சிறப்புப்பக்கங்கள்

சமையல் வேலைகளை ஆண்கள் செய்யும் குடும்பத்தில் பிரச்னை வருவதில்லை!

விடுதலை ராசேந்திரன்

நாம் ஜனநாயகப் படுத்தப்படாத ஒரு குடும்ப அமைப்பில் இருக்கின்றோம். யார் பேச்சை யார் கேட்க வேண்டும், யார் யாரை மதிக்க வேண்டும், யாருக்கு யார் கீழ் படிதல் வேண்டும் என்பது போன்ற ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட உறவு முறைகளைத்தான் குடும்ப அமைப்பு கட்டமைத்துள்ளது. சாதியையும் மதத்தையும் உள்ளடக்கியதாக நம்முடைய குடும்ப அமைப்பு உள்ளது. இந்த குடும்ப அமைப்பிற்குள்ளாக ஒரு நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. அது காலத்தின் மாற்றத்தால் ஏற்பட்ட கல்வி அறிவாலும், சமூகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாலும் தான்.

குடும்ப உறவை, சாதிய உறவை நட்புறவாக மாற்றும் போது தான் ஓரளவிற்கேனும் நம்முடைய குடும்ப அமைப்பை ஜனநாயகப்படுத்த முடியும். இப்போது இருக்கின்ற குடும்ப அமைப்பிற்குள் கணவன் மனைவி உறவு எப்படி இருக்கும் என்றால், எல்லா உறவுகளிலும் இருக்கின்ற அதே பாகுபாடுதான் இதிலும் இருக்கும்.

கணவன் - மனைவி உறவில் சொந்தங்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கின்றது. கணவன், மனைவியின் உறவினர்களையும், மனைவி கணவரின் உறவினர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். கணவன் - மனைவி இருவருக்கும் உறவினர்களை நடத்துவதில் தான் பெரும்பாலும் முரண்பாடு ஏற்படுகிறது. இதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்றால் உறவுகளை உறவாகப் பார்க்காமல் நண்பர்களாக, தோழமைகளாகப் பார்க்க வேண்டும்.

கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்று வரும் குடும்பங்களில் தான் பெரும்பாலும் பிரச்சனைகள் வருகிறது. ஆண்கள் குடும்ப வேலைகளை பகிர்ந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், ஆண் மட்டுமே வேலைக்குச் சென்று வரும் குடும்பங்களில் பெண்ணின் பொருளாதாரம் என்பது பறிக்கப்படுகிறது. இன்றைக்கு படித்த பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், தங்களுடைய சுயமரியாதையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில் பெண்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை ஆண்கள் பேசிவிட்டால், அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களின் முடிவுகளுக்கு பெண்கள் அடங்கிப் போய்விட்டால் எந்த பிரச்சனையும் வருவதில்லை. இந்த நிலைமாற வேண்டும். பெண்களும் நமக்கு சமமானவர்கள் என்று ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கணவன் - மனைவி உறவுச்சிக்கலை எப்படித் தீர்க்க முடியும் என்றால், ஆணோ பெண்ணோ, இருவரும் ஒருவரை ஒருவர் நூறு சதவீதம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. தேவையான நேரங்களில் இருவரும் சேர்ந்தும், ஒருசில நேரங்களில் தனித்தும் முடிவெடுக்கும் உரிமை இருவருக்கும் இருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் - மனைவி இருவரும் நண்பர்களாக பழக வேண்டும். இப்படிப் பழகுபவர்கள் உறவில் ஏற்படும் சிக்கலில் இருந்து தங்களைக் கணிசமாக விடுவித்து கொள்ள முடியும்.

திருமணமான பத்துப்பதினைந்து ஆண்டுகள் உறவில் நெருக்கடி இருக்கும். இந்த நெருக்கடியைக் கடந்து வாழ்க்கையை எப்படி நடத்த முடியும் என்றால்? விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளுதல் போன்றவை மூலம் தான். குடும்ப உறவுகளைத் தாண்டி நல்ல நண்பர்களை உருவாக்கிக் கொள்வது மிக முக்கியம். என்னுடைய அனுபவத்தில், சமையல் வேலைகளை ஆண்கள் எடுத்துக் கொள்ளும் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

நவம்பர், 2021.