சிறப்புப்பக்கங்கள்

சமூக செயற்பாட்டாளர்கள்

Staff Writer

கண்ணை மூடிக்கொண்டு செல்பவர்கள் நிறைந்த சமூகத்தில் விழித்திருப்பவர்கள் இவர்கள். சமூகக்களத்தில் போராடி மாற்றங்களைக் கொண்டுவருகின்ற இளைஞர்கள் பல்வேறு அமைப்புகளிலும், தனி நபராகவும் பரவிக் கிடக்கிறார்கள். நல்ல எண்ணத்துடன் போராட்டக் களத்தில் நிற்கும் அனைவருக்கும் தலை வணங்குகிறோம். இன்னும் நூறு பேர் உருவாகட்டும். இங்கே அறுவர் மட்டும்.

சிவ.இளங்கோ-செந்தில் ஆறுமுகம்: லஞ்ச ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு இரண்டையும் வலியுறுத்தி செயல்பட்டு வருகிறது சட்டப்பஞ்சாயத்து இயக்கம். 2013 டிசம்பரில் இது தொடங்கப்பட்டது. அதன் தலைவராக சிவ.இளங்கோவும் பொதுச்செயலாளராக செந்தில் ஆறுமுகமும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எம்.எஸ். உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கத்தால் கவரப்பட்டு சமூகக்களம் கண்டிருக்கும் இளைஞர்கள் இவர்கள். சிவ.இளங்கோ திருவாரூர்க்காரர். பத்திரிகையிலும் வானொலியிலும் பணியாற்றிவிட்டு 2005ல் இருந்து முழுநேர பொதுச்சேவையில் இருக்கிறார். இவரது கல்வித் தகுதி: முதுகலை அரசியல் விஞ்ஞானம் மற்றும் முதுகலை பத்திரிகையியல். மக்கள் சக்திக் கட்சியின் சார்பாக பல இடைத்தேர்தல்களில் நின்ற அனுபவமும் இவருக்கு உண்டு. செந்தில் ஆறுமுகம் கோவையைச் சேர்ந்தவர். மென்பொருள்துறையில் அமெரிக்காவில் பணியாற்றியவர். அவர் 2007-ல் பொதுச்சேவையில் இணைந்து சிவ இளங்கோவை சந்தித்தார். தூய்மையான அரசாட்சியை லட்சியமாகக் கொண்டு அவர்கள் நடத்திய தேர்தல் அரசியல் மக்களிடம் ஆதரவைப் பெறவில்லை. அத்துடன் கட்சி என்று வருவதால் இவர்களால் விழிப்புணர்வுச் செயல்பாடுகளைச் செய்யவும் இயலவில்லை. எனவேதான் கட்சி சார்பற்ற இயக்கமாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தைத் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார் இளங்கோ. அனைத்து மாவட்டத்திலும் லஞ்ச ஊழலையும் மது கலாச்சாரத்தையும் எதிர்க்கும் இயக்கமாக இன்று இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தையும் தங்கள் போராட்ட ஆயுதமாக இவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். “நாட்டில் நிலவும் லஞ்ச ஊழல் சீர்கேடுகளைக் களைய அரசியல் தீர்வுதான் ஒரே வழி. அதற்காக மக்கள் நல அரசு அமையவேண்டும்” என்கிறார்கள் சட்டப்பஞ்சாயத்துக்காரர்கள்!

நந்தினி: மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி சட்டக்கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே சதா செய்தியில் அடிபட்டுவருபவர். அவர் மதுவிலக்குக் கோரி தனிநபராகச் செய்துவரும் போராட்டங்கள் இன்று தமிழகம் முழுவதும் ஏகப்பிரபலம். அவரது தந்தை ஆனந்த் இவரது போராட்டத்துக்கு பக்கபலமாக இருக்கிறார். ‘மதுவால் பல குடும்பங்கள் பாழாகின்றன. மதிமயக்கும் போதைப்பொருட்களை விற்பது இந்தியச் சட்டப்படி பத்தாண்டுகள் தண்டனைக்குரியது. அப்படி இருக்கையில் அரசே விற்பது தவறு’ என்கிறார் நந்தினி. யாருக்கும் இடையூறு செய்யாமல் கவன ஈர்ப்புப் போராட்டங்களாக தன்னுடைய களத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் இவர், இதுவரை 36 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்போது கல்லூரிப்படிப்பு முடிந்துவிட்டது. இருப்பினும் வழக்குகள் சில நிலுவையில் இருப்பதால் வழக்குரைஞராக பதிவு செய்வது உடனடியாக இயலவில்லையாம். ‘’வழக்கறிஞர் ஆகித் தொழில்செய்வது நந்தினியின் பிரதான நோக்கம் இல்லை. அவர் போராட்டங்களுக்கு சட்ட அறிவு உதவி செய்யும் என்பதால்தான் சட்டம் பயின்றார்’ என்கிறார் அவரது தந்தை ஆனந்த்.

ரமேஷ் கருப்பையா: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் இயன்முறை சிகிச்சை படித்தவர். சென்னையில் சிலகாலம் வசித்தபின் இப்போது வாழும் இடம் பெரம்பலூர். நீர்நிலைகள் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, பாரம்பரிய உணவுகள், சுற்றுச்சூழல் காப்பு போன்ற விஷயங்களில் தீவிரமாக இயங்குகிறார். கடலூர், ராமநாதபுரம், பெரம்பலூர் போன்ற மாவட்டங்கள் இவரது செயல்பாட்டுக் களங்கள். ‘குளம் அறிவோம்’ என்ற நிகழ்வின் மூலம் கிராமங்களில் இருக்கும் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், பொதுநீர் என்ற அமைப்பின் சார்பாக நீர் அனைவருக்கும் பொதுவானது; வணிகரீதியில் விற்பனைக்கல்ல என்ற கருத்தை வலியுறுத்துதல் போன்ற செயல்பாடுகள் முக்கியமானவை. “இயற்கைச் சூழல் அனைவருக்கும் பொதுவானது. அதைச் சார்ந்து வாழும் நாம் அதைப் பாதுகாப்பது முக்கியமானது. பெரம்பலூர் பகுதியில் கல்குவாரிகள் மிகவும் ஆழமாகத் தோண்டப்படுகின்றன. பின்னர் அதில் இருந்து வரும் நிலத்தடி நீர் திருடப்பட்டு வணிகரீதியில் விற்கப்படுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதைச் சரிசெய்யாமல் நீர்த்தேக்க திட்டங்கள் பற்றிப் பேசுவது அபத்தம்” என்கிற ரமேஷ் கருப்பையா, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடந்த புத்தகக் கண்காட்சிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படாமலும் பாரம்பரிய உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதையும் தங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெகுமதிகளாக பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறார். கிராமப்புறங்களில் ஓசைப்படாமல் இயற்கை விவசாயம் செய்துவருகிறவர்களுக்கு நம்ம ஊர் நம்மாழ்வார் என்று பட்டம் தந்து ஊக்குவிக்கும் பணியையும் செய்துவருகிறார்.

அந்தோனி கெபிஸ்டன்: இடிந்தகரையில் மளிகைக் கடை வைத்திருக்கிறார் அந்தோனி கெபிஸ்டன். நாற்பது வயதான இந்த இளைஞர் படித்தது பத்தாவது மட்டுமே. ஆனால் 1400 நாட்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தில் ஊடகச் செய்தித்தொடர்பாளராக இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. “எங்கள் போராட்டத்துக்கு முன்னால் கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட தலைவர்கள் கொடுத்த ஊக்கத் தால்தான் நான் போராட்ட செய்திகள், படங்களை எல்லா ஊடகங்களுக்கும் அனுப்ப ஆரம்பித்தேன். முகநூலில் அந்த செய்திகளை இணைத்தேன். உள்ளூர், சென்னை, டெல்லி, சர்வதேசம் என ஊடகங்களின் பட்டியல்களை வைத்து செய்திகளை அனுப்பவே ஒரு மணி நேரம் ஆகிவிடும். இன்றைக்கும் போராட்டப் பந்தலில் தினமும் சுமார் 40-50 பேர் கூடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்கிறார் கெபிஸ்டன். போராட்டத்தை ஒடுக்குவதற்காக சுமார் 350 வழக்குகள் போராட்டத்தில் பங்குகொண்ட தலைவர்கள், பொதுமக்கள் மீது போடப்பட்டன. ஒவ்வொரு வழக்கிலும் கெபிஸ்டன் பெயரும் தவறாமல் இடம்பெற்றது. இப்போது பல வழக்குகள் விலக்கிக்கொள்ளப்பட்டாலும் சுமார் 140 வழக்குகள் மீதி இருக்கின்றன. கடந்த ஆண்டு இவரது கடைக்குள் பெட்ரோல் ஊற்றி யாரோ எரித்துவிட்டார்கள். எரிந்தவற்றில் முக்கியமானது அவர் செய்தி அனுப்பும் லேப்டாப்!

லோகநாதன்: நான் லாபம் சம்பாதிப்பதற்காக பதிப்பகம் தொடங்கவில்லை. 130 நூல்களைப் பதிப்பித்துள்ளேன்” அதிரடியாகச் சொல்கிறார் லோகநாதன். புலம் என்ற பெயரில் பதிப்பகம் நடத்தும் இளைஞர். கல்பாக்கம் அருகே சூராடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்தவர். ஒரு பதிப்பகத்தில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தபின் தன் 26வது வயதில் புலம் பதிப்பகம் தொடங்கினார். ஆரம்ப கட்டத்தில் மண்டோ படைப்புகள், அ.மார்க்ஸ் எழுத்துகள் இவரது பதிப்பகம் நிலைபெற உதவின. “கல்வி, விளிம்புநிலை எழுத்துகள், சமூக நிலை போன்ற துறைகள் சார்ந்த நூல்களை வெளியிடுகிறேன். என்னுடைய கருத்துகளை, நிலைப்பாட்டை எடுத்துச் செல்லக்கூடிய நூல்களை பதிப்பிக்கிறேன். அத்துடன் இந்த செயல்பாட்டில் நான் சமூகத்துக்குப் புதிதாக எதுவும் சொல்லவில்லை. சமூகத்தில் இருக்கும் கருத்துகளை சமூகத்துக்கே திரும்பச் சொல்கிறேன். அதற்கான ஊடகமாக நான் பதிப்பிக்கும் நூல்கள் இருக்கின்றன. இதுபோன்ற கருத்துகளை வைத்திருக்கும் எழுத்தாளர்களே என்னிடம் நூல்களை பதிப்பிக்க வருகிறார்கள். அதையே மகிழ்ச்சியுடன் செய்கிறேன்.” என்று கூறுகிறார் லோகநாதன்.  நூல்களைப் பதிப்பிக்க நிதி திரட்ட வேறு சில சிறுசிறு அச்சு சார்ந்த பணிகளைச் செய்வதாகக் கூறுகிறார். கல்லூரி ஒன்றில் பணியாற்றும் இவரது துணைவியாரும் உதவிகரமாக இருக்கிறார். புலம் என்ற சொல்லுக்குப் பொருள் அறிவைப் புகட்டுதல். இன்று 100க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த நிலையிலும் தன்னை ஒரு சிறு பதிப்பாளர் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறார். அறிவுசால் நூல்களை தமிழ்ச்சூழலில் பதிப்பிப்பதே சமூகப் போராட்டம் என்பதால் லோகநாதன் இந்த போராட்ட இளைஞர் பட்டியலில் எளிதாக இணைகிறார்.

செப்டெம்பர், 2015.