை ஆக்கிரமிப்புகளால்  நீர்வளத்தையும் அதன் சுகாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளோம். அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் முதல் பணியாக நீர்நிலைகளின் எல்லைகளை வரையறுத்தல், வரத்துக் கால்வாய் போக்குக் கால்வாய் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

ஆற்றுமணல் கொள்ளை போன்ற நீண்டகாலப் பிரச்னைகளுக்கு சட்டபூர்வ தண்டனைகளை வலுவாக்கவேண்டும். இவை தவிர கல்வி மற்றும் சுகாதாரத்துறைகள் இரண்டும் மற்ற மாநிலங்களுடனான ஒப்பீட்டு அளவில் மேம்பட்டிருக்கிறதே ஒழிய தனியாக வளர்ச்சியில் நாம் கடந்த ஆண்டுகளில் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. கிராமங்களில் இருக்கும் மக்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும் என்றால் மாவட்ட மைய மருத்துவமனைகளுக்குதான் வரவேண்டியிருக்கிறது. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில்தான் செய்துகொள்ள முடியும். குறிப்பிட்ட நோயாளி அதற்காகத் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து பயணப்பட்டு சென்னைக்கு வந்தாக வேண்டும். அனைத்து மக்களுக்குமான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை வசதிகளைக் கொண்டுவந்து சுகாதாரத்துறை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

கல்வித்துறையைப் பொருத்தவரை மற்ற மாநிலத்தைவிட நாம் மேம்பட்டிருந்தாலும் இந்த வளர்ச்சி போதுமானதா? கல்வி வாய்ப்பில் இன்றளவும்  ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. அது களையப்படவேண்டும். ஆகமொத்தம் பொதுத்துறை உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை மேம்படுத்த வேண்டிய கடமை வருகின்ற ஆட்சிக்கு இருக்கிறது.

எழுத்தாக்கம் : ஐஷ்வர்யா

ஏப்ரல், 2021