இசை உலகில் போட்டிகளும் பொறாமைகளும் சகஜம். புறக்கணிப்புகள் இயற்கை. புழுதி வாரித் தூற்றல்கள் வழக்கம். ‘அவர் என்ன பாடவா செய்கிறார்? எருமை கனைப்பதுபோலச் சத்தம் எழுப்புகிறார்’ என்று மகா மேதையான எம்.டி.ராமநாதனை இளப்பமாகச் சொன்ன இசைக் கலைஞர்கள் கொஞ்சமல்ல.பெண்களுக்கு வாசிக்க மாட்டேன் என்று பாலக்காடு மணி ஐயர் விரதமிருந்தார். சம்பந்தி டி.கே.பட்டம்மாளுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அளித்தார். தியாகராஜ ஆராதனை விழா மேடையில் தமிழ் கீர்த்தனை பாடினார் எம்.எம் தண்டபாணி தேசிகர். அவர் பாடி முடித்ததும் மேடை தீட்டாகி விட்டது என்று ‘புண்யாகக் கர்மங்கள்’ நடத்திய கதையும் உண்டு. வயலினைப் பக்க வாத்தியக் கருவியாக மட்டும் கருதாமல் தனி இசைக் கருவியாக மதிக்க வேண்டும்;வயலின் இசைக் கலைஞருக்கும் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக லால்குடி ஜெயராமன் மியூசிக் அகாடமியில் நுழையாமலிருந்தார். ‘யேசுதாஸ் என்ன பாடறான்? சூத்திரனுக்கு சுருதி சுத்தமான சங்கீதம் வர்றதாவது?’ என்று தூற்றிய சம்பவங்களும் உண்டு. சின்னதும் பெரிசுமான இந்த அக்கப் போர்களுக்கும் நியாயமான மோதல்களுக்கும் இடையில் சங்கீதம் பிழைத்து வாழ்ந்தது; வாழ்கிறது.
இசை மீது கொண்ட அக்கறை காரணமாக மட்டுமே களத்திலிறங்கி யுத்தம் செய்தவர் வீணை வித்துவான் எஸ்.பாலசந்தர். இரண்டு சந்தர்ப்பங்களில் போர்க் கோலம் பூண்டார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியவர்களுக்குச் சமமாக திருவிதாங்கூர் அரசர் சுவாதி திருநாள் கொண்டாடப் பட்டதை மூர்க்கமாக எதிர்த்தார். சென்னை மியூசிக் அகாடமியில் சுவாதி திருநாளின் உருவப் படத்தை மும்மூர்த்திகளின் வரிசையில் வைப்பதற்குக் கண்டனம் தெரிவித்தார். சுவாதி திருநாள் கலைகளின் ஆர்வலர். புரவலர். அந்த நிலையில் ஆர்வக் கோளாறால் சில கீர்த்தனைகளை உருவாக்கி வைத்திருக்கிறார். ஆனால் அவை மும்மூர்த்திகளின் படைப்புகளுக்கு நிகரானவையே அல்ல என்பது பாலசந்தரின் ஆட்சேபம். ஸ்வாதி திருநாளை வாக்கேயகாரராக முன்வைத்த செம்மங்குடி சீனிவாசஅய்யரை உண்டு இல்லை என்று தட்டாமாலை சுற்ற விட்டார். திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் விசுவாசியாக இருந்த செம்மங்குடியும், தான் சொன்ன கருத்தை நிறுவுவதற்காக ஆனவரை போராடினார். அரச குடும்பத்தின் ஆதரவும் அவருக்கு இருந்தது. சுவாதி மகாராஜாவின் மேதைமையை உலகறியச் செய்யும் நோக்கில் ஒரு புத்தகத்தையும் எழுதினார். அதை இந்திய அரசின் ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ வெளியிட்டது. பாலசந்தர் தனது ஆக்கிரமிப்பு எல்லையை டில்லிவரை நீட்டினார். ஓர் அரசு நிறுவனம் பொய்யைக் கொலுபீடத்தில் அமர்த்த உதவலாமா என்று வக்கீல் நோட்டிஸ் விட்டார். அரசு நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. தனது தரப்பை வலியுறுத்தி ‘ஒரு பகிரங்கக் கடிதத்தை’ சிறு புத்தக வடிவிலும் வெளியிட்டார். சுவாதி திருநாள் மகாராஜா ஜனநாயக நாட்டின் நீதி மன்றத்தில் விசாரணைக்கு உள்ளானார்.
சுவாதி திருநாள் ஒரு மகாராஜா. கலைகளின் ஆதரவாளர். எல்லாக் கலைஞர்களையும் அரசவைக்கு அழைத்துச் சிறப்புச் செய்தவர். பல கலைஞர்களை அரண்மைனையிலேயே வசிக்கச் செய்து கலைகளைப் பேணினார். அப்படித்தான் இசைக் கலைஞர்களையும் பராமரித்தார். அவர் எழுதியவை என்று சொல்லப்படும் கீர்த்தனங்கள் உள்ளிட்டவை அப்படிப் பராமரிக்கப்பட்ட கலைஞர்களின் பங்களிப்பு. அவரே இயற்றியதாகச் சொல்லப்படும் சாகித்தியங்களுக்கு இசை வடிவம் கொடுத்தவர்களும் அந்தக் கலைஞர்களே. எனவே மைனர் வாக்கேயகாரரான சுவாதியை மகான்களான மும்மூர்த்திகளின் வரிசையில் வைக்கக் கூடாது என்பதுதான் வீணை பாலசந்தரின் வாதம்.
“சுவாதி திருநாளின் சங்கீத இமேஜ் என்பது பிரச்சாரம் செய்யப்பட்ட சாதாரண பொருள், ஒரு மோசடி, ஒரு மாயை, ஒரு சூது, திட்டமிட்ட ஏமாற்று வேலை, நமது கண்களுக்கும் காதுகளுக்கும் புரிந்துள்ள தீயச் செயல்.... இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது” என்று புத்தகத்தின் முன்னுரையில் தெளிவு படுத்தியிருந்தார். (பக்கம் - 314, வீணையின் குரல்: எஸ். பாலசந்தர் - ஓர் வாழ்க்கை சரிதம் , ஆசிரியர்: விக்ரம் சம்பத் -தமிழில் வீயெஸ்வி- காலச்சுவடு பதிப்பகம்). நீண்ட காலம் நடந்த இந்த யுத்தத்தில் பாலசந்தர் தனிப்படையாக நின்று போராடினார். அவரது திடீர் மரணத்துடன் அந்த யுத்தம் முடிவே காணாமல் முடிவடைந்தது.
இந்த மோதலில் சுவாரசியமான ஒரு உண்மை. எந்த சுவாதி திருநாளின் படத்தை வைக்கக் கூடாது என்று வீணை பாலசந்தர் ஆவேசமாகப் போராடினாரோ அந்த ஓவியத்தை வரைந்த எஸ். ராஜம், பாலசந்தரின் சகோதரர். அவரும் மகத்தான பாடகர்.
பாலசந்தர் நடத்திய இன்னொரு இசைப் போர் டாக்டர்.எம். பாலமுரளிகிருஷ்ணாவுக்கு எதிரானது.
சங்கீத வித்வத் சபையின் (மியூசிக் அகாடமி) சங்கீத கலாநிதிப் பட்டம் பெற்று வருடாந்தர இசை விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசிய பாலமுரளி கிருஷ்ணா, தனது உரையில் அவராகக் கண்டு பிடித்த ராகங்களைப் பற்றியும் அவரே உருவாக்கிய ராகங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். உரையை இடையே நிறுத்தி விட்டு மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம் ‘நான் புதிய ராகங்களைக் கண்டு பிடித்திருக்கிறேன். அதற்குத் தருவதாகச் சொல்லப்பட்ட பரிசுத் தொகையை அரசு இன்னும் எனக்கு வழங்கவில்லை’ என்று முறையிட்டார். இதைக் கேள்விப்பட்ட பாலசந்தர் கொந்தளித்து விட்டார். மஹதி, சுமுகம், சர்வஸ்ரீ, ஓம்காரி போன்ற புதிய ராகங்களைத் தான் கண்டு பிடித்திருப்பதாகவும் ஹம்சவிநோதினி, பிரதி மத்யமாவதி, ரோஹிணி, வல்லபி ஆகிய ராகங்கள் தனது சொந்தக் கண்டு பிடிப்புகள் என்றும் குறிப்பிட்டிருந்தார் பாலமுரளி. “இதெல்லாம் வடிகட்டின பொய். இந்த ராகங்கள் எல்லாம் பாலமுரளி கிருஷ்ணா பிறப்பதற்குப் பல வருடங்களுக்கு முன்பே இருந்து வருபவை. அதைப் பற்றிச் சொல்லும் நூல்களும் இருக்கின்றன. தன்னுடைய சரக்கு என்று பாலமுரளி உரிமை கொண்டாடும் ஹம்சவிநோதினி ராகம் ‘சங்கீத சந்திரிகை’ என்ற தமிழ் நூலில் குறிப்பிடப்படுகிறது. அதே போன்றதுதான் மற்றவையும்” என்ற எதிர்வாதத்துடன் களமிறங்கினார் பாலசந்தர். இரண்டு பாலர்களும் முட்டி மோதிக் கொண்டார்கள். பாலசந்தரை முட்டாள், மலினமானவர் என்று பாலமுரளியும் பாலமுரளியை மாஸ்டர் கிரிமினல் என்று பாலசந்தரும் ‘பாராட்டி’ மகிழ்ந்தார்கள். இந்த அபஸ்வர ஜுகல்பந்தி நீண்டு கொண்டே இருந்தது. இசையுலக நாட்டாமையினர் சிலர் தலையிட்டதன் விளைவாக ஒரு நிபுணர் குழுவிடம் வழக்கு ஒப்படைக்கப் பட்டது. சர்ச்சைகளும் ஆய்வுகளும் நடந்தன. ‘இந்த ராகங்கள் பாலமுரளியின் சொந்தக் கண்டுபிடிப்புகள் என்று சொல்ல முடியாது’ என்று நிபுணர் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஸ்ரீபாத பினாகபாணி ( பிரபல பாடகி சின்மயியின் தாத்தா) எஸ். பாலசந்தருக்கு ‘தீர்ப்பை’த் தெரிவித்தார். வெற்றியை பாலசந்தர் பத்திரிகையாளர்களுக்குவிருந்து அளித்துக் கொண்டாடி மகிழ்ந்தார். அவமதிக்கப்பட்ட பாலமுரளி கிருஷ்ணாவின் கோபம் பல திசைகளிலும் திரும்பியது. குறிப்பாக மியூசிக் அகாடமியின் துணைத்தலைவராக இருந்த செம்மங்குடி சீனிவாச அய்யர் தனக்கு மானக்கேடு ஏற்படுத்தியதாகவும் நஷ்ட ஈடாக இரண்டு லட்ச ரூபாய் அளிக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். சங்கீத உலகத்தின் கௌரவத்தைக் காப்பாற்றும் அக்கறைகொண்ட ஒருவர் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.வழக்குத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இது நடந்த சில நாட்களுக்குப் பின்னர் செம்மங்குடியின் கச்சேரி ஒன்றும் நடைபெற்றது. அன்றைய கச்சேரியில் அவருக்குப் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தவர் டாக்டர். எம். பாலமுரளி கிருஷ்ணா. அவர் வயலின் இசையிலும் நிபுணர்.
டிசம்பர், 2013