சிறப்புப்பக்கங்கள்

சர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி?

மதிமலர்

இ னிப்பு சாப்பிடுவது உடலுக்கு நாம் செய்துகொள்ளும் முக்கியமான கேடுகளில் ஒன்று. உடல்பருமன், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய், பற்சிதைவு ஆகியவற்றை அது உருவாக்கும். ஆனால் இயற்கையான பழங்கள், காய்களில் இருக்கும் சர்க்கரையானது ரத்த சர்க்கரையில் குறைவான மாறுதல்களையே உருவாக்கும். இது ஆரோக்கியமானதே.

இந்த பழங்கள், காய்களில் ஆரோக்கியமான விட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. நிஜமான ஆபத்து என்பது பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உள்ள, செயற்கையாக
சேர்க்கப் பட்ட சர்க்கரையால் வருவது.
 சராசரியாக இந்த சர்க்கரையை நாம் அளவுக்கு மீறி எடுத்துவருகிறோம். இதைத் தடுப்பது எப்படி?

1)   இனிப்பான பானங்களை அருந்தவேண்டாம். இவற்றில் சேர்க்கப்பட்ட சர்க்கரை மிக அதிகமானது. பொதுவாக இதுவே கூடுதல் சர்க்கரைக்குக் காரணமாக உள்ளது. அமெரிக்கர்களின் உணவில்
44 % சர்க்கரையின் ஆதாரம் இந்த  பானங்களே. ஆப்பிள் ஜூஸ் போன்ற பானங்களிலும் சர்க்கரை உள்ளது என்பதை அறிக.

பாதுகாப்பான பானங்கள்: தண்ணீர், எலுமிச்சை பிழிந்த நீர், பச்சைத்தேயிலைத் தேநீர், சர்க்கரை
சேர்க்காத காபி, தேநீர்.

2) சர்க்கரை நிரம்பிய இனிப்புகளைத் தவிர்க்கவும். பதிலாக பழங்கள், கறுப்பு சாக்கலேட், சில பேரீச்சை பழங்கள் எடுக்கலாம்.

 3)  இனிப்பு சாஸ்களை தொடவேண்டாம். பல இடங்களில் இனிப்பான சாஸ்களைத் தொட்டு
சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. இவற்றில் சர்க்கரை அதிகம் என்பதை உணரவும்.

4) குறைவான கொழுப்புள்ள உணவுத் தயாரிப்புகளை நாம் நாடுவது உண்டு. ஆனால் இவற்றில் சர்க்கரை சேர்மானம் அதிகம். பதிலாக முழு கொழுப்புள்ள தயாரிப்புகளையே
சாப்பிட்டுவிடலாம்.

5) பதப்படுத்தப்படாத, பட்டைத் தீட்டப்படாத தானியங்களை சமையலில் பயன்படுத்துக. அதிகப்படியாக பதப்படுத்தப்பட்ட உடனடி உண்ணும் பொருட்கள்( பீட்சா, துரித காலை உணவுகள், ஐஸ்கிரீம்கள், இனிப்புகள், பானங்கள்)
சர்க்கரை அளவைக் கூட்டும். இவற்றை விட பிரெட், சீஸ் போன்றவை ஓரளவு பரவாயில்லை.

6) பாட்டிலில், டப்பாவில் அடைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு முன் அதில் சர்க்கரை
சேர்க்கப்பட்டுள்ளதா என மேலட்டையை
பரிசோதிக்கவும். சர்க்கரை சேர்க்கப்படாத உணவு, பானத்தை அருந்தலாம்.

7) இது ஆரோக்கியமான நொறுக்குத்தீனி என்று விற்கப்படும் தீனிகளை சந்தேகத்துடன்  அணுகவும்.

8) காலை உணவாக சாப்பிடும் பதப்படுத்தப்பட்ட பொருட்களில்தான் அதிகமான சர்க்கரை
சேர்க்கப்பட்டுள்ளதாம். சிலவற்றில் பாதிக்குப் பாதி உள்ளது. எனவே இவற்றைத் தவிர்க்கவும்.

9) சர்க்கரை அதிகமான உணவுகள் மேலும் மேலும் பசியை அதிகரித்து நிறைய சாப்பிட வைத்து குண்டாக்கும். ஆனால் புரதம், கொழுப்பு கொண்ட உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தும்.

10) சர்க்கரைக்கு அடிமையாகிவிட்டேன். அந்த சுவை இல்லாமல் வாழமுடியாது என்பவர்கள் இயற்கை இனிப்புச்சுவையூட்டிகளை சேர்க்கலாம். Stevia, Erythritol, Xylitol போன்றவை இனிக்கும். ஆனால் இவற்றில் கலோரி கிடையாது.

11) இனிப்பை வீட்டில் வைக்காதீர்கள். இருந்தால்
சாப்பிடத் தோன்றும். இனிப்பு சேர்வதைக் குறைக்க இதுவும் ஒரு வழி.

டிசம்பர், 2019.