சிறப்புப்பக்கங்கள்

சமூக ஊடகம்

Staff Writer

சமூக ஊடகங்களில் பிரபலம் ஆவதற்கு என்றே தனித் திறமை வேண்டும். அது இளைஞர்களின் ஊடகம். அத்துடன் அது பெரும் கடலும் கூட. அதில் சிறப்பாக செயல்படும் ஏராளமான இளைஞர்கள் உண்டு. எப்போ பார்த்தாலும் செல்போனையே பாத்திட்டு இருக்கியே என்று திட்டுவாங்கினாலும் அது ஒரு தனி உலகம்தான். தனி சுவாரசியம்தான். அவ்வுலகில் இருந்து சில இளைஞர்களை இங்கே அறிமுகம் செய்கிறோம். மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டவர்கள் இந்த இளைஞர்கள். அதே சமயம் பிரபலமானவர்களும்கூட.

எம்.எம்.அப்துல்லா: புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா முகநூலில் பிரபலமாக இயங்குபவர்.  எம்பிஏ (நிதி) படித்திருக்கும் இவர் மின்மடல் குழுமங்கள், வலைப்பூக்கள் காலத்திலிருந்தே தொடர்ந்து இணைய உலக சஞ்சாரி. சமூக ஊடகங்கள் அறிமுகம் ஆனதும் முகநூலுக்கு வந்துவிட்டார். இன்னொரு முக்கியமான விஷயம் அப்துல்லா திமுகவின் மாநில சிறுபான்மை அணியின் துணைச்செயலாளர். 32 வயதிலேயே அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் ஆனவர். ஆகவே தமிழ்நாட்டில் இணையத்தை முதல்முதலில் பயன்படுத்த ஆரம்பித்த முழுநேர அரசியல்வாதி என்று அப்துல்லாவை அடையாளம் காட்டுவதில் தவறில்லை. பள்ளிப்பருவம் முடிந்த உடன் கட்சி அரசியலுக்கு வந்துவிட்ட அப்துல்லா, தன் கட்சியின் கொள்கைகளை விளக்குவதற்காகவும் அதே சமயம் தனக்குப் பிடித்த பொருளாதாரம் உள்ளிட்ட பொதுவான விஷயங்களைப் பேசுவதற்காகவும் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறார். “நான் எழுதுவதற்கு முன்னால் அது உண்மைதானா என்பதில் கவனம் செலுத்துவேன். ஆதாரம் இன்றி எதையும் எழுதுவதில்லை” என்கிற இவர் சமூக ஊடகங்களும் இணையமுமே எதிர்காலத்தை வடிவமைக்கப்போகின்றன என்று நம்புகிறார்.

நந்தினி: மனிதவளத்துறை மீதுதான் எனக்கு விருப்பம். அதனால் எம்பிஏ ஹெச்.ஆர் படிச்சேன். இப்போது எம்.ஏ. தொழிலாளர் நிர்வாகம் படிச்சுகிட்டு இருக்கேன். சமூக ஊடகம் மனிதவளத்துறையில் சிறப்பாக செயல்பட, நிறைய பேருடன் தொடர்புகளை நிர்வகிக்க, அலுவலகத்தில் என்னோடவேலையை சரியாகச் செய்ய உதவி செய்கிறது” என்கிறார் நந்தினி. தனியார் அலுவலகத்தில் ஹெச்.ஆர். துறையில் பணியாற்றுகிறார். விருதுநகரைச் சேர்ந்தவர்.

@itzNandhu என்ற பெயரில் டிவிட்டரில் இயங்குகிறார். 17,700 பேர் இவரைப் பின் தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர், பின்னர் ட்விட்டர் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார். “ நிறைய விஷயங்களைப் படிச்சாதான் உருப்படியான ட்வீட்களைப் போடமுடியும். தல தளபதி, ராஜா ரஹ்மான் இப்படி ஏராளமான சண்டை சச்சரவுகளும் இந்த உலகத்தில் இருக்கிறது. எதையும் உறுதியா, யாரையும் புண்படுத்தாம கருத்துகள் சொல்லணும்கிறதுல உறுதியா இருக்கேன்” என்கிறார் நந்தினி.

கிருஷ்ணபிரபு: முகநூலில் தமிழ் இலக்கியம் பற்றி தொடர்ந்து பதிவுகளைச் செய்துகொண்டிருக்கும் கிருஷ்ணபிரபு சென்னை அருகே பொன்னேரியைச் சேர்ந்தவர். கணிதத்தில் பட்டம் பெற்றவர். மென்பொருள்துறையில் சில ஆண்டுகள் பணிபுரிந்தவர். இப்போது அதிலிருந்து விலகி தமிழ் இலக்கியம் படிப்பதற்காக கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். கூடவே ஓர் நிறுவனத்தில் மக்கள் தொடர்பாளராகவும் கணையாழியில் உதவி ஆசிரியராகவும் பணியில் சேர்ந்திருக்கிறார். “மென்பொருள் துறையில் இருந்ததால் பெரும்பாலும் சமூக ஊடகங்களில்தான் பொழுதைக் கழித்தேன். பெரும்பாலும் ஒரே மாதிரியான அலைவரிசை உடைய வாசகர்களுடன் நான் வாசிப்பதைப் பகிர்ந்துகொள்ள முகநூல் எனக்கு உதவி செய்கிறது. அத்துடன் பல நல்ல நூல்களை நிறைய பேருக்கு அறிமுகம் செய்விக்கவும் இந்த ஊடகம் நல்லதொரு தளமாக இருக்கிறது” என்கிறார்.

யசோதா தேவி: ’பாலோ பண்ணாதிங்க.. ஹிஹி.. நொந்துடுவிங்க.. வொர்த்தா ஒரு ட்வீட் கூட இருக்காது.. ஆர்டி மட்டுமே..” என்கிறது கிறுக்கி என்ற பெயருடன் இருக்கும் iam_lolitta ட்விட்டர் ஹேண்டில். இருந்தாலும் 11,800 பேர் இவரைப் பின்  தொடர்கிறார்கள். கோவையைச் சேர்ந்த யசோதா தேவி, சேலத்தில் பொறியியல் படித்துவிட்டு இப்போது பெங்களூருவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘’ ஆரம்பத்தில் டைம்பாஸாத்தான் ஆரம்பிச்சேன். நான் பொதுவா எதையும் எழுத மாட்டேன்.  மத்தவங்களுடைய ட்வீட்ஸ் எனக்குப் புடிச்சிருந்தா அதை ஆர்.டி, அதாவது திரும்ப நான் ட்வீட் பண்ணுவேன். அலுவலக வேலைப் பளுவால் டென்ஷன் ஆனசமயம் ட்விட்டருக்கு வந்தால் நண்பர்களுடைய ட்வீட்களைப் படித்து மனசு லேசாகிடும். அதேபோல் அலுவலகப் பணிகளில் இருக்கும் தொழில்நுட்ப சந்தேகங்கள், அவற்றைத்தீர்ப்பதற்கான வழிகள் எல்லாம் ட்விட்டர்ல இருக்கிற சீனியர்கள்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிடலாம். நிறைய தோழிகள் கிடைச்சாங்க. நாம தனியா இருக்கோம்னு நினைக்கவே வேண்டாம்.” என்கிற யசோதா தேவி, அவ்வப்போது மட்டும் ரிலாக்ஸாக தமிழ், ஆங்கில நூல்களைவாசிக்கிறார்.

கடங்கநேரியான்: கடங்கநேரியான் என்ற பெயரில் முகநூலில் இயங்கும் இவரது பெயர் ஹரிகரசுதன். முகநூலில் இலக்கியம், கொள்கை, அடையாள கருத்துகள் சார்ந்து இயங்கும் இவர் மதுரையில் இருந்து செயல்படுகிறார். நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இருக்கும் கடங்கநேரி என்ற ஊர்க்காரர். படிப்பு டி.பார்ம். மருந்து விற்பனைத்துறையில் மேலாளராகப் பணிபுரியும் இவர் கவிஞரும் கூட. நிராகரிப்பின் நதியில், யாவும் சமீபித்திருக்கிறது என்று இரு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மதுரையில் இலக்கிய ஆர்வம் கொண்ட நண்பர்களுடன் இணைந்து கூழாங்கற்கள் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்திவருவதன் மூலம் சிறந்த செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். எழுத்தாளர் கோணங்கி ஆசிரியராகச் செயல்படும் கல்குதிரை இதழை ஒரு வரிவிடாமல் படிப்பவர் என்பது இவருக்குரிய தனிப்பட்ட அடையாளம்!

செப்டெம்பர், 2015.