பிரபஞ்சனின் சந்தியா, நான் கல்லூரி காலங்களில் மிகவும் ரசித்த சிறுகதை. அந்நாள் ‘தாய்' இதழில் வார வாரம் வெளியான அச்சிறுகதை கோற்கப்படும் போது ஏற்படும் தொடர்கதைத் தோற்றமே ‘சந்தியா' வின் அழகு. என் பதின்ம பருவத்தில் ‘சந்தியா' என்னுள் ஊட்டிய மாற்றங்களை எளிதில் விவரிக்க இயலாது.
இன்று நான் எங்கும் அணிந்து செல்லும் முகம் உருவானதில் பெரும் பங்கு ‘சந்தியா' உடையதென்றால் மிகையாகாது. சந்தியாவாக வாழ நினைத்து என் வாழ்க்கையை நான் உருவாக்கிக் கொண்டதின் பின்னனியில் சில காரணங்களுண்டு. பிரதானமாகக் கூற வேண்டுமானால் சந்தியா மனதில் தோன்றிய கருத்துகளை மட்டுமே பேசுபவள், பொய் கூற விரும்பாதவள். தவறான மனிதர்களை தன்னோடு
சேர்த்துக்கொள்ளாதவள்.
நான் விரும்பும் வாழ்க்கையை ஒரு எழுத்தாளராக தான் வாழ வேண்டும் என்பதை சந்தியாவைப் பார்த்து தான் முன்னெடுத்துக் கொண்டேன். பாலின பிரச்சனைகளை கையாள்வதாய் இருக்கட்டும், ஆண்களோடு நட்பு கொள்ளும் போது தன் உடலை ஒரு பொருட்டாக கருதாமல் இருப்பதும் அவள் பாலின பேதமற்ற உலகை முன்னெடுத்துச் செல்வதைக் காட்டுகிறது.ஆண் பெண் உறவுநிலை வெற்றிக்கு இதுவே முக்கியான காரணம் என்று நான் சொல்வேன். ஆண்கள் நிறைந்த உலகில் இத்தனை தூரம் போராடி என் முகத்தையும் என் பெயரையும் பல கயமைகளையும் கடந்து காட்ட முடிகிறதென்றால் நேர்மை ஒன்றை மட்டும் துணையாய் கொண்டு அத்தனை பிரச்சனைகளையும் கடந்து செல்ல முடிகிறதென்றால் அதன் காரணம் பிரபஞ்சனின் சந்தியா மட்டுமே.
வாழ்வில் இழப்புகளும் பிரிவுகளும் பல கண்டுவிட்டேன். வாழ்க்கை பற்றின என் கனவுகள் தவுடுபொடியாகி வாழ்க்கை வேறு ஒரு வாழ்வை என் மீது சுமத்தும் பொழுது அதை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு கிடைத்தது பிரபஞ்சனின் சந்தியா விடம் இருந்து தானென்று உரக்கச் சொல்வேன்.
ஜூலை, 2018.