தஞ்சையில் ஓர் அறையில் நானும் நண்பர்கள் அசோக்கும், சிவசுப்பிரமணியனும் பேராசிரியர் பாரியின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். கட்டிலின் மீது தமிழக வரைபடம் விரித்து வைக்கப் பட்டிருந்தது. கோவலன், கண்ணகி மதுரை நோக்கிச் சென்ற வழியில் செல்வது என்று நாங்கள் முடிவு செய்தவுடன் நண்பர் தஞ்சை மதியழகனைத் தொடர்பு கொண்டோம். எங்கள் யாருக்கும் அவரைத் தெரியாது என்றாலும் தோழர் மனமுவந்து உதவ முன்வந்தார்.
ஒரு பெரிய சாக்கடையைப் போல பிளாஸ்டிக் குப்பைகள் மிதந்து கொண்டிருந்தன காவிரியில். அது கடலுக்கு வந்து சேரவில்லை. காவிரிக்கும் கடலுக்கும் இடையே ஒரு நூறு மீட்டர் தூரம் மண் நிரப்பப் பட்டு மைதானம் போலாக்கப் பட்டிருந்தது. துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம்.
பாழடைந்து போயிருந்த அரசு கட்டிடங்கள், கைவிடப்பட்ட ஒரு பெரிய விடுதி. ஒரு பத்து கடைகள். அலையடிக்கும் கடல். கிராமம் நகரம் எதைப் போலவும் இல்லாத ஒரு வினோதமான இடமாகவிருந்தது பூம்புகார். மீனவர்களின் வீடுகள் மட்டுமே சற்று களையுடன் காணப்பட்டன. அறவண அடிகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புத்த விஹாரத்தின் சிதைவுகளும் மணிமேகலையில் வரும் சம்பாபதியம்மன் கோவிலும்தான் ஏதோ ஒருவிதத்தில் சிலப்பதிகாரத்தோடு கொஞ்சம் தொடர்புடைய இடங்கள். மணிக்கிராமம் என்ற கிராமத்தில் ஒரு பழங்கால படகுத் துறை இருந்தது.
கோடையின் தொடக்கத்திலும் புகாரைச் சுற்றியுள்ள இடங்களில் அப்படியொரு பசுமை குடி கொண்டிருந்தது. மிருதுவான சிவப்பு நிறமண்ணில் கைத்தடியை நட்டாலும் வளர்ந்து விடும் போலிருந்தது. அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய, மிக அழகான இடம் சம்பாபதி அம்மன் கோவில். மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவுக்குக் கடத்திச் செல்லும் இடம் இதுதான். இதற்கு இட்டுச் செல்லும் மரங்களடர்ந்த கால்கிலோமீட்டர் நீளமுள்ள சாலை யார் மனதையும் கொள்ளை கொண்டு விடும். சுற்றிலும் சாணி மெழுகப்பட்ட வீடுகள். குடைபோலக் கவிழ்ந்திருக்கும் பிரம்மாண்டமான மரங்கள். அப்படியொரு அற்புதம்.
அன்று இரவு மதியழகனின் நண்பர் கிருஷ்ணமூர்த்தி எங்களை சிலருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
சொற்களை வாயிலிருந்து பறித்துச் செல்லும் கடற்காற்றில், இருண்ட கடல் இரைச்சலிட வெட்ட வெளிக்கு நடுவே, வண்ணமயமான குளிர்பான பாட்டில்கள் அடுக்கப்பட்டிருக்கும் சிறிய கடையின் முன் உட்கார்ந்து நாட்டுப் புற வழக்கில் கண்ணகி கதை கேட்பது எவ்வளவு சுகமான அனுபவம். கனவு போன்ற மனநிலையைக் கொடுத்தது அந்த இரவு.
நடந்தாய் வாழி காவேரியில் தி.ஜானகிராமன், கண்ணகி கோவலன் பயணத்தைப் பற்றி எழுதியிருந்தார். அவர் நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த போது காவேரிப் பட்டினத்துக்கு மின்சாரம் இன்னும் வரவில்ல என்று எழுதியிருந்தார். அது ஒரு அழகான கிராமமாக இருந்திருக்கும். நாற்பது ஆண்டுகளில் தமிழகம்தான் எவ்வளவு மாறிவிட்டது? கோவலனும் கண்ணகியும் யாருமறியாமல் புகாரை விட்டு வெளியேறி காவிரியின் வடகரையின் வழியாக ஸ்ரீரங்கம் நோக்கி நடக்கின்றனர். எனவே நாங்களும்...
புகாரிலிருந்து திருக்கடையூர் வந்து மாதவியின் வீடு என்று சொல்லப்படும் ஷன்மதிக் குளத்தைப் பார்தோம். அதை நம்ப பெரிய கற்பனை வளம் தேவைப்படும். எத்தனை அவநம்பிக்கை இருந்தாலும் ஏகாந்தமான அந்தச் சூழலில் சற்றே இருண்ட வானிலையில் அந்தக் குளத்தைப் பார்த்த போது எங்கோ யாழிசை கேட்கத்தான் செய்தது.
காவிரியின் வடகரைப் பயணம் அற்புதமானதாக இருந்தது. உண்மையில் இப்படியொரு கண்கவரும் பசுமையை நாங்கள் கண்டதே இல்லை.
புகாரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை நெடுஞ்சாலையில் செல்லாமல் கிராமங்கள், சிறு நகரங்கள் வழியாகவே சென்றதால் தமிழ் சினிமா இயக்குநர்களால் மறக்கமுடியாத எண்பதுகளுக்குப் போய்விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆனால் புதுப் புனல் பொங்கி வரும் காவிரியைத்தான் காணவில்லை. திருச்சியை நெருங்க நெருங்க அந்த கண்கவரும் பசுமை குறைவதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. காவிரி பிரம்மாண்டமாக மாறி அருகிலேயே வரத் தொடங்கியது. அதில் ஓரளவு தண்ணீரும் இருந்தது ஆச்சரியமளித்தது. இந்த வழியில் தானே கோவலனும் கண்ணகியும் நடந்திருப்பார்கள்?
ஸ்ரீரங்கத்தின் தெருக்கள் அக்காலத் தமிழக நகரங்கள் எப்படியிருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக மிஞ்சியிருந்தன. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு என்றுதான் தெரியவில்லை. ஸ்ரீரங்கம் பிரம்மாண்டமான கருங்கல் கோவில். சிலப்பதிகாரக் காலத்தில் கருங்கற்களால் கோவில் கட்டும் பழக்கம் இல்லை என்கிறார்கள். பின்பு பல்லவர் காலத்திலேயே அது பரவலாக்கப்பட்டதாம். எப்படியிருந்தாலும் ஸ்ரீரங்கம் இப்போதிருக்கும் வடிவத்தில் அப்போது இருந்திருக்காது. ஆனாலும் இந்த மண்தானே?
ஸ்ரீரங்கத்திலிருந்து மதுரை வரைக்குமான பயணம் முற்றிலும் வேறு விதமாயிருந்தது. கொடும்பாளுருக்கு முன்னிருக்கும் குன்றைக் கண்டோம். இதைத்தான் சிறுமலை என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. கொடும்பாளூருக்கும் நெடுங்குளத்துக்கும் இடைப்பட்ட கரையைச் சென்று சேர்ந்தால் வழி மூன்றாகப் பிரியும் என்கிறார் இளங்கோவடிகள். அவர் சொல்லும் மூன்று வழிகள் வேறு. கொஞ்சம் கற்பனையும் சிம்பலிசமும் கலந்த வழிகள். முற்பிறவியை அறிந்து கொள்ள உதவும் வழி, காடுகள் வழியே செல்லும் வழி, நேர் வழி என்று மூன்று வழிகள். ஆனால் உண்மையாகவே மூன்று வழிகள் இருந்தன. நேராக மதுரைக்குச் செல்லும் வழி, திண்டுக்கல் வழி, காரைக்குடி வழி. ஆனால் இளங்கோவடிகள் என்ன பயணிகளுக்கு வழிகாட்டிப் புத்தகமா எழுதி வைத்திருக்கிறார்?
மாங்குளம் அருகே இருக்கும் சமணர் குகைகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெறவில்லை என்றாலும் அதையும் பார்த்துச் செல்லலாமே என்று கிளம்பினோம். அக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை செல்லும் வழி சற்றே சுற்றி மாங்குளம் அழகர் மலை வழியாக மதுரையை அடைந்ததாம். உண்மையில் சிலப்பதிகாரத்தில் இந்த வழியாக அவர்கள் பயணம் செய்ததாக இல்லை.இருந்தாலும் ஒரு நாற்பது கிலோமீட்டர் சுற்றிச் செல்வதால் எந்தப் தவறும் இல்லை என்று முடிவு செய்து சென்றோம். பக்கத்தில் மதுரை என்று ஒரு பெருநகர் இருக்கும் அடையாளமே இல்லாமல் அவ்வளவு பழமையானதாக வெறுமையானதாக எங்கோ எட்டாத இடத்தில் இருப்பது போன்ற தோற்றத்துடன் இருந்தது மாங்குளம். மீனாட்சி புரம் கிராமத்திலிருந்து ஒரு கிமீ மலைமீது ஏறினால் குகையைப் பார்க்கலாம். ஒரு வித்தியாசமான அனுபவமாக குகையில் தங்கலாம் என்று முடிவு செய்தோம். குகையின் முற்றத்தில் அமர்ந்து இரவு கவிவதையும் பறவைகள் வீடு திரும்புவதையும் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அற்புதமான அனுபவம்.
தண்ணீரே இல்லாவிட்டாலும் வைகையையும் அதற்கு அப்பால் தெரிந்த மதுரையின் கட்டடங்களையும் பார்த்தவுடன் சிலப்பதிகார காலத்துக்கு அருகில் வந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்த இடத்தில்தான் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் ஓடத்தில் வைகையைக் கடந்திருக்க வேண்டும்.
ஒரு சோகம் நிறைந்த காவியமான சிலப்பதிகாரத்தின் உக்கிரமான உச்சகட்டம் இங்கேதான் நிகழ்கிறது. ஒவ்வொரு முறை அக்கதை கேட்கும் போதும் மதுரை என்றால் ஒரு சங்கடமான உணர்வு வரும். இந்த இரைச்சலில் அந்த உணர்வு திரும்பவும் தோன்றுகிறதா என்று உள்நோக்கிப் பார்க்க முயன்றேன். மதுரை பழக்கமானதுதான். ஆனால் நாங்கள் தேடி வந்த மதுரை வேறு. எந்த இடமாக இருந்தாலும் இந்த நான்குகிலோமீட்டர் சதுரத்துக்குள்தானே நடந்திருக்க வேண்டும்?
இங்கிருந்து கண்ணகி சென்ற வழி குறித்து இரண்டு முக்கியமான கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று கண்ணகி குமுளி அருகே இருக்கும் வண்ணாத்திப் பாறைக்கு அருகே சென்று கோவலனோடு சேர்ந்தாள் என்பது. இதுதான் கண்ணகி கோவில் இருக்கும் இடமும். இன்னொன்று நெடுவேள் குன்றம் என்பது திருச்செங்- கோடுதான். அங்கேதான் ஒரு மார்பகம் இல்லாத சிலை ஒன்று இருக்கிறது என்பது.
பேராசிரியர் சாந்தலிங்கன் திருச்செங்கோட்டில் இருப்பது அர்த்தநாரிஸ்வரர் சிலை. கண்ணகி அல்ல என்று சொல்லியிருந்தார். ஏராளமான தமிழறிஞர்களும் இந்த முடிவுக்குத்தான் வந்திருந்தனர். எனவே சிலப்பதிகாரம் சொல்லும் இடம் குமுளிக்கு அருகில் இருக்கும் இடமாகத்தானிருக்க வேண்டும் அங்கேயே போவது என முடிவு செய்தோம்.
இப்போது உசிலம்பட்டி, தேனி, கூடலூர் செல்லும் பாதை வைகை ஓரம் செல்வதில்லை. ஆறு பக்கத்தில் எங்கோ வந்து கொண்டிருந்தது என்ற நம்பிக்கையில் பயணம் தொடர்ந்தோம். கூடலூரில் கண்ணகி விழா எடுக்கும் குழுவைச் சேர்ந்த நண்பர் மலைகளுக்குக் கீழிருக்கும் ஒரு பழங்குடி கிராமத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். மேலே உயரத்தில் தெரிந்த ஒரு சிகரத்தைக் காட்டி இதன் மேல்தான் கண்ணகி கோவில் இருக்கிறது என்றார்.
சரி. மதுரையை எரித்து விட்டு கோபம் தீராமல் வெளியேறிய கண்ணகி இந்த மலைமேல் தான் ஏறியிருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் துணையில்லாமல் அந்த வழியில் செல்வது சாத்தியமில்லை என்றார்கள். கூடலூர் தமிழறிஞர்கள் இந்த வழியாக மலைமேல் ஏறித்தான் இப்படியொரு கோவில் இருப்பதைக் கண்டு பிடித்தார்களாம். அதைத் தொடர்ந்து இதுதான் கண்ணகி கோவில் என்று கோவிந்தராசனர் நிறுவினாராம்.
சிதைந்து போயிருந்த கோவிலும் கல் குவியல்களும் காலத்தோடு உறைந்து போயிருந்தன. இருண்ட வானத்தையும், கோவிலையும், சுற்றிலும் தெரிந்த நீல மலைகளையும் எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பது நினைவே இல்லை.
எப்போது கட்டப்பட்ட கோவில் இது? செங்குட்டுவன் கட்டியதா அல்லது அது இடிந்து யாராவது புதுப்பித்துக் கட்டினார்களா? இந்தக் கல்வெட்டுகளில் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா? அங்கு வரும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல்வதற்கு என்ன இருக்கிறது? சிலப்பதிகாரத்தையே இடையில் தொலைத்து விட்டு திரும்பவும் கண்டு பிடித்தவர்கள் அல்லவா நாம்?
(குறிப்பு: வழக்கறிஞர் இரா.முருகவேள் மேற்கொண்ட இந்த பயணத்தின் பின்புலத்தில் மிளிர்கல் என்ற நாவலையும் எழுதி உள்ளார்.)
ஜூலை, 2014.