சிறப்புப்பக்கங்கள்

சாலைகளின் சினேகம்

வான்மதி

முதன் முதலில் 1989 மார்ச் 19ம் தேதி வடசென்னை இராயபுரத்தில் காலடி வைக்கும் போது இருந்த அதே மிரட்சி இன்னும் இருக்கிறது மனதில். மஞ்சள் நிற கோடுகளை கடக்கத் தெரியாமல் யாராவது கடந்து சென்றால் அவர்களை பின்பற்றி நாமும் தாண்டி விடலாம் என பீதியோடு நின்ற போது இந்த சென்னையில் பயணம் என்னை பார்த்து சிரித்தது போல்தான் இருந்தது.

அப்போதெல்லாம் ஒரு கணக்கு உண்டு காலையில் இத்தனை மணிக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் மதியம் மற்றும் இரவு கொஞ்சம் ஓய்ந்திருக்கும். மாலை மீண்டும் நெரிசல் அதிகமாகிவிடும் என்பது போல் நாங்களே ஒரு கணக்கு வைத்திருப்போம். அந்த நேரத்தில் வெளியில் செல்ல திட்டமிடுவோம்.

ஆனால் இப்போது 24 மணி நேரமும் நெருக்கடியோடு கூடிய பயணம் தான் அமைகிறது. முகம் பார்த்து பேசி முகமன் கூறி விலாசம் சொல்லும் ரிக்ஷா வண்டிகாரர்களோ, பெட்டிக்கடை அண்ணாச்சிகளோ, சாலையோர இட்லிக்கடை ஆயாக்களோ இல்லாமல் சென்னை பயணம் இனிப்பதில்லை இப்போது. இயந்திரங்களோடு இயந்திரங்களாய் அமைந்துவிடுகிறது இக்கால பயணம். கேட்பதற்கு நாகரீகம் பார்க்கும் நம்மைவிட அதை விளக்கமாய் சொல்ல அவர்கள் யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

இரு சக்கர வண்டியில் ஒருமுறை காற்றில் பறந்து துப்பட்டா மாட்டிக் கொள்ள சாலையில் இருந்த பலரும் பதற்றத்தோடு ஓடி வந்து என்னை மீட்டு தண்ணீர் கொடுத்து உடைகளை சரிசெய்து வண்டியை சீராக்கி வழியனுப்பி வைத்தக் காட்சி இன்னும் மனத்தில் காட்சியாய்.

நான் 25 வருடங்களாய் வடசென்னை வாசி. அன்பும் அழுக்கும் நிறைந்த பகுதிகள் கொண்ட வட சென்னை...இங்கிருக்கும் சந்து,முட்டு சந்து, தெரு, நிழற்சாலை, இடைவெட்டுச் சந்தி, இடைமாற்றுச்சந்தி புறவழிச்சாலை சுரங்கப்பாதை என அனைத்திலும் பயணிப்பது என்பதே ஒரு கலை என்றே சொல்லலாம். அது எந்த காலத்துக்கும் பொருந்தும்.

வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு விடுமுறை கால பயணங்களை கழித்த போதும், இரு சக்கர வண்டிகள் ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி வாங்கி சாலைகளில் ஓட்டிய போதும், நான்கு சக்கர வாகனத்துக்கு மாறி தைரியமாய் ஓட்டி கெத்து காட்டிய போதும் இந்த சென்னையின் சாலைகளும் தன்னுடனே சேர்த்தே என்னையும் வளர்த்து விட்டிருக்கிறது.

சாலைகள் மாறியிருக்கலாம், வாகனங்கள் மாறியிருக்கலாம். மனிதர்கள் இன்றும் அப்படியேதானோ என்கிற எண்ணத்தைதான் என் வடசென்னை சாலை பயணம் எனக்கு சொல்கிறது. நாகரிகமாய் சாலைகளை அமைக்கலாம். பழுது நீக்கலாம். புதுப்பிக்கலாம்,சாலைகளை வலுப்படுத்தலாம் மேம்படுத்தலாம் தேவைப்படும் இடங்களில் சாலைகளை மறு நிர்மாணம் செய்யலாம். ஆனால் சென்னை மக்களின் குணம், நடவடிக்கை, பிரதிபலிப்பு என்கிற இயல்புகளை மாற்றவோ சீரமைக்கவோ முடியாது என்பதுதான் என் இந்த 25 வருட வட சென்னை சாலைகளின் பயணம் எனக்கு சொல்கிறது.

2019ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு 7 இலட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வடசென்னையின் குண்டு குழியுமான குறுகலான,நெருக்கடி நிறைந்த சாலைகளும் இந்த திட்டங்களின் கீழ் வரும் என்கிற நம்பிக்கையில் ஒரு வட சென்னைக்காரியாய் நான்.

ஆகஸ்ட், 2018.