சிறப்புப்பக்கங்கள்

சாரு என்னும் தோழன்

கருந்தேள் ராஜேஷ்

சாருவை நான் முதன்முதலில் நேரில் சந்தித்தது 2009 புத்தகக் கண்காட்சியில்.  குமுதத்தில் அதற்கும் முன்னரே அவர் எழுத ஆரம்பித்துப் பாதியில் நின்றிருந்த தொடரின் ரசிகன் நான். மிகவும் வித்தியாசமாக, வெளிப்படையாக இருந்த அந்தத் தொடரைப் படித்ததன் மூலமாக மட்டுமல்லாமல், அதற்கும் முன்னர், ஸீரோ டிகிரியில் இருந்து பல பத்திகளைக் குமுதம் எடுத்துப் போட்டிருந்த காலத்திலேயே பரிச்சயம். முந்தைய வருடம்தான் கோவையில் இருந்து மென்பொருள் வேலைக்காக சென்னை வந்திருந்தேன். ஒரு வருடத்துக்கும் மேல் தமிழ் இணையவெளியை அவதானித்துக்கொண்டிருந்த காலம். ஆங்கிலத்தில் எனது வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். உயிர்மை ஸ்டாலில் புத்தகங்கள் துழாவிக்கொண்டிருந்தபோது நுழைவில் சாருவும் மனுஷ்யபுத்திரனும் அமர்ந்து புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது சாருவின் கெட்டப்பே வேறு. இப்போதுள்ள குறுந்தாடி இல்லை. நீட்ஷே மீசை. வண்ணமயமான சட்டை. பார்த்தாலே ஏதோ வடசென்னை தாதா போன்ற தோற்றம். அப்போதே இணையத்தில் அவர் எழுதும் கட்டுரைகள் அனைத்தையும் விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். அவர் மட்டும் அல்லாமல் பிற எழுத்தாளர்களும் பரிச்சயம். உயிர்மை ஸ்டாலில், எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் கையெழுத்து வாங்கினேன். ‘பயங்கர ஹைட்டா இருக்கீங்களே’ என்றபடியே போட்டுக்கொடுத்தார்.

அன்று இரவே அந்தப் புத்தகத்தைப் படித்தாயிற்று. மறுநாள் மறுபடியும் போய், இம்முறை ராஸலீலா  வாங்கினேன். கூடவே அப்போதைய கோணல் பக்கங்களில் இரண்டு பாகங்கள் வாங்கினேன். அப்போது அவரது இணையதளத்தில், சென்னை சங்கமத்தை ஒட்டி, என்னை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் அவரும் பிறரும் பேசுவதாக எழுதியிருந்தார். தி நகர் - பி.டி. தியாகராயா ஹால் என்று நினைக்கிறேன். ஐந்தரைக்கு நிகழ்ச்சி. நான் சரியாக 5.25க்குப் போய்விட்டேன். ஆனால் ஈ,எறும்பு இல்லை. அரங்கமே காலி. நான் சென்று இறங்கிய அடுத்த நிமிடமே சாரு ஆட்டோவில் வந்து இறங்கினார். அவரிடம் சென்று, சில நாட்கள் முன்னர் புத்தகம் வாங்கியதாக அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவருக்கு நினைவிருந்தது (உயரம்!). யாரையும் காணோமே என்று வினவியபோது, அவரது பாணியில் ஒரு பதில் அளித்தார். சாராம்சம் - ‘அனைவரும் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் நான் சொன்ன நேரத்துக்கு வந்துவிடுவதால், இப்போதும் ஐந்தரைக்கே வந்துவிட்டேன்’. பின்னர் அவரும் நானும் அங்கேயே ஒரு குட்டி உலா போனோம்.  அன்றில் இருந்து சாரு என் வாழ்க்கையில் இன்றியமையாத நபராக மாறிவிட்டார்.

சாருவிடம் அதன்பின் எத்தனையோ தடவைகள் பல மணி நேரங்கள் பேசியிருக்கிறேன். அந்த எல்லாச் சந்திப்புகளிலும் என்னைக் கவர்ந்தது – Didactic ஆக அவர் ஒருமுறை கூடப் பேசியதில்லை. எத்தனையோ விஷயங்களில் நான் பேசும் தலைப்பை உள்ளும் புறமும் தெரிந்துவைத்துக் கொண்டிருந்தாலும், பொறுமையாக நான் பேசுவதை முழுக்கக் கேட்டுவிட்டே அவரது கருத்தைச் சொல்வார். அவரோடு நான் பேசிய எல்லாத் தருணங்களிலும் இதைக் கவனித்திருக்கிறேன். தனக்கு எல்லாமே தெரியும் என்ற உணர்வைத் துளிக்கூட அவர் வெளிப்படுத்தியதில்லை. கூடவே, அவர் போன்ற ஒரு சுவாரஸ்யமான human being ஐப் பார்த்ததும் இல்லை. ஒரு மனிதனாகப் பொதுவில் நாம் வெளிப்படுத்தும் உணர்வுகள், தனிப்பட்ட முறையில் நாம் இருக்கும் நிலை ஆகிய இரண்டிலுமே சாருவிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.

சாருவிடம் பேசத் துவங்கியபின்னர், எனது அகந்தை அகன்றது. திரைப்படங்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் எனக்குத் தெரிந்ததுபோல யாருக்கும் தெரியாது என்ற உணர்விலேயே பல வருடங்கள்  சுற்றிக்கொண்டிருந்தேன். ஆனால்  சாருவிடம் பேசியபின், எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அறிந்துகொண்டேன். திரைப்படங்கள், புத்தகங்கள், இசை, அனுபவம் என்று அவரிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டவைகள் ஏராளம். அவைகளைப் பாவிக்கத் துவங்கினாலே, இன்னும் பலவருடங்கள் சந்தோஷமாக இருக்கலாம். இவைதவிர, வாழ்க்கை என்ற விஷயத்தில் விலைமதிப்பில்லாத பல அனுபவங்கள் அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன். சக மனிதனிடம் பழகும் முறையே அவரிடம் பழகத் துவங்கியபின்னர்தான் மாறியது. எத்தனையோ அனுபவங்கள் உண்டு. அவற்றைத் தனித் தொடராகத்தான் எழுதவேண்டும். இதையெல்லாம் நான் Sentimental ஆகப் பேசவில்லை. ஒரு நண்பனாக, இப்படி ஒரு நண்பன் கிடைப்பது மிகவும் கடினம் என்ற உணர்விலேயே பேசுகிறேன். என் சமவயது நண்பர்களில் பலரையும் விட, எனது எண்ணங்கள்,  ரசனை ஆகியவற்றுக்கு மிகவும் நெருக்கமானவர்  சாருவே. அவரைப் பெயர் சொல்லித்தான் அழைக்கவே முடியும். இதுதான் பிறருக்கும் இவருக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு. இவரிடம் போதனைகள் இல்லை. போகிறபோக்கில் பல விஷயங்களைச் சொல்லிச்  சென்றிருக்கிறார்.

சாருவிடம் பழகும் பலரும் ஓரிரண்டு வருடங்களிலேயே நட்பைத் துண்டித்துக்கொள்வதைப் பலமுறை கவனித்திருக்கிறேன். சாருவே அதை வைத்து என்னை நக்கல் அடிப்பதும் உண்டு. கிட்டத்தட்ட 7-8 வருடங்களாக அவருக்கும் எனக்கும் இருக்கும் நட்பு சந்தோஷமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நட்பு துண்டிக்கப்படுவதற்குக் காரணங்களையும் கவனித்திருக்கிறேன். பழகுபவர்களிடம் இருக்கும் புரிதல் குறைபாடுதான் அதற்குப் பெரும் காரணமாக இருக்கும். சாரு யாரையுமே உடனே நம்பும் நபர். எனவே அந்த நம்பிக்கை உடைவதுதான் பெரும்பாலும் நட்பு காணாமல் போவதற்குக் காரணமாக இருக்கும். ஒரு மனிதனிடம் பழகும்போது சில மாதங்கள் பொறுமையாக அவதானித்து, பின்னர் நெருங்கிப் பழகலாமே என்று கேட்டால், அதற்கெல்லாம் துளிக்கூட நேரம் இல்லை என்று பதில் வரும். சராசரி மனிதனாக நம்மிடம் இருக்கும் ஈகோ, நடுத்தர வர்க்க மனநிலைகள் போன்றவைகளை சாருவின் மேலும் நாம் சுமத்துவதே இதற்கெல்லாம் காரணம் என்பது என் அனுபவம்.

தற்காலத்தில் சாரு போல இணையவெளியில் தொடர்ந்து தாக்கப்படும் எழுத்தாளர் இல்லை என்றே சொல்லிவிடலாம். எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருப்பதற்குச் சாரு கொடுக்கும் விலை அது. பிறரைப்போல் உள்ளே ஒரு மாதிரி இருந்துகொண்டு, வெளியே தூய மனிதனைப்போல், தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டு அவராலும் நடிக்க இயலும். ஆனால் அது அவருக்குத் தேவையில்லை. மிகப்பெரும்பாலும் அனாமதேயமாக, சொந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு, பயந்து நடுங்கி, போலி ஐடிக்களை உருவாக்கி வாந்தி எடுக்கும் வக்கிரம் பிடித்த கோழைகள் இவர்கள் என்பதால் வசவுகளை அவர் கண்டுகொள்வதும் இல்லை.

எழுத்திலும் சரி, நேர் வாழ்க்கையிலும் சரி, இவ்வளவு சுவாரஸ்யமான ஒரு மனிதனை நான் பார்த்தது இல்லை. எங்களது நட்பில் சாருவுக்கு நன்மை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு ஏராளம் உண்டு. அவரிடம் இருந்து தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் இன்னும் மகிழ்ச்சி. எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இவரிம் பேசி, சிரித்து, சண்டை போட்டு, கத்தி, திட்டி, கருத்துப் பரிமாற்றம் நடத்தமுடியும். நான் இப்போது ஓரளவாவது தத்தக்கா புத்தக்கா என்று எழுதுவதில் சாருவுக்கே பெரும்பங்கு உண்டு. எனது உலக/திரைப்பட/இலக்கிய/இசை அறிவு, அவரிடம் இருந்தே வந்தது. அவர் இல்லை என்றால் நானும் ஒரு  Typical ரசனையற்ற, மொண்ணையான சராசரியாக மாறிப்போயிருப்பேன். அதற்காகவே அவருக்கு நன்றி. நன்றி கின்றியெல்லாம் சொல்வது சாருவுக்குப் பிடிக்காது. எனவே, ஆத்மார்த்தமாக  Cheers!!

ஜனவரி, 2017.