சிறப்புப்பக்கங்கள்

சினிமா : இளம் தொழில்நுட்பக் கலைஞர்கள்

இளைஞர் சிறப்பிதழ் 

Staff Writer

திரைப்படம் என்பது மிகப்பெரிய கூட்டுமுயற்சி. இயக்குநர், நடிகர் கள் தாண்டி அதற்கு இசை, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, கலை, படத்தொகுப்பு என்று பல்வேறு துறைக் கலைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. இந்த துறைகளில் பல இளைஞர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். விருதுகளும் பாராட்டுகளும் இவர்களைத் தேடிவருகின்றன. இந்த இளைஞர்கள் யாரும் கடுமையான உழைப்புக்கும் போராட்டத்துக்கும் அஞ்சுவதில்லை. இவர்களில் மின்னும் சில நட்சத்திரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சத்யா , இசையமைப்பாளர்

எங்கேயும் எப்போதும் படத்தின் பாடல்களும் அந்தப்படமும் பெரிய வெற்றி பெற்றபோது அதன் இசையமைப்பாளரான சத்யா மீது ஒளிபாய்ந்தது. அதன்பின் வெளியான சேவற்கொடி படம் சரியாகப் போகாவிட்டாலும் பாடல்களும் பின்னணி இசையும் பேசவைத்தன. இவற்றிற்குப் பிறகு வெளியான தீயாவேலைசெய்யணும்குமாரு படம் இவரை ஒரு ஆல் ரவுண்டராகக் காட்டிவிட்டது. சில படங்களிலேயே தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராகிவிட்டார் சத்யா. இளம்வயதில் பெரிய அடையாளத்தைப் பெற்றது எப்படி? அவர் சொற்களிலேயே படிக்கலாம்.

“அப்பா பாடுவார், நாடகநடிகராகவும் இருந்தவர். அவர் இசை மீது ஆர்வம் கொண்டவர் என்பதால் சின்னவயதிலிருந்தே என்னையும் பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார். எட்டுவயதிலிருந்தே கர்நாடக இசை கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். அப்போது எனக்கு இதில் ஆர்வம் கிடையாது. ஆனாலும் அப்பா மிகவும் கட்டாயப்படுத்தி அடித்து உதைத்தெல்லாம் என்னை பாட்டு கற்றுக்கொள்ள வைத்தார். அப்போது கற்றுக்கொண்டவை எல்லாம் எனக்கு இப்போது மிகவும் உதவியாக இருக்கிறது.

தொடக்கத்தில் ஆவடியிலிருந்த நாஞ்சில்ராஜா, எனக்குக் குருவாக இருந்தார். அதற்கடுத்து டிஎன் பாலசுப்பிரமணியம் அவர்களுடைய சிஷ்யர் சாம்பசிவஅய்யர் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அதற்கடுத்து அயனாவரத்திலிருக்கும் திருமதி கீதாநாராயணன் அவர்களிடம் பலவருடங்கள் கற்றுக்கொண்டேன். இவற்றுக்குப்பின் பிவி.கோபாலகிருஷ்ணன் என்பவருடைய குழுவில் சேர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தக்கேஷி மாஸ்டரிடம் பயின்றேன். பள்ளியில் படிக்கும் போதிருந்தே இசை கற்றுக்கொள்ளத் தொடங்கினாலும் இசைக்குச் சம்பந்தமே இல்லாத பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்து முடித்தேன்.

பின்னாட்களில் மேடை மெல்லிசைக் கச்சேரிகளில் கீபோர்டு வாசிக்கத் தொடங்கினேன். குறிப்பாக கங்கைஅமரன் சார் குழுவில் கீபோர்டு பிளேயராக இருந்தேன். அவரோடு வெளிநாடுகளுக்கெல்லாம் போய் கச்சேரி செய்திருக்கிறோம். அதன்பின் இசையமைப்பாளர் பாலபாரதி இசையில் உருவான கோல்மால் என்கிற படத்துக்காக அவரது இசைக் குழுவில் வாசித்தேன். திரைப்படத்துக்கென்று வாசித்தது அதுதான் முதல்முறை. அந்தப்படம் வரவேயில்லை. இப்படியே போய்க்கொண்டிருந்த போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆடுகிறான் கண்ணன் என்கிற தொலைக்காட்சித் தொடருக்கு இசையமைத்தேன். அந்தப்பாடலுக்குப் பெரியவரவேற்பு கிடைத்தது. மயிலாப்பூர் அகாடமி அவார்டு எல்லாம் கிடைத்தது. அந்தப்பாடல் அப்துல்கலாமுக்கு பிடித்தபாடல் என்று சொல்லியிருக்கிறார்.

அப்போது சரவணன் என்றொரு விளம்பரப்பட இயக்குநருக்கு ஒரு ஜிங்கிள்ஸ் செய்திருந்தேன். அது அவருடைய நண்பரான இயக்குநர் கிருஷ்ணாவுக்கு பிடித்திருந்தது. அதன்பின் அவர் ஏன் இப்படி மயக்கினாய்? படத்தைத் தொடங்கியபோது என்னைக் கூப்பிட்டு இசையமைக்க வைத்தார். அந்தப்படம் இன்னும் வரவில்லை. ஆனால் அந்தப்பாடல்களைக் கேட்டு எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. அடுத்ததாக நெடுஞ்சாலை படம் வரவிருக்கிறது. அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவுக்கு வந்த ஏஆர்.ரகுமான் சார், “உங்களுடைய கடின உழைப்பு இசையில் தெரிகிறது” என்று சொன்னார். மறக்கமுடியாத பாராட்டு அது.

    அடுத்து இவன் வேறமாதிரி படம் வரவிருக்கிறது. என்னுடைய பாடல்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடைய பாடல்களின் சாயல் இருக்கிறதென்று சொல்கிறார்கள். நாம் கேட்டு வளர்ந்த இசையையொட்டித்தான் நம்முடைய இசையும் அமையும். இதைச் சொல்வதில் எனக்கு வருத்தம் இல்லை.

                                    - தமிழன்பன்

லால்குடி இளையராஜா, 29 கலை இயக்குநர்

மிகவும் பரபரப்பாகப் பேசபட்ட கமலின் விஸ்வரூபம் படத்தின் கலைஇயக்குநர் லால்குடிஇளையராஜா. அப்படத்தில் அவர் போட்ட ஆப்கானிஸ்தான் செட்டுகள் பெருமளவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன. மிக இளம் வயதிலேயே அந்தப்படத்துக்காகத் தேசியவிருது பெற்றார். திருச்சியிலுள்ள லால்குடி சொந்தஊர். பள்ளிப்படிப்பை அங்கேயே முடித்துவிட்டு கலையார்வம் காரணமாக கும்பகோணம் ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படித்தவர். அங்கு படிப்பை முடித்ததும் கலைஇயக்குநர் சாபுசிரிலிடம் உதவியாளராகச் சேர்ந்தவர். எந்திரன் படம் வரை அவருடன் இருந்துவிட்டு  தனியாக வந்து யுவன்யுவதி படத்தில் கலை இயக்குநராக அறிமுகமானார்.

இரண்டாவது படமாகவே கமலின் விஸ்வரூபம் கிடைத்ததும் அதற்கு விருது கிடைத்ததும் யாருக்கும் எளிதில் வாய்க்காத நிகழ்வு. அதற்குக்காரணம் இவருடைய குரு சாபுசிரில் என்று சொல்லலாம். ‘நான் சாபு சாரிடம் பணியாற்றிய படங்கள் எல்லாமே பெரிய படங்கள்தாம் என்பதால் விஸ்வரூபம் படத்தில் பணிபுரிய என்மீது நம்பிக்கை வைத்து என்னைச் சேர்த்துக்கொண்டார் கமல்சார். சாபுசாரிடம் வேலை செய்தபோது ரஜினி,ஷாருக் உட்பட பல பெரியஹீரோக்கள் படத்தில் வேலை செய்திருக்கிறேன். கமல்சார் படத்தில் மட்டும் வேலை செய்யவில்லை. மனதில் அது குறையாகவே இருந்தது. இந்தப்படத்தில் அது சரியாகிவிட்டது’ என்று சொல்கிறார். அதன்பின் ஹரிதாஸ் படத்தில் பணியாற்றினார். இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம், சிம்பு நடிக்கும் வாலு, வேட்டைமன்னன் ஆகிய படங்களோடு நீலம் என்றொரு படத்திலும் வேலை செய்கிறார். இந்தப்படங்களும் எனக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும் என்று சொல்லும் இளையராஜாவுக்கு அண்மையில்தான் திருமணம் நடந்திருக்கிறது.

பூர்ணிமா ராமசாமி, 29 வடிவமைப்பு

பாலா இயக்கிய பரதேசி படத்தில் உடைவடிவமைப்பாளராகப் பணிபுரிந்த பூர்ணிமாவுக்கு அதுதான் முதல்படம். அந்தப்படத்துக்காக அவருக்குத் தேசியவிருது கிடைத்தது. அதனால் யார் இந்தப்பெண்? என்று எல்லோருமே திரும்பிப்பார்த்தார்கள். முப்பதுவயதைத் தாண்டாத நிலையிலும் அவர் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைப் பெற்ற கதை மிகவும் சுவாரசியமானது.

சின்னவயதிலிருந்தே துணிகளோடு உறவாடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை அமையப்பெற்றவர் பூர்ணிமா. சென்னையில் புகழ்பெற்றிருக்கும் நாயுடுஹால் குடும்பத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெராவின் மனைவி. படிக்கிற காலத்திலிருந்தே ரஜினி மற்றும் சிவகுமார் குடும்பத்துடன் நல்லஉறவு இருந்தாலும் திரைத்துறைக்கு வர இவர் எண்ணியதில்லையாம். திருமணம் ஆகி குழந்தை பிறந்தபின்பு கிடைத்த இடைவெளியில் நிறைய சேலைகளை வடிவமைத்தாராம். அதைப்பார்த்த அவருடைய நண்பர்கள் எல்லாம், நீ சினிமாவில் காஸ்டியூம் டிசைன் செய்யலாமே என்று தூண்டியிருக்கிறார்கள். நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா மூலம் தோழியான இயக்குநர் பாலாவின் மனைவி மலரும் அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார். அதன்விளைவாகவே அவர் பரதேசிக்கு உடைவடிவமைப்பாளர் ஆகியிருக்கிறார்.

இப்போது லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் நான்தாண்டா சிவா மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை ஆகிய படங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

சூரஜ் நல்லுசாமி, 28 ஒளிப்பதிவு

திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவைப் பயின்று முடித்த கையோடு ஒளிப்பதிவாளர் ஆர்தர்வில்சனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி மற்றும் நான் கடவுள் ஆகிய படங்களில் அவரிடம் வேலை செய்தார். அதன்பின் ஒளிப்பதிவாளர் மனுஷ்நந்தனிடம் சேர்ந்து மன்மதன்அம்பு படத்தில் பணியாற்றினார். அப்போது மடகாஸ்கரில் தயாரான ஒரு இசைத்தொகுப்பிற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்த இயக்குநர் எழில் தன்னுடைய இயக்கத்தில் உருவான மனம்கொத்திப்பறவை படத்துக்கு இவரை ஒளிப்பதிவாளர் ஆக்கினார். அப்படத்தின் வெற்றி மற்றும் அதில்  இவருடைய உழைப்பு பரவலான வரவேற்பைப் பெற்றதும் எழிலின் அடுத்தபடமான தேசிங்குராஜாவிலும் இவரையே ஒளிப்பதிவாளர் ஆக்கிவிட்டார். இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு அடுத்த ஒரு பெரியபடத்தில் வேலை செய்யத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்த எளிய அறிமுகத்துக்குச் சொந்தக்காரர் ஒளிப்பதிவாளர் சூரஜ்நல்லுசாமி. அவள் அப்படித்தான் உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்றிருந்த நல்லுசாமியின் மகன்தான் இந்த சூரஜ். அப்பா ஒளிப்பதிவாளராக இருந்ததால் எளிதாக இந்தத்துறையில் நுழைந்து வெற்றிபெற்றுவிட்டார் என்று யாரும் கருதினால் அது தவறு. ஏனெனில் இவர் தன்னுடைய சொந்த உழைப்பில்தான் முன்னுக்கு வந்திருக்கிறார். முதல்பட வாய்ப்பைக் கொடுக்கும்போது இயக்குநர் எழிலுக்கு இவர் நல்லுசாமியின் மகன் என்பது தெரியாது. தெரிந்தபின் ஒரு கூடுதல்மதிப்பு இருந்தது. நெருக்கம் அதிகரித்தது என்கிறார் 29 வயதே நிரம்பிய சூரஜ்.

அத்தியப்பன் சிவா,29  படத் தொகுப்பாளர்

சேலத்தைச் சேர்ந்த அத்தியப்பன்சிவா திரைப்படஇயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தவர். இன்று படத்தொகுப்பாளராகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.  யாரிடமும் ஆரம்பத்தில் உதவி இயக்குநராகச் சேரமுடியாதால் ஒரு படத்தொகுப்பு நிலையத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்திருக்கிறார்.

தொடக்கத்தில் ஏதோ ஒரு வேலை செய்யவேண்டும் என்று சேர்ந்தவருக்குப் படத்தொகுப்பில் ஆர்வம் ஏற்பட்டு அதைக் கற்றுக்கொண்டார்.

அதன்விளைவாக இயக்குநர் ஷங்கரின் எஸ்  பிக்சர்ஸில் அலுவலகப் படத்தொகுப்பாளர் வேலை கிடைத்திருக்கிறது. அங்கு தயாரான இம்சைஅரசன் படம் தொடங்கிப் பல படங்களுக்கு அந்தப்படத்தின் படத்தொகுப்பாளர் வருவதற்கு முன்பு இவர்தான் படத்தைத் தொகுத்துவைப்பாராம். அதன்பின் பிரசாத் லேபில் உள்ள ஈஎப்எக்ஸில் சிலகாலம் டிஐ வேலை செய்திருக்கிறார். இம்சைஅரசன் படத்தைத் தொகுத்துக் கொண்டிருந்த நேரத்தில் அறிமுகமான அந்தப்பட இணைஇயக்குநர் பாண்டிராஜ் அவர் இயக்கிய பசங்க, வம்சம் ஆகிய படங்களிலேயே இவரைப் படத்தொகுப்பாளராக்க நினைத்தாராம். அப்போது இவர் படத்தொகுப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகாத காரணத்தால் இவரால் பணிபுரியமுடியாமல் போனதாம். அதன்பின் மெரினா படத்தில் இவர் படத்தொகுப்பாளர் ஆகிவிட்டார். பாண்டிராஜின் அடுத்த படமான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இவரே படத்தொகுப்பாளர். இதற்கு நடுவில் ஆச்சரியங்கள் என்கிற படத்திலும் பணியாற்றிருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் மூடர்கூடம் படத்தின் படத்தொகுப்பாளரும் இவர்தான். இந்தப்படத்தில் ஓர் இணைஇயக்குநர் போலப் பணிபுரிந்ததாகச் சொல்கிறார் சிவா. அடுத்து பப்பாளி என்றொரு படத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்.

செப்டம்பர், 2017