சிறப்புப்பக்கங்கள்

சி.என்.பாண்டுரங்கன் - சிற்பி செதுக்காத பொற்சிலையே

முத்துமாறன்

டி.ஆர்.மகாலிங்கமும் சௌகார் ஜானகியும் நடித்த திருநீலகண்டர் படம்(1972). இதற்கான இசையமைப்பின் போது பாடல் எழுத கவியரசர் கண்ணதாசன் வந்து உட்காருகிறார். இசையமைப்பாளரிடம் ட்யூன் சொல்லுங்கள் என்றார். அந்தப் பழம் பெரும் இசையமைப்பாளர்,‘நீங்கள் பாடலைச் சொல்லுங்கள்.. நான் எப்போதும் பழைய மாதிரிதான். பாட்டுக்கு மெட்டமைப்பதே என் வழக்கம்’ என்கிறார். அந்தப் படம்தான் கண்ணதாசனுடன் அவர் பணிபுரிந்த முதல் படம். அந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் கவியரசர்தான் எழுதினார். தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்த அந்த இசையமைப்பாளரின் கடைசிப்படமும் அதுதான். அவருடன் பெரும்பாலும் மெட்டுக்குப் பாட்டிசைக்கும் வழக்கமும் 99 சதவீதம் போய்விட்டது எனலாம்.

அவர் சி.என்.பாண்டுரங்கன். கர்நாடக இசையை ஒட்டிய புகழ்பெற்ற பாடல்களைத் தந்தவர். எம்.ஜி.ஆர் நடித்த என் தங்கை, சிவாஜிகணேசனின் எதிர்பாராதது(1954) ஆகிய படங்களின் இசை அமைப்பாளர்.

கடலூர் தான் பாண்டுரங்கனின் குடும்பத்துக்குப் பூர்வீகம் என்றாலும் அவர் தந்தை நாகரத்தின முதலியார் சென்னையில், அரசுப்பணியில் இருந்தாரென்பதால் திருவல்லிக்கேணியில்தான் வளர்ந்தார். அண்ணாமலை சங்கீத கலாசாலையில் பொன்னையாப் பிள்ளை, சித்தூர் சுப்ரமணியம் பிள்ளையிடம் வாய்ப்பாட்டும், தேசமங்கல சுப்ரமணிய ஐயரிடம் வீணைப்பயிற்சியும் பெற்றார்.

அவர் இசை அமைத்த முதல் படம் தசாவதாரம்(1934). இயக்குநர் கே.சுப்ரமணியம். அதன்பின்னர்  கீதகாந்தி, மேனகா, குமாஸ்தா, மாயக்குதிரை, பாண்டித்தேவன், என் மகள் போன்ற படங்களில் இசை அமைத்தார். தியாகராஜ பாகவதர் நடித்து, இயக்கி, தயாரித்த புதுவாழ்வு(1957) படத்துக்கு இவர்தான் இசை. அப்படத்தில் ஜி.ராமநாதன் சில பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார். ஆனால் இடையில் மோதல் ஏற்படவே மீதிப்பாடல்களை பாண்டுரங்கனே இசை அமைத்தார். டைட்டில் கார்டிலும் சங்கீதம் பாண்டுரங்கன் என்றுதான் வரும்.

பூலோக ரம்பை(1958) என்ற ஜெமினி கணேசன் படம் இவர் இசையில்வந்த முக்கியப் படங்களில் ஒன்று. போன மச்சான் திரும்பி வந்தான்,வாழ்விலே ஒருநாள் ஆகியபடங்களும் குறிப்பிடத்தக்கவை.

சிற்பி செதுக்காத பொற்சிலையே.. இது எதிர்பாராதது(1954) படத்தில் ஜிக்கியும் ஏ.எம்.ராஜாவும் பாடும் பாடல். ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த மிக அற்புதமான பாடல்.  முதலில் இதை ஜிக்கி பாடுவார். பின்னர் இதே பாடல் ஏ.எம்.ராஜாவால் சோகக்குரலில் பாடப்பெறும். இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஏ.எம்.ராஜாவின் குரலை முதல்முதலில் அறிமுகம் செய்கிறார் பாண்டுரங்கன். அப்போது சிவாஜிக்கு டி.எம்.எஸ்தான் பாடிவந்ததால் சிவாஜி பாடல்பதிவு முடிந்த பின்னர் ஏ.எம்.ராஜா வேண்டாம் என்று சொல்ல, நான் வேண்டுமானால் ஆர்க்கெஸ்ட்ராவை மீண்டும் போட்டுத்தருகிறேன்; பாடகரை மாற்றமுடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம் பாண்டுரங்கன். இவரது இசையில் மிகவும் புகழ்பெற்ற பாடல் என்று இதைச் சொல்லலாம்.

சத்தியம் தவறாதே என்ற படத்தில் ‘ஏதுடா வாழ்க்கை, என்னடா வாழ்க்கை’ என்ற பிபி ஸ்ரீநிவாசின் பாடல் மிக அருமையானது. இந்த பாடல் ஸ்ரீநிவாஸுக்கு மிகவும் பிடித்த பாட்டு. இந்தப் படத்தில் பாண்டுரங்கனிடம் உதவியாளராகப் பணியாற்றினார் அப்போது இளம் கலைஞராக இருந்த இளையராஜா. ‘உன் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும் கருத்தின் ரகசியம்’ - இது, ஏ.எம்.ராஜாவும் சுசீலாவும் பூலோக ரம்பை  படத்தில் பாடும் புன்னாகவராளி ராகப் பாடல் புகழ்பெற்றது.

’நீ ஆடினால் ஊர் ஆடிடும், நான் ஆடினால் யார் ஆடுவார்’ இது மேற்கத்திய இசையின் சாயலில் பாண்டுரங்கன் போட்ட பாடல். சந்திரபாபுவும் ஜமுனாராணியும்  பாடும் பாடல். பாண்டித்தேவன் படம். அசோகா பிக்சஸ் நிறுவனத்தில் ஆஸ்தான இசை அமைப்பாளர் பாண்டுரங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. என் தங்கை, என்மகள், பூலோகரம்பை போன்ற படங்கள் இவர் பணிபுரிந்தவை.

காதல் வாழ்விலே நானே..கனியாத காயாகிப்போனேன்.. இது ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் பாடும் பாடல்.

சிவாஜியிடம் இருந்து பிரிந்து  நாகையாவைத் திருமணம் செய்ய நேர்ந்த பத்மினி பாடும் பொருள் பொதிந்த பாடல். படம் எதிர்பாராதது.

அதே படத்தில் வந்த இன்னொரு பாடல் திருமுருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது உள்ளம், பெருகுது கண்ணீர் என்று வி.நாகையா பாடும் பாடலும் மிக அருமையாக இருக்கும். இது கே.பி. காமாட்சி எழுதிய பாடல். மாமியார்(1953) படத்தில் வந்த ’வாழ்வினிலே’ என்ற ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடும் பாடலும் மிகவும் பிரபலமானதாகும்.

பாண்டுரங்கனுக்கு நான்கு மகன்கள் இரண்டு மகள்கள். ‘அப்பாவுக்கு கர்நாடக சங்கீதத்தில் பாண்டித்தியம் அதிகம். கல்யாணி, கானடா ஆகிய ராகங்கள் அவருக்கு, மிகவும் பிடித்தமானவை” என்கிறார் சி.பி.சீனிவாசன்.இவர் பாண்டுரங்கனின் மகன். 77 வயதாகும் இவர் கோவையில் தன் மகள் ஸ்வர்ணலதாவுடன் வசிக் கிறார். தந்தையுடன் பணிபுரிந்தவர்களின் பட்டியலில் டி.கே.புகழேந்தி, எஸ்.வேதா, டி.ஆர்.பாப்பா, எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.ஏ.சிதம்பரநாதன், டி.ஜி.லிங்கப்பா, குன்னக்குடி வைத்தியநாதன் போன்றவர்களின் பெயர்களை நினைவுகூர்கிறார் சீனிவாசன் பாண்டுரங்கன் Revenge என்கிற ஆங்கிலப்படம் தமிழில் பழிக்குப்பழி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டபோது அப்படத்துக்கும் நான்கு பாடல்கள் போட்டுக் கொடுத்ததாக நம்மிடம் நினைவுகூர்கிறார் சீனிவாசன். 1972-ல் அவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது. மே 29, 1975-ல் மரணம் அடைந்தார்.

ஜனவரி, 2014.