கேரளத்தின் சாலக்குடியிலிருந்து வால்பாறை வழியாகப் பொள்ளாச்சி செல்வது பயணத் திட்டம். சாலக்குடியைத் தாண்டியதும் மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பு வசீகரிக்கத் தொடங்கிவிடுகிறது. மலைப் பாதையின் இரு புறமும் சரிவுகளில் பாமாயில் மரங்கள். 23 கிலோமீட்டர் சென்றதும் அதிரப்பள்ளி அருவி வருகிறது. அதற்கடுத்து மூன்று கிலோமீட்டரில் வாழச்சால் அருவி. இரண்டிற்கும் சேர்த்து கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டு எடுத்துக் கொண்டோம். அதிரப்பள்ளி வரை சுற்றுலாப் பயணிகளைக் கவர வரிசையாக தீம் பார்க்குகள்.இதற்கு சாலக்குடியிலிருந்து மினி பஸ்கள் இயங்குகின்றன.
கேரளாவின் நான்காவது பெரிய நதியான சாலக்குடி ஆறு தமிழ் நாட்டின் ஆனை மலையில் உற்பத்தியாகி மேற்கு தொடர்ச்சி மலையின் சிற்றாறுகளுடன் இணைந்து 145 கிலோ மீட்டர் பயணித்து பெரியாறுடன் இணைகிறது.பெரும்பாலான இடங்களில் அமைதியாக வழிந்து நகரும் நதி அதிரப்பள்ளியை ஒட்டிய சில கிலோமீட்டர்கள் மட்டும் பொங்கி நுரைத்து காட்டாற்றின் வேகத்துடன் ஆக்ரோஷமாக புரண்டு ஓடுகிறது. அதிரப்பள்ளி,
வாழச்சால் பகுதியை ஒட்டிய மழைக்காடுகளில் மட்டும்தான் இந்தியாவின் நான்கு வகையான வேழாம்பல் (ஏணிணூணஞடிடூடூ) பறவைகளும் காணக்கிடைக்கும்.வேழாம்பல் கேரள அரசின் அதிகாரப்பூர்வமான பறவை(மேலதிக தகவல்களுக்கு கவிஞர் சுகுமாரனின் வேழாம்பல் குறிப்புகள் புத்தக முன்னுரையை வாசிக்கலாம்).இந்தியாவின் நயாக்ரா என்று கேரளத்தவர்கள் பெருமைப்படும் அதிரப்பள்ளி அருவியை தமிழர்கள் நினைவில் நிற்கும்படி அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். புன்னகை மன்னன் படத்தில். அன்றிலிருந்து தமிழர்களுக்கு இது புன்னகை மன்னன் பால்ஸ் ஆகிவிட்டது. (இன்றைய தலைமுறைக்கு அர்ச்சுனா...அர்ச்சுனா ஆடிய நமீதா பால்ஸ்!).
மழை விடாமல் கொட்டிக்கொண்டிருக்க அருவியின் அருகில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு தூரத்திலிருந்தே தரிசனத்தை முடித்துவிட்டோம். அதிரப்பள்ளியிலேயே கேரள கொட்டை அரிசியுடன் சுடச்சுட மீன் குழம்பு சாப்பாடு.
அடுத்த மூன்று கிலோமீட்டரில் வாழச்சால் அருவி. மழை சற்று குறைந்து சாரலடித்துக் கொண்டிருந்தது.
சுற்றுலாவாசிகள் அருவியின் நாலாப்புறமும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். மனிதர்களின் நடமாட்டம் அத்தோடு சரி. அதன்பிறகு சாலைகளில் எங்காவது ஒன்றிரண்டு வாகனங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. பாமாயில் மரங்கள் அதிரப்பள்ளி வரைதான். அதற்கப்புறம் கட்டடற்ற வனம். மழையில் துடைத்து வைத்தது மாதிரி பளிச்சென்ற அடர்ந்த காடு. வண்டுகளின் ரீங்காரம் மட்டுமே கேட்கக்கூடிய சத்தம். பரிசுத்தமான இயற்கைக்கு அருகே கொஞ்சம் கொஞ்சமாக மிதந்து சென்று கொண்டிருந்தோம்.
வனத்தில் வழிதவறிய நான் என்கிற பாப்லோ நெரூதாவின் கவிதையை இங்கு நினைவுகூர்வது உசிதம்.
வனத்தில் வழிதவறிப்போன நான்
ஒரு இருண்ட கம்பை சட்டென்று கடித்தேன்
தாகத்துடன் என் உதடுகளுக்கருகில்
அதன் முனகலை உயர்த்தினேன்;
ஒருவேளை அது
மழையின் அழுகுரலாக இருக்கலாம்
நொறுங்கிய மணியாக இருக்கலாம்
அல்லது
உடைந்த இதயமாக இருக்கலாம்.
வெகுதொலைவிலிருந்து
ஆழமாக மூடப்பட்ட
மண்ணால் மறைக்கப்பட்ட
அளக்கவியலாத இலையுதிர்காலங்களால் தோற்கடிக்கப்பட்ட
நிழல் இலைகளின் ஈரத்தால் பாதி திறக்கப்பட்ட
ஒரு அலறலாக
என்னிடம் வந்தது.
ஆனால்
கானகக் கனவைவிட்டு நான் வெளியேறியபோது
அந்த ஹேசல் கிளை
என் நாவினடியில் பாடியது
அதன்
அலையும் நறுமணம் என் உணர்வில் எழுந்தது.
நெடுங்காலமாக
நான் உதாசீனம் செய்திருந்த வேர்கள்
திடீரென்று என்னைத் தேடின
இழந்துபோன பால்ய பிரதேசத்தைத் தேடின
அலையும் நறுமணங்களால் காயமடைந்த என்னை அணைத்துக் கொண்டன.
(மொழிபெயர்ப்பு: கவிஞர் சுகுமாரன்)
ஆனைக்கயம் (யானை பள்ளத்தாக்கு) என்ற இடத்தை கடக்கும்போது, ‘உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் இன்னைக்கு யானையை பார்க்கலாம்’ என்றார் ஓட்டுநர். யானை வழியில் வந்தால் அதிஷ்டமா, துரதிஷ்டமா என்ற பயத்தில் லேசாக சிரித்து வைத்தேன். சாலையின் இடப்புறம் சாலக்குடி நதி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஏறக்குறைய அறுபதாவது கிலோமீட்டரில் சோலையாறு அணையிலிருந்து நீர் மின் திட்டத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய்கள் கீழ் நோக்கி பதிக்கப்பட்டிருந்தது. கேரள மக்களின் நீண்ட போராட்டத்தையும் தாண்டி மின்சாரத்தேவைக்காக அமைக்கப்பட்ட திட்டம்.
மழையில் நனைந்து பழுப்பும் கருப்புமாக நீண்டுயர்ந்த மரங்கள் சலனமற்று அமைதியாக தெரிந்தன. ஏறுவதே தெரியாமல் பாதையில் செல்ல செல்ல மலை உச்சியையே அடைந்து விட்டிருந்தது தெரிந்தது.மேகங்கள் மலையின் மீது கவிழ்ந்தும், உரசியும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.சோலையாறு பகுதியுடன் கேரள எல்லை முடிகிறது. இங்கிருந்து வனப்பகுதி முடிந்து காப்பிச் செடிகள் தொடங்கிவிடுகின்றன. அதற்கடுத்து தேயிலை தோட்டங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலென்ற தேயிலை தோட்டங்களும் நடு நடுவே ஓங்கியுயர்ந்த மரங்களுமாக மேற்கு தொடர்ச்சி மலையின் அத்தனை அழகும் பரந்து விரிந்திருக்கிறது. மளுக்கப்பாறையை தாண்டும்போது ஓட்டுநர் உற்சாகத்துடன் ‘யானை வாசனை அடிக்கிறது.பக்கத்தில் தான் யானை இருக்க வேண்டும்’ என்றார். இரண்டு மூன்று கிமீ தாண்டியதும் தமிழக செக் போஸ்ட்டை ஒட்டி சாலை ஓரங்களில் நான்கைந்து பேர் நின்று கொண்டு மலைச்சரிவின் மேற்பக்கமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு வளைவுகள் தாண்டியதும் ஒரு வெளி நாட்டுக்காரர் தன் மூன்றடி கேமராவின் பெரிய லென்ஸ் வழியாக பார்த்துக்கொண்டிருந்த திசையில் நாமும் பார்த்தபோது ஒரு காட்டு யானை தன் இரண்டு குட்டிகளுடன் மெதுவாக அசைந்து நடந்துக்கொண்டிருந்தது தெரிந்தது. நமக்கும் அவர் காமிரா வழியாக யானையை காட்டினார். யானையின் சுருக்கம் விழுந்த சாம்பல் நிற தோல்வரை துல்லியமாகத் தெரிந்தது.
மகிழ்ச்சியுடன் புறப்பட்டோம். ‘நல்ல வேளை.. யானையப் பார்த்துட்டீங்க’ ஓட்டுநரின் உற்சாகம் எங்களுக்கும் பரவியது. சாலக்குடியிலிருந்து வால்பாறை 106 கிமீ. வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி 65 கிமீ தொலைவு. அதில் 40 கொண்டை ஊசி வளைவுகள். மலை உச்சியிலிருந்து வளைவுகளில் சரிந்து பாதை இறங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சம் தூரத்திலேயே ஆழியாறு அணையின் பிரமாண்டமான மதகைப் பார்க்க முடிந்தது.மேலேறி வந்தவுடன் ஆழியாறு அணையை ஒட்டி ஏறக்குறைய பத்து கிமீ பயணம்.தண்ணீர் குறைவாக சவலைப்பிள்ளை போல அணை பரிதாபத்திற்குரியதாக காட்சியளித்தது. முப்பதாவது கொண்டை ஊசி வளைவை தாண்டும் போது பனி படரும் பகுதி மெதுவாகச் செல்லவும் என்ற அறிவிப்புப் பலகையை காண முடிந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் பனி மெதுவாக இறங்கிப் பாதையை அடைத்துக் கொண்டது. எதிர்வரும் வாகனங்களை முகப்பு விளக்குகளை வைத்தே அடையாளம் காண முடியும். வெண் பனியினுள் வாகனம் மெதுவாக ஊர்ந்தது. அரை மணி நேரத்தில் பனி விலகி பாதை தெளிவானது.
கீழே இறங்க இறங்க காது அடைத்துக் கொண்டது,கூடவே தமிழ் நாட்டின் வெக்கையும். பொள்ளாச்சி வரும்போது இரவு ஏறியிருந்தது. கனவில் அடர்ந்த வனத்துடன் சென்னை திரும்பும் பேருந்தில் தூங்க தொடங்கினேன்.
ராஜகோபால், சாலக்குடி வால்பாறை பேருந்தில் கடந்த ஏழு வருடமாக ஓட்டுநர். காலை ஏழரை மணிக்கு வால்பாறையிலிருந்து புறப்பட்டு மதியம் பன்னிரண்டரைக்கு சாலக்குடி. மீண்டும் ஒன்றரைக்கு வண்டி எடுத்தால் மாலை ஆறரைக்கு வால்பாறை.இந்த பாதையைப் பற்றி நன்கு அறிந்தவர்.
‘வழக்கமாக கோடை காலத்துலதான் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவாங்க. ஆனா சாலக்குடி வால்பாறை பகுதியை சுற்றிப்பார்க்க ஜூன், ஜூலை மாதந்தான் சரியான சமயம். அதிரப்பள்ளியில மழைக்கு நல்லா தண்ணி வரும். யானை, சிறுத்தை, மான், காட்டெருமைகளை சாதாரணமா இந்த பாதையில பார்க்கலாம். மழைக்காலத்தில் காட்டுல கொசுக்கடி அதிகமா இருக்கும்போது சாலையில் யானை நடமாட்டம் அதிகமா இருக்கும்.வெயில் காலத்தில் வழியில் பாம்பு நடமாட்டம் அதிகமிருக்கும். யானையாகட்டும், சிறுத்தையாகட்டும் வழக்கமா பயணிக்கற வண்டிகளை ஒன்னுமே செய்யாது. ஆட்டோ, கார்ல அதிக சத்தமா உறுமும் போது யானை கோபப்பட்டு அதை அடிச்சு உடைச் சிருக்கு. மழைக்காலத்துல மரங்கள் அதிகமா வழியில விழுந்துரும். அதனால வண்டியிலேயே அதை அறுத்து அப்புறப்படுத்துவதற்கான எல்லா உபகரணங்களையும் வைத்திருப்போம். நாங்களே பாதையை சரிசெய்து கிளம்பிவிடுவோம். மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்திருந்தால் மட்டும் மின்வாரிய ஆட்களை கூப்பிடுவோம்.’ என்கிறார்.
ஜூலை, 2014.