கலைஞர் பிரியர் ஆன கலாப்ரியா! 
சிறப்புப்பக்கங்கள்

செயல் மறந்து வான் மிதந்து

கலாப்ரியா

திருநெல்வேலி 1965 செப்டம்பர் வாக்கில் 11ஆவது  வட்ட தி.மு.க. உட்கிளையாக எம்.ஜி.ஆர் மன்றம் ஆரம்பிப்பது என்று முடிவாயிற்று. நகரச் செயலாளர் நம்பி அண்ணாச்சி தலைமையில் பூர்வாங்கக் கூட்டம் நடந்து முடிந்தது. திறப்பு விழாவிற்கு கலைஞரை அழைப்பது என்ற எங்கள் ஆசையைச் சொன்னோம். ஏனெனில் அவரது கூட்டம் நெல்லையைச் சுற்றி எங்கே நடந்தாலும், கால் நடையாகவோ சைக்கிளிலோ  சென்று விடுவோம். அதனால் அவரை நமது தெருவிற்கே அழைத்து மிக அருகில் அமர்ந்து பேச்சைக் கேட்பது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் அப்போது கலைஞர் 1967 தேர்தலுக்கு நிதி திரட்டும் மும்முரத்தில் இருந்தார். அதனால் அவரைக் கூட்டங்களுக்கு அழைப்போர் 500 ரூபாய் தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை, நம்பி அண்ணாச்சியிடம் நினைவு படுத்தினோம்.அவரோ, 'நெல்லை என்றால் கலைஞருக்குப் பாசம் அதிகம். அவர் சமீப காலம் வரை பாளையங்கோட்டைச் சிறையில் இருந்து தானே விடுதலையாகி இருக்கிறார். உங்களால்  அவருக்கு இருநூறு ரூபாயும், கார் செலவும் தர முடிந்தாலும் ( அப்போது பெட்ரோல் விலை சுமார் 90 பைசா) வேறு பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் நகர தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்து செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நம்பி அண்ணாச்சி நம்பிக்கையும் தந்தார்.

கலைஞர் நம் தெருவில் பேசப்போகிறார் என்று மனக்கோட்டை கட்ட ஆரம்பித்திருந்தோம். 20 ரூபாய் செலவில் நன்கொடை ரசீது புத்தகங்கள் அடிக்கவே விழி பிதுங்கிற்று. அப்புறம் ரசீது புத்தகத்தை எடுத்துக்கொண்டு சாயந்தரம் தோறும் கடைகடையாய் ஏறி இறங்கினாலும். ஏதோ தெருவுக்கு இருந்த பேரினால் ஏச்சு வாங்காமல் வெறுங்கையுடன் வந்தோம்.

“நீங்கள்லாம் படிக்கிற புள்ளைகளா இருக்கிங்க.. நீங்க ஏம்பா இப்படி உண்டியல் குலுக்கிட்டு அலையுதீங்க,' என்றோ...‘ நீ இன்னாரு மகன்ல்லா உங்கப்பாவுக்கு நீ இப்படி அலையறது தெரியுமா,' ‘என்னடே ரூவா பிரிச்சு தீபாவளிக்கு ‘தாழம்பூ'வா... பூமாலை'யா என்ன படம் பாக்கலாம்ன்னு ஐடியா'   என்று கிண்டலும் எகத்தாளமுமே பதிலாய்க் கிடைத்தது. பத்து நாள் அலைந்த பிறகும் பத்து ரூபாய் கூடப் பிரியவில்லை. சிலர் நாலணா அல்லது எட்டணா (25 நயாபைசா அல்லது 50நயா பைசா) கொடுத்து விட்டு ரசீதெல்லாம் வேண்டாம், மன்றமோ படிப்பகமோ என்னத்தையும்  ஆரம்பியுங்க இல்லைன்னா 'ஆபிரகாம் ஓட்டல்' புதுசா ஆரம்பிச்சிருக்கு, அங்க ரொட்டி சால்னா வாங்கித் தின்னுட்டுப் போங்க,' என்று ஆற்றுப் படுத்தி அனுப்பினார்கள்..

 ஆனால் தூத்துக்குடிக்கோ ஸ்ரீவைகுண்டத்துக்கோ 1965 தீபாவளி முடிந்த சமயம் வந்த கலைஞர்,  அப்படியே எங்கள் ஊர் தி.முக சேர்மன் வீட்டுக்கும் ஒரு ஃப்ளையிங் விசிட் வந்தார். அங்கே இரவு உணவு. நாங்கள் சேர்மன் மஜீத் வீட்டருகே போய் காத்துக் கிடந்தோம். ஏனோ திடீரென்று ஒரு எஸ் ஐ தலைமையில் வந்த போலீஸ் எங்களை விரட்டினார்கள். நாங்கள் பத்தடி செல்வதும் மறுபடி கூடுவதுமாக இருந்தோம். வீட்டு வாசல் தெருவடியில்தான் இருக்கும்.  அதாவது விருந்து முடிந்து  வீட்டை விட்டு வெளியில் வந்தால் தெருவில் காத்து நிற்கும் காரில்தான் ஏற வேண்டும். கூட்டம் அதிகமாகக் கூடிவிட்டது. போலீஸை எதிர்த்து கோஷமும் ஆரம்பித்து விட்டது. வீட்டருகே போலீஸ் வாசலை மறித்தது போல நின்றது. சத்தம் கேட்டு வெளியே வந்த  நகரச் செயலாளர், ‘உள்ளே நெருக்கடியாக இருக்கு அவர் வெளியே வந்ததும் உங்களை அறிமுகப்படுத்துகிறேன்,' என்றார். இத்தனைக்கும் அவரது வருகை யாருக்கும் தெரியாது. கலைஞர் வெளியே வந்தார். நாங்கள் முண்டிக் கொண்டு அருகே சென்று அவரை நெருக்கமாகப் பார்த்தோம். பேச முடியவில்லை. ஆனால் அவர் திறப்பு விழாவிற்கு வர வய்ப்பில்லை என்று கூறி விட்டதாக நம்பி அண்ணாச்சி பின்னால் சொன்னார்.

 கலைஞர் வரமுடியாததால், காஞ்சி கல்யாண சுந்தரம், காட்டூர் கோபால், எஸ்.எஸ்.மணி திருச்சி எம்.ல்.ஏ என்று கழகப் பேச்சாளர்கள் விலாசத்தை முரசொலியில் தேடி கடைசியில் எஸ்.எஸ். மணி அவர்களுக்கு ஐம்பது ரூபாய் பணமும் ரயில் டிக்கெட்டும் முடிவாகியது. 1966 பொங்கலுக்கு திறப்பதாக இருந்த மன்றம் லால் பகதூர் சாஸ்திரி மரணத்தால் ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 18ம் தேதி திறந்தோம்.

கலைஞர் பேச்சைக் கேட்பது அவ்வளவு விருப்பமான ஒன்று. 1966 கடைசியில்  தூத்துக்குடியில் நடை பெற்ற நெல்லை மாவட்ட தி.மு.க மகாநாட்டுக்கு கலைஞர் அண்ணா எல்லாம் வந்திருந்தார்கள். இரண்டாம் நாள் மதியம் கலைஞர் பேசினார். அவர் பேசும் வரை கூட்டம் சற்று அமைதியில்லாமல் இருந்தது. அவர் மைக்கைப் பிடித்ததும் ஆங்காங்கே நின்று வம்பளந்து கொண்டும் கடலை கொறித்துக் கொண்டும் இருந்தவர்கள் எல்லாரும் மேடையை நோக்கி நெருக்கி வந்து அமர்ந்தார்கள். பசியை மறந்து விட்டு நாங்களும் நைசாக பெண்கள் பகுதியை ஒட்டி முன்னே தாவினோம். பெண்கள் பகுதியில் எண்ணி விடக்கூடிய அளவில்தான் கூட்டம் இருக்கும். நாங்கள் போனதும்  அதற்குப் பின் அங்கே யாரும் வராமல் தொண்டர் படை தடுத்து விட்டது அவரைப் பார்த்துக் கொண்டே பேச்சைக் கேட்பது ஒரு சுகம். கேட்டோம்.

1968 இல் ஆட்சி அமைந்த பின் தென்காசியில் இடைத்தேர்தல் வந்தது. சனி ஞாயிறு கல்லூரிக்கும் லீவு. எம்.ஜி.ஆரும் பிரசாரத்திற்கு வருகிறார். பிறகென்ன கிளம்பி விட்டோம். 1967 தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்த தொகுதி. தொடர்ந்து வெற்றி பெறும் இலஞ்சியைச் சேர்ந்த உண்மையான கல்வி வள்ளல் ஐ.ஏ.சிதம்பரம் பிள்ளைதான் அங்கே வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் நடக்கும் இடைத் தேர்தல். தீப்பிடிக்கும் பிரசாரம். அண்ணாவை மருத்துவர்கள் பிரச்சாரத்துக்குப் போக் கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

காலையிலிருந்து தென்காசியையும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களையும் சுற்றிச் சுற்றி வருகிறோம். எம்.ஜி.ஆரையும் பார்க்க முடியவில்லை, கலைஞரையும் பார்க்க முடியவில்லை. இரவு வந்தது அலுப்போடு இலஞ்சி என்று நினைவு, சின்னதாய் ஒரு வீட்டில், தற்காலிகமாக ஏற்படுத்தியிருந்த கட்சி அலுலகத்தின் முன்  பந்தல் போட்டு மணலெல்லாம் விரித்து வைத்திருந்தார்கள். அங்கே படுத்துக் கிடந்தோம். ஏற்கெனவே அந்த வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிலர் இருந்தார்கள். இரவு பத்துப் பதினோரு மணி இருக்கும். திடீரென்று ஒரு ஜீப் வந்தது. அதிலிருந்து தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு மடித்துக் கட்டிய வேட்டியுடன் கலைஞர் இறங்கினார். அந்த இடமே பரபரப்பானது. எங்களிடம் நீங்கள்லாம் இங்கே உள்ளவங்கதானா என்று கேட்டார்.

பல ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள் அது சீஸன் சமயம் வேறு.திருநெல்வேலி என்றோம். மாணவர்களா என்றார். தலையை ஆட்டினோம். அவரும் தலையைத் திருப்பி,  திரவியமோ ஏதோ பேர் சொன்னார், ‘பத்து டீ வாக்கிட்டுவரச் சொல்லுங்க, எனக்கும் வேணும்,' என்றார். அதனாலோ என்னவோ நல்ல டீ யாக வந்தது. நீங்க நாளைக்கு கல்லூரி போகணுமில்லையா பாத்துக் கோங்க,' என்றார். “இன்னும் சரியாகவே பாடமெல்லாம் ஆரம்பிக்கவில்லை,' என்று எங்களில் யாரோ சொன்னார்கள். நானே சொன்னேனோ என்னவோ. ஏனென்றால் அவரை வெகு அருகாகப் பார்த்துப் பேசி விட்ட ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் இருந்தோம் அப்போது. உதட்டோரமாக ஒரு சிரிப்பு அரும்ப, ‘கவனமாயிருங்க' என்று சொல்லி விட்டு டீ குடித்து முடியும் நேரம் வரை நின்று விட்டுப் போனார். நாங்கள் பார்க்க விரும்பி வந்தது எம்.ஜி.ஆரை பார்த்துப் பேசியது கலைஞரை. மறுநாள் எம்.ஜி.ஆரையும் பார்த்து விட்டுத்தான் கிளம்பினோம்.

இதே போலத்தான் எம்.ஜிஆருடன் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைவேறவே இல்லை. புதிய பூமி படப்பிடிப்பில் அருகே போய் அவரிடம் பேசி  ஆசையை வெளியிட்டபோது, நாளை சத்யா ஸ்டுடியோவுக்கு வா என்று சொல்லி அனுப்பி விட்டார். ஆனால் கலைஞருடன் படம் எடுக்கும் ஆசை தானாகவே நிறைவேறியது. ஆனால் முப்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து, 2003 இல். அப்போது நான் எழுத்தாளனாகி விட்டேன். கவிஞர் இளையபாரதியின் 9 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. வண்ணதாசன் தலைமையில், கலைஞர், கவிக்கோ, ஞானக்கூத்தன், அசோக மித்திரன், நான் என்று நிறையப்பேர் பங்கேற்கும் நிகழ்வு நானும் அதில் பேசினேன். என் பெயரை அழைத்தும் நான் மேடைக்கு ஏறி கலைஞரை வணங்கினேன். கவிக்கோ அப்துல் ரகுமான் என்னை ‘கலாப்ரியா நல்ல கவிஞர்' என்று அறிமுகப்படுத்தினார். தெரியும் என்ற புன்னகையொன்றுடன் தலையசைத்து வரவேற்று அமரச் சொன்னார்.

முன் வரிசையில் இடமிருந்தாலும் கொஞ்சம் தயக்கத்துடன் மேடையில் இரண்டாவது வரிசையில் அமர்ந்தேன். என் அருகே கவிஞர் கனிமொழி. எனக்கு நேர் முன்னால் உயரமோ உயரமாய் நடிகர் நெப்போலியன். மேடையில் கலைஞருடன் நான் இருக்கும் படம் ஒன்று கூட இருக்காது என்று தோன்றியது. விழா முடிவுற்ற போது கனிமொழியிடம் மெதுவாக படம் எடுக்கும் என் ஆசையைச் சொன்னேன். அவர் சற்றும் தயங்காமல் கலைஞரிடம் சொல்ல அவர் அதற்கென்ன எடுத்துக் கொள்ளலாம் என்று சம்மதித்தார். அவரருகே, கையைப் பிடித்துக் கொண்டு நின்றேன். எத்தனை வருடக்கனவு என்ற மகிழ்ச்சி என்னை மௌனமாக்கி இருந்து. அநேகமாக எல்லோருமே அமைதியாயிருந்தார்கள். அதைப் புரிந்து கொண்ட கலைஞர்,‘கலாப்ரியா காமிரா பிரியாவாகி விட்டார்.' என்றதும் எல்லோரிடமும் அடக்க முடியாது சிரிப்பு பொங்கியது. வடகர பஸ்கரதாஸ் படபடவென்று கிளிக்கித் தள்ளினார். வாழ்வின் அற்புதமான கணமொன்று அழகாகச் சிறை பிடிக்கப்பட்டது.

 2005இல் என் பெரிய மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. அதற்கான அழைப்பிதழைக் கனி மொழி வீட்டிற்கு இளையபாரதியுடன் சென்று கொடுத்து விட்டு ‘அப்பாவுக்கும் ஒரு அழைப்பிதழ்' என்று நீட்டினேன். “நீங்களே சென்று கொடுங்களேன்,' என்றார். அப்போது அவர் கோபாலபுரம் வீட்டில்  ஒரு படத்திற்கான விவாதமொன்றில் இருந்தார். இளையபாரதியும் அதில் கலந்து கொள்ள வேண்டும். அந்த அவசரத்தில் இருந்தார். சொன்னதோடு நிற்காமல், கனிமொழி, கலைஞரைத் தொலை பேசியில் அழைத்து விவரத்தையும் சொல்ல, அவர் வரச்சொன்னார். இளையபாரதியுடன் ஆட்டோவில் சென்றேன். அவரோ, ‘என்னங்க தலைவரைப் பார்க்க இப்படி வெறுங்கையுடனா போவது ஒரு சால்வை வாங்கக் கூட நேரமில்லையே,' என்று கூறிக் கொண்டே வந்தார். அங்கே போனதும்தான் அது எவ்வளவு சரியென்று தெரிந்தது. நிறையத் தொண்டர்களும் பிரமுகர்களும் கையில் மாலைகளுடனும் பழங்கள் பொன்னாடைகளுடனும் காத்திருந்தார்கள்.

நாங்கள் போனதும் பாரதியிடம் ‘உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார் சீக்கிரம் செல்லுங்கள்,' என்று அவரது உதவியாளர்கள் அனுப்பினார்கள். நான் தட்டுத்தடுமாறி மாடிப்படியில் ஏறி அவரது அறைக்குச் சென்றேன். பதற்றம் ஒரு புறம், எதிர்பாராமல் நடந்த நிகழ்வின் மகிழ்ச்சி ஒருபுறம் ‘ஐயா, அண்ணன், சார்' என்று எதையோ கூறிக் கொண்டு வணக்கம் போட்டு நின்றேன். அதையெல்லாம் புரிந்து கொண்டு ‘முதலில் அமருங்கள்' என்றார். அருகில் அமர்ந்திருந்த  ராமாநாராயணனும் உக்காருங்க என்று அவர் அருகே உள்ளே இடத்தை தொட்டுக் காட்டினார். உட்கார்ந்து கலைஞரிடம் அழைப்பிதழைக் கொடுத்தேன்.அவரோ, ‘இவர் இயக்குநர் இராமநாராயணன்' என்று இரண்டு முறை அறிமுகப்படுத்தினார். ‘தெரியுமே, சிகப்பு மல்லி, சுகமான சுமை காலத்திலிருந்தே தெரியுமே,' என்றேன்.

கலைஞர் சிரித்துக்கொண்டே அழைப்பிதழை விரித்துப் படித்து விட்டு,‘உங்களுக்கு ஊரே தென்காசிதானா,' என்றார். இல்லை திருநெல்வேலி என்று சொல்லி நெல்லையில் அவருக்குத் தெரிந்த சேர்மன், பொதுக்குழு உறுப்பினர் மிசா திருநாவுக்கரசு ஆகியோர் பெயரையெல்லாம் சொன்னேன். சிரித்துக் கொண்டார்..இளைய பாரதி ‘நம்ம ஆட்சியில்தான் மணமகளுக்கு எழுத்தாளர் ஒதுக்கீட்டில் மருத்துவ  இடம் கிடைத்தது' என்றார். நானும் ‘ஆமா ஐயா' என்றேன். சற்று அமைதி நிலவவே,‘அவசியம் வாருங்கள் ஐயா, முடியாவிட்டால் ஒரு வாழ்த்து அனுப்புங்கள்,' என்று  கேட்டுக் கொண்டு  விடை பெற்றேன்.

வானத்தில் மிதந்தபடியே வெளியே வந்து அறைக்குத் திரும்பும் போதுதான் உறைத்தது, இரண்டு முறை ‘இவர்தான் இராமநாராயணன்,' என்றாரே அவருக்கு ஒரு அழைப்பிதழைக் கொடுத்திருக்க வேண்டுமோ,' என்று தோன்றியது. அவசரத்தில் அண்டாவுக்குள் கூட கை நுழையாது என்பது போல பரபரப்பில் எதுவும் தோன்றாதது. வியப்பில்லைதான்.

அடுத்து 2007 இல் கலைமாமணி விருது பெறும் போது விழா மேடையில் கை குலுக்கினேன். உலகில் எது மிக மென்மையானது, ரோஜாவா குழந்தையின் கன்னங்களா என்ற கேள்விக்கு விடையாக ஒரு ஆங்கிலப் பொன் மொழி,‘நம்முடன் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் பயின்ற ஆதி காலத்து பள்ளி நண்பனின் கரங்கள்தான்,' என்று கூறும். அதை அப்போது கலைஞரின் கரங்களைப் பற்றும் போது உணர்ந்தேன். அப்போது அவரும் ‘இப்போ எழுதறீங்களா,' என்று மெதுவாகக் கேட்டார். அவரைப் பொருத்தவரை, இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவர் வாழ்க்கை மூலம் சொல்லும் செய்தி.

அவரது 90 வது பிறந்தநாள் விழாவுக்கு, 90 கவிஞர்கள் அவரைச் சந்தித்து வாழ்த்துவது வாழ்த்துப் பெறுவது என்றொரு விழாவினை கவிஞர் வைரமுத்து முன்னெடுத்துச் செய்தார். அதற்கு என்னையும் அழைத்தார். விழா தொடங்கியதும், கவிஞர் வாலி, கவிக்கோ, வண்ணதாசன் அவர்களை அடுத்து நான்காவதாக என்னை அழைத்து மறுபடி அந்தக் கரங்களைத் தொடும் இன்னொரு மென்மையான பாக்கியத்தைத் தமிழ் எனக்கு அருளியது. உண்மையாகவே அது பெருமையான கணமாயிருந்தது. எப்போது எந்த  விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போதும்  ‘உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே'  என்ற மோகன ராக வரிகளில் தமிழால் அல்லவா இந்த மேடை கிடைத்தது என்ற நினைப்பு மேலிட ஒரு புல்லரிப்பும் மென்மையான ஆனந்தக் கண்ணீரும் முட்டிக் கொண்டு வரும். ஒவ்வொரு முறை முத்தமிழ் அறிஞரை நெருங்கும் போதும் இதுவேதான் தோன்றும். செயல் மறந்து வான் மிதந்து திரும்புவேன்.