சிறப்புப்பக்கங்கள்

சமணத் தமிழ்: மலர்மிசை நடந்தோன்!

பேரா. கனக அஜித தாஸ்

நல்லார் வணங்கப்படுவான் பிறப்பாதி நான்கும்

இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பம் ஆக்கும்

சொல்லான் தருமச் சுடரான் எனும் தொன்மையினான்

எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏத்தி

- நீலகேசி 1

முனிவர்களாலும் இந்திரன் முதலான தேவர்களாலும் சக்கரவர்த்தி முதலான மனிதர்களாலும் வணங்கி போற்றப்படுபவன்; பிறப்பு மூப்பு இறப்பு நோய் ஆகிய நான்கும் இல்லாதவன்; உயிர்களுக்கு அவற்றின் இடர் நீங்குமாறு நல்லறங்களை அருளக்கூடிய திருமொழி உடையவன்; பிற உயிர்கள் இன்ப நிலையை பெற வழிகாட்டியவன்; நல்லறம் எனும் அறச்சுடரால் உலகிற்கு ஒளி தந்தவன் எல்லாவற்றையும் உணரக்கூடிய வாலறிவு பெற்றவன் . தொன்மையானவன். இத்தகைய உயர் பண்புகளை பெற்றவனை இறைவனாக வணங்குகிறேன் என்பது நீலகேசியின் கடவுள் வாழ்த்துப் பா ஆகும்.

சமணம் போற்றும், வழிபடும் கடவுள் வேண்டுதல் வேண்டாமை அற்றவர். விருப்பு வெறுப்பு அற்றவர் துதிப்பவர்க்கு அருளுதலும் அல்லாதார்க்கு இன்னல் விளைவிப்பவரும் அல்லர். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும் கொள்கையினர் துறவைக்கைக்கொண்டு ஐம்பொறிகளை நெறிப்படுத்தி தவமியற்றி பிறவா நிலைஎய்தியவர். சமணக் கடவுளர் . இவரைத்தான் பொறிவாயில் ஐந்தவித்தான்,வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான் , தனக்கு உவமை இலாதான் என திருக்குறள் போற்றுகிறது.

மனிதராகப் பிறந்து இல்லற வாழ்க்கையை உயர் பண்புகளால் சிறப்பித்தவர்கள் / உலக வாழ்க்கையில் பற்றற்று துறவு பூண்டு தனது உடம்பே மிகை என தியானத்தினால் தன உயிருடன் கலந்த வினைகளை அறவே களைந்தெறிந்தவர்கள்/ யோகத்தினால் வாலறிவைப் பெற்றவர்கள்/ பிற உயிர்களும் பிறவா பேரின்ப நிலையை அடைய வழியினைக் காட்டியவர்கள்/ இவர்கள்தான் - தீர்த்தங்கரர்கள் எனப்படும் சமணக் கடவுளர்கள் ஆவர். தீர்த்தங்கரர்கள் வாலறிவைப் பெற்ற நிலையில் உடலோடு கூடியவர்கள். ஆயுள் முடியும் வரை தான் உணர்ந்த மெய்ப்பொருளை பிறர்க்கும் எடுத்து விளக்குவர். இது அறம் பரப்புதல் ஆகும். ஆயுள் முடிவில் உடல் துறந்து பிறவா நிலையை அடைவர். அந்த உயிர் சித்தர் எனப்படுகிறது. இனி ஒருபோதும் பிறவி என்பது அதற்கில்லை.

சித்தர் உயிர் உருவமற்றது. இது சாதாரண மக்களின் கற்பனைக்கு எட்டாது; புரியாது. அதனால் மனித உருவில்உள்ள தலை வரம்பாகிய உயர் பண்புகளைப் பெற்ற தீர்த்தங்கரர் முதன்மையாக வழிபடப்படுகிறார். இவர்கள் உரைத்த அறங்களை நினைவு கூர்ந்திட கோயில் எனும் அமைப்பை உருவாக்கி, அதில் மனித வடிவில் தீர்த்தங்கரருடைய உருவச்சிலையை நிறுவினார்கள். அதுமட்டுமின்றி தீர்த்தங்கரர் உரைத்த நல்லறங்களை அறக்கோட்பாடுகளை சமண இலக்கியங்களில் துதி, இறை வழிபாடு, கடவுள் வணக்கம் என்பனவற்றின் வாயிலாக மக்களிடை சென்று சேர்த்தனர்.

சமணத்தின் சமய வழிபாடு, இறை வழிபாடு என்பது நல்லற பண்புகளைப் போற்றுவதே ஆகும். இது குணத்துதி எனப்படும்.

சிலம்பில் கவுந்தி அடிகளார் வாயிலாக இளங்கோவடிகள் சமணக் கடவுளைப் போற்றுவதைக் காண்போமே:

ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்

திருமொழிக்கு அல்லது என் செவி அகம் திறவா

காமனை வென்றோன்ஆயிரத்தெட்டு

நாமம் அல்லது நவிலாது என் நா

ஐவரை வென்றோன் அடி இணை அல்லது

கைவரைக் காணினும் காணா என் கண்

அருளறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லது என்

பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது

அருகன் அறவோன் அறிவோர்க்கல்லது என்

இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா

மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என்

தலைமிசை உச்சி தான் அணிப் பொறாது

இறுதியில் இன்பத்து இறை மொழிக்கு அல்லது

மறுதர ஓதி என் மனம்புடை பெயராது

பிற சமண இலக்கியங்களும் கடவுள் பண்புகளைப் போற்றுகின்றன

எங்கும் உலகம் இருள் நீங்க

இருந்த எந்தை பெருமானார் -சீவ- 2812

-இன்னா பிறவி இகந்தோய் நீ

இணையில் இன்பம் உடையோய் நீ

மன்னா உலகம் மறுத்தோய்நீ

வரம்பு இல் காட்சிக்கு இறையோய் நீ

பொன் ஆர் இஞ்சிப் புகழ் வேந்தே

பொறியின் வேட்கைக் கடல் அழுந்தி

ஒன்னா வினையின் உழல்வேங்கள்

உயப்போம் வண்ணம்உரையாயே - சீவ - 1243

மூன்று கடி மதிலும் கட்டழித்த காவலன் நீ அன்றே - சீவ- 1 2 4 5

மறு அற உணர்ந்தனை மலமறு திகிரியை

அணியாது ஒளி திகழும் ஆர் அணங்கு திரு மூர்த்தி கணியாது முழுதுணர்ந்த கடவுள் என்று அறையுமே—சூளாமணி 182

பகை நாறும் அயிற்படைகள் பயிலாத திரு மூர்த்தி

இகல் மாற வென்றுயர்ந்த இறைவன் என்று அறையுமே -சூளாமணி 183

பக்தர்களின் பக்தியின் அளவிற்கேற்ப அவர்களுக்கு அருள் புரிகின்ற / வரம்தருகின்ற அல்லது பக்தி செலுத்தாதவர்மீது சினக்கும் கடவுள் அல்லர் சமணக் கடவுளர்கள். தனது தவம் தியானம் இவற்றால் உயிரோடு ஒட்டிய வினைகளை நீக்கி பிறவா உயர் நிலையை அடைந்து அந்த நிலைக்கு பிறர் உயர வழிகாட்டுபவரே சமணத்தின் கடவுள் -சமணத்தில் அருள்வதோ சினப்பதோ கடவுளரின் செயல் அல்ல. பிற சிலவற்றில் கடவுள் என்பவர் கற்பனை உருவமாக பிறப்பு இருப்பிடம் காணவியலா ஒன்றாக இருக்க, சமணத்தில் கடவுள் என்பார் மனிதராகப் பிறந்து கடவுளாக உயர்ந்த உயிராகும் அவர் மனிதனாக வாழ்ந்த நிஜம்.

அருள்புரி மனத்த ராகி

ஆருயிர்க்கு அபயம் நல்கி

பொருள் களவு காமம்

ஒருங்கே இவை புறக்கணித்திட்டு

இருள் புரி வினைகள் சேராது

இறைவனது அறத்தை எய்தின்

மருள் செய வருவது உண்டோ

வானவர் இன்பம் அல்லால்-

 - யசோதர காவியம் 300

மனிதராகப் பிறந்து பிறவா நெறிக்கு வழிகாட்டியாய் விளங்கி பிறவா நிலையடைந்த கடவுளே சமணர் வழிபடும் கடவுள்.

மிசையார் தசை இருள் மேவார் நறை மது பெறினும்

இசையார் பொய் கொலை களவு அறியார் இளம் தோகையர் மாட்டு

அசையார் பொருள் வரைந்து ஐவரைப் பேணுவர் ஐம்புலன் மேல்

நசை ஆறிய பிண்டியார் அடியார் எங்கள் நாயகரே - திருநூற்றந்தாதி- 83

மடுக்கும் நறவு தெளி இருள் உண, மடவார் விழைவு,

கெடுக்கும் கொலை,பொய், களவு, புலால்,

பாருள், கேளிர் சுற்றும்

விடுக்கும் முனிவரை வைதல் ஒல்லார் முத்த வெண்குடைக்கீழ்

அடுக்கும் பணக்குடையார் அடி நீழல் அடைந்தவரே- திருமேற்றிசை அந்தாதி-48

அறத்தின் வழி இல்லறம் போற்றுதல், துறவறம் ஏற்றல், பிறப்பறுத்தல் ஆகிய மூன்று அடிப்படை நோக்கங்களை கொண்டே சமணத் தமிழ் இலக்கியங்களில் கடவுள்கொள்கை உள்ளது. இல்லறத்தாரும் துறவறத்தாரும் ஒருவருக்கொருவர் துணையாக அமைந்து இருப்பதை சமணம் தெளிவாக எடுத்து கூறுகிறது

நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்

நோற்பவர்க்கு சார்வாய் அறம் பெருக்கி -யாப்புடை

காழும் கிடுகும் போல் நிற்கும் கயக்கின்றி

ஆழி சூழ் வையத்து அறம்

- அறநெறிச்சாரம்-15

சமணத்தில் வழிபாடு என்பது கடவுளை நோக்கி அல்ல. கடவுள் பண்புகளை நோக்கியதேயாகும். சமணத்தின் துதி, வழிபாடு குணத்துதி அல்லது பண்பு போற்றல் ஆகும்,

மூட மூன்றும் உரைத்தாய் நீ

முரண் செய் தோற்றம் முனிந்தோய் நீ

வீடும் கட்டும் விரித்தோய் நீ

வினையின் இன்பம் வெறுத்தோய் - நீலகேசி137

ஈங்கு நம் இடர்கள்தீர்க்கும் இயல்பினார்

திருமொழி அருளும் தீர்தகரர்கள்

ஐவகை ஒழுக்கம் அன்னும் அருங்கலம் ஒருங்கணிந்தார்

மெய் வகை விளக்கம் சொல்லி நல்லறம் மிக அளிப்பார்-

யசோதர காவியம் - 5254

காமனை அழித்த முக்கண்ணா செய செய

காலனை அழித்த முக்காலா செய செய

மறநெறி விலக்கிய மன்னா செய செய

சொல்லிய பெயர் குலம் இல்லாய் செய செய

செருக்கு நாலும் அறுத்தாய் போற்றி

விருப்பும் வெறுப்பும் வெறுத்தாய் போற்றி

பந்தம் அறுத்த பதத்தாய் போற்றி

அந்த மில் நான்மைக்கமைந்தாய் போற்றி

ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி-----

- திருப்பாமாலை

சமணத்தில் பக்தர் குறிக்கோள் உயர் பண்புகளைப் பெறுவதற்கேயாம் ; பொன் பொருள் பெற அல்ல.

பொன் குணமாமணி பூந்துகில் ஆதிப் பொருள் அடியேன்

முன்கொணர்வீர் என்று மோகிக்கிலேன் இந்த மூவுலகம்

நன்கு உணர் கேவல நாயகரே முன்பு நான் உடைய

என் குணம் யான் பெற எம் பெருமானை இரக்கின்றதே - திருநூற்றந்தாதி- 36

இதன் பொருள்

இந்த மூவுலகத்தின் முக்காலத்தின் மாற்றங்களையும் செயல்களை ஒருங்கே ஒரே சமயத்தில் அறியக்கூடிய அறிவனே. பொன்னையும் பொருளையும் எனக்கு அருள்க என்று நான் உன்னை வணங்கவில்லை; மாசு அற்ற உயர் பண்புகளை உன்னை போலவே நான் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் உன்னை வணங்கி

 நீ உரைத்த நல்லறங்களை நினைவு கூர்கிறேன்.

நீ பெற்றுள்ளதை யானும் பெற நல்ல வழிகாட்டியாய் விளங்குகிறாய்.

ஒருவன் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனே காரணம்; கடவுள் அல்ல என்கிறது சமணம்.

நன்னிலைக் கண் தன்னை நிறுப்பானும் தன்னை

நிலை கலக்கி கீழிடுவானும் நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத்

தலையாகச் செய்வானும் தான் --நாலடியார் 248

தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும் - தேவர்

தன்னின் பிறிதில்லை தெய்வம் - முனைப்பாடியார்

ஒவ்வொரு உயிரும் இறைநிலை எய்தற்குரிய தகுதியைப் பெற்றுள்ளது. தீர்த்தங்கரர்கள் எனப்படுவர், பிறர் போலவே தாய் வயிற்றில் பிறந்து பின்னர் படிப்படியாக தனது ஆன்மீக சாதனையால் உயர்ந்த நிலையை அடைந்தார்கள். சமணத்தின் கடவுள் அனைவருமே மனிதர்களாகப் பிறந்தவர்களே. பிற எந்த அயல் ஆற்றலும் இந்த கடவுள் தன்மையைப் பெறும் ஆற்றலை தரவும் முடியாது; தடுக்கவும் முடியாது தன்னைத்தானே உயர்நிலையில் உயர்த்திடவும் தன்னைத் தானே அழுத்திட முடியவும் அந்த உயிருக்கு தான் ஆற்றல் உள்ளது என்பது சமணம்.

(பேராசிரியர் முனைவர் கனக அஜித தாஸ், மாநிலக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். முக்குடை சமண இதழின் ஆசிரியர்)

ஜூன், 2023