சிறப்புப்பக்கங்கள்

சமூக ஊடகம்

Staff Writer

வலைப்பூக்கள், முகநூல், ட்விட்டர் என்று சமூக ஊடகங்கள் அறிமுகமானதில் இருந்து அதில் நுழைந்து புது உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள். பலருக்கு பொழுதுபோக்காகவும் வாய்ப்புகளுக்கான வாயிலாகவும் ஓர் அடையாளமாகவும் சமூக ஊடகம் இருக்கிறது. இதில் செயல்படும் புதிய மற்றும் திறமையான இளைஞர்களில் சிலர் பற்றி இங்கே... மற்றவர்களைப் பற்றி பின்வரும் இதழ்களில் ஒரு கை பார்க்கலாம்..:)

ஜீவானந்தம், 35.    http://www.kovaineram.com/

கோவையில் செட்டில் ஆகிவிட்ட கரூர்க்காரரான ஜீவானந்தத்தின் கோவைநேரம் என்ற வலைப்பூ மிகுந்த மணமிக்கதாகத் திகழ்கிறது. நிஜமாகவேதான். மீன் குழம்பிலிருந்து பிரியாணி வரை மணக்க படங்களுடன் சாப்பாட்டுக் கதை சொல்கிறார். கட்டடப் பொறியாளரான இவர் தன் பணி நிமித்தம் பல இடங்களுக்குச் செல்கிறார். அங்கு காணும் விஷயங்களைப் பதிவேற்றுகிறார். இரண்டரை ஆண்டுகளாக வலைப்பதிவராகச் செயல்படும் இவர் தனக்குக் கிடைத்த புதிய நண்பர்களின் அறிமுகத்தை மிகச் சிறந்த கொடையாகக் கூறுகிறார். “பொழுதுபோக்காகத்தான் எழுத ஆரம்பித்தேன். நிறைய பேர் அறிமுகம் கிடைத் தது. நான் எழுதுவதை நம்பி நிறைய பேர் என் வலைத்தளத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்காக நன்றாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. சமீபத்தில் சிங்கப்பூர் சென்றபோது நிறைய நண்பர்கள் தாங்களாகவே தேடி வந்து பார்த்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தது” என்கிறார். கோவை நேரம் என்ற பெயரிலேயே நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சோனியா அருண், 29    https://twitter.com/rajakumaari

ட்விட்டரில் ஏழாயிரம் பாலோயர்ஸைக் கொண்டிருக்கும் சோனியா அருண் என்கிற ராஜகுமாரி சென்னையில் வசிக்கும் குடும்பத்தலைவி. எம்.ஏ.பிஎட் கல்வித் தகுதி கொண்ட அவர் ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்காக சமூக ஊடகம் பக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர். மற்றவர்கள் எழுதுவதைப் பார்த்துத்தான் எழுதவே கற்றுக்கொண்டேன் என்று அடக்கமாகக் கூறும் இவர் ட்விட்டரில் எழுதுவது எளிதாக இருப்பதால் அதில் தொடர்ந்து இயங்குவதாகக் கூறுகிறார். பெண்ணியக் கருத்துகளை வலிமையாகக் கூறும் இவர் வலையுலகில் இயங்கும் துணிச்சலான சில பெண்களில் ஒருவர். மாணவர்கள் போராட்டம் போன்ற பிரச்னைகளின் போது அவற்றை டிவிட்டர் மூலம் பெரும்பாலானபேரிடம் பிரச்சாரமாகக் கொண்டு செல்கிறார். ”சமூக விஷயங்கள், உலகத் திரைப்படங்கள், முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் என பலவற்றை சமூக ஊடகம் எனக்குக் கற்றுத்தந்தது. பெண்களின் பங்கேற்பு இங்கிருக்கும் சிலரின் எதிர்ப்பால் குறைந்துவருவது வருத்தமளிக்கிறது” என்கிறார்.

டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி, 29  https://www.facebook.com/karthekarna

டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி என்ற பெயரில் முகநூலிலும் ட்விட்டரிலும் இயங்குபவர் கருணாகரன். பரமக்குடி தமிழன். மதுரையில் இருந்து தினமலருக்காக பணிபுரிகிறார். முகநூலில் 14,000 பாலோயர்கள், 4500 நண்பர்கள். அத்துடன் ட்விட்டரிலும் இயங்குகிறார். “எனக்கு வலுவான கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மென்மையாக, சிரிக்க வைக்கும் விதத்தில் சமூக ஊடகத்தில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்கிறார். ஒரு நாளைக்கு சராசரியாக பத்துக்கும் மேற்பட்ட நிலைத்தகவல்கள் எழுதுகிறார். சமீபத்தில் திருமணம் ஆகியிருப்பதால் முகநூல் பக்கம் வருவது குறைந்திருப்பதாக அவரது நண்பர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

---

ஆல்தோட்ட பூபதி, 31  https://twitter.com/thoatta

ஆல்தோட்ட பூபதி என்ற பெயரில் ட்விட்டரில் அதகளம் செய்துகொண்டிருப்பவர் ஜெகன். கரூர்க்காரர். டெக்ஸ்டைல் ஏற்றுமதி தொழில் செய்கிறார். எம்சிஏ வரை படித்திருக்கும் இவர் முதல் ட்வீட் செய்தது மார்ச் 14, 2011-ல். பத்திரிகைகளில் இவரது ட்வீட்கள் மறு பதிப்பு செய்யாத வாரமே இல்லை எனலாம். மிகவும் உற்சாகமாக, துள்ளலாக இவரது வரிகள் இருக்கின்றன. “நான் கொஞ்சம் சீரியஸ்தான். ஆனால் அதை ட்விட்டரில் வெளிப்படுத்துவதில்லை” என்று சிரிக்கிறார். ட்விட்டர் மொழி என்ற நூலும் எழுதி உள்ளார்.

பிரபாகரன், 25  http://www.philosophyprabhakaran.com/

விருதுநகரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர் பிரபாகரன். பிலாசபி பிரபாகரன் என்ற வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். விளையாட்டாக பிலாசபி பிரபாகரன் என்று பெயர் வைத்துக் கொண்டதாகச் சொல்கிற இவர் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் படித்தவர். இப்போது கிண்டியில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். எல்லா விஷயங்களையும் பற்றி நகைச்சுவையுடன் பதிவுகள் எழுதுவது இவரது பாணி. லக்கிலுக், அதிஷா, பரிசல் போன்ற மூத்த வலைப்பதிவர்களைப் பார்த்து தன் நடையை வடிவமைத்துக் கொண்டதாகச் சொல்கிறார். வாரத்துக்கு குறைந்தது மூன்று பதிவுகளாவது எழுதுகிறவர். இவருக்கு மணமாகி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன என்பதால் கொஞ்சம் வலைப்பதிவுகள் எழுதும் வேகம் மட்டுப்பட்டிருக்கிறது. மீண்டும் பழைய வேகத்துடன் எழுத ஆரம்பிக்கவேண்டும் என்கிறார்.

---

கார்க்கி, 30  https://twitter.com/iamkarki

எம்பிஏ படித்துவிட்டு மனிதவள நிறுவனமொன்றில் பணிபுரிந்த கார்க்கிக்கு உடன் படித்த நண்பர்கள் இல்லாத நிலையில், சென்னையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது சமூக ஊடகம்தான். 2007-ல் வலைப்பூக்கள் எழுத ஆரம்பித்து இப்போது ட்விட்டரில் சக்கைப்போடு போடுகிறார். சமூக ஊடகம் கொடுத்த ஊக்கத்தால் இப்போது வேலையை உதறிவிட்டு திரையுலகில் நுழைந்துவிட்டார். டிவி தொடர் ஒன்றுக்கும் வசனம் எழுத வாய்ப்பு வந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் சமூக ஊடகங்களில் கிடைத்த நண்பர்கள்தான் காரணம் என்கிறார். “நான் நானாக இருக்கும் இடமாக சமூக ஊடகத்தை வைத்திருக்கிறேன்” என்கிற கார்க்கிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெண் தேடிக்கொண்டிருக்கிறார்.

அராத்து, 34

அராத்து என்றால் அட்டகாசம்தான்.  சாருநிவேதிதா ஒருமுறை இவரைச் செல்லமாகச் அராத்து என்று அழைக்க, அதையே தன் பெயராகக் கொண்டுவிட்ட இவரது ஒரிஜினல் பெயர் சீனிவாசன். சொந்த ஊர் சிதம்பரம் அருகே புவனகிரி. ஐடி சர்வீசஸ் தொழிலை சென்னையில் செய்துவருகிறார். இவர் யாரையும் பாலோ செய்வதோ, ப்ரெண்டு ரிக்வெஸ்ட் கொடுப்பதோ இல்லை. ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தால் மட்டும் ஏற்றுக் கொள்கிறார். அந்திமழைக்காக சமூக ஊடகம் பற்றி அவர் எழுதியது இது.

தமிழர்கள் இரட்டை மனநிலையில் இருப்பவர்கள். உள்ளுக்குள் செம குசும்பு, ஆனால் வெள்ளையும் சொள்ளயுமா உடுத்திகிட்டு கிர்ப்பாக திரிவார்கள். செம ஜோக் அடிச்சாலும் வேற வழியில்லாமல் தெத்துப்பல்லை மட்டும் காட்டுவார்கள். அங்கீகாரத்திற்காக ஏங்குவார்கள், ஆனால் பாராட்டினால் நன்றி கூட சொல்லாமல், நானெல்லாம் அதற்கு தகுதியானவன் இல்லை என சொல்லி பாராட்டுபவர்களையே அவமானப்படுத்துவார்கள். இந்த கோஷ்டியில் எழுத்தாளர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? இப்படிப்பட்டகோஷ்டிக்கு ஒரு சைக்காலஜிக்கல் டூலாக வந்ததுதான் சோஷியல் நெட்வொர்கிங்க் சைட். இது டூல் மட்டும் அல்ல, வேறு மீடியம். அதை பொது மக்கள் நன்கு உணர்ந்து பயன்படுத்தி கொண்ட அளவுக்கு எந்த எழுத்தாளராலும் பயன் படுத்திக்கொள்ள முடியவில்லை.ஏன் என்றால் அவர்களுக்கு முளைத்திருக்கும் விர்ச்சுவல் கொம்பு. இங்கெ வந்து இந்த கூட்டத்துக்கு ஏதுவான மொழியில் போஸ்ட் போடாமல் தங்கள் விலைபோகாத பழைய சரக்குகளை இங்கே கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

ட்விட்டர் என்ற தளத்தில் எத்தனை எழுத்தாளர்களால் குப்பை கொட்ட முடிகிறது? ஏனய்யா நீங்கள் தமிழில் கில்லாடிதானே? 140 எழுத்துக் களுக்குள் எழுதுங்கள் என்ற திருவள்ளுவர் காலத்து சேலஞ்சையே உங்களால் எதிர்கொள்ள முடியவில்லையே. ட்விட்டர் ஹீரோக்கள் வேறு. தோட்டா, அரட்டை கேர்ள் என இலக்கிய உலகுக்கு சம்மந்தப்படாத இளைய ஆட்கள் ரகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் இடம். ஏன் இவர்களால் ரகளை நிகழ்த்த முடிகிறது? இவர்களுக்கு ஒரு ஒளி பிம்பம் இல்லை, இன்றைய காலகட்டத்து மொழியில் தன் நண்பருடன் பேசுவது போல பேசுகிறார்கள், அவ்வளவுதான்.

டேய் ப்ளீஸ், இன்னும் ஃபேஸ்புக் ஃபார்மேட் வரலைடா அராத்து. இந்த எழுத்தாளர்களை தூக்கி போடு!

ஃபேஸ்புக்கைப் பற்றி கட்டுரை போல எழுத வேண்டாம், டிட் பிட்ஸ் போடலாம்.

ஃபேஸ்புக்கில் கொஞ்சம் உண்மையாக இருக்க வேண்டும்.

கெட்ட வார்த்தையில் திட்டுபவர்கள், மத ரீதியான சண்டை உருவாக்குபவர்களை சாதாரணமாக கண்ட்ரோல் செய்யலாம். பெண் பெயரில் ஒரு ஃபேக் ஐடி உருவாக்கி, அந்த ஐடியில் போய், நீங்க பொறுப்பானவர், நீங்களே இப்படி செய்யலாமா என கமெண்ட் போட்டால் அந்த தீவிரவாதி ஃபீஸ் புடுங்கின ஆளாகிவிடுவார்.

கடும் வாத பிரதிவாதங்கள் நடந்தாலும் யாரையும் யாராலும் கன்வின்ஸ் பண்ண முடியாது இந்தஃபேஸ்புக்கில்.ஒரு ஃபிகரை வேண்டுமானால் கன்வின்ஸ் பண்ணி முத்தம் குடுக்க முடியுமே தவிர, அவள்கருத்தை உங்களால் மாற்ற முடியாது.

ஏண்டா என்னை 2 மணி நேரமா போன்ல கூப்பிடலை, ஆனா 2 ஸ்டேட்டஸ் போட்டிருக்கே, 16 லைக் போட்டிருக்கே என கேர்ள் ஃபிரண்ட்ஸ் சுளுக்கு எடுக்கும் உலகம் இது.

காவேரிப்பூம்பட்டினத்தில் கொண்டாடி கூத்தடித்த தமிழ் சமூகத்தின் நாஸ்டால்ஜியாவாக வந்திருக்கும் டைம்மெஷின் தான் ஃபேஸ்புக். காதலும் சாத்தியம் , காமமும் சாத்தியம், விவாகரத்தும் சாத்தியம்.எவ்வளவுதான் வீறுகொண்டு  சண்டை போட்டாலும் , இதுவரை ஃபேஸ்புக்கில் கொலை வரைபோகவில்லை என்பதுதான் தமிழர்களின் வீரம் மற்றும் விவேகத்திற்கான சான்று.

(முழுக் கட்டுரையையும் வாசிக்க www.andhimazhai.com)   

அக்டோபர், 2013.