சிறப்புப்பக்கங்கள்

சாமி வந்து ஆடிய அக்காக்கள்!

ஷாலின் மரியா லாரன்ஸ்

எனக்கு ஆறு வயது இருக்கும். பொங்கல் பண்டிகை என்று நினைக்கிறேன். அம்மா ஏதோ வேலையில் பிஸியாகிவிட, என்னைப் பார்த்துக்கொள்ளும் சொந்தக்கார அக்காக்கள் சென்னையில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பட்டாளம் என்கிற பகுதியில் இருக்கும் மஹாலக்ஷ்மி தியேட்டருக்கு அழைத்து போக ஆயத்தமானார்கள். அந்த காலத்தில் வடசென்னையில் பொங்கல் மிக விமரிசையாக இருக்கும். மூன்று நாட்களும் உழைக்கும் வர்க்கம் திரைப்படங்களில்மூழ்கிவிடும். மூன்று நாள் மூன்று ஷோக்கள் கூட பார்ப்பார்கள். அத்தனை சினிமா வெறி. சினிமா அவர்களை ஆற்றுப்படுத்தியது. அவர்களை கொண்டாடச் செய்தது. அவர்களை மகிழ்வித்தது.

சினிமா அவர்களுக்கு மதம். மஹாலக்ஷ்மி தியேட்டர் திருவிழாக் கோலம் பூண்டிருந்-திட்டது. வாழை மரம் கட்டி, தோரணங்-கள், கலர் பேப்பர் அலங்காரம் என்று பட்டையைக் கிளப்பியது. ‘கரகாட்டக்காரன் ‘ பட பேனர் திரையரங்கைச் சுற்றி ஒட்டப்பட்டிருந்தது. ஜனமோ ஜனம். கைக்குழந்தையுடன் பெண்கள், இளைஞர்கள், பல்லில்லாத பாட்டி தாத்தா என்று எல்லாரும் நிரம்பி இருந்தார்கள். பிளாக் டிக்கெட் விற்பனையாளர்கள் டிக்கெட் கிடைக்காதவர்களிடம் சென்று காதில் ‘அஞ்சு பத்து, பத்து இருபது' என்று முணுமுணுத்தார்கள்.

வடசென்னை என்பது தியேட்டருக்கு நேர்ந்துவிட்ட ஊர். தடுக்கி விழுந்தால் திரையரங்குதான். மஹாலக்ஷ்மி, சயானி,வாணிவசந்தி, புவனேஸ்வரி, ராக்சி, பத்மநாபா, நாதமுனி, சரவணா பாலாஜி, நடராஜா, மேகலா, பிருந்தா, மோட்சம், சரஸ்வதி, அபிராமி, பிரபாத், கிரௌன், மஹாராணி, தமிழ்நாடு, அசோக், உமா என்று தியேட்டருக்குப் பஞ்சமே இல்லை. கோவிலுக்குப் போவார்கள், பின்பு தியேட்டருக்கு இதுதான் வாழ்க்கை. திரையரங்குகளை மிகப் பெருமையாகப் பார்த்தார்கள். பயபக்தி இருந்தது. பல தியேட்டர்களுக்கு பெண் சாமி பெயர்களை வைத்தார்கள். நாங்கள் படம் பார்க்க போன மஹாலக்ஷி தியேட்டர் 1930களில் திறக்கப்பட்டது. வெளியே உள்ளே என்று பழமை குடிகொண்டிருந்தது.பெரிய பெரிய திரைச்சீலைகள், சிகப்பு நிற குஷன் சீட்டுகள், பெரிய பால்கனி கொண்டு பிரமாண்டமாக தெரிந்தது.

பயங்கர ஜனம், உள்ளே நுழையவே முண்டி அடிக்க வேண்டி இருந்தது. பீடி சிகரெட்டு மது வாசனை ஆங்காங்கே.இன்னொரு பக்கம் மல்லிப்பூ ரோசா, கோகுல் சாண்டால் வாசனை. ஜாக்கெட்டுக்குள் வியர்வையில் நசுங்கிய டிக்கெட்டை எடுத்து அக்கா பரிசோதகரிடம் கொடுக்க, உள்ளே போனோம். தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. சீட் எல்லாமே நிரம்பி,கீழே வேறு மக்கள் உட்கார்ந்து இருந்தார்கள்.

என் அம்மா ‘கமல்' ‘கமல்' என்று பேசிக்கொண்டே இருப்பாள். சுற்றி இருப்பவர்கள் ரஜினிக்கு

சில்லறையை சிதறவிடுவார்கள். ஆனால் அன்று தான் எனக்கு ராமராஜனின் பவர் புரிந்தது. அந்த தியேட்டரின் பிரமாண்டத்தை மீறி ராமராஜன் பெரிதாகத் தெரிந்தார். அவருக்கு அத்தனை பெண்

ரசிகர்கள். படம் துவங்கியதும் களுக்கு களுக்கு என்று பெண்கள் சிரிக்கலானார்கள், கங்கை அமரனை பார்த்து.

இளையராஜா பாடலானார்:

‘காளையர்கள் காதல் கன்னியரை

கவர்ந்திட பாடல் கேட்டார்கள்

ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்

இருப்பதை பாடச் சொன்னார்கள்'

கூட்டத்தில் இருந்து விசில் பறக்க ஆரம்பித்து இருந்தது. ‘தலைவா' ‘இசைஞானி' என்று கத்த ஆரம்பித்தார்கள். சொல்ல மறந்துவிட்டேன். மஹாலக்ஷ்மி தியேட்டரின் சிறப்பே சினிமா பிரியர்களோடு மது பிரியர்களும் அங்கே படம் பார்க்க வருவது தான். ஸ்ட்ராஹான்ஸ் ரோட்டில் தியேட்டருக்கு எதிரே உள்ள ஒயின் ஷாப்பில் ஒரு நயின்டியை வாங்கி, அதை லுங்கிக்குள் ஒளித்து மடித்துக் கட்டிக்கொண்டு வருவார்கள். உள்ளே கேண்டினில் தொட்டுக்கொள்ள ரெண்டு ரூபா பாப்கார்ன். எட்டணா சமோசா. அந்தக் காலத்தில் எல்லாம் இப்பொழுது மாதிரி காவலாளிகள் கிடையாது.

குடி பிரியர்கள் பற்றி எல்லாம் பெரிய வழக்கு கிடையாது. அவர்கள் பாட்டுக்கு வந்து, குடித்துவிட்டு, ஸ்க்ரீனை பார்த்து தங்களுடைய ஆதர்ச ஹீரோக்களுடன் பேசிவிட்டு உறங்கி விடுவார்கள். தொந்தரவு எல்லாம் செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை வெள்ளைக்காரர்கள் போல் எல்லாவற்றையும் மதுவுடன் அனுபவிக்க வேண்டும். அவ்வளவே.

ஆனால் சும்மா சொல்ல கூடாது படம் அநியாய ஸ்வாரஸ்யம். பாட்டு தூள், ஒவ்வொரு வசனத்திற்கும் மக்கள் குலுங்கிக் குலுங்கி சிரித்து கொண்டிருக்கிறர்கள். எங்கள் சீட்டுக்கு பின்னால் உட்கார்ந்து இருக்கும் வயதான அம்மா, ‘மூஞ்ச பாத்தியா அவனுக்கு, அந்தப் பொண்ண நிம்மதியா வாழ வுடுறானா,

சனியன் புச்சவன்' என்று வாகை சந்திரசேகரை சபித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலர் செந்திலை படுத்தி எடுத்து கொண்டிருந்ததாக கவுண்டமணியை திட்டி கொண்டிருந்தார்கள். அவர்கள் படத்தை நிஜ வாழ்க்கையாய் உணர்ந்து கொண்டிருந்தார்கள்.

இடைவேளை வந்தது. எல்லோருக்கும் சிறுநீர் கழிக்க பாத்ரூம் போனார்கள். எனக்கோ அதீத பயம். ஏனென்றால் அரசு பள்ளிக்கூட கழிவறையில் பேய்க் கதைகளுக்கு பின்பு திரையரங்க கழிவறை பேய்க் கதைகள் தான் அப்பொழுது மிக பிரபலம். அது எதனால் என்று இன்று வரை யோசித்துப் பார்த்ததில்லை. பயத்துடனே போய் வந்தோம்.

விறுவிறுப்பாகப்  போய்க் கொண்டிருக்கும் படத்தில் ஷண்முக சுந்தரம் வேறு நெஞ்சைத் தேய்த்து கொண்டு அழுததும், பெண்கள் எல்லோரும் கண்ணீர் சிந்தினார்கள். இன்றைய அமித்சா போல் இருக்கும் சந்தான பாரதி, அடி வாங்கும்போது மதுப் பிரியர்கள் கத்தினார்கள் ‘வுடாத அவுன, அட்ச்சு சாவடி' என்று சீட்டில் ஏறி உட்கார்ந்தார்கள்.

இறுதியில் அந்த நேரம் வந்தது. ‘மாரியம்மா, மாரியம்மா ' பாடலைப் பாடிக்கொண்டே ராமராஜனும் கனகாவும் தீ மிதிக்கிறார்கள். திடீரென்று பின் சீட்டில் அமர்ந்திருந்த வயதான பெண்மணி பெரு மூச்சு விட ஆரம்பித்தார். ‘உஸ்ஸ்......உஸ்.......உஸ். .......'.

கண்ணை மூடி கைகளை தலைக்குமேல் உயர்த்தி இருக்கப் பிணைத்துக் கொண்டே ஆட ஆரம்பித்தார். நான் பயந்து போய் அக்கா ஒருவரின் மடியில் ஏறினேன். இப்பொழுது அவர் எழுந்து ஆட ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் இன்னொரு பக்கத்தில் இருந்து சத்தம். வேறொரு பெண் ஆடுகிறார். திடீரென்று தியேட்டரின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் அநேக பெண்கள் ஆட ஆரம்பித்தார்கள். வித விதமான சத்தங்கள், உடலைச் சுழற்றி சுழற்றி எல்லோரும் ‘மாரியம்மா' பாட்டுக்கு சாமியாட ஆரம்பித்தார்கள். அந்த சூழலை நான் எந்த வார்த்தை பயன்படுத்தினாலும் அவ்வளவு எளிதாக விளக்க முடியாது. அது மிக அசாதாரணமான சூழல். நான் அதுவரை கோவில் வாசலில் தான் சாமியாடி பாத்திருக்கிறேன். திரையரங்கத்தில் அல்ல.

கற்பனை செய்து பாருங்கள், இருட்டிய திரையரங்கு. ஒரு பக்கம் இளையராஜா மாரியம்மனைத் தன் அதிரும் இசையின் மூலம் வா! வா! என்று கூப்பிட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் முடியை விரித்து கொண்டு ஒரு முப்பது நாற்பது பெண்கள் சாமியாடிக் கொண்டிருக்கிறார்கள், தூணில் கட்டி வைக்கப்பட்ட வாகை சந்திரசேகர் முகத்திலேயே நடித்து கொண்டிருக்கிறார்.

கொஞ்ச நேரத்தில் கையில் வேப்பிலை, பித்தளை தட்டோடு நான்கைந்து பூசாரிகள் உள்ளே திபுதிபுவென ஓடி வருகிறார்கள். வந்தவர்கள் சாமியாடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வேப்பிலை அடித்து விட்டு, கற்பூரத்தை ஏற்றி வாயில் போட்டு அவர்களை அடக்கி விபூதி குங்குமம் அடித்து விடுகிறார்கள். சுற்றி இருக்கும் மது பிரியர்கள் வேறு அந்த பெண்களை போலவே கையை முறுக்கி தலைமேல் வைத்து கொண்டு சாமியாடுகிறார்களாம். இன்று நினைத்தாலும் திகிலாக இருக்கிறது,சிரிப்பும் பொத்துக்கொண்டு வருகிறது.

இத்தனைக்கும் நடுவில் அந்த அக்காக்களும் அவர்களும் விடாமல் பார்வையால் காதலித்து கொண்டே இருந்தார்கள். எத்தனை கலவரமானாலும் பூ பூக்கத்தானே செய்யும்...

அது கூட பரவாயில்லை, தோழர்களே. .. இவ்வளவு அமர்க்களத்திற்கு நடுவிலேயும் சில மது பிரியர்கள் உறங்கி கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்புவதற்கு இளையராஜா, வேறு பாடலைத்தான் போட வேண்டும். ஒரு வழியாக படம் முடிந்து சுபம் போட்டார்கள்.

நானும் என் வாழ்நாளில் எத்தனையோ  சினிமாவுக்கு போய் இருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் போல் இதுவரை எதுவும் கிட்டவில்லை. இந்த உலகத்திலேயே தியேட்டரில் சாமியாடும் ஒரு இனம் உண்டு என்றால் அது தமிழினம் ஒன்றுதான். இந்த கலாசாரம் நமக்கானது மட்டுமே. இது நம்முடைய வாழ்க்கையை எவ்வளவு ஸ்வாரஸ்யமாக்குகிறது பாருங்கள்.

ஆனால் இது அன்றோடு முடியவில்லை என்பதுதான் ட்விஸ்ட்டே. அதற்கு அடுத்து அதே திரையரங்கில் வெளியான ‘வா அருகில் வா' பேய் படத்தில் கடைசி சீன் அம்மன் பாட்டிலும் இதே சம்பவங்கள் இனிதாக நிகழ்ந்தன. அப்படியே அடிக்கடி நடக்க அதுவே பழகிப் போனது. இதே போன்று ஒரு நல் வாய்ப்பு எனக்குக் கடைசியாகக் கிடைத்தது ஜமீன் கோட்டை படத்தில் தான்.

வடசென்னையில் இருந்த பல தியேட்டர்கள் இப்பொழுது இல்லை. எல்லாமும் விற்றுத் தீர்ந்து மார்வாடிகள் நிலத்தை கைப்பற்றி இன்று 90 சதவிகித திரையரங்குகள் ஜெயின் அப்பார்ட்மெண்டுகளாக ஜொலிக்கின்றன. எம்ஜிஆர் வந்து திறந்து வைத்தார் என்பதால் சரவணா பாலாஜி தியேட்டர் நன்கொடையை போல் இன்னும் திறந்து இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்திற்காகவே இன்னும் வாரம் ஒரு எம்ஜியார் படத்தை ஓட்டுகிறார் ஓனர்.

மஹாலக்ஷ்மியை குஈஇ சினிமாஸ் என்ற நிறுவனம் வாங்கி அதை பாலிஷ் போட்டு, புதுப்பித்து வாழ வைத்திருக்கிறார்கள். கடந்தவாரம் வாசலில் எம்ஜிஆர் படத்தின் பேனர் ஒன்று வைக்க பட்டிருந்தது. தியேட்டரை எம்ஜிஆர் ரசிகர்கள்தான் வாழ வைத்து கொண்டிருந்தார்கள் என்று புரிந்தது.

இப்பொழுதெல்லாம் சாமி ஆடுகிறார்களா தெரியாது. ஆனால் மஹாலக்ஷ்மி தியேட்டர் பற்றிய கூகிள் தேடலில் படம் பார்த்தவர்கள் கருத்திட்டு இருந்தார்கள், அதில் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்.

‘தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு நன்றாக இருக்கிறது ஆனால் ஒரே ஒரு குறை. குடிகாரர்களை உள்ளே அனுமதிக்காதீர்கள்'

மே, 2022