சிறப்புப்பக்கங்கள்

சாட்டையடி பதிவு தோழி

ஜெ.தீபலட்சுமி

எ ன்ன டீச்சர், இவகிட்ட பேசறீங்களா? ஒண்ணும் தெரியாது இவளுக்கு. மீன் கொளம்பு வேணா நல்லா ஆக்குவா.'' சிரித்தார்.

அம்பையின் ‘வெளிப்பாடு' சிறுகதையில் வரும் வரி இது. தங்களுக்கு நெருக்கமான, அறிந்த தெரிந்த பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் பாராட்டு இந்த ரீதியில் தான் இருக்கும். கொஞ்சம் கூடக் குறைய மானே தேனே பொன்மானே எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்.

‘என் தேவதை, என் இளவரசி'' என்று மகள்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அப்பாக்களை எடுத்துக் கொள்வோம். தரையில் பாதம் படாமல் பொத்திப் பொத்தி வளர்க்கும் அப்பனின் பாசமும் பாராட்டும் சாதி மாறிக் காதல் என்று வரும் போது கொடூர விஷமாய் மாறுவதை அன்றாடச் செய்தியாய்க் கடக்கப் பழகி விட்டோம்.

தங்கச்சி என்று பாசமலராய் உருகும் அண்ணன்களின் பாசமும் இதே கதை தான். மனைவி என்று ஒருத்தி வந்த பின்பு அவளை அடக்கி வைக்கவும் குடும்பப் பெண்களிடையே தப்பித் தவறிக்கூட ஒற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகவும் தங்கச்சி பாசத்தைப் பிரபலப்படுத்துவார்கள்.

‘எனக்கு முதலில் என் அம்மா, தங்கை. பிறகு தான் நீ!‘என்று இணையாய் வருபவளிடம் மார்தட்டிப் பேசும் அவலம் உலகில் எந்த மூலையிலும் கிடையாது.

பெற்ற அம்மாவைக் கொண்டாடுவதிலாவது ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், சோற்று மணத்தையும் துணிகளில் கமழும் சோப்பு மணத்தையும் தாண்டி அம்மாவின் மனம் குறித்தெல்லாம் சிந்திக்கவே தெரியாதவர்கள் தான் நம்மிடையே பெரும்பாலானோர். வெளியூருக்கு வேலைக்குப் போனால் துணி துவைக்கப் பாடு படும் போதும் சாப்பாடில்லாமல் கஷ்டப்படும் போதும் மட்டும் தான் அம்மா நினைவுக்கு வருவார்கள். பிறந்தது முதலே தனக்கு அம்மாவாகவோ மனைவியாகவோ வாழக் கடமைப்பட்ட‌ டெம்ப்ளேட்டுகளாய்த் தான் தங்கள் பெண் உறவுகளைப் பார்க்கப் பழகி இருக்கிறார்கள் ஆண்கள்.

நண்பரொருவர் தனது தந்தை இறந்த பிறகு அவர் பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி, புத்தக மேஜை, பேனா எல்லாவற்றையும் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்திருந்தாராம். ஆனால் அம்மா இறந்த பிறகு அம்மாவின் நினைவாகச் சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லையென்று புலம்பினாராம்.

ச. தமிழ்ச்செல்வன் ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது' என்ற நூலில் கழிவறை பிரஷ்களோடும் அடுப்பங்கரையில் கரண்டிகளோடும் அல்லவா அம்மாவை விட்டு வைத்திருக்கிறோம், அவற்றைத் தான் அம்மா நினைவாகக் கொள்ள முடியும் என்று வேதனையாகக் குறிப்பிட்டிருப்பார்.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்' என்பது போல் சுனிதா வில்லியம்ஸ், மேரி கோம், கல்பனா

சாவ்லா என்று பெண் சாதனையாளர்களைக் கொண்டாடுவது ஆண்களுக்கு எப்போதுமே பிடித்தமானது. ஆனால அதற்கான காரணமும் தில்லாலங்கடியானது தான்.

சமீபத்தில் கூட சென்னை கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மரத்திலிருந்து விழுந்து இறந்து விட்டதாக நம்பப்பட்ட நபரைத்தனது தோளில் சுமந்து சென்று உரிய மருத்துவ சிகிச்சை எடுக்கச் செய்து காப்பாற்றிய காவல் துறை ஆய்வாளர் ராஜலட்சுமியைத் தமிழ்நாடே கொண்டாடியது. அவரது புகைப்படத்தைப் பதிவிட்டுச் ‘‘சிங்கப்பெண்ணே'' என்று புல்லரிக்காத ஆண்களே இல்லை எனலாம்.

ஆனால் அதையும் கூட ‘இவர் தான் பெண், இது தான் பெண்ணியம்‘ என்று நசுங்கிப் போன நாட்டாமைச் சொம்பைத் தூக்கிக் கொண்டு வந்து பெண்களிடம் மொத்து வாங்கியதையும் பார்த்தோம்.

சாதனையாளர்களாய் வலம் வரும் பெண்களுக்கும் கூட டெம்ப்ளேட்டுகளில் இருந்து விடுதலை கிடையாது. புல்லட்டில் அமர்ந்து ஸ்டைலாகச் சிகரெட் பிடித்தபடி இருக்கும் ஒரு காவல்துறை ஆணையரைப் பிற நாடுகளில் சர்வசாதாரணமாய்க் கடப்பார்கள்.

ஆனால் நாசாவில் விஞ்ஞானியாய் இருந்தால் கூட நமது பெண்களைப் பேட்டி எடுக்கச் செல்லும் போது தவறாமல் அவர்கள் குடும்பம் நடத்தும் பாங்கையும், குழந்தைகளை வளர்க்கும் முறையையும் குறித்து விசாரிப்பது ஆண்களுக்கு விருப்பமான ஒன்று.

டென்னிஸ் வீரர் சானியா மிர்சா எழுதிய சுயசரிதை புத்தகத்தில் குழந்தைகள் குறித்தோ அவர் குடும்பத்தைப் பெருக்குவது குறித்தோ எதுவும் இடம் பெறவில்லையாம். அதைக் குறிப்பிட்டு ‘எப்போது செட்டில் ஆகப் போகிறீர்கள்‘ என்று கேட்டிருக்கிறார் ராஜ்தீப் சர்தேசாய் என்கிற மூத்த பத்திரிகையாளர். பதிலுக்கு சானியா மிர்சா வெளுத்து வாங்கி விட்டார். ‘‘உலகிலேயே முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவராக இருக்கிறேன். அடுத்து விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கப் போகிறேன்.

டென்னிசில் நான் சாதித்ததும் சாதிக்கப் போவதும் ஏராளம். இதெல்லாம் தாண்டி நான் செட்டில் ஆக வேண்டும் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? இந்தக் கேள்வியை ஓர் ஆண் வீரரிடம் கேட்டிருப்பீர்களா?'' என்று கேட்ட பின் வருந்தி மன்னிப்பு கேட்டார் அந்த ஊடகவியலாளர்.

ஒரு பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலைப்பூக்கள் பிரபலமாக இருந்த காலம்; அப்போது மானாவாரியாக ஆண்களும் பெண்களும் வலைப்பூக்கள் தொடங்கித் தங்கள் கருத்துப் பெட்டகங்களையும், கதை கவிதை கட்டுரைகளையும் அள்ளி அள்ளி வழங்கி இலக்கிய சமூகப் பணி செய்யத் தொடங்கி இருந்தார்கள். சினிமா, அரசியல், இலக்கியம், நகைச்சுவை என்று அனைத்து தரப்பில் அ முதல் ஃ வரை பேச சுவாரசியமான ஆட்கள் இருந்தார்கள்.

எழுதும் விருப்பம் உள்ளவர்கள் தயங்கித் தயங்கி ஒரு வலைப்பூ தொடங்கி, மனதில் தோன்றியதை எழுதி வெளியிட்ட பின், ‘‘அருமையான பதிவு'' என்று பின்னூட்டம் வரும் தருணத்தைக் கொண்டாடித் தீர்க்காதவர்கள் இல்லை.

இவ்வாறு பல்கிப் பெருகிய பதிவர் வட்டம் 'தமிழ் மணம்', 'தமிழிஷ்' போன்ற திரட்டிகளில் இணைக்கப்பட்டு அங்கு வாக்கு சேகரிப்பதும், பதிவர்களின் விருப்பமான வழக்கமாகிப் போயின.

ஆனால் பாருங்கள், நம் தமிழ்ச்சமூகத்தில் எந்தவொரு பொதுத் தளத்திலும் பெண்களை மட்டும் ‘சிம்ரன் நீ ஃபேமிலி கேர்ல்' என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கும்படி தான் ஆண்களுக்குக் கண்களின் லென்ஸ், கார்நியா, ரெட்டினா எல்லா அமைப்பும் இருக்கிறது. - ‘மொத்தமாப் 'புடுங்கி எறிஞ்சு வேறு மாதிரி

வெச்சாத் தான் சரிப்படும்' என்று கண் மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஆகவே, பெண்கள் கவிதைகள், புத்தகங்கள், சினிமா, குழந்தைகள் என்று சில குறிப்பிட்ட பகுதிகளில் தான் எழுதுவார்கள் என்று நம்பிய ஆண்களின் பொதுப்புத்தி அவர்கள் சமூகம் சார்ந்த கருத்துகளிலும், அரசியல் இலக்கியம் ஆகிய தளங்களிலும் பட்டையைக் கிளப்பியதை வியப்புடனும் கொஞ்சம் அவஸ்தையுடனும் நோக்கத் தொடங்கியது.

நக்கல் நையாண்டியும் பதிவர்களின் விருப்பமான தேர்வாக இருந்தது. ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால்,

ஆண்கள் எவ்வளவு கழுவி ஊறிறினாலும் வலிக்காத மாதிரி துடைத்துப் போட்டுச் சென்ற ஆண்கள் சிலர், பெண்கள் பகடி செய்ததும் மூலத்தில் அக்னிசட்டியை வைத்தது போல் அலறத் தொடங்கினார்கள்.

முதலில் நைச்சியமாக, ‘நகைச்சுவை உங்கள் பேட்டை இல்லை தோழி. வழக்கம் போல் கவிதை எழுதுங்கள் என்று

சொல்லிப் பார்த்தார்கள். எழுத்தின் மூலமாகத் தங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் சுதந்திரக்காற்றை அனுபவிப்பதை முதன் முதலில் உணர்ந்திருந்த பெண்கள் இந்த அறிவுரைகளைச் சட்டையே செய்யாமல் தொடர்ந்து பகடிகளில் களமிறங்கினார்கள். குழுவாய் இயங்கியவர்களும் உண்டு!

ஆண்களின் மலரினும் மெல்லிய 'ஈகோ' என்னாவது?

பகடி செய்த பெண்களுக்கு எதிராய்ப் படு மோசமாய்த் தனிநபர்த் தாக்குதல் நிகழ்ந்தது. வன்மம் தெறிக்கும் வார்த்தைகளைக் கக்கினார்கள்.

அதுவரை பக்கா ஜென்டில்மேனாய்ப் பல பெண்களுக்கு 'அண்ணாவாய்' வலம் வந்து கொண்டு ‘சாட்டையடி பதிவு தோழி‘ கமென்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் சாதி மேட்டிமை, ஆண் கொழுப்பு, காழ்ப்புணர்ச்சியும் சேர்ந்தால் எந்த அளவுக்கு வக்கிரமாய்ப் பெண்களைத் தாக்க முடியும் என்று அறிந்து கொள்ள அந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கியது.

கல்லூரித் தோழியின் தந்தை அவர். தோழிக்கு அப்பா தான் எல்லாம். படிப்பிலும் விளையாட்டிலும் நட்சத் திரமாய் விளங்கிய தோழி தனது தன்னம்பிக்கைக்கும் திறமைகளுக்கும் அப்பா தான் காரணம் என்று வாயைத் திறந்தாலே அப்பா புராணம் தான் பாடுவாள். எங்களுக்கெல்லாம் அந்த ஐடியல் அப்பாவைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று தோன்றி விட்டது. ஒருமுறை வீட்டுக்குச் சென்றோம்.

தோழி சொன்னதில் எதுவும் மிகையில்லை. மிகவும் கலகலப்பாக எங்களுடன் அரட்டையடித்தார், இளைஞர்களின் மனதைக் கவரும் வகையில் இருந்தது அவரது உற்சாகமான பேச்சும் பாவனைகளும்.  ஆஹா, இப்படி ஒரு அப்பா எல்லா மகள்களுக்கும் கிடைத்து விட்டால் பெண் விடுதலை சாத்தியமாகி விடுமே! என்று நினைத்தோம்.

ஆனால் அவரது இன்னொரு முகத்தைக் காண அதிக நேரம் தேவைப்படவில்லை.

‘அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா‘ என்று அமர்ந்த இடத்திலிருந்து அதிகாரம் செய்து கொண்டிருந்த தோழியும் சரி, அவளது அப்பாவும் சரி, தோழியின் அம்மாவை நடத்திய விதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். மனைவியை அடிக்கொரு தரம் மட்டந்தட்டிக் கொண்டே இருந்ததும் அதற்குத் தோழி சிரித்துக் கொண்டே இருந்ததும் நாராசமாய் இருந்தது எங்களில் பலருக்கு. தோழியிடம் லேசாக, ‘என்னடி அம்மாவை இப்டிப் பேசறே‘ என்ற போது அதைச் செல்லம், வெல்லம் என்று ஏதோ சொல்லித் தட்டிக் கழித்தாள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தோழியை ஒரு ரயில் பயணத்தில் சந்தித்தேன். திடீர் சந்திப்பின் பரவச நொடிகள் கடந்தபின் அவள் அப்பாவைத் தான் முதலில் விசாரித்தேன். பதிலுக்கு அவள் முகத்தில் அந்த வெறுப்பை எதிர்பார்க்கவே இல்லை. ‘அந்தாளைப் பத்திப் பேசாதே!‘ என்ற போது அதிர்ச்சியானேன்.

என் அதிர்ச்சியைக் கவனித்தவள் எல்லாம் சொல்லத் தொடங்கினாள், ஆனால் எதுவும் புதிதல்ல. சாதி வெறியும் ஆணாதிக்கமும் நிறைந்த அவளது ‘ஐடியல் அப்பா' செல்ல மகள் சாதி மாறிக் காதலித்ததைத் தாங்க முடியாமல் அவளைக் கொல்லவே திட்டம் போட்டாராம். அம்மாவின் சமயோசித புத்தியால் தப்பித்து இப்போது இணையருடன் வேறு ஊரில் வாழ்வதாகச் சொன்னாள். எங்கள் பேச்சில் இயல்பு நிலை திரும்புவதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்திருந்தது.

டிசம்பர், 2021.