சிறப்புப்பக்கங்கள்

சட்டம் சொல்வதென்ன?: வழக்கறிஞர் கருத்து

வசந்தகுமார்

தமிழ்நாடு கட்டிட வாடகை மற்றும் குத்தகை விதிமுறைச் சட்டத்தின்  படி  வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இருவருக்கும் சட்ட ரீதியான வரைமுறைகள் மற்றும் பாதுகாப்புகள் உண்டு. 

வாடகைதாரரும் உரிமையாளரும் சட்ட விதிமுறைகளின்படி ஒப்பந்தம் செய்து அதைப் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் குடியிருப்பது தொடர்பாக இருவருக்கும் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அதை அவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி வாடகைதாரர் வாடகையை தவறாமல் செலுத்த வேண்டும். அப்படி சரியாக வாடகை செலுத்தாத வாடகைதாரர் மீது பிரிவு 1021ன் படி உரிமையாளர் வழக்கு தொடர முடியும். அதே போல வாடகை வாங்க மறுக்கும் உரிமையாளர் மீது பிரிவு 85ன் படி வாடகைதாரர் வழக்கு தொடர முடியும். 

உரிமையாளர் தொடர்ச்சியாக வாடகை வாங்க மறுத்தால் வாடகைதாரர் அதையும் சட்டப்படிதான் எதிர்கொள்ள வேண்டும். முதலில் வாடகையை வீட்டு உரிமையாளரின் பெயரில் வரைவோலை/பணவிடை மூலம்  அனுப்ப வேண்டும். அதைப் பெற்றுக்கொள்ளவில்லை எனில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகி வாடகைப் பணத்தைச் செலுத்தலாம். நீதிமன்றம் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும். அடுத்து வாடகைதாரர் ஒப்பந்தத்தை  மீறி அல்லது உரிமையாளர் அனுமதி இல்லாமல் வீட்டை வசதிக்கேற்ப மாற்றி அமைப்பது  கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் மீது வழக்கு தொடர்ந்து அதற்கான இழப்பீட்டைப் பெற முடியும். வீட்டு உரிமையாளர் தனது பழைய வீட்டைப் புதுப்பிக்க வேண்டி அல்லது இடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டி வாடகைதாரரை வெளியேற்ற வேண்டுமானால் ஒப்பந்தத்தில் உள்ளபடி வாடகைதாரருக்கு நோட்டீஸ் அளித்து, கால அவகாசம் கொடுத்தபின்புதான் வெளியேற்ற முடியும். அவ்வாறு வாடகைதாரர் காலி செய்ய மறுக்கும்போது உரிமையாளர் நீதிமன்றத்தை அணுக முடியும்.  மேலும் வீட்டின் உரிமையாளர் மாறும் போது அல்லது உரிமையாளர் இறந்துவிட்டாலோ வாடகை செலுத்துவது தொடர்பான குழப்பங்கள் எழும். அப்போதும் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகி சட்டப்பிரிவு 93ன் படி வாடகையைச் செலுத்தலாம். முறையான வாரிசுதாரர் யார் என்று நீதிமன்றம் முடிவு செய்தபின் வாடகையை வழக்கம்போல செலுத்தலாம். 

வாடகைக்கான ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். வீட்டின் உரிமையாளர் மாறும் போது பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி வாடகையை செலுத்த வேண்டும். இல்லையெனில் வாடகைதாரருக்கு சட்டரீதியான சிக்கல்கள் எழும்போது நீதிமன்றம் உதவி செய்ய முடியாது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாடகைதாரர்கள் இருக்கும்போது அவர்களால்  தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது வாடகைதாரர்களுக்கு வீட்டு உரிமையாளரால் தொந்தரவு ஏற்பட்டாலோ சட்டப்பிரிவு 10ன் படி வழக்கு தொடர முடியும்.

உரிமையாளர் முறைப்படி நோட்டீஸ் அளித்து வீட்டை காலி செய்யச் சொன்னாலும் அந்த கால அவகாசத்தை நீட்டிக்க சட்ட விதிகளில் இடமுண்டு. உதாரணமாக இன்னும் இரண்டு மாதத்தில் வீடு காலி செய்ய உரிமையாளர் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டால் குழந்தைகளின் கல்வி/பள்ளி மாறுதல் போன்ற நியாயமான காரணங்களைச் சுட்டிக்காட்டி வாடகைதாரர் ஆறு மாத காலம் வரை வீடு காலி செய்யாமல் இருக்க சட்டத்தில் வழியுண்டு. இதுவே வணிக ரீதியான வாடகை/குத்தகைதாரர்களுக்கும் பொருந்தும்.  

வழக்கறிஞர் வசந்தகுமார், சந்திப்பு : சரோ லாமா

மே, 2018.