இளம் வயதிலேயே ஆசிரியர் பணிக்கு வந்ததால், எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எல்லா விதமான அறிவும் அனுபவங்களும் பெறவேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில், தேனி மாவட்டம் அகமலை பகுதியில் உள்ள கண்ணக்கரையில் இருந்த பள்ளியை இழுத்து மூடுவதற்கு இருந்தனர். அங்கு பணியாற்ற மூத்த ஆசிரியர்கள் யாருக்கும் ஆர்வமில்லை என்பதால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அப்பகுதியிலிருந்த பழங்குடி மக்கள் மிகவும் பின் தங்கிய வாழ்க்கை முறையை கொண்டிருந்ததால், அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதனால், அப்பகுதி மக்களுக்கு சாதி சான்றிதழ், ஆதார் அட்டை போன்றவற்றை கிராம அலுவலருடன் சேர்ந்து வாங்கிக் கொடுத்தேன். அதேபோல், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்தும் சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தேன். அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து, பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கினேன். தொடர்ந்து அந்த குழுவைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்ற செய்தேன். மக்களுக்கும் பள்ளிக்குமான இடைவெளியைக் குறைக்க முற்பட்டேன். பள்ளியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவே ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலானது. அந்தப் பகுதியில் உள்ள சுளந்தகாடு, பட்டூர், சொக்கநலம், சின்னூர் காலனி போன்ற பகுதிகளுக்கு நானே சென்று மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருவேன். நான் சென்ற போது எட்டு மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு நன்றாக பாடம் சொல்லிக்கொடுத்து, பொம்மலாட்டம், கதை சொல்வது, ஓவியம் வரைதல் போன்றவற்றையும் செய்வேன். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்தது. 2013லிருந்து 2016ஆம் ஆண்டு வரை மட்டுமே அங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தாலும் இன்று வரை அப்பகுதி மாணவர்களுடன் தொடர்பிலிருக்கிறேன்.
இப்போது, பெரிய குளத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் விடுதி காப்பாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். கிடைக்கும் நேரங்களில் நேரு நகர், செல்லாங் காலனி போன்ற பகுதியில் உள்ள பழங்குடியினரின் வீடுகளுக்கு சென்று, பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போன மாணவர்களை கண்டுபிடித்து, அவர்களின் படிப்பை மீண்டும் தொடரவைக்கிறேன். ஒன்பதாம் வகுப்புடன் நின்று போன மாணவர்களை டுடோரியல் காலேஜ் மூலமாக பத்தாம் வகுப்பு எழுத வைத்து, அவர்களை பதினோராம் வகுப்பு சேர்த்துவிடுவேன். இந்த வருடம் மட்டும், பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறேன்.
அதேபோல், நானும் சில நண்பர்களும் சேர்ந்து மாதம் குறிப்பிட்ட தொகையை மாணவர்களின் கல்விப் பணிக்காக சேமிக்கிறோம்.
மலைக் கிராமங்களில் தொடக்கப் பள்ளி மட்டும் இருப்பதும், குழந்தைகளின் பெற்றோர் விழிப்புணர்வு இன்றி இருப்பதுமே பழங்குடி மாணவர்களின் இடைநிற்றலுக்கு முக்கிய காரணம். மலைக் கிராம மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் சமூக அக்கறையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. அவர்களே மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இது நடந்தால் மட்டுமே மலை கிராம மாணவர்களின் படிப்பு தொடரும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குறைந்தபட்சம் எழுத்தறிவையாவது வளர்த்துவிட வேண்டும். அது தான் மாணவர்களின் சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
விஜயராஜா
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி காப்பாளர், பெரியகுளம்
நவம்பர், 2022