1989இல் ‘ரே - சினிமாவும் கலையும்' எனும் எனது புத்தகத்தை நான் எழுதி சென்னையில் ரஷ்ய கலாசார மையத்தில் பாலு மகேந்திரா, ஜெயகாந்தன் ஆகியோரை வைத்து வெளியிட்டேன். அப்போது சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி சினிமாவை நாங்கள் திரையிட்டுக் காட்டினோம். அப்போது அதன் பார்வையாளர்களில் ஒருவராக இருந்த கவிஞர் புவியரசு என்னிடம் கேட்ட கேள்வி இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. ‘ பதேர் பாஞ்சா லியின் அழகியல் மொழி பற்றி ஒரு முழுநூலை
நீங்கள் ஏன் எழுதக் கூடாது?'
இந்தியாவின் ‘புதுசினிமா' 1955 இல் வங்காளத்தைச் சேர்ந்த சத்யஜித் ரே (1921 & 1992) தனது ‘பதேர் பாஞ்சாலி'யை வெளியிட்டதிலிருந்து தோன்றியது என்று சொல்வது மிகை அல்ல. 11 சர்வதேச விருதுகளைப் பெற்ற பதேர் பாஞ்சாலி புது சினிமா உருவாக்கத்தில் நடப்பட்ட ஈசானிய மூலைக் கல் என்றே சொல்லலாம்.
சாந்திநிகேதனில் ஓர் ஓவியராகப் பயிற்சி பெற்ற
சத்யஜித் ரே 1896 இலிருந்து இந்திய மண்ணில் வேர் கொண்டு வேகமாக வளரத் தொடங்கிய இந்திய
சினிமாவின் பெரும்பகுதி வெறும் கனவுத் தொழிற்
சாலையாக இயங்கி வந்திருப்பது குறித்து கவலைப்பட்டார்.
சாந்தினிகேதனில் ரே ஒரு மாணவராக இருந்தபோது மிகவும் தனிமையானவராகவும், சதா காலமும் மேற்கத்திய சாஸ்த்ரீய இசையில் மூழ்கிக் கிடப்பவராகவும் இருந்தார் என்று அவர் காலத்திய சாந்திநிகேதனில் இருந்த ஓவியர் பெருமாள் தா என்னிடம் சொல்லியிருக்கிறார். ரே தனது
சினிமாவில் ஒவ்வோரு சிறு நுட்பத்திலும் கவனம் எடுத்துக் கொள்வதற்குக் காரணம் தான் சிறுவனாக இருந்தபோது மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது கையெழுத்துப் புத்தகத்தில் எழுதிக் கொடுத்த நாலுவரி கவிதைதான் என்று சொல்கிறார்.
1921இல் வங்காளத்தில் பிறந்த இந்த இயக்குநர், தனது முதல் படம் தொட்டு இன்று வரை தனது 25 ஆண்டுகளில் 25 படங்கள் தயாரித் தார். 1967ல் ரே பற்றி டைம் இதழ் எழுதியது: ‘இந்த இந்தியியக்குநர் தனது காமிரா கருவியின் லென்ஸைக் கழற்றி விட்டு வாழ்க்கையை பிலிம் சுருள் நேரடியாகத் தொடச் செய்து விடும் வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார்.'
1949இல் சத்யஜித் ரே தனது பதேர் பாஞ்சாலி படத்தை பாதி எடுத்து விட்டு பணப் பற்றாக் குறையால் நிறுத்தி வைத்திருந்தார். அச்சமயம் ‘ரிவர்' படத்தை எடுக்க கொல்கத்தா வந்திருந்த பிரெஞ்சு இயக்குநர் ழான் ரெனுவாவைச் (Jean Renoir, French Flim maker, 1894-1979 )சந்தித்தார். ஒருநாள் ரே தான் பாதி எடுத்திருந்த படத்தைக் கொண்டு சென்று அவருக்குப் போட்டுக் காட்டினார். ரெனுவா படத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டு விட்டார். உடனே மீதிப் படத்தை முடித்து உடனுக்குடன் பிரான்சில் நடக்கப்போகும் கான் உலக சினிமா போட்டிக்கு அனுப்பச்
சொன்னார். ரேவுக்கு கையும் காலும் ஓடவில்லை. கையில் பணம் இல்லை. சிறுவன் சிறுமியாக நடித்தவர்கள் வளர்ந்து விட்டிருப்பார்களோ, கிழவியாக நடித்தவர் செத்திருப்பாரோ என்ற பயம். ரயில் காட்சி பாதி எடுத்த நிலையில் காஷ் எனும் கோரைப்புற்களை வெட்டி எருமைக்குப் போட்டு விட்டார்கள். அடுத்த கோரைப்புல் வளரும் வரை காத்திருந்தார். இன்ஷூரன்ஸ் கடன் வாங்கினார். பொதுப்பணித் துறை பணம் கொடுத்தது. படத்தை முடித்தார் ரே. இரவும் பகலுமாய் உழைத்த ரே படச்சுருளை ‘பேன் ஆம்' விமான சர்வீஸ் கவுன்டரில் பிரான்ஸ் அனுப்பக் கொடுத்து விட்டு அந்த கவுன்டரிலேயே களைப்பு மிகுதியில் தூங்கி விட்டார்.
1956ல் இவரது முதல் படமான பதேர் பாஞ்சாலி கான்ஸ் உலகப்பட விழாவில் திரையிடப்பட்ட போது, ‘கவிதை மயமான சினிமாவின் உன்னதமான புதிய படைப்பு' என்று வர்ணிக்கப் பட்டது. அதன் பிறகு இவரது படங்கள், வெனிஸ், மணிலா, மாஸ்கோ, ஜப்பான்,
ஸ்வீடன் என்று உலகம் முழுவதும் விருதுகள் பெறத் தொடங்கின. சத்யஜித் ரே தனது படைப்பில் திரைக்கதை, வசனம் என்று தொடங்கி உடை அலங்காரம், கலை, காமிரா, இசை படத்தொகுப்பு என்று அனைத்தையும் தானே செய்தார். பிரெஞ்சுக்காரர்களால் ‘புதிய அலை சினிமா' என்று அழைக்கப்படும் சினிமா கோட்பாட்டின்படி தனித்துவத்தோடு இயங்கும் முறையினால் ரேயின் திரைப்படங்களுக்கு அவர் மட்டுமே பொறுப்பாளி என்றும் தனது என்று சொல்லிக் கொள்ளும்படியான ஒரு சினிமா மொழியை அவர் உருவாக்கிக் கொண்டார்.
சினிமாவில் தோன்றும் ஒரு பொருள் அதற்கு அடுத்தடுத்த காட்சிகளில் காட்டப்படும் பொருள்களோடு சேர்ந்து ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. சினிமா மொழியில் பொருள்களும், மனிதர்களும், விலங்குகளும், செடி கொடிகளும், குறியீடுகளாக இயங்குகின்றன. இந்த குறியீட்டு உலகம் மனிதனின் நினைவுலகம் கனவுலகம் ஆகிய இரண்டையும் சார்ந்து இயங்குவது ஆகும்.
இதற்கு உதாரணமாக 'பதேர் பாஞ்சாலியில்' ஒரு இடத்தைக் குறிப்பிடலாம். ஒரு காட்சியில் நிலையாக இருக்கும் ஒரு நீர் நிலையில் எழுத்தாணிப் பூச்சிகள் நிறைந்திருப்பதைக் காட்டுவார். இதற்கு அடுத்த காட்சியில் பெரும் மழை வரும். இந்த காட்சியை நான் பலமுறை திரையில் கண்டிருந்த போதும், பெரும்பாலும் நகரம் சார்ந்த பின்னணி கொண்ட எனக்கு இது ஒரு வீணான காட்சியாகவே தோன்றியது. ஒருமுறை இதே சினிமாவை கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுடன் அமர்ந்து பார்த்த போது அவர் சிலாகித்துச் சொன்னார், பெரும் மழை வரும் முன்னர் இந்த எழுத்தாணிப் பூச்சிகள் திடீரென்று தோன்றும். முதல் காட்சியில் இதைத்தான் ரே உணர்த்துகிறார் என்று கி.ரா. சொன்னார். எனவே
சினிமாவின் மொழி என்பதில் குறியீடுகள் அதிக செறிவும், பன்முக அர்த்தமும் கொண்டவையாக உள்ளன
தற்கால சினிமாவின் ஐந்து முக்கிய கூறுகளிலும் ரே தனக்கென ஒரு தனிவழியை வைத்திருந்தார். இதைத்தான் ரேயின் சினிமாவின் அழகியல் மொழி என்று நாம் குறிப்பிடுகிறோம்.
1.திரையில் நகரும் காட்சி ரூபங்கள்: ரே கவிதைத் தன்மை வாய்ந்த எண்ணற்ற காட்சிகளை தனது படங்களில் வைத்தார்.
2. காட்சியுடன் ஒலிக்கும் வசனங்கள்: ரே வசனங்களை ரத்தினச் சுருக்கமாகப் பயன்படுத்தினார்.
3.காட்சியின் பின்னணிக் காட்சி : இசையை ரே வார்த்தைகளுக்கு பதிலாகப் பயன்படுத்தி இருக்கிறார். இதற்காகவே இந்திய வணிக
சினிமாவில் அதிகம் கேட்கப்பட்டிராத பண்டிட் ரவிசங்கரின் இசையைப் பதேர் பாஞ்சாலியில் பயன்படுத்தி இருக்கிறார். இப்படத்தில் தனது மகள் துர்கா இறந்து போன செய்தி தெரியாத ஹரிஹர், ஊரிலிருந்து மகளுக்காக தான் வாங்கி வந்த புடவையை மனைவியிடம் காட்டுகிற காட்சி, அதுவரையிலும், துக்கத்தைப் புடவை முக்காட்டில் மறைத்திருக்கும் மனைவி சர்போஜயா அவர் காலடியில் வீழ்ந்து அழுகிற போது இசையே அவளது ஒப்பாரியாகி விடுகிறது
4. இசை தவிர்த்த பிற பின்னணி ஓசைகள்: இந்த ஓசைகளை வேறு சில இசைக்கருவிகள் மூலமாகப் போலச் செய்யாமல் உண்மையான ஓசைகளையே பதிவு செய்து பயன்படுத்தி இருக்கிறார்.
5. திரையில் தோன்றும் வரிவடிவ எழுத்து:
தனது சினிமாக்களின் பெயர்கள், நடித்தவர்கள், உதவியாளர்கள் பற்றிய பெயர்கள் ஆகியவற்றை திரையில் காட்டும் வரிவடிவத்திலேயே பல புதுமைகளைச் செய்திருக்கிறார். ஆங்கில மொழிக்கு ‘ரே ரோமன்' என்கிற ஒரு தனியான புதிய வரிவடிவத்தையே உருவாக்கிக் கொடுத்தவர் இவர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
புதிய சினிமா யதார்த்தத்தை உருவாக்குவதற்கு பழகிப் பழகித் தேய்ந்து போன வெளிப்பாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக இருந்தார். ஒரு கதையை எழுதுகிறோம் என்றால் வார்த்தைகளின் வரிசைகள் கொண்ட அகராதிகளை ஒருவன் நாட முடியும். ஆனால் தனது சினிமா மொழியில் இதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று ரே கூறுகிறார். ஒருவனின் உயிர் பிரிவதைக் காட்டுவதற்கு மெழுகுவர்த்தி அணையும் காட்சியைக் காட்ட தனக்கு மனமில்லை என்று ஓரிடத்தில் எழுதுகிறார். எனவே அதற்கேற்ற புதுமையான காட்சிகளை சதா தேடிய வண்ணமே இருந்தார் அவர்.
சத்யஜித் ரே தனது சினிமாவில் யதார்த்தம் என்பது வெறுமனே வாழ்க்கையைப் பிரதி எடுப்பது அல்ல என்று புரிதலுடன் இயங்கினார். அவர் இசையும், சினிமாவும் மிக அளவில் ஒத்த குணாம்சம் கொண்டவை என்பதை ஒரு நேர்காணலில் வலியுறுத்தினார். தனது சினிமாவுக்கான பிரதியைத் தயாரிக்கும் போதே இசையுடன் சேர்ந்தே அவர் தனது கதைகளைக் கற்பனை செய்தார் என்று கூறுவதுண்டு. தனது சினிமா மொழியை உருவாக்கிய போது அதற்கான இசை அமைப்பையும் அவரே மேற்கொண்டதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.
அவரது பிரத்யேக சினிமா மொழி சினிமா பற்றிய அவரது படிப்பறிவினால் நேர்ந்தது அல்ல. ‘ஒருநாள் காமிராவுடனும் நடிகர்களுடனும் வேலை செய்வது என்பது சினிமா பற்றிய பன்னிரெண்டு புத்தகங்கள் கற்றுக் கொடுத்ததைவிட அதிகமாகக் கற்றுத் தந்தது' என்று அவர் ஒரு முறை கூறினார்
‘புதுசினிமா' தயாரிக்கும் ஒரு தலைமுறையும், அதற்கான புதிய பார்வையாளர்களையும் அதற்கென தனியான அழகியலையும் உருவாக்கியதில சத்யஜித் ரேயின் பங்கு மறுக்க முடியாதது.
டிசம்பர், 2020.