சிறப்புப்பக்கங்கள்

செக்ஸ் இருந்தா பரவால்ல !

சாரு நிவேதிதா

என்னுடைய எழுத்து (அது நாவலாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி) எப்போதுமே பொதுக்கருத்துக்கு எதிராக இருந்து வருவதால் (அப்படி இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை) ஆரம்பத்திலிருந்தே அதைப் பிரசுரிப்பதில் பெரும் சிரமங்களையும் பிரச்சினைகளுயுமே எதிர்கொண்டு வருகிறேன்.  எண்பதுகளில் நான் தில்லியில் இருந்த போது சுந்தர ராமசாமியின் ’ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலுக்கு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினேன். எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை.  அதனால் அதை ஒரு சிறிய நூல் வடிவில் பிரசுரிக்க விரும்பி தில்லி முழுவதும் அலைந்தேன்.  கரோல்பாகில் ஒரு இடத்தில் திருமணப் பத்திரிகைகள் அடிக்கும் அச்சகம் இருந்தது.  ஒரு நண்பருடன் அங்கே போனேன்.  தாணா அச்சகம் என்று பெயர்.  கரோல்பாக் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அங்கே தனது தமிழ் அச்சகத்தை வைத்திருந்தார் அவர்.  ஊரில் அடுப்புக் கரி விற்கும் கடை மாதிரி இருந்தது.  எல்லா அச்சுக்களையும் பார்த்துப் பார்த்துக் கோர்க்கும் அந்த அச்சகத்தில்தான் அந்தச் சிறிய நூலை அச்சடித்தேன்.  அப்போது என் சம்பளம் 560 ரூ.  அதில் மிச்சம் பிடித்தும் நண்பர்களிடம் கடன் வாங்கியும் அதை அச்சடித்து ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ விலை போட்டு என் எழுத்தாள நண்பர்கள் யாவருக்கும் எல்லா சிறுபத்திரிகைகளுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தேன்.  அச்சடித்த காசை விட தபால் செலவு அதிகமாயிற்று.  (அந்தக் கட்டுரையைப் போட மறுத்த பத்திரிகைகளுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினேன்.) இவ்வளவுக்கும் அவை இலக்கியச் சிறு பத்திரிகைகள்தாம்!

அடுத்த புத்தகமான லத்தீன் அமெரிக்க சினிமாவுக்கும் பதிப்பாளர் கிடைக்கவில்லை.  அப்போது நான் பாண்டிச்சேரியில் இருந்தேன்.  அச்சகம் வைத்திருந்த நண்பர் கம்யூனிஸ்ட் என்பதால் அவர் ஒரு ஏற்பாடு சொன்னார்.  அவர் முதலில் காசு எதுவும் வாங்காமல் அடித்துக் கொடுத்து விடுவார்.  பிறகு அதன் விற்பனை உரிமையை என்.சி.பி.ஹெச். நிறுவனத்திடம் கொடுத்து விடுவோம்.  அவர்கள் காசு கொடுத்ததும் எனக்குக் கொடுத்து விடுங்கள் என்றார் அச்சகத் தோழர்.  அப்படியே செய்தேன்.  தமிழ்நாடு பூராவும் உள்ள என்.சி.பி.ஹெச். விற்பனை நிலையங்களுக்கு - அவர்கள் சொன்ன ஆலோசனையின்படியே - லாரிகளில் பார்சல் பார்சலாக அனுப்பினேன்.  புத்தகத்தின் விலை 18 ரூபாய்.  மிக அழகாக அச்சடிக்கப்பட்ட புத்தகம்.  அந்தக் காலத்தில் 18 ரூபாய் என்பது விலை அதிகம்.  இவர் என்ன லத்தீன் அமெரிக்காவுக்கே போய் படம் பார்த்து விட்டு வந்தாரா என்றெல்லாம் நண்பர்கள் கிண்டலடித்தார்கள்.  இரண்டு ஆண்டுகள் கழிந்தும் என்.சி.பி.ஹெச். நிறுவனத்திடமிருந்து ஒரு பைசா வரவில்லை.  எவ்வளவோ கேட்டும் பயனில்லை.  அப்போது பாண்டிச்சேரியில் வ. சுப்பையா என்ற மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இருந்தார்.  பாண்டிச்சேரிக்காரர்களுக்கு அவர் மேல் அளவு கடந்த பிரியம் இருந்தது.  அவர் மூலமாகவும் அந்தப் புத்தக நிறுவனத்திடம் கேட்டுப் பார்த்தேன்.  ஒரு பைசா கிடைக்கவில்லை. 

அச்சகத் தோழர் பணத்துக்கு நெருக்கினார்.  ஆயிரம் ரூபாய்.  அவர் என்னைத் தேடி என் வீட்டுக்கு வரும் போதெல்லாம் கக்கூஸில் போய் ஒளிந்து கொள்வேன்.  மிகவும் அவலமான அவமானகரமான நாட்கள் அவை.  பின்னர் அந்த ஊரை விட்டு ஓடி விட்டதால் அந்த அச்சகத் தோழரிடமிருந்து தப்பிக்க முடிந்தது. 

ஒருமுறை ஒரு புத்தகத்தை அச்சடித்த அச்சக உரிமையாளர் (அவர் ஒரு பிரசித்தி பெற்ற விமர்சகர், எழுத்தாளர்) நான் பணத்தைக் கொடுக்க சில நாள் தாமதமாகி விட்டது என்பதால் (அவருடைய அச்சகத்துக்கு நேரில் சென்று இன்னும் ஓரிரு தினங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், அலுவலகத்தில் பி.எஃப். லோன் போட்டு வாங்கித் தருகிறேன் என்று சொல்வதற்காகச் சென்றிருந்தேன்) என்னை முகத்துக்கு நேராக வெளியே போடா நாயே என்று பலர் முன்னிலையில் கத்தினார்.  பலர் முன்னிலையில் அவமானப்பட்டதால் அங்கே நிற்க முடியாமல் அந்த அச்சகத்தில் உள்ள கக்கூஸுக்குப் போய் வாய் விட்டு அழுதேன்.  அழுது முடித்து வெளியே வந்து நான் உங்களை ஏமாற்ற மாட்டேன், இன்னும் ஓரிரு தினங்களில் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி, பின்னர், என் மனைவியின் நகையை அடமானம் வைத்து மறுநாளே கொண்டு போய் கொடுத்து விட்டேன்.  அவர் நாவினால் சொன்ன வடு மட்டும் நிற்கிறது.

ஆனால் எல்லாவற்றையும் விட கொடுமையான அனுபவம், ஸீரோ டிகிரியைப் பதிப்பிக்கும் போது நடந்தது.  வழக்கம் போல் எந்தப் பதிப்பகமும் வெளியிடத் தயாராக இல்லை.  இந்த முறை பணத்துக்காக யாரிடமும் செருப்படி பட மனம் இடம் கொடுக்காததால் மனைவி அவந்திகா தன் கழுத்தில் போட்டிருந்த தாலியைக் கழற்றி விற்றே கொடுத்து விட்டாள்.   இந்த முறை பணம் இருந்தது.  அச்சகம் கிடைக்கவில்லை.  இலக்கிய நூல்களை அச்சடிக்கும் அச்சகங்கள் கூட ஸீரோ டிகிரியை அச்சடித்துக் கொடுக்கத் தயாராக இல்லை.  ஏனென்றால் அதன் உள்ளே கொஞ்சம் பாலியல் ரீதியான விவரணைகள் இருந்தன.  25 ஆண்டுகளுக்கு முன்னால் அதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாதவை.  புத்தகத்தில் ஒரு கெட்ட வார்த்தை இருக்கக் கூடாது.  இருந்தால் அது இலக்கியம் இல்லை; சரோஜாதேவி புத்தகம்.  தமிழ் சினிமாவில் இன்னமும் நாயகனும் நாயகியும் முத்தக் காட்சியில் ஏதேதோ விபரீத செய்கைகளையெல்லாம் பண்ணுகிறார்கள் அல்லவா, அந்த மாதிரிதான் இலக்கிய நூல்களில் வரும் நாயக நாயகியர் அனைவரும் சன்னியாசம் வாங்கியவர்களைப் போல் இருந்தனர்.  ஸீரோ டிகிரியோ அதையெல்லாம் உடைத்து நொறுக்கியது.  ஒருத்தர் கூட அச்சடிக்கத் தயாராக இல்லை.  ராயப்பேட்டை சந்துகளில்தான் அப்போதெல்லாம் ட்ரெடில் அச்சகங்கள் அதிகம்.  கையால் எழுதிய தாள்கள் என்பதால் ஸீரோ டிகிரி ஒரு மூட்டை போல் கனத்தது.  அதைத் தோளில் சுமந்து கொண்டு தெருத் தெருவாக அச்சகம் தேடி அலைந்தேன்.  ஒவ்வொரு அச்சகத்திலும் அரை மணி நேரம் (குறைந்தது) என்னை இண்டர்வியூ பண்ணி கடைசியில் துரத்தி விட்டார்கள்.

ஒரு அச்சகத்தில் அதை அதிக கூலிக்கு அச்சடிக்கத் தயார் என்றார்கள்.  ஆனால் பிரச்சினைக்குரிய விஷயங்கள் இருக்கக் கூடாது என்பது நிபந்தனை.  எனக்கோ அடி வயிறு கலங்கியது.  ஏகப்பட்ட பாலியல் சமாச்சாரம் இருக்கிறதே அதில்.  என் முழி திருட்டு முழியாக மாறுவதைக் கண்டு பிடித்து விட்ட அச்சக உரிமையாளர் ஏதாவது அரசியல் விஷயம் இருக்கிறதா என்று நோண்டினார். 

அரசியலா, இல்லையே? 

அப்புறம் ஏன் இப்படி முழிக்கிறீர்கள்?  ஏதோ இருக்கு போலிருக்கே?  இங்கே பாருங்கள், இது கம்யூனிஸ்ட் புக்கா இருந்தா இப்பவே மூட்டையக் கட்டுங்க.  செக்ஸ் இருந்தா பரவால்ல.

ஆஹா, ஆஹா, செக்ஸ் இருந்தா பரவாயில்லையா?

பரவால்ல.  ஆனா அரசியல் இருக்கக் கூடாது.  கம்யூனிஸ்ட், நக்ஸலைட் எதுவும் ஒரு வரி கூடாது.

தெய்வமே என்று சொல்லிக் கொடுத்தேன்.

குற்றாலத்தில் நடந்த இலக்கியக் கருத்தரங்கில் என்னுடைய புத்தகங்களை வெளியிட நான் படும் பாட்டைப் பற்றிக் கொஞ்சம் பேசினேன்.  கையில் சூடு மாறாத ஸீரோ டிகிரி - அப்போதுதான் அச்சகத்திலிருந்து எடுத்துக் கொண்டு நேராக குற்றாலம் கருத்தரங்குக்கு ரயில் ஏறியிருந்தேன். 

அப்போது சபையில் - ஐம்பது எழுத்தாளர்கள் அமர்ந்திருந்த சபையில் - ஜெயமோகன், என்னைப் பார்த்து, ஏன் இவ்ளோ சிரமம், பேசாம சரோஜாதேவி புத்தகம் போட்ற அச்சகத்துல போடலாமே? என்றார்.

சென்னை வசையைச் சொல்லிக் கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தேன்.

ஜூன், 2016.