சிறப்புப்பக்கங்கள்

சின்னம்மா குடும்பம்!

ராஜ்

அப்புறம் பாஸ்... திமுகவில் இருக்கும் அளவுக்கு அரசியல் குடும்பங்கள் அதிமுகவில் இல்லையே... என்ற கேள்வி வழக்கமானது. அதற்குக் காரணம் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்சியில் கொண்டிருந்த அசைக்கமுடியாத சர்வாதிகாரம் என்றுகூடச் சொல்லலாம்!

யாரை வேண்டுமானாலும் நிறுத்தி எம்.எல்.ஏ எம்.பி, ஆக்கும் துணிச்சல் அவர்களிடம் இருந்தது. இப்போதைக்குப் பார்த்தால் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகன் ஜெயவர்த்தன் எம்.பி ஆகிய இருவரையும் விட்டால் அதிமுகவில் ஒரே சமயத்தில் பதவிகளில் இருப்போர் யாரும் இல்லை! ஆனால் இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் ஒரு குடும்ப ஆதிக்கத்தில் அ.தி.மு.க இருந்தது! அது சசிகலா குடும்பம்!  சசிகலாவின் அண்ணன் மகன்களில் ஒருவரான டி.டி.வி தினகரன், ஒரு கட்டத்தில் ஜெ&வின் அரசியல் வாரிசாக ஆகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். எம்.பி,யாகும் வாய்ப்பைப் பெற்றதுடன் அதிமுகவின் பொருளாளராகவும் அவர் இருந்தார். அவரது தம்பியான சுதாகரனை வெளிப்படையாகவே ஜெயலிதா தன் வளர்ப்புமகனாகத் தத்து எடுத்தார். ஆனால் இந்த இருவரில் தினகரனை அவர் புறக்கணித்தார். சுதாகரனை கஞ்சா வழக்கு போட்டு சிறையில் தள்ளினார். ஆயினும் சசிகலா குடும்பத்தைச்

சேர்ந்த வேறு பல உறவினர்கள் பல்வேறு பணிகளை ஜெ சார்பாக செய்துகொண்டுதான் இருந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு உறுப்பினர் கட்சிப்பணியில் தீவிரமாக இருப்பார். வேட்பாளர் தேர்வில் பங்களிப்பார். அப்புறம் பதவி பிடுங்கப்படும். 2011 - ல் சசிகலா குடும்பத்தைச்

சேர்ந்த 16 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.

சசிகலா, எம்.நடராஜன், டி.டி.வி தினகரன், வி.பாஸ்கரன், சுதாகரன், எஸ். வெங்கடேஷ், திவாகரன், டி.வி மகாதேவன், எம்.ராமச்சந்திரன், ராவணன், மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், தங்கமணி, பழனிவேல், கலியபெருமாள் ஆகியோர் கொண்ட பட்டியலில் பின்னர் சசிகலா மட்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டார். பின்னால் எல்லாம் வழக்கம்போல திரும்பிய நிலையில் மீண்டும் முதல்வர் ஆன ஜெயலலிதா மரணமடைய, இப்போது சசிகலா

சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரால் கட்சி கையளிக்கப்பட்ட டி.டி.வி தினகரன், அதிமுகவில் இருந்து வெளியேறி தனியாக அம்மா மக்கள் முன்னற்றக் கழகம் நடத்திக்கொண்டிருக்கிறார். சசிகலாவின் தம்பி திவாகரன், ஒரு கட்சி தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்கிறார். இப்போதைக்கு இவர்கள்

சிதறிப் போயிருக்கிறார்கள். நான்கு ஆண்டுகள் கழித்து சசிகலா சிறையில் இருந்து வெளிவரவேண்டும். அதற்கிடையில் டி.டி.வி தினகரன் அதிமுகவை மீண்டும் கைப்பற்றிவிடுவாரா? சசிகலா குடும்ப உறுப்பினர்கள் முன்னால் கேள்விகள் இருக்கின்றன. அவை நிறைய.

செப்டெம்பர், 2018.