சிறப்புப்பக்கங்கள்

சினிமா – இளம் இயக்குநர்கள்

இளைஞர் சிறப்பிதழ்

Staff Writer, அ.தமிழன்பன்

திரைக்கனவுகளுடன் சென்னைக்கு வருகிற திறமையான பல இளைஞர்கள் உதவி இயக்குநராகவே காலத்தை ஆண்டுக்கணக்கில் கழித்து ஒரு படம் எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும் என்பதுதான் பொதுவான வழக்கம். ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு செலவு குறைந்தது. காமிரா வைத்திருக்கும் யாரும் இயக்குநரே என்றானது. புதிய இளைஞர்கள் தங்கள் இளமையைத் தொலைப்பதற்கு முன்பே புதிய ஐடியாக்களை திரையில் பதிவு செய்துவிடுகிறார்கள். சில குறிப்பிடத்தக்க இளம் இயக்குநர்கள் இங்கே.

நலன் குமாரசாமி, 29

குறும்படங்கள் வாயிலாக சினிமாவுக்கு வந்தவர்.

திருச்சிக்காரர். வல்லத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். திருச்சியில் இவரை பங்குதாரராக கொண்டு இரண்டு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட போதும் திரைத்துறை மீது வேட்கையுடன் சென்னை வந்தவர். எந்த முன் அனுபவமும் இன்றி அவர் தயாரித்த குறும்படம் கலைஞர் டிவியில் நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியில் பரிசு பெற்றது. பின்னர் கொஞ்சகாலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காலத்தை ஓட்டியவரின் முதல்படமான சூதுகவ்வும் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றது. இந்த படம் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக, பல பிம்பங்களை உடைத்த படமாக விமர்சகர்களால் பேசப்பட்டது. அடுத்ததாக இவர் சூர்யாவை வைத்து படம் இயக்கக்கூடும்.

---

கார்த்திக் சுப்புராஜ் , 30

பீட்சா படத்தின் வெற்றி காரணமாக வெளிச்சத்துக்கு வந்தவர் அதன் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜ். முதல்படத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டார். அடுத்த படம் மிக எளிதாகக் கிடைத்துவிட்டது. இந்த வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய போராட்டம் இருக்கிறது. அதுபற்றி அவரே விவரிக்கிறார்.

 “மதுரையில் பொறியியல் படித்துமுடித்தவுடன் பெங்களூருவில் வேலை கிடைத்து அங்கே போய்விட்டேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே கலைநிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தாலும் அதைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும் துணிவும் வரவில்லை. பெங்களூருவில் சஞ்சய்குமார் என்பவரிடம் திரைப்படஉருவாக்கம் பற்றிய இரண்டுமாத கோர்ஸ் ஒன்று படித்தேன்.

அதன்பின் என் நிறுவனம் என்னை அமெரிக்கா அனுப்பிவிட்டது. போனஇடத்தில் பல  திரைப்படத்துறையினர் பழக்கமானார்கள். வேலை செய்துகொண்டே அவர்களுடன் கொஞ்சகாலம் பணியாற்றினேன். அதன்பின் அங்கேயே இரண்டு குறும்படங்களை எடுத்தேன். அவற்றில் ஒன்று காட்சிப்பிழை. அது கலைஞர் தொலைக்காட்சியின் நாளையஇயக்குநர் நிகழ்ச்சியில் தேர்வானது. அப்போது இங்கு வந்தால் நல்ல வாய்ப்பு என்று இருந்த நேரத்தில் எங்கள் நிறுவனத்தில் என்னை பிரான்ஸூக்குப் போகச்

சொன்னார்கள். அதனால் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்தேன்.

 நிறைய தயாரிப்பாளர்களைப் பார்த்தேன். படம் அமையவில்லை. தயாரிப்பாளர் சிவிகுமாரைச் சந்தித்த போது, நான் வைத்திருந்த கதைக்கு அதிகம் செலவாகும் என்பதால் வேறுகதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். அதற்குப் பின்னர்தான் ஒரே கேரக்டரை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று பீட்சா படத்தின் கதையை எழுதினேன். அது தயாரிப்பாளர் சிவி.குமாருக்குப் பிடித்தது. அதனால் படமாக உருவானது.

 நாளையஇயக்குநரில் வெற்றி பெற்ற பின்பு திரைப்படம் இயக்கும்வரையிலான காலகட்டம் எனக்கு மிகவும் கஷ்டமானது. வேலை பார்த்து சேர்த்து வைத்திருந்த தொகை எல்லாம் நாளையஇயக்குநர் நிகழ்ச்சிக்காகக் குறும்படங்கள் தயாரிப்பதில் செலவாகிவிட்டது. எனவே பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்பட்டேன். அன்றைக்கு அதைத் தாங்கமுடியாமல் மறுபடி வேலைக்குப் போயிருந்தால் இந்தஇடத்தை அடைந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் என்னுடைய பெற்றோரும் மனைவியும் எனக்கு மிக உறுதுணையாக இருந்த ஒரே காரணத்தால் நான் தெம்பாகப் போராட முடிந்தது.

 பீட்சா வெற்றியைத் தொடர்ந்து நான் முதலில் எழுதிய கதையைத்தான் ஜிகர்தண்டா என்கிற பெயரில் படமாக்கிக்கொண்டிருக்கிறேன். முதல் படம் த்ரில்லர் வகைப்படமென்றால் இது ஆக்‌ஷன் மெலோடிராமா வகைப்படமாக இருக்கும். ஒவ்வொரு கதையும் எழுதும்போது என்ன மாதிரி ஜானரில் வருகிறதோ அப்படியே படமும் எடுப்பேன். இந்த வகைப்படங்கள்தாம் செய்யவேண்டும் என்கிற முன்முடிவுகள் எதுவும் என்னிடம் இல்லை.

 முப்பது வயதில் இந்த இடத்தை நான் அடைந்ததற்கான காரணங்களில் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் ஓர் உதவிஇயக்குநர் கேமிராவைத் தொட்டுப் பார்ப்பதற்கே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போது முப்பதாயிரம் ரூபாயில் கிடைக்கக்கூடிய காமிராவைக் கொண்டு ஒரு படமே எடுத்து முடித்துவிடலாம். இந்தத் தொழில்நுட்பத்தை திரைத்துறைக்கு வருகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இயக்குநராக வேண்டும் என்று விரும்புகிறவர்கள், தங்களுடைய கதை சொல்லும் திறனை ஒரு குறும்படம் மூலம் அழகாக வெளிப்படுத்த முடியும். அதைப் பார்க்கிறவர்களில் பலர் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப்போகத் தயாராக இருக்கிறார்கள். இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

----

துரைசெந்தில்குமார், 33

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த எதிர்நீச்சல் அப்படத்தின் இயக்குநர் துரைசெந்தில்குமாருக்கு முதல்படம். முதல்படமே வெற்றி என்பதால் அவருக்கு நல்லவரவேற்பு. கரூர் பக்கமுள்ள வேலாயுதம்பாளையத்தைச் சொந்த ஊராகக் கொண்ட துரைசெந்தில்குமார், திரைப்படக்கல்லூரியில் சேரவேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தாராம். அங்கு சேரமுடியவில்லை என்ற போது இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகச் சேரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. ஜூலிகணபதி, அது ஒரு கனாக்காலம் ஆகிய படங்களில் அவரிடம் பணியாற்றிவிட்டு அதன்பின் வெற்றிமாறனுடன் பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

    அதன்பின் வெற்றிமாறன் மூலமாக தனுஷ் தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. 2001 ஆம் ஆண்டு சென்னை வந்தவருக்கு பதினொரு ஆண்டுகள் கழித்துப் படம் இயக்கும் வாய்ப்பு. தனது 32 ஆவது வயதில் முதல்படத்தை இயக்கிவிட்ட அவருக்கு இப்போது அதே தயாரிப்பு நிறுவனத்தில் அதே நாயகனை வைத்து அடுத்தப் படத்தையும் இயக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

“முப்பது வயதுக்குள் நாம் எல்லா வாழ்க்கை அனுபவங்களையும் கற்றுக்கொள்ள முடியாது. அந்த அனுபவங்கள் இருந்தால்தான் வெற்றிகரமான படத்தை எடுக்கமுடியும். அதை புத்தகங்கள்தாம் கொடுக்கின்றன எனவே வாசிப்புப்பழக்கம் அவசியம்” என்கிறார் துரைசெந்தில்குமார்.

---

பாலாஜி தரணிதரன், 33

திரைப்படக்கல்லூரியில் படத்தொகுப்பு படித்தவர் பாலாஜி தரணிதரன். சில குறும்படங்கள் இயக்கி, திரைப்படம் இயக்கவேண்டும் என்பதற்காக நண்பரின் வாழ்க்கைக்கதையையே திரைக்கதையாக்கினாராம். அந்தக்கதைதான் நடுவுல கொஞ்சம் பக்கத்தகாணோம். கதையை எழுதிவிட்டுத் தயாரிப்பாளர் தேடிப்பிடிப்பதற்குள் ஆயுளில் பாதி போய்விட்டது என்று சொன்னவர்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் விஷயத்தில் முற்றிலும் வேறாக நடந்திருக்கிறது. நண்பரான பக்ஸ் (ந.கொ.ப. கா. படத்தில் நடித்தவர்), லியோவிசன் ராஜ்குமாரைச் சந்தித்து ஒரு கதை சொல்லப்போயிருக்கிறார். கதையைக் கேட்ட அவர், இந்தக்கதைக்கு அதிகச் செலவு ஆகும். குறைந்த செலவில் படமாக்குகிற மாதிரி ஒரு கதை சொல்லுங்கள் என்று கேட்டாராம். அதற்கு பக்ஸ், என் நண்பர் ஒரு கதை வைத்திருக்கிறார் என்றுசொல்லி இந்தக்கதை பற்றிச் சொன்னாராம். அடுத்த நாள் இந்தக்கதையைக் கேட்டவுடன் உடனே படமெடுக்க அவர் சம்மதித்திருக்கிறார்.  எளிமையாக வேலை முடிந்துவிட்டது. அந்தப்படம் வெற்றி என்றதும் அடுத்தபடம் செய்ய நிறையபேரிடமிருந்து அழைப்புகளாம். அவசரமின்றி அடுத்தப் படத்துக்கான கதை தயாரிப்பில் இருக்கிறார்!

---

அட்டகத்தி ரஞ்சித், 28

அட்டகத்தி படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்திருக்கும் ரஞ்சித்தின் சொந்த ஊர் ஆவடி அருகே காலப்பாக்கம். படித்தது சென்னை கவின்கலைக் கல்லூரி.

எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?

கல்லூரி முடிந்தவுடன் (2004) இயக்குனர் வேலு பிரபாகரனிடம் காதல் கதையில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு இயக்குனர் சிவசண்முகனிடம் தகப்பன்சாமி படமும், இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சென்னை 28, சரோஜா, கோவா போன்ற படங்களுக்கு பணியாற்றிய பிறகு அட்டக்கத்திக்கு தயாரானேன்.

முதல் படம் கிடைத்தது எப்படி?

நண்பன் ஜெய் மூலமாகவும் ஜெய் நண்பர் மணி மூலமாகவும் தயாரிப்பாளர் சி.வி. குமார் அறிமுகம் கிடைத்தது. அவர் கதைகேட்டும் தயாரிக்க முன்வராமல் ஊருக்கு சென்றுவிட்டார். நானும் மணியும் பலமுறை பேசி ஏற்கெனவே தயாரிப்பாளருக்கு வேறு இயக்குநரால் உண்டான கசப்பான அனுபவத்தை மறக்க நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசினோம்.  சினிமாவை விளக்கிப் புரியவைத்து சினிமாவில் உண்மையான உழைப்பின் மீது நம்பிக்கையுள்ள என்னைப்போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கூறிய பிறகு தயாரிக்க முன்வந்தார்.

 படம் முடிந்த நிலையில் படத்தைப் பார்த்த சில பிரபல முன்னனி தயாரிப்பாளர்கள் படத்தை இந்த படம் ஓடாது என்று முடிவுக்கு வந்து, வாங்க மறுத்துவிட்டனர். போட்ட பணம் மீண்டு வராது என மனமுடைந்து தயாரிப்பாளர் மீண்டும் ஊருக்குச் சென்றுவிட்டார்

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு படத்தை பார்க்க வரும்போது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை அழைத்து வந்திருந்தார். அவர்களுக்குப் படம் பிடித்துவிடவே ஸ்டுடியோ கிரீன்மூலமாக இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் பிரமாண்டமாக வெளியிட்டனர். மக்களின் ஆதரவுடன் படமும் பெரும் வெற்றிப் படமாக மாறியது.

தயாரிப்பாளர் குமார் பெரும் மகிழ்ச்சியடைந்து இன்று முன்னணித் தயாரிப்பாளராக தமிழ்த்திரைப்படத் துறையில் இருக்கிறார்.

தற்போது இயக்கும் படம்?

ஸ்டுடியோ கிரீனுக்கு நடிகர் கார்த்தியை வைத்து படம் பண்ணுகிறேன். மிகவிரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படம் சென்னை இளைஞர்களின் வாழ்வியலின் நவீன அரசியலைப் பேசும் படமாக இருக்கும்

என்ன மாதிரியான இயக்குனராக அடையாளப்பட விருப்பம்?

 விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வின் உன்னதங்கள், கொண்டாட்டங்கள், விடுதலை உணர்வு, அரசியல் நிலைப்பாடு, தினந்தோறும் சந்திக்கும் ( சமுக கட்டமைப்பால் நீளும்)அவலங்களை அம்மக்களின் பார்வையின் ஊடாகவே பார்க்கின்ற, அவர்களின் வாழ்வியலை எல்லோரிடமும் உரையாடலுக்கு அழைத்து செல்கிற, பதிவுசெய்கின்ற இயக்குனராகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

செப்டம்பர், 2013