சிறப்புப்பக்கங்கள்

சரியான கல்லூரியைத் தேர்வு செய்ய பத்துக் கட்டளைகள்

ஈ.பாலகுருசாமி

தமிழ்நாட்டில் உள்ள 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ளது. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ளன.

கல்லூரிகளின் தரத்தைப் பொருத்தவரை, மிகச் சிறப்பானது என்பது முதல் மிகமோசம் என்பதுவரை இருக்கிறது. இப்போதைய புள்ளிவிவரப்படி, மிக நல்ல கல்லூரிகள் 10%, நல்லவை 20%, மோசம் 20%, மிகமோசம் 10% என நிலவரம் காணப்படுகிறது. அதாவது, 40 சதவீதம் அளவிலான கல்லூரிகள் சேரத் தகுந்தவையாக இல்லை என்பது தெளிவு. இப்படிப்பட்ட சூழலில் சரியானதொரு கல்லூரியைத் தேர்வுசெய்வது, அயற்சி அடையச்செய்யக்கூடிய வேலை.

உங்கள் கல்லூரி வாழ்க்கைதான் வாழ்நாளிலேயே நீங்கள் செய்யும் முக்கியமான முதலீடுகளில் ஒன்று என்பதை மாணவர்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஆகையால் இதுகுறித்து சரியான முடிவை எடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.

சரியான கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கு அனைத்து மாணவர்களும் கருத்தில்கொள்ள வேண்டிய 10 குறிப்புகளை உங்கள்முன் வைக்கிறேன்.

1. உங்களை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்

முதலில் உங்களை நீங்களே புரிந்துகொள்ளவேண்டும். உங்களின் வலு, வலுக்குறைவு, உங்களின் ஆர்வம், செயல்திறன் ஆகியவற்றை நன்றாக அசைபோட்டுப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, கணிதம்- அறிவியலில் உங்கள் மதிப்பெண் 50%-க்கும் குறைவு என்றால், பொறியியல் படிப்புகளில் சேராதீர்கள். வேறு கலை, அறிவியல் அல்லது வணிகவியல் போன்ற துறைகளில் உங்களுக்கு ஆர்வமுள்ள, இயல்பான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றைத் தேர்வுசெய்யுங்கள். அதாவது, நீங்கள் எப்படியானவர், வாழ்க்கையில் நீங்கள் என்னவாக ஆவதற்கு விரும்புகிறீர்கள் என்பதன்படி படிப்பு அமையுமானால் அதுவே மிகப் பொருத்தமானது.

2. முதலில் படிப்பைத் தீர்மானியுங்கள்

பொறியியல் படிப்பதென முடிவெடுத்த பின்னர், இன்ன கல்லூரி என்பதைவிட, என்ன வகையான படிப்பு என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். பெற்றோர் சொல்கிறார், சுற்றத்தார் சொல்கிறார் அல்லது இப்போதைக்கு இதுதான் பிரபலமானது என்கிறபடியானவற்றை வைத்து எந்தக் கருத்துக்கும் வராதீர்கள். நீங்களாக தீவிரமாக யோசித்து, அலசி ஆராய்ந்து இன்ன படிப்பு சிறந்தது எனும் முடிவுக்கு வாருங்கள்.

3. கல்லூரிகளைப் பட்டியலிடுங்கள்

உங்களுடைய கட்- ஆஃப் மதிப்பெண்கள், உங்களால் செலுத்தக்கூடிய பணம், பிடித்தமான படிப்பு ஆகியவற்றின்படி ஒன்று, இரண்டு என கல்லூரிகளைப் பட்டியலிட வேண்டும். குறைந்தது ஐந்து கல்லூரிகளையாவது இப்படி பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.

4. தரவரிசைப்படுத்துங்கள்

பிறகு, அந்தப் பட்டியலில் உள்ள கல்லூரிகளை, அவற்றின் விவரப்புத்தகம், இணையதளங்கள், மற்ற தரவுகளின்படி தரத்தின்படி மீண்டும் ஒரு முறை பட்டியலிட வேண்டும். அதில், ஆசிரியர்கள் நிலை, கட்டமைப்பு வசதி, மற்ற வசதிகள், விளையாட்டு போன்ற புறப்பாடத்திட்ட செயற்பாட்டு வசதிகள், தேர்ச்சி அளவு போன்றவற்றைக் கணக்கில்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

5. கல்லூரி விளம்பரத்தில் எச்சரிக்கை

கல்லூரியைப் பற்றி அழகாக வடிவமைக்கப்பட்ட, அசத்தக்கூடிய வண்ண விளம்பர ஏடுகளை, அட்டைகளை உங்களுக்குக் காட்டுவார்கள். எத்தனையோ புள்ளிவிவரங்கள், தகவல்கள் அதில் நிறைந்திருக்கும். அதை கவனிக்கும்போது, ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது. அதாவது, கல்லூரியின் சாதனைகளை மட்டும் அவர்கள் காட்டியிருப்பதன் மூலம் ஒருபக்கச் சார்பாகவும் உண்மை நிலையை அறியவிடாதபடி திசைதிருப்புவதாகவும் அவை இருக்கக்கூடும். கல்லூரியின் தரவரிசை, அதன் அங்கீகாரங்கள், விருதுகள், போலியான ஆசிரியர் பெயர்கள் போன்றவையும் அதில் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்பு உண்டு.

6.விளம்பரங்களில்எச்சரிக்கை

பல கல்லூரிகள் ஊடகங்களின் மூலம் பிரபலமானவை. உலகத்தரமான ஆசிரியர்கள், பல்கலைக்கழகத் தேர்வில் அதிகம் பேர் முன்னிலை, 100% வேலைவாய்ப்பு என பல பொய்யான தகவல்களை பத்திரிகைகளிலும் மின்னணு ஊடகங்களிலும் பெருமளவில் விளம்பரம் தந்தபடி இருப்பார்கள். நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள், மிகமிகப் பெருமளவு விளம்பரம் செய்கின்றன என்றால் அந்தக் கல்லூரிகளின் தரம் குறைவாகவே இருக்கும்.

7. கவர்ச்சியான இலவசம் வேண்டாம்

ஊடகவிளம்பரக் கல்லூரிகளில் பெரும்பாலானவை, அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கட்டணத்தில் சலுகையும் உதவித்தொகையும் தருவதாக கூறுவதைப் பார்க்கலாம். இப்படியான ஈர்ப்பு முயற்சிகளுக்கு மாணவர்கள் இரையாகிவிடக்கூடாது. அப்படியான அறிவிப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் அவர்களைப் பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வரவேண்டும்.

8. நேரில் ஒரு முறை பார்த்துவிடுங்கள்

எந்தக் கல்லூரியையும் மதிப்பிடுவதற்கு ஒரு முறை அங்கு நேரில் போய் பார்ப்பதே சிறந்த வழி. அப்போதுதான் ஆய்வுக்கூடங்கள், நூலகம், வகுப்பறைகள், விடுதிகள், கல்வியிணைச் செயற்பாடுகளுக்கான வாய்ப்புகள் போன்றவை தெரியவரும். அதிலிருந்து நமக்கு ஒரு எண்ணம் தெளிவாகும். அங்கு இருப்பவர்களிடம் விசாரிப்பதும் இன்னும் அதைத் துல்லியமாக்கும். அடுத்த நான்கு ஆண்டுகள் அந்தக் கல்லூரியில்தான் கழிக்கவேண்டும் என்பதை நினைவில்கொண்டால், இதெல்லாம் எதற்காக என்பது புலனாகிவிடும்.

9. தனிப்பட்ட தகவல்கள்

கல்லூரியைப் பற்றி அறிந்திருக்கக்கூடிய தெரிந்தவர்கள், முன்னாள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், நல்லபடியான மாணவர் கல்வி ஆலோசகர்களிடம் குறிப்பிட்ட கல்லூரிகளைப் பற்றிய தனிப்பட்ட கருத்துகளைத் தெரிந்துகொள்வதும் அவசியமாகும்.

10. நிர்வாகத்தின் நடத்தை முக்கியம்

பெரும்பாலான கல்லூரிகள் வர்த்தகநோக்கில் நடத்தப்படுவதால், கல்வியின் தரம், சமூக மதிப்பீடுகள் குறித்த அவர்களின் ஈடுபாடு பெரும் கேள்விக்குறிதான். அவர்கள் பிரச்சாரம் செய்வதற்கும் நடந்துகொள்வதற்கும் இடையே, உறுதிமொழிக்கும் நடைமுறைக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கும். நிர்வாகத்தின் தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பின்னணி, சமூகத்தில் அவர்களின் நடத்தை ஆகியவற்றை அலசிப்பாருங்கள்.

நிறைவாக, உங்களின் இந்த முயற்சியில் இந்த அளவுகோல்கள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய கல்லூரி இல்லாமலும் இருக்கக்கூடும். ஆனாலும் இவற்றில் எது உங்களுக்குப் பிடித்தமானதோ உகந்ததோ அதைத் தேர்வுசெய்யுங்கள்.

(ஆங்கிலத்தில் இருந்து தமிழில்: தமிழ்க்கனல்)

ஜூன், 2022