சிறப்புப்பக்கங்கள்

சினிமா - இளம் தயாரிப்பாளர்கள்

இளைஞர் சிறப்பிதழ்

Staff Writer

சினிமாத்துறையில் தயாரிப்பாளர்களாக பெரும் ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் மாறிவிட்டது. புதிது புதிதாய் இளம் தயாரிப்பாளர்கள் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து சாதிக்கிறார்கள். சிலருக்கு சினிமா பின்புலம் உள்ளது. வேறு சிலர் முற்றிலும் புதியவர்களாக இருப்பினும் சளைக்காமல் பல நெளிவு சுளிவுகளைக் கொண்ட திரைத்துறையில் கால் ஊன்றி நிற்கிறார்கள். இங்கே சிறந்த இளம் தயாரிப்பாளர்களாக நாம் சுட்டிக் காட்டுவது பி.மதன், ஞானவேல் ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், சிவிகுமார், ரவீந்திரன் சந்திரசேகர்.

---

ஞானவேல்ராஜா, 35 ஸ்டுடியோ கிரீன்

பரபரப்பான இந்த இளம் தயாரிப்பாளர், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் உறவினர். சில்லுன்னு ஒரு காதல் படத்தை தயாரித்த இவர், இதற்கு முன்பாக சூரியா மூவீஸின் சார்பாக பொன்னியின் செல்வன் படம் தயாரிப்பில் இருந்தபோது அதில் தயாரிப்பு நிர்வாகம் உள்ளிட்ட நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொண்டு தயாரிப்புத் துறையில் இறங்கியவர். முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் ஆகியோருக்கு இல்லாத தெலுங்கு மார்க்கெட் சூர்யாவுக்கு இருக்கிறதென்றால் அதற்கு முதன்மையான காரணம் இவர்தான். ஹைதராபாத்திலும் அலுவலகம் அமைத்து பட பப்ளிசிட்டிவேலைகளைச் செய்கிறார். பருத்திவீரன், நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் ஆகிய படங்கள் தயாரித்துள்ளார். ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. தயாரிப்புடன் விநியோகத்திலும் ஞானவேல்ராஜா சுறுசுறுப்பாக இருக்கிறார். அட்டகத்தி, சூதுகவ்வும், கும்கி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை வாங்கி வெளியிட்டார்.

மும்பை மற்றும் வெளிநாடுகளிலும் பட அலுவலகம் திறந்து சூர்யா, கார்த்தி இருவரையும் உலகமெங்கும் கொண்டு செல்லும் திட்டத்தில் உள்ளார். விநியோகஸ்தர்களின் வசதிக்காக வசூல் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவையும் அமைத்து அதை ஒப்பந்த அடிப்படையில் அனைவரும் பயன்படுத்தவும் வழிசெய்திருக்கிறார்.

---

என். சுபாஷ் சந்திர போஸ், 40, திருப்பதி பிரதர்ஸ்

இப்போது ஐந்து படங்கள் தயாரிப்பில் கைவசம் உள்ளன. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம்,  இவன் வேற மாதிரி, மஞ்சப்பை, நான் தாண்டா சிவா, இவற்றுடன் கமல் நடிப்பில் ஒரு படம். இவர் இயக்குநர் லிங்குசாமியின் சொந்த சகோதரர். லிங்கு சாமி உதவி இயக்குநராக சென்னையில் அலைந்துகொண்டிருந்தபோது இவர் துபாயில் வேலை செய்து  பொருளுதவி செய்துகொண்டிருந்தார். கூடவே அண்ணனுக்கு இங்கே சிரமப்படாதே, ஊருக்குப் போய் மளிகைக் கடையைப் பார் என்று ஆதங்கத்துடன் கடிதமும் எழுதிக் கொண்டிருந்தார். ஆனந்தம் படம் வெளியாகும் நேரத்தில்

அண்ணனுக்கு உதவியாக வந்துவிட்டார். ரன், ஜி, படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் தயாரிப்பு நிர்வாக வேலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 2007-ல் எழில் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தீபாவளியை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கித் தயாரித்து தயாரிப்பாளர் ஆனார். பட்டாளம், பையா, வேட்டை, வழக்கு எண்18/9, கும்கி ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். வணிகரீதியில் தரமான படங்களை தயாரிக்க ஆசைப்படுபவர். இவருக்கு நடிப்பார்வமும் உண்டு.

---

சி.வி. குமார் 34, திருக்குமரன் எண்டெர்யின்மெண்ட்

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் என மூன்று தொடர்ச்சியான வெற்றிப்படங்களை புதுமுக இயக்குநர்களை வைத்துக் கொடுத்தவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சிவி குமார். நடிகர்களை விட கதைகளை முக்கியமாக நம்பும் இவர் தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கியமான வரவு. எம்.எஸ்.சி சைக்காலஜி படிக்க மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர். அனிமேஷன், ஒலிப்பதிவு போன்றவற்றையும் படித்தவர். டிராவல்ஸ் தொழில்தான் இவரது குடும்பப்பின்னணி. உலகம் முழுக்க பயணம் செய்தவர். பிட்சா, சூதுகவ்வும் படங்கள் இந்திக்குப் போகின்றன. சரியாக திட்டமிட்டு, தொழில் நேர்த்தியோடு படங்களை வெளியிடுவதில் கவனமாக இருப்பவர்.

கல்யாண சமையல்சாதம் படத்தை இப்போது வாங்கி வெளியிடுகிறார். பீட்சா-2, தெகிடி- ஆகியவை தயாரிப்பில் உள்ளன.

---

ரவீந்திரன் சந்திரசேகர் 29, லிப்ரா புரொடக்ஷன்ஸ்

சென்னைக்காரர். பிபிஓவில் வேலை பார்த்தவர். எம்பிஏ படிக்க ஜெனிவா சென்றவர். ஐ.நாவில் வடக்கு, தெற்கு அமெரிக்காவின் பாதுகாப்பு தடுப்புப் பிரிவில் ஐடி ஆலோசகராக வேலைபார்த்துவந்தார். இடையில் பிசினஸ் மேனேஜ்மெண்டில் பிஎச்டி செய்தார். இந்நிலையில் முகநூல் மூலம் ஒளிப்பதிவாளர் நிசார் பழக்கமானார். நளனும் நந்தினியும் படத்துக்கான கதையை ஸ்கைப் மூலமாகக் கேட்டார். பிடித்துப் போய் சென்னை வந்து படத்தை ஆரம்பித்தார். அதுவரை சினிமாதான் தன் எதிர்காலம் என்று அவர் நினைத்திருக்கவில்லை. இங்கு வந்து நிறைய ஏமாற்றங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. “உன்னைப் போல் படித்தவனுக்கு சினிமா எதற்கு? என்று திரைத்துறையில் ஒரு முக்கியமான நபர் வெறுப்பேற்றினார். அப்போதுதான் சினிமாதான் என் எதிர்காலம் என்று ஒரு வைராக்கியத்தில் முடிவெடுத்தேன்” என்கிறார். முதல்படம் கூட இன்னும் வெளிவராத நிலையில் சுட்டகதை, கொலைநோக்குப் பார்வை, 1+1=3, மிஸ்டர் அண்ட் மிசஸ் கல்யாணம் ஆகிய நான்கு படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இது எப்படி? ‘’ ஒரு படத்துடன் மட்டும் நிற்க முடியாது. இதுதான் சினிமா வியாபாரம். எனவேதான் பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்” என்பது இவர் பதில்.

செப்டம்பர், 2013