சிறப்புப்பக்கங்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்: கங்காவின் பிற்போக்குத்தனம்

ராசி அழகப்பன்

சில நேரங்களில் சில மனிதர்கள், என்ற ஜெயகாந்தனின் கதை, இயக்குநர் ஏ. பீம்சிங்  இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி 70 களில் தமிழ் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.. கங்கா என்கிற பெண் கதாபாத்திரம் பற்றிய சர்ச்சை தான் அந்த முழு படம்.

கங்கா யார் ? 17 வயது பருவப் பெண். அவளுக்கு காரில் லிப்ட் கொடுத்த மனிதர் அவளை பயன்படுத்திக் கொண்டு வீட்டில் விடுகிறார். அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறாள் .வந்ததும் அம்மா பார்த்து அதிர்கிறாள்.இது பிரச்சினையாகிவிடும் கூட்டு குடும்பம் ஆச்சே என்று அவளை பின்னாடி தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு போய் தலையில் தண்ணீரை ஊற்றி எல்லாம் சரியாயிடுச்சி . என சமாதானப்படுத்தி இதை இத்தோட மறந்துடு என்கிறாள். இந்த சம்பவத்தை தான் அவள் கொஞ்சம் பெரியவளானது நினைத்துப் பார்த்து என்ன செய்கிறாள் என்று படம் ஆரம்பிக்கிறது.

கங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவளைக் கெடுத்த ஸ்ரீகாந்த் பாத்திரம் எந்தக் கவலையுமில்லாமல் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும்.

கங்கா அவரிடம் பழக நினைக்கிறாள். பழகுகிறான் அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். பழையவற்றையெல்லாம் மறந்துவிட்டு அவனோடு குடும்பம் நடத்த வேண்டும் என நினைக்கிறாள்.ஆனால் அதை உலகம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது தான் அந்தப் படம்.

கெடுக்கப்பட்ட பெண் மீண்டும் அவனோடு  சேர்ந்து வாழ முயற்சிக்கிறார் என்பது கொஞ்சம் நெருடலாகவும், பிற்போக்குத்தனமாகவும் உள்ளது என்று தான் எனக்கு தோன்றுகிறது.

பெண்கள் அச்சப்படாமல் இருக்கவும் ,வாழ்க்கையில் எதிர்த்து நிற்கவும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டிய கங்கா சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை தான் யாரால் சிதைந்தோமோ அவனோடு சேர்ந்து வாழ விருப்பம் கொண்டிருப்பது என்பது எந்த விதமான உளவியல் சிந்தனை என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் எதற்கும் சமரசம் செய்து கொள்பவர் அல்ல .ஆனால் காலத்தின் போக்கு எதிர்ப்பு நினைத்து அவர் சமரசம் செய்து கொண்டு கங்காவை இப்படி வாழ விட்டாரோ என்று கருதுகிறேன்.

கங்காவை அக்னிப் பார்வை கொண்டவளாக மாற்றி இருக்கலாம். ஆனால் அவள் அக்கினிப் பிரவேசப் பெண்ணாக இருக்கிறாள்.

மார்ச், 2023