சிறப்புப்பக்கங்கள்

கோவில் கொண்ட மகளிர்

பாரத தேவி

1. ராக்காச்சி

ராக்காச்சிக்கு ஐந்து தங்கைகள்.  இவள்தான் வீட்டுக்கு மூத்தவள். அவள் அய்யா ஊருக்குள் மரம் வெட்டும் வேலைக்குப் போவார். இவளும் அய்யாவுடன் போய் மரம் வெட்டுவாள். பெரிய பெரிய கிளைகளுடன்  கூடிய மரத்தை இவள் அய்யாவே வெட்டப் பயப்படுவார். ஆனால் ராக்காச்சி வாயில் அரிவாளை கவ்விக்கொண்டு உச்சி மரத்தில் ஏறி தைரியமாக மரத்தை வெட்டுவாள். தன் அய்யாவுக்கு சமமான கூலியை ராக்காச்சி வாங்காவிட்டாலும் அதில் பாதி கூலியை வாங்கி விடுவாள்.

ஒரு நாள் அவள் அய்யா அய்யாவு மரம் வெட்ட போனபோது மரம் ஒடிந்ததில் கீழே விழுந்து செத்துபோனார், இப்போது குடும்பத்தை காப்பாத்த கூடிய பொறுப்பு ராக்காச்சியின் பொறுப்பாகிவிட்டது. இவள் பெண்ணாக இருந்ததால் யாரும் இவளை மரம் வெட்ட கூப்பிடவில்லை. ஒரு நாள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு விறகுக்குப் போனவள் புங்கமரத்தின் மீது ஒரு தேன் கூட்டைப் பார்த்தாள், மறு நாள் இரண்டு தங்கைகளை கூட்டிக்கொண்டு அந்த மரத்திற்கு வந்தவள் குளவி கூட்டிற்கு தீ வாசம் காட்டி குளவிகளை விரட்டி அடித்தாள். ஈ குளவியும், கடந்தைக்குளவியும் தான் கூடுகட்டி தேனை சேமித்து வைக்கும். செங்குளவிகள் கூடுதான் கட்டுமேயொழிய அவைகளால் தேனை சேமிக்க முடியாது. இதில் கடந்தை குளவிகள் கொட்டினால் உடனே மருத்துவம் பார்க்க வேண்டும்.இல்லாவிட்டால் உயிர் பிழைக்க முடியாது.

கீழே இருந்த தங்கைகளை இரண்டு கலயங்களை கயிற்றில் கட்டி விடச்சொல்லி மேலே ஏற்றினாள், இரண்டு கலயம் நிறைய தேனை நிரப்பி கீழே இறக்கி விட்டாள். இந்த தேனைப் பக்கத்திலிருந்த டவுனில் கொண்டுபோய் விற்றதில் நல்ல லாபம் கிடைத்தது. அன்றிலிருந்து  தேனெடுப்பதே அவள் தொழிலாகிவிட்டது.இரண்டு தங்கைகளோடும் இரண்டு கலயம்,சில சமயம் மூன்று கலயம் தேன் கிடைத்தாலும் கிடைக்கும். மலையை ஒட்டிய வனங்களில் குளவிகள் அடை அடையாக கூடு கட்டி தேனை பெருக்கியிருந்தன.  அதனால் ராக்காச்சி காட்டு வேலைக்கெல்லாம் போவதில்லை தேனெடுக் கத்தான் போய் வந்தாள். இதனால் எல்லோருக்கும் பசியாற உணவும் கிடைத்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள்.

இப்படி ராக்காச்சி வனத்தில் தேனெடுப்பது இருளாண்டிக்குப் பிடிக்கவில்லை, அவன் பண செல்வாக்கும், ஆள் செல்வாக்கும் உள்ளவன். மலையில் உள்ள பளியர்களை அரட்டி, மிரட்டி தன் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை தேனெடுக்க சொல்லி வியாபாரம் செய்து வந்தான். இப்போது ராக்காச்சி எவ்வளவு உயர்ந்த மரத்தில் கூட தேனடையை எடுத்து விடுகிறாளாதலால் பளியர்களுக்கு இவளுடன் போட்டி போட முடியவில்லை, தனக்கு கிடைக்க வேண்டிய தேனையெல்லாம் இவள் எடுத்துவிடுகிறாளே என்ற கோபத்தில் கொதித்துக் கிடந்தான் இருளாண்டி.

வழக்கம்போல் ஒரு நாள் தங்கைகளை கூட்டிக் கொண்டு வனத்திற்கு வந்து சேர்ந்தாள் ராக்காச்சி , வானத்தை எட்டும் உயரத்திலிருந்த அத்தி மரத்தில் குடந்தை குளவிகள் பெரிய கூடாக கட்டியிருந்தது, தங்கைகளிடம் கயிரையும் , கலயத்தையும் கொடுத்து மேல் நோக்கி சென்ற ஊனாக்கொடியைப் பிடித்து மரத்துக்கு ஏறிய ராக்காச்சி குளவிகளை விரட்டி விட்டு நாலுகலயம் தேனெடுத்து தங்கைகள் வீசிய கயிறு மூலமாக இறக்கிவிட்டாள், பிறகுதானும் ஊனாக்கொடியை பிடித்தவாறேஇறங்கினாள், இவள் மீது கோபமாயிருந்த இருளாண்டி மெல்ல பதுங்கியவாறு மரத்தில் ஏறி ஊனாக்கொடியை ‘புதிய சானைதீட்டிய அரிவாளால் அருத்துவிட்டான், ராக்காச்சி உயரே இருந்து கீழே விழுந்தாள் உயிர் போகும் நேரத்தில் தனக்கு ஒரு கோயில் கட்டி கும்பிட சொல்லிவிட்டு செத்துப்போனாள், இப்போது ராக்காச்சி தெய்வம் வனத்திற்கு காவல் மட்டுமில்லாமல் எல்லோருக்கும் அருள்பாலிக்கிறது.

2.கரடிப்பேச்சி

செம்பூரின் ஆற்றங்கரையில் பெரிய பெரிய நவ்வா (நாவல்) மரங்கள் காய்ப்பு காலத்தில்

சடை சடையாய் காய்த்ததில் நவ்வாப் பழங்கள் நிலம் தூந்து போய் தரையெங்கும் விழுந்து கிடந்தன. செம்மலைக்கு முதல் மனைவி

செத்து போனதால் இரண்டாந்தாரமாக வாக்கப்பட்ட வல்லி அலங்காரிக்கு மூத்தவளின் மகளான பேச்சியை பிடிக்கவே இல்லை.பேச்சி ஏழு வயது பெண்ணாக இருக்கும் போது அவள் அம்மா அம்மையில் குளிர்ந்துவிட்டாள். அதன் பிறகு தான் வல்லி அலங்காரியை செம்மலை இரண்டாந்தாரமாக மணமுடித்தார். பத்துவயதான பேச்சியை விடியற்காலையிலேயே நவ்வாப்பழம் பெறக்கிவரும்படி விரட்டி விடுவாள் சித்திக்காரி.

பேச்சியும் சித்தி அடிக்குபயந்து அந்நேரமே கனியை பெறக்க வந்துவிடுவாள். ஒரு கடாப்பெட்டி நிறைய பெறக்கி தூக்க முடியாமல் தூக்கி கொண்டு போவாள். அப்போது கூட கொஞ்சமா பழத்த பெறக்கிட்டு வந்துருக்கே என்று அடிப்பாள் அவள் சித்தி. இப்போது பேச்சிக்கு பதினைந்து வயது வீட்டு வேலையெல்லாம் அவள் தலையில் தான் விழுந்தது, அப்போது நாவல் பழத்தின் சீசன்வேறு.

அன்று கட்ட கட்ட உச்சி நேரம்(நடுச்சாமம்). அப்போதே வல்லி அலங்காரி பேச்சியை எழுப்பிவிட்டாள், அவள் கையில் இரண்டு கடாப்பெட்டியையும் தூக்கி கொடுத்ததோடு சீக்கிரம் இந்த ரெண்டு பொட்டி நிறைய பழத்தை பொறக்கி வை, நானு உன் அய்யாவ தூக்கிட்டு வரச் சொல்லுதேன், போ என்று விரட்டி விட்டாள், பேச்சிக்கு உறக்கம் கண்ணைப் பிடுங்கியது. சித்திப் பேச்சை தட்டமுடியாமல் ஆற்றங்கரைக்கு வந்தாள்.  அதற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை, அங்கேயே பொட்டிகளைப்போட்டு விட்டு மரத்து தூரில் படுத்து தூங்கிவிட்டாள், பழவாசனைக்கு வந்த கரடி ஒன்று பேச்சியை அடித்து கொன்றுவிட்டது, அவளுக்காக கோயில் கட்டி ‘கரடி பேச்சி' என்று ஊர்க்காரர்கள் இப்போது தெய்வமாக கொண்டாடி கும்பிட்டு வருகிறார்கள்.

3. வெட்டுடையாள் காளி

காளி இடையர்குல பெண். அவளிடம் முப்பது ஆடுகள் வரை இருந்தன. காளி தன் ஆடுகளை எப்போதும் வனத்தின் ஓரங்களில் தான் மேய்ப்பாள், அங்கே புற்கள் நிறைய இருந்ததால் ஆடுகள் வயிறு நிறைய புற்களை மேய்ந்துவிட்டுத்திரும்பும், காளி ஆடு மேய்க்கும் காலங்களில் வெள்ளையர்கள் மருது பாண்டி சகோதரர்களை பிடிக்க துப்பாக்கியோடும், வெடிகுண்டோடும் தீவிரமாக அலைந்தார்கள். மருது சகோதரர்களும் சும்மா இருக்கவில்லை, வனத்தில் ஒளிந்து கொண்டு கொரில்லா போர் முறை தந்திரத்தோடு அவ்வப்போது வனத்தை விட்டு வெளியே வந்து வெள்ளைக்காரர்களிடம் போரிடுவார்கள். தங்களால் முடிந்த வரை வெள்ளைக்காரர்களை கொன்றுவிட்டு மீண்டும் வனத்திற்குள் போய் ஒளிந்து கொள்வார்கள். வனங்களின் ஓரம் ஆடு மேய்க்கும் காளிதான் அவ்வப்போது மருது சகோதரர்களுக்கு வெள்ளைக்காரர்களின் வரவு பற்றி தெரிவிப்பாள்.

மருது சகோதரர்கள் வனத்திற்குள் ஒளிந்திருப்பதை கேள்விப்பட்ட வெள்ளைகாரர்கள் தாங்களும் வனத்தின் உள்ளே நுழைந்து அவர்களை கையோடு பிடித்துவிட வேண்டுமென்று வனத்திற்குள் நுழைந்தார்கள். அடர்ந்து இருண்டு கிடந்த வனத்தின் உள்ளேயே அவர்களால் போக முடியவில்லை.

செறித்தப்புதர்களில் மறைந்திருந்த சிறுத்தைகளையும்  சிங்கங்களையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த மிருகங்களோ எந்த அரவமும், சலனமும் இல்லாமல் இவர்களை பார்த்துவிட்டு குபீரென்று இவர்கள் மீது பாய்ந்து அவர்கள் துப்பாக்கியை எடுக்க கூட அவகாசம் கொடுக்காமல் அவர்களின் கழுத்தை குறிவைத்து தாக்கியது, அவர்களின் காலடியில் காட்டு நாய்களும்  நரிகளும் பாய்ந்து கடித்து குதறிய போது வெள்ளைக்காரர்களால் வனத்தின் உள்ளேயே போக முடியவில்லை, அதோடு தரையில் பெரிய பெரிய வேரோடு வனத்தை மறைத்து கிளைப்பரப்பி நின்ற மரங்களும் அந்த மரங்களிலிருந்து பச்சை அருவியாய் கீழ் இறங்கிய ஊனாக்-கொடிகளையும் பார்த்த வெள்ளைக்-காரர்களுக்கு வனத்துக்குள் ஊடுருவி மருது சகோதரர்களை தேட பயமாக இருந்தது, அதனால் வனத்திற்குள் போகாமலே திரும்பி வந்தார்கள்.

‘மருது சகோதரர்களை எப்படி பிடிப்பது ? என்று யோசித்த வர்களுக்கு ஒற்றர் படை மூலமாக ஒரு தகவல் வந்தது, அதாவது வனத்தின் அருகில் ஆடு மேய்க்கும் காளிக்கு மருது சகோதரர்கள் வனத்தினுள் ஒளிந்திருக்கும் இடமும், அவர்கள் தங்கும் இடத்தைப்பற்றியும் நன்றாக தெரியுமென்றும், சில நேரங்களில் இந்தக்காளியே அவர்களுக்கு உணவெடுத்து செல்வதாகவும் தெரிந்தது.

அன்றும் வழக்கம் போல் காளி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாள். வெள்ளைக்காரர்கள் நான்கு பேர் அவளிடம் வந்தார்கள். அவளை அழைத்து உனக்கு ஆடு மேய்ப்பதுதான் பிழைப்பா? என்று கேட்டார்கள் அவளும் ஆமாம் என்று சொன்னாள்.

உடனே வெள்ளைக்காரர்களும் நீ ஆடு மேய்க்கும் இந்த வனத்திற்குள் தான் மருது சகோதரர்கள் ஒளிந்து இருப்பதாக சொல்கிறார்கள், உனக்கு அவர்களைப்பற்றி அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைப் பற்றியும் தெரியுமா? என்று கேட்க காளியும் தைரியமாக கொஞ்சம் கூட பயப்படாமல் நன்றாக தெரியும் என்றாள் . இவள் இப்படி தைரியமாக சொன்னதில் வெள்ளைக்காரர்கள் அதிர்ந்து போனார்கள். பிறகு அவளிடம் நீ எங்களுக்கு அவர்களை

காட்டிக் கொடு நிறைய பணம் தாரோம், அரண்மனை போன்ற வீடு தாரோம், பணம் தோப்பு என்று நீ எதை கேட்டாலும் தருகிறோம், அப்படி நீ மட்டும் அவர்களை பற்றி சொல்லவில்லை என்றால் உன் தலை அரிவாளுக்கு பலியாகும், நல்லா யோசித்து வை நாங்கள் நாளைக்கு வருகிறோம், என்று சொல்லிவிட்டு போனார்கள்.

மறுநாள் வெள்ளைக்காரர்கள் சொன்னபடியே கையில் பள பளவென்று தீட்டிய அரிவாளுடன் வந்தார்கள். காளி அப்போதும் அங்கேயே தைரியமாக ஆடு மேய்த்து கொண்டிருந்தாள். இவர்கள் வந்ததும் என்ன காளி யோசித்து வைத்து விட்டாயா? என்று கேட்டதும் காளி நான் நன்றாக யோசிச்சிட்டேன். மருது சகோதரர்கள் இருக்கும் இடம் எனக்கு நல்லாவே தெரியும், அம்புட்டு எதுக்கு நானு அங்கே போய்க்கிட்டும், வந்துக்கிட்டுந்தேன் இருக்கேன். ஆனாலும் நீங்க எம்புட்டு பணம் கொடுத்தாலும், ஏன் இந்த ஊரையே எழுதி வெச்சாலும் கூட நானு அவங்க இருக்கும் இடம் பத்தி சொல்லமாட்டேன் என்று சொன்னாள். உடனே வெள்ளைக்காரர்களுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ஒருவன் கையில் அரிவாளை எடுத்தான் அப்போ உன் தலையை வெட்டுறதத்தவிர எங்களுக்கு வேற வழி தெரியல என்றவன் அரிவாளை ஓங்கினான்.

காளியும் தாராளமாக என் தலையை வெட்டிக்கோங்க ஆனா நானு மருது சகோதரர்கள் ஒளிஞ்சி இருக்கும் இடத்தை பற்றி மட்டும் சொல்லமாட்டேன் என்றாள். உடனே ஒருவன் அவள் தலையை வெட்டி வீசினான், கொல்லங்குடி என்ற ஊரில் வெட்டுடையாள் காளி என்ற பெயரில் அந்த சிறுமிக்கு கோயில் அமைந்துள்ளது.

ஏப்ரல், 2020.