சயந்தன் 
சிறப்புப்பக்கங்கள்

சிறுவயதில் முதல் ஹீரோ

ஆறாவடு

சயந்தன்

எனது நினைவு தெரியத் தொடங்கிய சிறு பருவ காலத்தை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், தவிர்க்கவே இயலாமல் இந்திய இராணுவத்தினர் சமையலுக்குப் பயன்படுத்துகிற கடுகு எண்ணெயின் மணம் என் நாசியில் எழும்.

அவர்களுடைய பச்சை இராணுவ உடை, அவர்களில் சிலருடைய தாடியும் தலைப்பாகையும், அவர்களைக் காணும்போதெல்லாம் குரைக்கின்ற நாய்களின் சத்தம், ‘கூர்க்காக்கள் கத்தியெடுத்தால் இரத்தம் பார்க்காமல் உறைக்குள் இடமாட்டார்கள்' போன்ற அவர்களைப் பற்றிய கதைகள்... இவைதான் என்னுடைய சிறுவயது ஞாபகங்களில் பெருமளவை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. கூடவே ‘இந்தியன் ஆமிக்கு' போக்குக் காட்டிவிட்டு கடலுக்குள் மீனைப்போல மக்களோடு மக்களாகச் சுற்றித்திரிந்த ‘புலிகள் இயக்க அண்ணாக்கள்' புலிகள் என்ற போராட்ட இயக்கத்தின் பொற்காலம் என்று அக்காலத்தை எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் தம்மை ஓர் அரசாக நிலை நிறுத்தும் முன்னர், அந்த அரசின் படை வீரர்களாக தம்மை பிரகடனப்படுத்தும் முன்னர், வெறும் லுங்கியுடனும், சட்டையுடனும் ஆயுதங்களை ஒளித்து மறைத்தவாறு சுற்றித் திரிந்தபோது கோழி தன்னுடைய குஞ்சுகளைக் காப்பதுபோல மக்கள் தங்களுடைய சிறகுகளுக்குள் வைத்து அவர்களைப் பாதுகாத்தார்கள்.

அப்படியொரு பறவையாக எங்களுடைய வீட்டுக்கு வந்தார் வெற்றி. அப்போது அவருக்கு வயது இருபதுகளில் தான் இருந்திருக்கும். கோயில் திருவிழாக்களில் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்த என்னுடைய பாட்டியை ஏதோவொரு மதிய நாளில் வழியில் கண்ட வெற்றி ‘பசிக்குது ஆச்சி, சாப்பிட ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார். பாட்டி அவரை வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார். எனக்கு நன்கு நினைவிருக்கிறது. கசங்கிய லுங்கி, சட்டை, ஒரு தடித்த சாக்கால் சுற்றப்பட்ட ஏ கே & 47 துப்பாக்கி, எதிர்பார்ப்புடனான புன்சிரிப்பு. வெற்றி எங்களுடைய முற்றத்தில் நின்றார். என்னுடைய முதலாவது ஹீரோ அப்படித்தான் அறிமுகமானார்.

வெற்றி ஒரு மாய மனிதர். அவர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். அருகில் ஏகே 47 சுவரில் சாய்க்கப்பட்டிருக்கும். வோக்கியும் சில கிரெனைட் குண்டுகளும் அருகிலிருக்கும். திடீரென நாய் குரைக்கும். அடுத்த விநாடி அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார் என்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லாதபடிக்கு வெற்றி, வயல்களையும் வெளிகளையும் தாண்டிச் சென்றிருப்பார். ‘‘நாசமாப் போவார்.. பிள்ளையைச் சாப்பிட விடாமல் துரத்துறாங்கள்'' என்று பாட்டி சபித்துக்கொண்டிருப்பார்.

இந்திய இராணுவத்திற்கு வெற்றி என்ற பெயரைத் தெரிந்திருந்தது. ஆனால் அடையாளம் தெரிந்திருக்கவில்லை. வெற்றி அவர்களுக்கு முன்னாலேயே ஒரு மீன் விற்பவராக, கூலி ஆளாகத் திரிவார். ஒருநாள் வெற்றியைப் பற்றித் தகவல்தந்தால் ஒரு சாராயப் போத்தலை பரிசளிப்பதாக இந்திய இராணுவத்தினர் வெற்றியிடமே சொன்னார்களாம். அச் சிறு வயதில் ஒரு அசல் ஹீரோவின் சாகசமாக அது தோன்றியது. இன்றைக்கும்தான்..

அந்த ஹீரோ செய்திருக்கக் கூடாதென்று இப்பொழுது தோன்றுகின்ற காரியங்களும் உண்டு. கிராமத்துச் சந்தியில் வைத்து நந்தபாலு என்ற மனிதனை வெற்றி தலையில் சுட்டார். நந்தபாலு இந்திய இராணுவத்திடம் சாராயப் போத்தல்களைப் பரிசாகப் பெற்றார் என்று வெற்றி சொன்னார். அன்றைக்கு நடு வெயில் நேரம், செத்துக்கிடந்த நந்தபாலுவின் தலையை தன் மடியில் சாய்த்தபடி அவருடைய மனைவி மண்ணை அள்ளி எறிந்து ‘‘டேய்.. வெற்றி.. உனக்கு நல்ல சாவே வராதடா'' என்று சாபமிட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

வெற்றி சாவுக்கு அஞ்சியதாக நான் உணர்ந்ததில்லை. ஆனால் அதுவொரு நல்ல சாவாக அமைந்திருக்கலாம். இந்திய இராணுவத்தினரோடு இயங்கிய ஒரு தமிழ்க் குழு உறுப்பினனை துப்பாக்கி முனையில் தடுத்த வெற்றி, அவன் சரணடைவதாகச் சொன்னபோது கொடுத்த அவகாசத்தில், அவன் மின்னலெனச் சுட்டதில் வெற்றி செத்துப்போனார். சாவின் பின்னரே அவர்தான் வெற்றி என்பதை அறிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அந்த உடலை ஜீப்பில் கட்டி தெருவெங்கும் தேயத் தேய இழுத்துப்போனார்கள். நான் அதைப் பார்க்க விரும்பவில்லை.

ஜனவரி 2022