சிறப்புப்பக்கங்கள்

செய்திச்சாரல்: ஜனவரி, 2022

Staff Writer

தன்னார்வ அமைப்புகளுக்கு வழிகாட்டி!

ஐ.நா.அறிக்கையின்படி(2019) இந்தியாவில் 36.4 கோடி மக்கள் வறுமையில் உள்ளனர். மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் அடிப்படையில் 189 நாடுகளில் இந்தியாவின் இடம் 131. ஆகவே மக்களை வறுமையில் இருந்து விடுவிக்க ஏதாவது செய்ய வேண்டும் என எல்லோருக்கும் தோன்றும். சும்மா தோன்றினால் மட்டும்போதாது ஏதாவது செய்தாகவேண்டும் என்று களத்தில் குதித்தார் அதுல் சதிஜா என்பவர். நட்ஜ் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கினார். 2025-இல் ஒரு கோடிப்பேரையாவது வறுமையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே இவரது நோக்கம். இவருடன் இணைந்துள்ளார் சுதா ஸ்ரீனிவாசன் என்ற ஐடி துறை ஊழியர். லாபநோக்கமற்றுத் தொடங்கப்படும் தன்னார்வ அமைப்புகளுக்கு வெற்றிகரமாகச் செயல்பட ஆறுமாத காலம் வழிகாட்டும் மையம் ஒன்றை இவர்கள் தொடங்கி உள்ளனர். இதற்கு சுதா ஸ்ரீநிவாசன் சி.இ.ஓவாக செயல்படுகிறார். முதலில் 10 தன்னார்வ லாபநோக்க மற்ற அமைப்புகளுடன் தொடங்கிய இந்த சேவை இப்போது 15 அமைப்புகளுடன் செயல்படுகிறது. முதலில் நிதி உதவிகள் செய்யப்படவில்லை. ஆனால் இப்போது இந்த புதிய அமைப்புகளின் நிறுவனர்களுக்கு 15 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. விவசாயப் பிரச்னைகள்,நில உரிமைகள், பாலின சமத்துவமின்மை, திறன் மேம்பாடு, அரசு நிர்வாகம் போன்ற பிரச்னைகள் தொடர்பாக செயல்படும் அமைப்புகளைக் கண்டறிந்து உதவ இருக்கிறார்கள். இதற்காக 55 கோடி ரூபாய் கொண்ட நிதியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பெருநிறுவனத்தின் திறமை வாய்ந்த நிர்வாகிகள் குழு பயிற்சி, வழிகாட்டல், தொழில்நுட்ப உதவி வழங்குகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான செயல்திட்டங்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவதே இதன் அடிப்படைநோக்கம். புத்தாக்க செயல்முறைகளைக் கொண்டிருக்கும் லாபநோக்கமற்ற அமைப்புகள் இங்கே பயிற்சி பெற்று நாடு முழுக்க பல செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றன. இங்கே பயிற்சி அளிக்கப்பட்ட 80 அமைப்புகளில் சுமார் 20 அமைப்புகள் மாநில மத்திய அரசுகளுடன் இணைந்து தீவிரமாகப் பணிபுரிந்துவருகின்றன. உதாரணம் குஷி பேபி என்ற ராஜஸ்தான் அமைப்பு. இது அங்கே தாய் சேய் நலனைப் பேணுவதில் பங்காற்றுகிறது. 35000 கிராமங்களில் 60,000 சுகாதாரப் பணியாளருடன் இணைந்து இது பணியாற்றி, 1.3 கோடிப் பேரை சென்றடைந்துள்ளது ஒரு வெற்றிக்கதையாகும்.

டாக்டர் நீங்க செய்தது நியாயமா?

என்னை ஏம்மா பெத்தே... என சில பெண்கள் அம்மாக்களிடம் கேட்பதுண்டு. ஒரு பெண் இதையும் தாண்டி தன் அம்மாவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடமே போய்விட்டார். நீங்கள் சரியான மருத்துவ ஆலோசனை என் அம்மாவுக்கு அளிக்கவில்லை. நீங்கள் அளித்திருந்தால், என் தாய் என்னைப் பெற்றிருக்க மாட்டார். நானும் என்னை பாதித்திருக்கும் நரம்புநோயுடன் பிறந்திருக்க மாட்டேன்! என வழக்குப் போட்டுவிட்டார்! இது நடந்திருப்பது லண்டனில். வழக்கை விசாரித்த நீதிபதியும் இது சரிதான் என்று கூறியதுடன் இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு பெற தகுதி உள்ளது என தீர்ப்பளித்துள்ளார். பக்கத்தில் படத்தில் இருப்பவர்தான் அப்பெண்! தன் உடல் குறையையையும் மீறி குதிரையேற்றத்தில் ஜொலிக்கிறார்! இவரது வழக்குரைஞர்கள் எவ்வளவு நஷ்ட ஈடு கேட்பது என கணக்கிட்டு வருகிறார்கள்.

இருபது ஆண்டுகள் கழித்து, மருத்துவரிடம் இழப்பீடு கேட்பதெல்லாம் சாத்தியமாவது ஆச்சர்யத்தை அளிக்கிறது!

சிறையிலிருந்து நடத்திய மோசடி!

டெல்லியைச் சேர்ந்த கோடீசுவரர் ஒருவரின் மனைவி அதிதி சிங். இவரது கணவர் கறுப்புப்பண வழக்கில் சிறையில் இருக்கிறார். தன் கணவரை வெளியே கொண்டுவர விரும்பும் அவரிடம் உள்துறை உயர் அதிகாரிகள் என்ற போர்வையில் சிலர் பேசுகிறார்கள். மேலிடம் உங்கள் கணவரை வெளியே கொண்டுவர விரும்புகிறது.. ஆனால் அதற்குக் கொஞ்சம் செலவாகும் என்று சொல்லியே சுமார் 200 கோடிவரை கறந்ததாகச்

சொல்லப்படுகிறது. இந்நிலையில் ‘உங்களிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பது உயர் அதிகாரியே அல்ல; சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி‘ என்று போலீசார் சொல்கிறார்கள். யார் இந்த சிறையிலிருந்து பேசிய ஜித்தன் என்றால் சுகேஷ் சந்திர சேகர்! அவரே தான். தேர்தல்ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டபோது அடிபட்ட அதே ஆள்தான்.

சிறைக்குள் இருந்து விதவிதமான போன் எண்களை மாற்றிக்காட்டும் மென்பொருட்கள் மூலம் இவர் இம்மோசடியில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது!

மால்கம் எக்ஸ்

மால்கம் எக்ஸ் வழக்கு: நஷ்ட ஈடு கேட்கும் முன்னாள் சிறைவாசி!

அமெரிக்காவின் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி மால்கம் எக்ஸ். இவர் 1965-இல் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரைக் கொன்றதாக மூன்று பேரைக் கைது செய்து ஆயுள் தண்டனை விதித்தார்கள். மூவரும் தண்டனை முடிந்து பல ஆண்டுகளுக்கு முன் வெளியேயும் வந்தனர்.

இந்த வழக்கில் தற்போது ஒரு திருப்பம். 2020-இல் நெட்ப்ளிக்ஸில் யார் கொன்றது மால்கம் எக்ஸை என்று ஒரு டாகுமெண்டரி வெளியானது.இதை அடுத்து இந்த வழக்கை மறுபடியும்

விசாரணைக்கு எடுத்தார்கள். விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட மூவரில் ஆசிஸ், இஸ்லாம் ஆகிய இருவரும் நிரபராதிகள். தவறாக தண்டிக்கப்பட்டார்கள் என்று தீர்ப்பளித்தார். பரபரப்பான இந்த தீர்ப்பைத்தொடர்ந்து ஆசிஸ்(வயது 80), என்னை காரணமின்றிசிறையில் அடைத்த அரசு 20 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தரவேண்டும் என கேட்டுள்ளார். செத்துப்போன இஸ்லாம்  சார்பாகவும் நஷ்ட ஈடு கேட்கப் போகிறார்களாம்! நம்ம ஊரில் நடக்குமா?

அம்மா என்றால் அழகுதான். அதுவும் பாலிவுட் அம்மாக்கள் இன்னும் விசேஷம்! இடமிருந்து: லில்சா ஹைடன், இசா தியோசல், ஜெனிலியா, கஜோல், கரீனா, ஐஸ்வர்யா பச்சன்.

ஜனவரி-2022