சிறப்புப்பக்கங்கள்

சி.ஆர்.சுப்பராமன் – எல்லாம் இன்பமயம்

மதிமலர்

கண்டசாலா, பி.லீலா போன்ற பாடகர்களை அறிமுகம் செய்த சி.ஆர்.சுப்பராமன் தமிழ்த் திரை இசையில் பலருக்கு மானசீகக் குருவாக விளங்குபவர். அபார இசை ஞானத்தால் சிறுவயதிலேயே சுடர்விட்டு ஜொலித்தவர், தன் 28 ஆவது வயதிலேயே மரணம் அடைந்தார். ஆனால் அதற்குள்ளேயே அவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

1951-ல் வெளிவந்த படம் மணமகள். அதில் பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா.. பாட்டுக்கு இசை அமைத்திருப்பார் சுப்பராமன். “எம்.எல்.வசந்தகுமாரியும் பி.என் சுந்தரமும் இணைந்து பாடிய இப்பாடல் இன்றைக்கும்கூட அதே வடிவில் எல்லா கர்நாடக சங்கீத கச்சேரிகளிலும் ரசிகர்களால் விரும்பிக்கேட்கப்படுகிறது. பாடப்படுகிறது. அப்படியெனில் சுப்பாராமனின் அசாத்திய இசைஞானத்தை உணர்ந்துகொள்ளலாம்” என்கிறார் இசைஆய்வாளர் பி.ஜி.எஸ்.மணியன்.

ஹெச்.எம்.வீ வாத்தியக்குழுவில் இணைந்து இசைத்து வந்த இளைஞர் சுப்பாராமன். அப்போது அந்த வாத்தியக்குழுவின் முதன்மை இசை அமைப்பாளராக இருந்த சின்னையா என்பவர் செஞ்சுலஷ்மி(1941) என்ற தெலுங்குப் படத்துக்கு இசை அமைத்தார். இடையில் அவருக்கு உடல்நலம் குன்ற அந்த வாய்ப்பு 17 வயது இளைஞரான சுப்பாராமனுக்கு வந்தது. அந்த படத்தின பாடல்கள் பெருவெற்றி பெற்றன. அதன் பின்னர் ஹெச்.எம்.வி வெளியிட்ட ரிக்கார்டுகளுக்கும் அவர் தலைமையிலான குழு இசைஅமைக்கவே விற்பனை உயர்ந்தது. இந்த புகழ் வெளியே பரவ, 21 வயதில் கிடைத்தற்கரிய பெருவாய்ப்பு அவரைத் தேடிவந்தது. தியாகராஜபாகவதர், சுப்பராமனை அழைத்து தன் படமான உதயண் படத்தின் இசையமைப்பாளர் என்ற வாய்ப்பை அவருக்கு அளித்தார். அது 1945-ஆம் ஆண்டு. இசை ஒலிப்பதிவு செய்யவிருந்த நாளில் தியாகராஜ பாகவதர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டார். சுப்பராமன் மீது ராசி இல்லாதவர் என்ற முத்திரை விழுந்தது. அப்படம் பாகவதர் இல்லாமல் தயாரிக்கப்பட்டது. ஆனால் சுப்பராமன் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகை பானுமதி ராமகிருஷ்ணா தன்னுடைய ரத்னமாலா என்கிற தெலுங்குப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை சுப்பராமனுக்கு வழங்கினார். அது முதல் பானுமதியின் பரணி பிக்சர் ஸின் ஆஸ்தான இசைஅமைப்பாளர் ஆனார் சுப்பராமன்.

தியாகராஜ பாகவதர் சிறையில் இருந்தாலும் சுப்பராமனை மறக்கவில்லை. சிறையில் இருந்து வெளியாகி 1947-ல் நடித்த ராஜமுக்தி படத்தில் சுப்பராமனுக்கு வாய்ப்பளித்தார். அப்படம் பாகவதரின் சொந்தப்படம். இதில்தான் எம்.எல்.வசந்தகுமாரி முதலில் பாடினார். ஆனால் இப்படம் வெளியாவதற்குள் என்.எஸ்.கிருஷ்ணனின் பைத்தியக்காரன் படம் வெளியானது. இப்படத்திலும் இசை சுப்பராமன் தான். இதில்தான் பாடகர் கண்டசாலாவை அறிமுகம் செய்தார்.

அடுத்து ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த மோஹினி, அபிமன்யு ஆகிய இரண்டு படங்களிலும் இரண்டு பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. “மோகினி படத்தில் ஆகா இவர் யாரடி என்ற பாடலை பி.லீலா, கே.வி.ஜானகி இருவரையும் வைத்துப் பாடவைத்தார். இப்பாடலைக் கேட்டுவிட்டு சுப்பராமனின் வீடு தேடிவந்து நீங்க ஒரு பெரிய மேதை என்று மாபெரும் இசையமைப்பாளரான ஜி.ராமநாதன் மனமாரப் பாராட்டினார்” என்கிறார் பி.ஜி.எஸ்.மணியன்.

அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் உருவான வேலைக்காரி, என்.எஸ்.கிருஷ்ணனின் நல்லதம்பி ஆகிய படங்கள் 1949-ல்வெளிவந்தன. இவற்றில் அனைத்துப் பாடல்களுக்கும் சுப்பராமனே இசை அமைத்தார். அதே ஆண்டு வந்த கன்னியின் காதலி படத்துக்கு சுப்பையா நாயுடுவுடன் சேர்ந்து இசை அமைத்தார். இப்படத்துக்குத்தான் கண்ணதாசன் முதல்முதலில் பாட்டு எழுதினார்.

வேலைக்காரியில் இடம்பெற்ற,‘ஓரிடம் தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே, இன்னமும் பாராமுகம் ஏனம்மா?’ ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

‘குடிச்சுப் பழகணும். குடிச்சுப் பழகணும். படிச்சு படிச்சு சொல்லுவாங்க பழங் கள்ளை நீக்கி பாலைக் குடிச்சுப் பழகணும்.’ -‘நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தானய்யா’ ஆகிய பாடல்கள் நல்லதம்பி படத்தில் இடம்பெற்று புகழ்பெற்றவை.

‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி..’ இந்தப்பாட்டு எல்லா தலைமுறையினருக்கும் ஞாபகத்தில் இருக்கும். இது நல்லதம்பியில் சுப்பராமன் போட்ட பாட்டுதான். கலைவாணருக்கு சுப்பராமனை மிகவும் பிடித்துப்போக அவரை சிங்கம் சுப்பராமன் என்றுதான் அழைப்பாராம். அடுத்து கலைவாணர் தயாரித்து இயக்கிய மணமகளில்தான்,‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா-’ என்ற பாரதியின் பாடலுக்கு இசை அமைத்தார். இப்பாடலுக்கு இசை அமைத்தபோது அவருக்கு வயது 26தான். இன்றளவும் அதே வடிவில் இப்பாடல் நிலைத்து நிற்கிறது.

இதே படத்தில் ‘எல்லாம் இன்பமயம்’ என்ற உடுமலை நாரயண கவியின் இன்னொரு பாடலும் காலத்தை வென்ற பாடல். எம்.எல்.வி- பி.லீலா இருவரும் பாடும் இப்பாடல் எப்போது கேட்டாலும் கேட்போரை அடிமையாக்கும் இனிமை கொண்டது. இப்படத்தில்தான் பத்மினி தமிழில் நாயகியாக அறிமுகம் ஆனார் என்பது கூடுதல் தகவல்.

ஜூபிடர் பிக்சர்ஸின் ராணி, பரணி பிக்சர்சின் காதல் ஆகிய படங்களுக்கு இசை அமைத்த அவர் அடுத்ததாக பரணி பிக்சர்ஸின் சண்டிராணி படத்துக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். சுப்பராமன், அதே சமயம் புகழ்பெற்ற தேவதாஸ் படத்துக்கும் இசை அமைத்தார். இப்படத்துக்கு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார்.

தேவதாஸின் ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே..’ இந்தப் பாடலைக்கேட்காதவர்கள் இருக்கமுடியாது. இது கல்யாணி ராகத்தின் அடிப்படையில் அமைந்த அருமையான பாடல். ‘சந்தோஷம் தரும் சவாரி போவோம்’, ‘ஓ ஓ தேவதாஸ்’, ‘எல்லாம் மாயைதானா’. ‘கனவிதுதான்‘, உலகே மாயம் வாழ்வே மாயம்- ஆகிய பிறபாடல்களும் புகழ் பெற்றவை.

இந்த பாடல்களுக்காக இசை சேர்க்கைகளை முடித்த நிலையில் அந்த மாமேதை தன் 28-ம் வயதில் திடீரென மரணம் அடைந்தார். தேவதாஸின் பாடல் பணிகளை அவரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய இருவர் முடித்துக் கொடுத்தனர். அவர்கள் பெயரும் அப்படத்தின் டைட்டில் கார்டில் இடம் பெற்றது. சங்கீதம்: சி.ஆர்.சுப்பராமன். பின்னணி சங்கீதம்- விஸ்வநாதன் - ராமமூர்த்தி. ஆம். சுப்பராமன் மரணம் அடைந்தாலும் அவரது சங்கீதம் மெல்லிசை மன்னர்களான இந்த ஜோடியின் வாயிலாக பல்லாண்டுகள் தமிழ்த் திரை உலகை ஆட்சி செய்தது!

ஜனவரி, 2014.