சிறப்புப்பக்கங்கள்

“சாப்பாடு டெலிவரி செய்து அடிவாங்கினேன்!”

வாசுகி

வீட்டிலிருந்துகொண்டே நாம் விரும்பிய உணவுகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள இணையதள செயலிகள் வந்துவிட்டன. இவற்றில் வண்ணவண்ண டீ சர்ட்கள் அணிந்து வீட்டுக்கு உணவு கொண்டுவரும் இளைஞர்களிடம் பேசிப்பார்த்திருக்கிறீர்களா? இரண்டு பேர் இங்கே பேசுகிறார்கள். அவர்களின் பெயர்களும் முகங்களும் வெளியிடப்படவில்லை.

மதுரைதான் எனது சொந்த ஊர். ஊட்டியில் டிப்ளமோ படித்துவிட்டு சென்னை, அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். இரண்டு வருடங்கள் வேலை செய்தேன். பத்தாயிரம்தான் சம்பளம் கிடைத்தது. உணவு டெலிவரி செய்யும் பணியில் ****** நிறுவனத்தில் சேர்ந்தால் மாதம்  முப்பதாயிரம் வரை கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. அதை நம்பித்தான்  சேர்ந்தேன். ஒரு ஆர்டருக்கு
ரூ 30 முதல் ரூ 35 தருவார்கள். ஒரு நாளுக்கு 30 முதல் 40 ஆர்டர்கள் டெலிவரி செய்தால்தான் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தினமும் ஆயிரம் வாரத்திற்கு ஏழு ஆயிரம் என்பது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த முப்பது ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நாங்கள் செலுத்தும் உழைப்பு கொடுக்கும் பணத்தைவிட அதிகம். காலை 7 மணிக்கு முன்பாக வேலைக்கு சென்றுவிட வேண்டும்.
இரவு 11 மணிவரை வேலை செய்தால்தான் 40 ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியும். சென்னையின் வாகன நெரிசலைப்பற்றி உங்களுக்கே தெரியும். ஆர்டர் செய்த உணவை ஹோட்டலில் வாங்க சென்றால்,  அங்கே எங்களை மனிதர்களாகக்கூட மதிக்கமாட்டார்கள். ஹோட்டலில் உணவருந்தும் வாடிக்கையாளர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ***** 'டீ ஷர்ட்' அணிந்தவர்கள் வந்தாலே ஹோட்டல்காரர்கள் முகம் மாறிவிடும். எங்களைப்போன்ற டெலிவரி செய்பவர்களை நீங்கள் உணவகங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அந்த உணவகங்கள் எங்களை எப்படி மதிக்கிறார்கள் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

ஒருமுறை கண்ணம்மா பேட்டையிலிருந்து ஆர்டர் வந்தது. இரவு 2 மணி இருக்கும் வழக்கம்போல் நானும் டெலிவரி செய்யப்போனேன். உணவை ஆர்டர் செய்த இளைஞர்கள் என்னைக் காரணம் இல்லாமல் அடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் கும்பலாக இருந்ததால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவர்கள் போன் செய்தபோது நான் எடுக்கவில்லை என்பதால் என்னை அடிப்பதாக கூட்டத்தில் இருந்த இளைஞன் போதையில் உளறினான். அடுத்தநாள் புகார் கொடுக்க காவல்நிலையத்திற்குச் சென்றேன்.  புகாரை வாங்கவே இல்லை!

வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை தினமும் சென்று கம்பெனி வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். அது மூன்றாயிரத்தைத் கடந்துவிட்டால், எங்கள் போனில் இருக்கும் செயலி தானாகவே  அணைந்துவிடும். அதில் ரூ. 3000 வரை எங்கள் செலவுகளுக்கு நாங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதை சம்பளத்தில் கழித்துவிட்டு மீதமுள்ள தொகையை எங்கள் வங்கிக் கணக்கில் கம்பெனி செலுத்தும். கேன்சல்( ரத்து) செய்யப்படும் உணவுகளை எல்லாம் நாங்கள்
சாப்பிட முடியாது. ஒரு ஆர்டர் கேன்சல் ஆவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். அதற்காக காத்திருந்தால் மற்ற ஆர்டர்கள் கிடைக்காது என்பதற்காக வாடிக்கையாளர்கள் தொலைவில் இருந்தாலும்
சென்று கொடுத்துவிடுவோம். இதனால் கையிலிருந்து பணம்தான் செலவாகும். இதற்கான பணத்தை நிறுவனம் தர வேண்டும். ஆனால் அவர்கள் தருவதில்லை. அதிக தூரமாக இருந்தாலும் டெலிவரி செய்கிறோம் என்பதை கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்களாவது கிலோமீட்டர் காசை எங்களுக்கு வழங்கலாம். ஆனால் அவர்களும் அதைப் புரிந்துகொள்வதில்லை.

சனி, ஞாயிறுகளில் வேலை செய்தால் அதிகப் பணம் கிடைக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் நிஜத்தில் அப்படி எல்லாம் இல்லை. ஞாயிறுகளில் ரூ 1400 என்ற டார்கெட் நிர்ணயிக்கப்படும். அந்த டார்கெட்டை முடித்தால் கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆனால் அந்த டார்கெட் முடிப்பதற்கு காலை 7 மணி முதல் இரவு 3 மணி வரை ஆகும்.  1400க்கு ஒரு ரூபாய் குறைந்தாலும் ஊக்கத் (incentive) தொகை வழங்கப்படாது. இரவு 3 வரை வேலை செய்தும் அந்த டார்கெட் முடிக்காமல் திரும்பிய நாட்கள் அதிகம்.

முன்பாவது ஒரு ஆர்டருக்கு முப்பது ரூபாய் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பாக அதை 15 ரூபாயாக மாற்றிவிட்டார்கள். இதனால் ஒரு நாளுக்கு 600 முதல் 700 ரூபாய் கிடைப்பதே கடினம்தான்.

இதுஒரு புறம் இருக்க, காவல்துறையினரிடம் இரவில் தனியாக சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான். இருசக்கர வாகனத்தின் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும்கூட பணத்தை வாங்கிவிடுவார்கள். வாடிக்கையாளர்கள் பணம் எங்களிடம் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.

கடந்த ஒரு மாதமாக நான் பணிக்குச் செல்லவில்லை. உணவு டெலிவரி செய்யும்போது நடந்த விபத்தில் கால் உடைந்துவிட்டது. மருத்துவச் செலவுக்கு எங்கள் நிறுவனம்  ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. இரவு நேரத்தில்தான் அசைவ உணவுகளை வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்டர் செய்கிறார்கள். சைவ உணவுகள் மூன்று வேளைகளும் விரும்பப்படுகின்றன.  அதிமாக விருப்பம் உள்ள உணவு வகைகள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, பீட்சாக்கள்.

அடித்துப் பறிப்பார்கள்!

சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ கம்பியூட்டர் சைன்ஸ் படித்தேன். எனது சொந்த ஊர் தருமபுரி. சென்னையில் படிப்பை முடித்தவுடன் மார்கெட்டிங் கம்பெனியில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன். அதன்பிறகு உணவு டெலிவரி செய்யும் இணைய தள நிறுவனமான ****&ல் வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் டெலிவரி பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாளுக்கு 25 முதல் 26 ஆர்டர்கள் டெலிவரி செய்தால் 1400 முதல் 1600வரை கிடைக்கும். ஒரு ஆர்டருக்கு 17 ரூபாயும், கிலோமீட்டருக்கு 4 ரூபாயும் தரப்படும். 'பீக் ஹவர்' என்று சொல்லப்படும் நேரத்தில் அதிக டெலிவரி செய்தால் அதிக வருமானம் கிடைக்கும்.

'கேஷ் ஆன் டெலிவரி' தொகை மூன்றாயிரத்திற்கும் மேலாகச் சென்றால் 'கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்கள்' வருவது நிறுத்தப்படும். மூன்றாயிரத்திற்கு மேல் வரும் பணத்தை கம்பெனியின் வங்கி கணக்கில் செலுத்திவிடுவோம். முன்பெல்லாம் ஊக்கத்தொகை அதிமாக கொடுத்தார்கள் ஆனால் இப்போது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் முன்பு போல் வருமானம் கிடைப்பதில்லை. மாத இறுதி நாட்களில் ஆர்டர்கள் வருவது குறைந்துவிடும். 'டெலிவரி பாயாக' வேலை பார்ப்பதில் அதிகச் சிக்கலும் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பணம் எங்களிடம் இருக்கும் என்று தெரிந்தே சிலர் ஆர்டர் செய்வதுபோல் நடித்து, நாங்கள் உணவு டெலிவரி செய்யும்போது மிரட்டி பணத்தை பறித்துவிடுகிறார்கள்.  எனது நண்பருக்கு இப்படி நடந்திருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திற்கு வாருங்கள் என்று சொன்னாலும் நான் செல்ல மாட்டேன். அவர்களை கீழே இறங்கி வரச்
சொல்லிவிடுவேன். இரவு 11 மணிக்கு மேலாக எந்த ஆர்டர் வந்தாலும் அதற்கு செல்வதில்லை. கேன்சல் செய்யப்படும் உணவுகளை  எங்கள் நிறுவனத்தின் 'ஃபுட் கலெக்க்ஷன் குழு'&விடம் கொடுக்க வேண்டும். அல்லது வயதானவர்களுக்கு தானமாக வழங்கி அதை புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும். இரவு நேரத்தில் கேன்சல் செய்யப்படும் உணவுகளைக் கொடுப்பதற்கு வயதானவர்களைத் தேடி அலைந்த நாட்களும் உண்டு.

பீட்சா பர்கரை விட ஃபிரைடு ரைஸை வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.
சிக்கன் ஸெஷ்வன் ஃபிரைடு ரைஸுக்குத்தான் முதல் இடம். இரண்டாம் இடத்தில் முட்டை ஃபிரைடு ரைஸும் மூன்றாம் இடத்தில் பிரியாணியும் உள்ளன.

அக்டோபர், 2019.