சிறப்புப்பக்கங்கள்

செத்துச் செத்துப் பிழைக்க வைத்தவர்!

ஆதித்த குமாரன்

கான்பூரில் காங்கிரஸ் மாநாடு. 1959-இல் நடந்த இம்மாநாட்டில் நேருவின் சோஷலிசக் கொள்கைகளை எதிர்த்தும் கூட்டுறவுப் பண்ணைகளுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் ஒருவர் பேசுகிறார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். பிரதமர் நேருவை காங்கிரஸ் கட்சிக் குள் இருந்தே ஒருவர் இவ்வளவு ஆழமாக எதிர்க்க முடியுமா? என்று அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அவர்  சௌத்ரி சரண்சிங்.

இது ஒரு மணி நேரப் பேச்சு. சரண் சிங் நான்கு மணி நேரம் பேசியிருக்கிறார். அது எப்போது தெரியுமா? எமர்ஜென்சியின் போது ஆயிரக்கணக்கான தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டபோது உபியின் முன்னாள் முதல்வரான சரண்சிங் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜன்னலே இல்லாத அறை. கொடுஞ்சிறையில் இருந்து சில காலம் கழித்து விடுதலை செய்யப்பட்டவர் உபி சட்டமன்றத்தில் எமர்ஜென்சிக் கொடுமைகளை எதிர்த்து நான்குமணி நேரம் உரையாற்றினார். இந்த உரை அப்போது இருந்த தணிக்கை முறையால் எந்த பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை.

ஆனால் இந்திராவை எதிர்த்து அடுத்து வந்த தேர்தலில் நாடு முழுக்க எழுந்த ஜனதா கட்சி அலையில் வட இந்தியாவில் விவசாயிகளை ஓரணியில் திரட்டி பங்கேற்கச் செய்து, ஆட்சி அமைப்பதில் பங்காற்றி, துணைப்பிரதமராகவும் கொஞ்சகாலம் பிரதமராகவும்  இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இந்தியாவின் ஐந்தாவது பிரதமர். நாடாளுமன்றத்தை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கப்பெறாமல் பதவி இழந்தவர் என்றெல்லாம் சொல்லப்படும் சரண் சிங் பல கட்சிகளை பல பெயர்களில் உருவாக்கி இருக்கிறார்.

சரண்சிங்குக்கு உபியில் முதலமைச்சராக தகுதி இருந்தும்  1960, 1963, 1967 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சித்தலைமை உள்கட்சி பிரச்னையால் அவரைப் புறக்கணித்திருந்தது. எனவே வெறுத்துப்போய் காங்கிரஸ் கட்சியில் இருந்து 1967-இல் விலகினார்.

இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் சமரசத்துக்காக தயாராக இருந்தபோதும் சரண்சிங் தன் ஆதரவாளர்களான 16 எம்.எல் .ஏக்களுடன் பிரிந்து சென்று ஜன் காங்கிரஸ் என்ற கட்சியை அமைத்தார். இதைத் தொடர்ந்து ஜனசங்கம், சம்யுக்த சோசலிச கட்சி, இடதுசாரிகள், சுதந்திரா கட்சி, ப்ரஜா சோஷலிச கட்சி, குடியரசுக்கட்சி மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து சம்யுக்த விதாயக் தளம் என்ற அணியை உருவாக்கி, உபியின் முதலமைச்சராக அமர்ந்தார்.

பிஹார், உபி, வங்காளம், ஒரிசா, ராஜஸ்தான் போன்ற  மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் காரர்களுடன் இணைந்து சில மாதங்களில் பாரதிய கிராந்தி தளம் என்ற கட்சியையும் உருவாக்கினார்.  1968-இல் தன்னுடைய ஜன் காங்கிரஸ் கட்சியை அதனுடன் இணைத்து, அதற்கு அடுத்த ஆண்டு அதன் தலைவராகவும் ஆனார் சரண் சிங்.

உபியில் எந்த கூட்டணி அரசுதான் நிலைத்துள்ளது? தலைவர்களிடையே பல்வேறு பிரச்னைகள். 1968-இல் உபிக்கு வந்த பிரதமர் இந்திராவைக் கைது செய்யவேண்டும் என சோசலிச கட்சித் தலைவர்கள் முழங்க, அவர்களை சிறையில் அடைத்து இந்திராவுடன்  கூடவே இருந்தார் சரண்சிங். அதன் பின்னர் பெரும்பான்மை இழந்து பதவியும் விலகிவிட்டார்.

ஓராண்டு கழித்து மீண்டும் உ.பி. சட்டமன்றத் தேர்தல் வந்தது. பாரதிய  கிராந்தி தளம் 98 இடங்களில் வென்றிருந்தது. காங்கிரஸ் 211 இடங்களில் மட்டும் வென்று பெரும்பான்மை பெறமுடியவில்லை. ஆனாலும் பிற கட்சிகளின் உதவியுடன் காங்கிரஸ் தலைவர் சி.பி. குப்தா முதல்வர் ஆனார்.

சரண்சிங் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.

இச்சமயம் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் (ஓ), காங்கிரஸ்(ஆர்) என இரண்டாகப் பிளவுற்றது. காங்கிரஸ்( ஆர்) ஆதரவுடன் சரண்சிங் முதலமைச்சர் ஆனார்.

காங்கிரஸ் (ஆர்) ஆதரவளிக்கிறதே என்று அவர் சும்மா இருந்தாரா? மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவை அக்கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது இவரது பா.கி.தளம் கட்சி எதிர்த்து வாக்களித்தது.

 சர்தார் படேல், சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தபோது, அவற்றின் தலைமைகளுக்கு அளித்த புனிதமான வாக்குறுதி அதை மீறக்கூடாது என்பது சரண்சிங் நிலைப்பாடு.

இதனால் தொடர்ந்து இந்தமுறையும் ஆட்சி கவிழ்ந்து குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஒரு மாதம் கழித்து குடியரசுத்தலைவர் ஆட்சி நீக்கிக் கொள்ளப்பட்டபோது சரண்சிங்குக்கு காங்கிரஸ் (ஓ) ஆதரவு தந்து மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமருமாறு சொன்னபோது, அவர் மறுத்துவிட்டு, அக்கட்சியின் திரிபுவன்சிங்குக்கு முதல்வராக ஆதரவு தந்தார்.

உபி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவே 1977 வரையில் இருந்தார். அடுத்த தேர்தல் டெல்லிக்கு வர வாய்ப்பளித்தது. (ஏற்கெனவே 1971 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போயிருந்தார் சரண்சிங். அப்போது வீசிய இந்திரா அலை காரணம்)

பாரதிய கிராந்தி தளம் உபியில் தொடர்ந்து வலுவாகவே இருந்த நிலையில் இந்திராவுக்கு எதிராக வலுவான கட்சிகளின் கூட்டணியைக் கட்ட அவர் தொடர்ந்து முயன்றுகொண்டே வந்தார். ஒருவழியாக 1974-ல் பாரதிய லோக் தளம் என்ற கட்சியை உருவாக்கினார். இதில் அவரது பா.கி.தளம், சுதந்தரா கட்சி, ராஜ் நாராயணின் சம்யுக்த சோஷலிச கட்சி, பிஜுபட்நாயக்கின் உத்கால் காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தந்திரிக் தளம், கிசான் மஸ்தூர் கட்சி, பஞ்சாபி கேத்திபாரி ஜமீந்தாரி ஒன்றியம் ஆகியவை இணைந்தன. கிட்டத்தட்ட வட இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் தழுவியதாக அக்கட்சி அமைந்தது.

இந்த கட்டத்தில் இந்திரா காந்தி எமர்ஜென்சி அறிவிக்க,  தலைவர்கள் சிறைக்குப் போனார்கள். 1977-இல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களும் ஒருங்கிணைய முன்வந்தார்கள். ஜனதா கட்சியில் பாரதிய லோக் தளத்தையும் இணைத்து, அதன் துணைத்தலைவர் ஆனார் சரண் சிங். ஜனதா கட்சிக்கு வலுவான அடித்தளத்தை வட இந்தியாவில் அளித்தது சரண் சிங் உருவாக்கி இருந்த கட்சிதான். சின்னம்கூட இவருடையதுதான்.

பல கட்சிகளின் கூட்டணியாக ஜனதா கட்சி இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் கட்சி குழு அடையாளம், கொள்கைகளுடன் செயல்பட்டதால், மோதல்கள் ஏற்பட்டு ஜனதா அரசு கவிழ்ந்தது. சரண்சிங் தலைமையில் உருவான மதசார்பற்ற ஜனதா(ஜனதா (எஸ்)) ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்திரா காங்கிரஸ் ஆதரவு தருவதாக முன்வந்தது. முன்னாள் எதிரியின் ஆதரவுடன் சரண்சிங் பிரதமர் ஆனார். இந்திய சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் உரையாற்றிய முதல் விவசாயி என்ற பெருமையைப் பெற்றவர் சரண்சிங்.

ஆனால் இ. காங்கிரஸின் சில நிபந்தனைகளுக்கு அவர்  ஒப்புக்கொள்ளாத நிலையில், அக்கட்சி ஆதரவை விலக்க, சரண் சிங் பதவி விலகினார். 1979ஆகஸ்டில் இருந்து 1980 ஜனவரி வரை காபந்து பிரதமராக அவர் இருந்தார்.

1980-இல் பொதுத்தேர்தலை ஒட்டி, ஜனதா(எஸ்) கட்சியின் பெயரை லோக் தளம் என மாற்றிக்கொண்டனர். ஆனாலும் கட்சி பழைய பெயரிலேயே தேர்தலை சந்தித்தது. சரண்சிங்கின் ஜனதா (எஸ்) காங்கிரஸுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக மக்களவையில் இடம்பெற்றது.

இப்படி பல கட்சிகளை உருவாக்கி, அதை மாற்றி அமைத்து, பிழைக்க வைத்து அரசியல் ஆட்டத்தை ஆடிக்கொண்டே இருந்தார்  சரண்சிங். இதற்கு அவருடைய மேற்கு உத்தபிரதேச ஜாட் விவசாய வாக்கு வங்கி உறுதுணையாக இருந்துகொண்டே வந்தது.  1985-இல் அவருக்கு உடல் நலிவுற்று கோமாவில் செல்லும் வரை இந்த ஆட்டத்தை  அவர் பல்வேறு வழிகளில் ஆடிக்கொண்டே இருந்தார்.

செப்டம்பர், 2022