சிறப்புப்பக்கங்கள்

சின்ன வயசிலேயே அம்மா ரோல் எப்படி ?

சே.சரஸ்வதி

நான் நடிச்ச காலகட்டம்ங்றது ஒரு நாலைஞ்சு வருஷம்தான். நல்ல உச்சத்துல இருக்கும்போதே திருமணம் செஞ்சுக்கிட்டேன்.

அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் வெளிநாட்டுக்குப் போயிட்டு திரும்ப மும்பை வந்தேன். அப்ப எனக்கு இரண்டு குழந்தைகள் இருந்ததால அவங்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு கொஞ்சம் அதிகமாவே இருந்தது. அதனால சில வாய்ப்புகளை ஏத்துக்க முடியலை. என் ரெண்டு பொண்ணுங்களும் கொஞ்சம் வளர்ந்து ஸ்கூல் போக ஆரம்பிச்சபிறகு நடிக்கலாம்னு நினைச்சேன். அப்போதான் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்ப நான் ஒரு இருபது வயசு பையனுக்கு அம்மாவா நடிக்கிறத எப்படி ரசிகர்கள் ஏத்துக்குவாங்கனு நினைச்சேன். ஆனா ஒரு குறும்புத்தனமான அம்மாவா நடந்துக்கிறதை ரொம்பவே ரசிச்சாங்க. இந்த மாதிரி ஒரு அம்மா இருந்தா நல்லாயிருக்குமேனு மக்கள் நினைக்குற அளவுக்கு அந்த கேரக்டர் பேசப்பட்டது.

இத்தனை சின்ன வயசா இருக்குற அம்மாவுக்கு தோளுக்கு மேல வளர்ந்த பையனானு கூட பேசிருக்காங்க. ஆனா அந்த பேச்செல்லாம் படம் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷத்துக்கு தான் மனசுல இருக்கும். அதுக்கப்புறம் அந்த கேரக்டரோட ஐக்கியமாகிடுவாங்க. அந்தளவுக்கு கொஞ்சம் வலிமையான கேரக்டர்னா எந்த கேரக்டரா இருந்தாலும் மக்கள் ரசிப்பாங்க. இன்னொரு விஷயம் கூட சில பேரு சொல்லக் கேட்டிருக்கேன். சின்ன வயசுலயே கல்யாணமாகிற பொண்ணுக்கு 35 வயசுல காலேஜ் படிக்கிற பையன் இருக்கிறது ஆச்சர்யம் இல்லைனு சொன்னாங்க. இன்னும் கூட தமிழ்நாட்டுல நிறைய இடங்கள்ல அம்மாவும் மகளும் உருவத்துல பாக்குறதுக்கு அக்கா தங்கச்சி மாதிரி இருப்பாங்க. அப்படியெல்லாம் ஒரு சூழல் இருக்கிறதாலயும் கூட எம்.குமரன் வெற்றியடைஞ்சிருக்கலாம்னு நினைக்கிறேன்.

பெரும்பாலும் ஹீரோயின்கள் திருமணமான பின்னாலும் நடிக்கிற ஒரு சூழல் எங்க காலத்துல கூட இருந்துச்சு. இந்த காலகட்ட்ததுலதான் இல்லாம போச்சு. ஆனா ஒரு நடிகை ஹீரோயினா தொடர்வது தமிழ்ச்சூழலல ரொம்ப குறைவாதான் இருக்கு. அப்படி திருமணமாகி அம்மா, அண்ணி, அக்கானு முக்கியமான கேரக்டர் பண்றாங்க. ஆனா ஹீரோயினா பண்றதில்லை. இது மலையாளத்துல கொஞ்சம் மாறியிருக்குனு நினைக்கிறேன். அதுக்கு கதையும், கேரக்டரும்தான் முக்கியமா இருக்கு. மலையாளத்துல புது முயற்சிகள் நிறைய நடந்திருக்கு. ஹிந்தியிலயும் கூட நிறைய மாறியிருக்கு. சொல்லப்போனா ஹாலிவுட்டுல சீரியல்ஸ்லாம் பண்ணும்போது புது புது முயற்சிகள் நடக்கும். நம்ம ஊர்ல ஒரு கான்செப்ட் ஹிட்டான அதுமாதிரியே எடுக்க ஆரம்பிப்பாங்க. ஏதாவது புது முயற்சி பண்ணி தோல்வியடைஞ்சிட்டா அந்த மாதிரி கான்செப்ட்டுக்கு மறுபடி யாரும் முயற்சிக்க மாட்டாங்க. ஹாலிவுட்ல ஒரு புது முயற்சி தோத்தாலும் மறுபடியும் மறுபடியும் முயற்சிப்பாங்க. புதுசு புதுசா யோசிப்பாங்க. அங்கெல்லாம் ஹீரோ யாரு, ஹீரோயின் யாரு அப்டினு பாக்குறதில்லை. அந்த கேரக்டர் யாரு பண்ணிருக்காங்கனுதான் பாப்பாங்க. அந்த மாதிரியான பார்வை தமிழ்லயும் வரணும்.

ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா? படம் ஹிட் ஆகுமானு யோசிச்சு எதையும் செய்றதில்லை. ஆனா ரசிகர்கள் ஏத்துக்குற மாதிரியான கதையும், கேரக்டரும்தான் முக்கியம். எத்தனையோ சின்னச் சின்ன படங்கள் எல்லாம் ஹிட் ஆகுது. அதெல்லாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுமுகங்கள் நடிக்கிற படங்கள்தான்.

எனக்கு எம் குமரன் படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. அப்புறம் தாமிரபரணி படவாய்ப்பு வந்தது. அப்பவும் கூட என் பசங்களுக்கு லீவு இருக்குற டைம்ல மட்டும்தான் ஷூட்டிங் தேதி ஒதுக்கிக் கொடுப்பேன். இன்னொரு விஷயம் உடம்பு எப்பவும் ஃபிட்னஸா இருக்குறதும் முக்கியம். அதுல கோட்டை விட்டா கிடைக்குற சிறு அளவிலான வாய்ப்புகளும் கூட கிடைக்காது.

ஆனா எனக்கு புரியாத விஷயம். சின்ன வயசுக்காரங்க, திருமணமாகாம இருந்த நிறைய பேரு அம்மா ரோல் பண்ணிருக்காங்க. அவங்களை விட வயதில பல மடங்கு மூத்தவர்களுக்கு அம்மா ரோல் பண்ணிருக்காங்க. ஆனா நிஜத்துல அம்மா வயசுல இருக்கிறவங்களை ஏன் தேர்ந்தெடுக்குறதில்லைனு புரியல. எஸ்.என்.லட்சுமி மாதிரியான நடிகைகள் அந்த காலத்துல அம்மாவா நடிக்கும்போது அவங்களுக்கு இருபது வயசு கூட இருந்திருக்காது. அது ஏன்னே புரியலை.?

நான் இதுவரைக்குமே 50 படங்கள்தான் பண்ணிருக்கேன். இன்னும் படங்கள் பண்ணலாம். ஆனா நல்ல கேரக்டரா இருக்கணும்னு நினைக்கிறேன். இங்கிலீஷ், விங்கிலீஷ்ல ஸ்ரீதேவிதான் முக்கிய கதாபாத்திரம், மஞ்சுவாரியார் மலையாளத்துல நடிச்ச படம்தான் தமிழ்ல ஜோதிகா நடிச்சு வந்த 36 வயதினிலே இந்த மாதிரி கதையம்சங்கள் நிறைய வரணும். ரசிகர்கள் நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களையும், அதுக்கு சரியான கேரக்டர்ல பொருந்தக் கூடியவங்களையும் வரவேற்க தயாரா இருக்காங்க. அதுக்கு சினிமாத்துறைக்குள்ள இருக்குறவங்கதான் முன்வரணும். மக்கள் ஏத்துக்கலைனு சினிமாவுல இருக்குறவங்களும், நல்ல சினிமா வர்றதில்லைனு மக்களும் சொல்றத ஏதாவது ஒரு இடத்துல மாத்திதான் ஆகணும். இந்த மாதிரியான விஷயங்களை பத்திப் பேச ஆரம்பிச்சுருக்கிறது நல்ல மனநிலை மாற்றத்தை உணர்த்துது. அந்த மாற்றம் ஏதோ ஒரு இடத்துல நடந்துதான் ஆகணும். அதுக்கு ஒரு சரியான தருணம் இதுதான்னு எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்.

ஜூன், 2017.