சிறப்புப்பக்கங்கள்

சிறிய மனிதர்கள் பெரிய உண்மைகள்!

தன்னார்வலர்கள்

ரஞ்சன்

நாட்டிலும் ஊரிலும் தெருவிலும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கொரோனா ஒரு நாள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது.

கோவிட் பாசிடிவ் என்றதுமே  வீட்டு மதிலில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. பரிசோதித்துப் பார்த்து  வீட்டிலேயே தனிமைப்படுத்தல் என்று மாநகராட்சி மையம் சொல்லி வீட்டுக்கு திரும்புவதற்குள், ‘கொரோனாவிலிருந்து எங்களையும் சென்னையையும் காக்க எங்களை நாங்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறோம்' என்ற ஐந்தடி பேனர் வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்தது.  அக்கம்பக்கத்துக்காரரகள் ஜன்னல் இடுக்குகளில் பார்த்துக் கொண்டிருக்க வீட்டுக் கதவை இழுத்து மூடிக் கொண்டோம்.

கேட் தட்டப்பட்டது. கொரோனா தனிமைப்படுத்தப் பட்ட காலத்தில் வீட்டு கேட் தட்டப்பட்டால் சந்தேகமில்லாமல் அது மாநகராட்சிதான்.  வீட்டுக்குள் மருந்தடிக்க, வீட்டை சுற்றி மருந்தடிக்க, வீட்டிலுள்ளவர்களுக்கு வெப்பம் சோதிக்க... என்று வரிசையாய் வந்துக் கொண்டிருந்தார்கள். 

எட்டிப் பார்த்தால் புள்ளீங்கோ பாணியில் இரண்டு இளைஞர்கள். மாஸ்க் அணிந்த புள்ளீங்கோ.

பக்கத்தில் ஒரு பைக்.

‘‘சார், கார்ப்பரேஷன்லருந்து வரோம். உங்களுக்கு ஏதுனாச்சும் ஹெல்ப் வேணும்னா என்னைக் கூப்டுங்க, உங்களுக்கு ஹெல்ப்புக்குனு எங்களைப் போட்டுருக்காங்க'' என்று எண்ணும் பேரும் சொன்னான் அந்த இளைஞன். பெயர் விக்னேஷ். என் எண்ணையும் வாங்கிக் கொண்டான்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு அவசரத் தேவைகளுக்காக மாநகராட்சி இவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது.

தினமும் காலையில் ஒன்பது மணி அளவில் விக்னேஷ் அழைப்பான். ''ஏதாவது ஹெல்ப் வேணுமா? ஏதாவது வாங்கிக் தரணுமா?'' என்று கேட்பான்.

முதல் மூன்று நாட்களுக்கு எதுவும் தேவைப்படவில்லை. மூன்றாம் நாள் மருந்து தேவைப்பட்டது. அழைத்தேன். வந்தான். வாங்கிக் கொடுத்தான்.

ஒருநாள் காலையில் அவன் அழைத்தபோது உதவி எதுவும் தேவைப்படாது என்று கூறிவிட்டேன். ஆனால் சில பொருள்கள் வீட்டுக்குத் தேவைப்பட்டது. அவனை அழைத்தேன்.

‘‘சார், காலையிலேயே கேட்டேனே, எதுவும் தேவைப்படாதுனு சொன்னிங்களே''

''ஆமாம்பா, ஆனா இப்போதான் தெரிஞ்சது''

‘‘இல்ல சார், கார்ப்பரேஷன்ல என்ன மதுரவாயில்ல ஒரு லெட்டரைக் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. அதுக்கு போய்கிட்டு இருக்கேன்''

‘‘சரிப்பா, உன் வேலை முடிஞ்சதும் வா''

ஆனா, சில நிமிடங்களில் வந்துவிட்டான்.

‘‘என்னப்பா, உடனே வந்துட்ட?'

''கோயம்பேடு வரைக்கும் போயிட்டேன். அப்புறம்தான் ஞாபகத்துக்கு வந்தது கடைங்கலாம் ஒரு மணி வரைக்கும்தானே. உங்களுக்கு என்ன அவசரமோனு. திருப்பிக்கினு வந்துட்டேன்''

புள்ளீங்கோ மேல் பொதுவாய் இருந்த அவநம்பிக்கைகள் வேகமாய் குறைந்தது.

இரண்டு நாட்கள் கடந்திருக்கும் ஒரு நாள் காலையில் தெரு முனையில் பைக்கில் நின்றுக் கொண்டிருந்தான்.

‘என்னப்பா இங்க நிக்கிற?''

‘‘வெயிலா இருக்கு. யாராவது கூப்பிடுவாங்கனு நிழல் பாத்து நின்னுக்கிட்டு இருக்கேன்''

‘‘நீங்கலாம் கார்ப்பரேஷன் ஸ்டாஃபா?''

‘‘இல்ல சார், படிக்கிறோம்''

‘‘படிக்கிறீங்களா?''

''ஆமாம் பிஎஸ்சி படிக்கிறேன். இப்ப காலேஜ் இல்ல. வாலண்டியர் வேலைக்கு வந்தா மாசம் பத்தாயிரம், பன்னிரெண்டாயிரம் தருவாங்கனு

சொன்னாங்க''

‘‘கொரோனாவுக்கு ஊரே பயந்துட்டு இருக்கு உங்க வீட்டுல ஒண்ணும் சொல்லலையா?''

‘‘வீட்டுல கஷ்டம் சார், நான் இப்படி சம்பாதிச்சா உதவியா இருக்கும்ல'' என்று மாஸ்க்குடன் கேட்டுக்கு வெளியே மூன்றடி தள்ளி நின்று கூறினான்.

மேல் விசாரிப்புக்கு முன் அவனுக்கு அழைப்பு வர கிளம்பினான்.

கொரோனா தனிமைப்படுத்தல் காலம் முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு கேட்டை தட்டினான்.

‘‘என்னப்பா?''

‘‘நாள் முடியுதா சார், கார்ப்பரேஷன்ல

சொன்னாங்க''

‘‘இன்னும் ரெண்டு நாள் இருக்குப்பா?''

‘பேனரைக் கழட்டணும். அதான் கேட்டேன். அப்போ ரெண்டு நாள் கழிச்சு கழட்டிடுறேன். இப்ப ஏதாவது ஹெல்ப் வேணுமா சார்?''

‘‘இல்லப்பா''

அவன் பேனர் கழற்ற வரும்போது அவனுக்கு ஏதாவது பணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

பேனர் கழற்ற அவன் வரவில்லை. அவனை மாதிரி வேறு ஒரு இளைஞன் வந்தான்.

‘‘அந்தப் பையன் வரலியாப்பா?''

‘‘யாருனு எனக்கு தெரியலை சார், ஆளுங்க மாறிக்கிட்டே இருப்பாங்க''  என்று பேனரைச் சுருட்டி பைக்கில் வைத்து கிளம்பினான்.

விக்னேஷை அழைத்தேன்.

‘‘என்ன சார்? உங்களுக்குதான் கொரோனா  முடிஞ்சிருச்சே''

‘ஆமாம்பா, டைம் இருந்தா வீட்டுப் பக்கம் வாயேன்''

‘‘ஏன் சார்''

‘‘சும்மாதான். இந்தப் பக்கம் போகும்போது வீட்டுக்கு வந்துட்டுப் போ''

அவனுக்குப் புரிந்துவிட்டது.

‘‘எனக்கு எதுவும் வேணாம் சார்,  நீங்களே கொரோனா கஷ்டத்துலருந்து மீண்டு வந்திருக்கிங்க''

''சும்மா வாப்பா''

‘‘இல்ல சார். கஷ்டத்துல்ல உதவிட்டு அதுக்கு காசு வாங்கக் கூடாது சார். நிக்காது''

அவனிடம் இருந்து அந்த வார்த்தைகளை எதிர்ப்பார்க்கவில்லை. அதன்பிறகு விக்னேஷை சந்திக்கவில்லை. எங்கோ யாரோ ஒரு கொரோனா தொற்று வீட்டுக்காக ஓடிக் கொண்டிருப்பான்.

தயாளன். காலையில் வீடு வீடாக சென்று சேர்த்து வைத்திருக்கும் குப்பைகளை சேகரிப்பதுதான் அவரது பணி. மாநகராட்சி  துப்புரவுப் பணியாளர். உறுதியான நடை. அழுக்கு படர்ந்த உடை. பான் கறை  புன்னகை. இதுதான் தயாளன்.  வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதுடன் வேறு வேலைகள் சொன்னாலும் செய்வார். கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வார். அவரது சலிக்காத உழைப்பும் சிரிப்பும் எங்கள் பகுதியில் அவரை பிரபலமாக வைத்திருந்தது.  எங்கள் வீட்டுடன் அவருக்கு  நெருங்கிய நட்பு. முக்கியமாக என் பெற்றோருடன்.

தோட்டத்தை சுத்தப்படுத்துவது, தண்ணீர் தொட்டியை  கழுவுவவது போன்றவை அவரது எக்ஸ்ட்ரா வருமானத்துக்கான வேலைகள். இரண்டு மகன்கள். அவர்களது கல்விக்கு எனது பெற்றோர் உதவிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு மகன் பொறியியல் படித்துக் கொண்டிருந்தான்.

ஒருநாள். எங்கள் வீட்டு மாடி தண்ணீர் தொட்டி

சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. தொட்டியைச் சுற்றி நீண்டுக் கொண்டிருந்த மரக் கிளைகளை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன.

அவர்களுக்கு டீ கொடுக்கச் சொல்லி டீயுடன் என்னை மாடிக்கு அனுப்பினார் அம்மா.  இரண்டு இளைஞர்கள் வேர்வை வழிய வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

டீயுடன் பேச்சும் கொடுத்தேன்.

''என்ன பண்றிங்க? ஃபுல் டைம் இந்த மாதிரி வேலைகள் செய்றிங்களா?''

‘‘இல்ல சார், படிக்கிறோம்''

‘‘படிக்கிறீங்களா? என்ன படிக்கிறிங்க?''

‘‘நான் என்ஜினியரிங், தம்பி ப்ளஸ் டூ'' என்று தம்பியைக் காட்டினான்.

‘‘என்ஜினியரிங்கா?'' ஆச்சர்யமாயிருந்தது. அதிர்ச்சியாயிருந்தது.

‘‘நாங்க தயாளன் பசங்க. கார்ப்பரேஷன் குப்பை அள்ளுவாருல அவரு... அப்பாதான் வேலைக்கு அனுப்புனாரு. அவருக்கு உடம்பு முடியல''

''தயாளன் பசங்களா... நல்லா படிக்கிறீங்க.. எதுக்கு இந்த வேலை.?''

எங்கள் வீட்டில் யாரும் தயாளன் மகன்களை பார்தது இல்லை. தயாளன் அனுப்பினார் என்று சொல்லி வேலை செய்ய துவங்கிவிட்டார்கள்.

''சரி,  விட்டுட்டு கிளம்புங்க. நான் வேற ஆளை வச்சுப் பண்ணிக்கிறேன். கீழ வந்து காசு வாங்கிக்குங்க. நீங்க இதை செய்ய வேண்டாம்''

அந்த இளைஞர்கள் கேட்கவில்லை. ''அப்பா சொல்லிட்டாரு சார், கோவிச்சுப்பாரு'' என்று தொடர்ந்து வேலையை முடித்துவிட்டு மதியம்தான் கிளம்பினார்கள்.  அப்பாவைப் போலவே முகத்தில் புன்னகை.

‘‘கிளீனா பண்ணிருக்கோமானு பாத்திருங்க சார்''

இரண்டு மூன்று நாட்கள் கழித்து தயாளன் வந்தார்.

‘‘என்ன தயாளன் இப்படி பண்ணிட்டிங்க''

‘‘என்னா சார்?''

‘‘படிக்கிற பிள்ளைங்கள தண்ணி தொட்டி கிளீன் பண்ண அனுப்பிட்டிங்களே. எங்களுக்கு தெரியாம போயிருச்சு. இல்லாட்டி வேலை செய்ய விட்டுருக்க மாட்டோம்''

‘‘இதுல என்ன சார் இருக்கு... அவங்களுக்கும் தெரியனும்ல கஷ்ட நஷ்டம்லாம்''

‘‘அதுக்குனு என்ஜினியரிங் படிக்கிற பையனை..''

‘‘எனக்கு உடம்பு முடியல. அதனால அனுப்பிட்டேன்  சார்''

‘‘உடம்பு சரியான பிறகு வந்து செஞ்சிருக்கலாம்ல''

‘‘இல்ல சார், அம்மாக்கிட்ட வாக்கு கொடுத்துட்டேன்  ஞாயித்துக் கிழமை வந்து க்ளீன் பண்றேன்னு. என்னை நம்பி இருந்துருப்பாங்கல. சொன்ன வார்த்தைய காப்பத்தனும்ல சார்''

தயாளன் இப்போது இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு கான்சரில் காலமாகிவிட்டார்.

அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சை. மருத்துவமனைக்கு ரத்தம் திருப்பித் தர வேண்டியிருந்தது.

பல இடங்களில் ரத்தம் முயற்சித்தோம். எளிதாக கிடைக்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் முயற்சித்துக் கொண்டிருந்தோம். சிலர் முன் வந்தார்கள். ஆனாலும் மேலும் தேவைப்பட்டது.

நண்பரின் தொடர்பு வட்டாரத்திலிருந்து இரண்டு பேர் ரத்தம் கொடுக்க முன் வந்தார்கள். மருத்துவமனைக்கு வந்து என்னை  தொடர்பு கொள்ள  சொன்னேன்.

வந்தார்கள். என்னிடம் பேசினார்கள்.

''யாருக்கு சார் ரத்தம்?''

‘‘அப்பாவுக்கு..ஹார்ட் ஆபரேஷன்''

‘‘அப்படியா..நல்லது நாங்களும் அந்த குரூப்'' தான் என்று என்னுடன் பதிவு செய்யும் பகுதிக்கு வந்தார்கள். அங்கே நோயாளியின் பட்டியலில் அப்பாவின் பெயரைப் பார்த்தார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

‘‘சார், நாங்க அப்புறம் வரோம்'' என்று சட்டென்று வேகமாக வெளியேறிவிட்டார்கள். என்ன காரணம் என்று புரியவில்லை. தெரியவில்லை.  சில நிமிடங்களில் அந்த இருவரை ஏற்பாடு செய்திருந்த நண்பர் பேசினார்.

‘‘தப்பா நினைச்சிக்காதிங்க. அவங்க மாத்து மதத்துக்காரங்களுக்கு ரத்தம் கொடுக்க விருப்பம் இல்லையாம்''

அதிர்ச்சியாக இருந்தது. இந்தக் காட்சிகளை அங்கு நின்றுக் கொண்டிருந்த மருத்துவமனையின் சாமானிய ஊழியர் ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

மருத்துவமனை ஊழியர் வந்தார்.

''என்ன சார் ஆச்சு?''

சொன்னேன்.

‘‘அவனுங்க குசுகுசுனு பேசும் போதே கவனிச்சேன். நல்லவனுங்க இல்லை. ஒண்ணும் கவலைப்படாதிங்க சார், நான் உங்களுக்கு ஏற்பாடு பண்றேன்'' என்று சென்றார். சில மணி நேரங்களில் இருவரை அழைத்து வந்துவிட்டார். அவர் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏழை மக்கள். மதம் பிடிக்காதவர்கள்.

ரத்தம் பொருந்தியது.கொடுத்தார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி கிளம்பினார்கள். மருத்துவமனை ஊழியரை அழைத்து நன்றி சொன்னேன்.

‘‘இதில என்னங்க இருக்கு, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுறதுக்குதானே மனுஷனா பொறந்திருக்கிறோம்'' என்றார் எனக்கு முன்பின் தெரியாத அந்த எளிய மனிதர். சிறிய மனிதர்கள் பெரிய உண்மைகள்.

ஆகஸ்ட், 2020.