சிறப்புப்பக்கங்கள்

சினிமா : இளம் நடிகர்கள்

Staff Writer

கொஞ்சநாள் சினிமா பார்க்காமல் இருந்துவிட்டு மீண்டும் சினிமா பார்க்க ஆரம்பித்தால் தமிழ் சினிமா ரசிகன் மிரண்டுதான் போவான். ஏனெனில் அவ்வளவு புது நடிகர்கள் எக்கச்சக்க திறமைகளுடன் வந்துகொண்டே இருக்கிறார்கள்.  சிலருக்கு ஒரு படத்தில் சின்ன ரோலில் சுமாராக நடித்துவிட்டால் அடுத்ததாக இன்னொரு படத்தில் நாயகன் பாத்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பளம் எகிறிவிடுகிறது! சிலர் துணைப் பாத்திரங்களிலேயே நடித்துப் பெயர் வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். நல்ல எதிர்காலம் கொண்ட சில இளம் நடிகர்களைப் பற்றி இங்கே.

கருணாகரன், 32

கலகலப்பு படத்தில் அப்பாவி மருமகனாகவும்  சூது கவ்வும் படத்தில் அமைச்சரின் மகன் அருமைநாயகமாக வந்து பட்டையைக் கிளப்பியவர் கருணாகரன். திருமணமாகி சில மாதங்களே ஆன புதுமாப்பிள்ளையான இவரிடம் பேசினோம்:

 “திருச்சி தான் என்னுடைய சொந்த ஊர். அப்பா மத்திய உளவுத்துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நான் ஐடி துறையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது டைரக்டர் நலன் ஒருநாள் பார்க்கவேண்டும் என்று அழைத்திருந்தார். ‘ஒரு குறும்படம் பண்ணனும்.. நல்ல ரோல் ..நீ பண்றியா’ என்று கேட்டார். அவர் என்னுடன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்தவர். நான் படிக்கும்போது நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். நாடகப் போட்டிகளில் பரிசுகளும் வாங்கி இருக்கிறேன். அதை நினைவில் வைத்துக் கொண்டு தான் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார். சனி, ஞாயிறு விடுமுறையில் அந்த குறும்படத்தின் படப்பிடிப்பு முடிந்துபோனது. அதில் நடித்ததோடு மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்தேன். அப்பொழுதே நலன் என்னிடம் , ‘வேலைய விட்டுட்டு முழு நேர நடிகனாயிரு’ என்று சொல்லிக் கொண்டிருப்பார். மாதம் பிறந்தால் ஒழுங்காக சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தேன். அதை விட்டுக் கொடுக்க  மனம் வரவில்லை. நான் நடித்த குறும்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனர் சுந்தர்.சி  ‘கலகலப்பு’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தார். ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் குறும்படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்து அந்த நேரத்தில்  முடியாமப் போனது. ‘நீங்க அடுத்து எடுக்கப்போற படத்துல நான் நடிக்கணும்’ என்று அவரிடம் அப்போது  சொல்லிவிட்டு வந்தேன். அவர் அதை ஞாபகம் வைத்துக் கொண்டு  ‘பீட்சா’ வில் என்னை நடிக்க வைத்தார்.

இப்பொழுது என்னுடைய வேலையை விட்டு விட்டு முழுநேர தொழிலாக நடிப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.  எனக்கு திருமணமாகி கொஞ்ச மாதங்கள் தான் ஆகின்றன. திருமணத்துக்கு மறுநாள் காலையில் ஐந்து மணிக்கு ஷூட்டிங்  போகிற அளவுக்கு ரொம்ப பரபரப்பானதால் வேலையை தைரியமாக விட்டுவிட்டேன். அதற்கப்புறமும் கூட மதுரையில் தொடர்ந்து ஐம்பது நாள் படப்பிடிப்பு. என்னுடைய மனைவி தென்றல் கல்யாணமாகி ஒரு மாதம் கழித்து என்னை அங்க வந்து தான் பார்த்தார். ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டுமென்று நான் எப்போதும் நினைத்ததில்லை. இங்கு குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்குத் தான் நடிகர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். வெவ்வேறு இயக்குனர்கள், வித்தியாசமான கதைக்களங்கள், சவாலான பாத்திரங்கள் என சந்தோஷமாக இருக்கிறது. எங்கே போனாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். யாருக்குமே தெரியாமல் என்னுடைய திறமை மறைந்து போயிருக்கும். தைரியமாக நாம் எடுக்கிற முடிவுகள் தான் நம்மை வழிநடத்துகின்றன”.                                    -ஜா.தீபா

பாலா, 23

குறும்படங்களில், நடித்தவர். குட்டிப்புலியில் சசிகுமாரை ‘சினிமாவிலும் சரி கதையிலும் சரி ரவுடிகளுக்குத்தான் நல்ல பிகர் மடியுது..’என்று கலாய்ப்பவர் என்றால் உடனே ஞாபகம் வந்துவிடும். பண்ணையாரும் பத்மினியும் குறும்படமாக வந்தபோது அதில் கதாநாயகராக நடித்தவர். அப்படம் முழுநீளப் படமாக வருகையில் அவர் நடித்த பாத்திரத்தில் இப்போது விஜய் சேதுபதி நடிக்க, அவர் நண்பராக நடிக்கிறார் பாலா. இந்த படத்துக்காக மூன்று படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை இழந்துள்ளாராம். மேடையில் நன்கு பேசுவார்.

சிம்ஹா, 29

குறும்படங்களில் நடித்துக் பெரிய திரைக்கு வந்தவர். படிப்பு பிசிஏ. வசதியான பின்னணி. ஊர் கொடைக்கானல். இருப்பினும் சினிமாவுக்குச் செல்ல வீட்டில் எதிர்ப்பு.  சென்னைக்கு வந்து வேலைபார்த்துகொண்டே வாய்ப்பு தேடினார்.காதலில் சொதப்புவது எப்படி முதல்படம். பின்னர் பீட்சா. அப்புறம் சூதுகவ்வும் படத்தில் நயன்தாராவுக்குக் கோயில் கட்டுகிற ரசிகராக பகலவன் என்ற வேடம். அந்தப்படம் ஓடிக்கொண்டிருந்த போதே வெளியான நேரம் படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் வியக்க வைத்தவர். அவ்விரண்டு படங்களுக்குப் பிறகு பிசியான நடிகராகிவிட்டார். இப்போது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா உட்பட பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சதீஷ்,33

கிரேசி மோகனின் குழுவில் பணிபுரிந்தவர். இயக்குநர் விஜய் எடுத்த பொய்சொல்லப்போறோம் படத்தில் சதீஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரது மதராசப் பட்டணம் தாண்டவம் ஆகியவற்றிலும் நடித்தார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே படம் உட்பட சிலவற்றில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார். எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நண்பராக நடித்தார். இது நல்ல பெயரைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல லட்சம் பெறும் நடிகராக முன்னேறியுள்ளார். இப்போது சிகரம் தொடு படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். சந்தானம், சூரி- ஆகியோரின் கால்ஷீட் கிடைக்காதவர்கள் இவரைப் பயன்படுத்துகிறார்கள்.  தனுஷ் நண்பர்கள் குழுவில் இடம்பெற்றவர்!

இனிகோ பிரபாகரன்,31

அழகர்சாமியின் குதிரை படம்தான் இவரை நன்கு அறிமுகப்படுத்தியது. முன்னதாக பூ படத்தில் பார்வதியை திருமணம் செய்யும் மளிகைக் கடைக்காரராக நடித்தவர் இனிகோ. அதற்கும் முன் சென்னை-28 போன்ற படங்களில் சின்னசின்னதாக தலை காட்டினார். சுந்தரபாண்டியனில் சசியின் நான்கு நண்பர்களில் ஒருவர். இதன்மூலம் நன்கு அடையாளம் கிடைத்தது. இப்போது இயக்குனர் பாலகிருஷ்ணன் .கே இயக்கும். ‘ரம்மி’ என்ற படத்தில்  விஜய் சேதுபதியுடன் இன்னொரு கதாநாயகராக  இனிகோ பிரபாகர்  நடிக்கிறார்.

செப்டம்பர், 2013