சிறப்புப்பக்கங்கள்

கோமாளிகளாக மாற வேண்டும்!

சாரு நிவேதிதா

உலகில் அதிக எண்ணிக்கையில் சினிமா தயாரிக்கும் நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்து இருப்பது அமெரிக்கா அல்ல; இந்தியா. அதிலும் இந்திக்கு அடுத்த இடம் தமிழ். ஆனால் சினிமாவே ஒரு தேசத்தின் அரசியலையும் சமூக, கலாச்சார நிகழ்வுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான். அதே சமயம், இங்கேதான் சினிமா என்பது ஒரு கலையாக மாறாமல் மலினமான கேளிக்கைச் சாதனமாக மட்டுமே இருந்து வருகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். ஈரானில் ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால் அந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை அரசாங்கத் திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பிறகே எடுக்க முடியும். அப்படிப்பட்ட தேசத்தில் எடுக்கப் படும் படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பரிசுகள் பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரே சைஸி லான பிளாஸ்டிக் டப்பாக்களை உற்பத்தி செய்வது போல் ஆயிரக்கணக்கான படங் களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கும் தமிழில் இதுவரை ஒரு படம் கூட சர்வதேச அளவில் பேசப்படவில்லை.

பொலிவியா என்பது மிகச் சிறிய நாடு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் எடுக்கப் படுகிறது. கவனியுங்கள்; மீண்டும் சொல் கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம். அப்படி இருந்தும் அங்கே எடுக்கப்படும் படங்களை உலகம் பூராவும் உள்ள திரைத் துறைக் கல்லூரிகளில் பாடமாகப் பயின்று வருகிறார்கள். Jorge Sanjines என்ற பொலிவிய இயக்குனர் உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். ஆனால் ஆண்டு தோறும் நூற்றுக் கணக்கான படங்களை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலக அரங்கில் தோற்றுப் போவதன் காரணம் என்ன? அது மட்டும் அல்ல; குரங்கு வித்தையைக் கண்டு சிரிப்பது போல் தமிழ்ப் படங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் வெளிநாட்டவர். அதாவது, அவர்களுக்குத் தமிழ் சினிமா காமெடி பீஸ் ஆகி விட்டது. அதைக் கூட புரிந்து கொள்ளாத நாம் அவர்கள் சிரிப்பதைப் பார்த்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். 

உலக அரங்கில் நுழையவே முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம், தமிழ்

சினிமா ஹாலிவுட் சினிமாவையே தன்னுடைய முன்னோடியாகக் கொண்டது என்பதுதான். மணி ரத்னம் இதற்குச் சிறந்த உதாரணம். ஐரோப்பிய சினிமா என்பது பற்றியே தமிழ் இயக்குனர்கள் மறந்து விட்டார்கள். ஹாலிவுட்டும் ஹாலிவுட்டுக்கே முன்னோடியான அகிரா குரஸவாவும்தான் இவர்களது கனவாக இருந்தது.  ஆனால் ஹாலிவுட்டில் கூட மிக அற்புதமான கலைப்படைப்புகள் உருவாகி இருக்கின்றன. Alejandro González Iñárritu  போன்ற பல கலைஞர்கள் அங்கே உண்டு. மேலும், வர்த்தக  சினிமாவே பெரும் கலாசிருஷ்டிகளாக மாறி, வர்த்தக சினிமா என்ற பொது அடையாளத்தையே மாற்றியதும் அங்கே நடந்தது. உதாரணமாக Francis Ford Coppola இயக்கிய Godfather ஐ சொல்லலாம். ஆனால் தமிழில் இப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.   

சென்ற நூற்றாண்டில் மக்கள் இரவு பூராவும் விழித்திருந்து கூத்து பார்த்தார்கள். சலனப் படம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கூத்தின் இடத்தை அது பிடித்துக் கொண்டது. தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா காலத்துப் படங்களில் ஐம்பது அறுபது பாடல்கள் இருந்ததற்கு அதுதான் காரணம். பிறகு பாடல்களின் இடத்தை வசனம் பிடித்துக் கொண்டது. அதற்குக் காரணம், தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக இருந்த நாடகம். கருணாநிதி வசன கர்த்தாவாகப் புகழ் அடைந்தது அதனுடைய விளைவுகளில் ஒன்று. கருணாநிதிக்குப் பிறகு வசனங்களாலும் நாடகீயத் தன்மையினாலும் பிரபலம் அடைந்த ஒருவர் பாலச்சந்தர். ஆனால் பாலச்சந்தருக்கு முன்னால் பெரிதும் பேசப்பட்ட இயக்குனர் ஸ்ரீதர். கல்யாணப் பரிசு, தேன் நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, ஊட்டி வரை உறவு, காதலிக்க நேரமில்லை போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர். ஸ்ரீதருக்கு அடுத்து சொல்லக் கூடிய இயக்குனர் கே. பாலச்சந்தர்.

எழுபதுகளில் எம்ஜியார், சிவாஜி என்ற இரண்டு மாபெரும் ஆளுமைகள் தமிழ் சினிமாவில் அரசாட்சி செய்து கொண்டிருந்த போது தன்னுடைய திறமை ஒன்றினால் மட்டுமே அந்த நடிகர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்றவராக இருந்தார் பாலச்சந்தர். எம்ஜியாருக்கும் சிவாஜிக்கும் இருந்த ரசிகர் கூட்டம் மத வெறியர்களைப் போல் இருந்தது. அந்த நிலைமையில் ஒரு இயக்குனராக மிக விசேஷமாகப் பேசப்பட்டவர் பாலச்சந்தர். ஆனாலும் சினிமா என்ற கலாசாதனத்துக் கும் அவருடைய படங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்கவில்லை. அவருடைய சபா நாடக அனுபவங்களின் நீட்சியாகவே அமைந்தன அவர் படங்கள். தமிழ் சினிமாவில் அதுவரை விலக்கப்பட்டிருந்த பாலியல் சமாச்சாரங் களைத் தன் கதைகளின் அடி நீரோட்டமாகக் கொண்டதும், மத்தியதர வர்க்கத்தினருக்கு ஏற்ற கதைகளைக் கையாண்டதும் அவருடைய வெற்றிக்கான சில காரணங்கள் என்று சொல்லலாம்.

பாலச்சந்தரை விட கலைக்குச் சற்று நெருக்கமாக இருந்தவை பாரதிராஜாவின் படங்கள். கிராமங்களை ரொமாண்டிக்காகக் காட்டினாலும் கிராமிய வாழ்வின் உள்முரண்கள் சிலவற்றைக் கலாபூர்வமாகச் சித்திரமாக்கியவர் இவர். ஆனாலும் இவரது படங்கள் அகில இந்திய அளவில் கூட அங்கீகாரம் பெற முடியவில்லை. காரணம், ஹீரோ, ஹீரோயின், வில்லன், டூயட், சண்டை என்ற வர்த்தக சினிமாவின் ஃபார்முலாவுக்குள்ளே இயங்கியதுதான். பக்கத்தில் இருக்கும் மலையாளத்தில் கூட ஜான் ஆப்ரஹாம், அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் என்று வரிசையாக இந்திய அளவில் தெரிய வந்தாலும் தமிழில் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

ஹிந்தியில் எவ்வளவு வர்த்தக சினிமா வந்து கொண்டிருந்தாலும் அதற்கு மாற்றாக தொடர்ந்து சீரியஸ் சினிமாவும் வந்து கொண்டிருந்தது. ஒரு உதாரணமாக ஷ்யாம் பெனகலைச் சொல்லலாம். தமிழில் பாலச்சந்தர் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற சபா நாடகங்களை சினிமா என்ற பெயரில் எடுத்துக் கொண்டிருந்த போதுதான் ஷ்யாம் பெனகல் அங்க்குர் (1973), நிஷாந்த் (1975), மந்த்தன் (1977) போன்ற அற்புதமான கலாசிருஷ்டிகளை எடுத்து இந்தி சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தார்.

பாலச்சந்தர், பாரதிராஜாவுக்குப் பிறகு வந்த மணி ரத்னத்தை ஸ்ரீதரின் வாரிசு என்று சொல்லலாம். அக்னி நட்சத்திரம், நாயகன், திருடா திருடா, தளபதி போன்ற தேர்ந்த பொழுதுபோக்குப் படங்களைக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் சமுதாயப் பிரச்சினைகளை வைத்தும் படம் எடுத்தார் மணி ரத்னம். தன் படங்களை இவர் மும்மொழியில் எடுத்து வட இந்தியாவிலும் வெளியிட்டதால் ஸ்ரீதரைப் போலவே இந்தியிலும் மிகுந்த மரியாதையுடன் கருதப்படுகிறார். ஆனாலும் இவரது சமூகப் பிரச்சினை படங்கள் அடிப்படையில்  சராசரியானவை (mediocre). “மிலிட்டரி ஆட்சி வந்தால் இந்தியா உருப்பட்டு விடும், பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியா நன்றாக இருந்தது” என்பது போன்ற கருத்துக் களை உதிர்க்கும் பாமர மனிதனின் புரிதலே மணி ரத்னத்தின் தீர்வாகவும் இருந்தது. பம்பாய், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் இத்தகையானவைதான்.   

இந்த சராசரித்தனத்தின் அடுத்த வாரிசாகவே பாலாவைப் பார்க்கிறேன். பாலா அளவுக்கு ஊடகங்களாலும் மக்களாலும் கொண்டாடப்படும் இயக்குனர் இல்லை என்றே தெரிகிறது. ஆனால் அவரது படங்கள் எதுவுமே சராசரித்தனத்தை விட்டு விலகவில்லை. கலை, இலக்கியம், அரசியல் எல்லாவற்றிலுமே சராசரித் தனத்தையே கொண்டாடும் தமிழகத்தில் இது ஆச்சரியமும் இல்லை. பாலாவின் படங்களில் உள்ள முக்கியமான பிரச்சினை, நம்பகத்தன்மை இல்லாததும் வழக்கமான தமிழ் சினிமா ஃபார்முலாவை விட்டு இம்மியளவும் விலகாததும்தான். தற்போது வெளி வந்துள்ள பரதேசியை எடுத்துக் கொள்வோம். கதை 1939-இல் தமிழகத்தில் நடக்கிறது. அந்தக் காலக் கட்டத்தில் தமிழக கிராமங்களில் ஜாதிக் கொடுமை தலை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. கிராமத்து சுடுகாட்டில் கூட தலித் பிணங்களை எரிக்க முடியாது. தாகத்தில் செத்தாலும் பரவாயில்லை; கிராமத்துக் குளங்களில் தண்ணீர் எடுக்க முடியாது. தலித்துகள் விலங்குகளை விடக் கீழாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்த காலகட்டம் அது. ஆனால் பாலாவின் கிராமமோ ஏதோ சொர்க்க லோகத்திலிருந்து பிய்ந்து கிழே விழுந்தது போல் இருக்கிறது. எல்லோரும் சமபந்தி போஜனம் உண்கிறார்கள். எல்லா ஆண்களுக்கும் அப்ளாக்கட்டை கிராப் வேறு. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை ஜாதி சொல்லிக் குறிப்பிடுவது எவ்வளவு அநீதியோ அதே போன்றதுதான் ஜாதியே இல்லாதது போல் காண்பிப்பதும் ஆகும். இது ஒரு வரலாற்றுப் பொய். வரலாற்று அநீதி. உயர்சாதித் திமிர். இதேபோல் கமல்ஹாசனின் சினிமாவில் தொடர்ந்து தெரியும் இஸ்லாமிய விரோதப் போக்கையும் இங்கே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஹே ராம், உன்னைப் போல் ஒருவன், சமீபத்தில் விஸ்வரூபம் ஆகிய படங்களில் தெரியும் இஸ்லாமிய விரோதம் மிகவும் அருவருப்பானது; கண்டிக்கத்தக்கது. ஆனால் இந்தக் கண்டனமே அவருடைய படங்களுக்கு இலவச விளம்பரம் பெற்றுத் தருவது மிகப் பெரிய நகைமுரண்.

இந்தியில் மாற்று சினிமா என்பது பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலத்தில் Onir, அனுராக் காஷ்யப், விஷால் பாரத்வாஜ் என்று பல இயக்குனர்கள் தொடர்ந்து  சர்வதேசத் தரத்தில் அமைந்த படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அதே சமயத்தில் பல தரமான வர்த்தக சினிமாக்களும் அங்கே எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழில் மாற்று சினிமா என்பதுதான் வர்த்தக சினிமாவை விட ஆபத்தானதாக இருக்கிறது. பாலாஜி சக்தி வேல், வசந்த பாலன், பாலா போன்றவர்கள் தரமான சினிமா என்று சொல்லிக் கொண்டு சினிமா ரசனையை மேலும் மேலும் கீழே தான் இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன் என்ற படு மொண்ணை யான கருத்தாக்கத்தைக் கொண்ட மிக சராசரியான அங்காடித் தெரு, வழக்கு எண் 18/9 போன்ற படங்கள் இங்கே கொண்டாடப் பட்டதற்குக் காரணம் நல்ல படம் எப்படி இருக்கும் என்றே தமிழர்களுக்கு இன்னும் தெரிய வராததுதான். சிறு வயதில் எம்ஜியார் சிவாஜி படங்களைப் பார்த்ததும், பிறகு துணை இயக்குனராக இருக்கும் போது பார்க்கும் ஹாலிவுட் படங்களும்தான் பெரும்பாலான இயக்குனர்களின் மூலதனமாக இருக்கிறது. இப்படி ஒரு செல்லாத மூலதனத்தை வைத்துக் கொண்டு எப்படி நல்ல சினிமாவை உருவாக்க முடியும்?

பாலு மகேந்திராவின் வீடு, சமீபத்தில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ போன்ற நம்பிக்கைக் கீற்றுகள் தெரிந்தாலும் தமிழ் சினிமா போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. அதற்கு முதல் தேவை, ஹாலிவுட்டிலிருந்தும், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்தும் காப்பி அடிப்பதை நிறுத்த வேண்டும். இந்த விஷயம் எனக்குப் புரியாத புதிராக உள்ளது. காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸின் நாவல் ஒன்றைத் திருடி, தமிழில் எழுதி அதில் மார்க்கேஸின் பெயரையே போடாமல் என் பெயரைப் போட்டுக் கொண்டால் அதை இலக்கியத் திருட்டு என்று தானே சொல்வார்கள்?  எந்தப் படத்தையும் மனசாரப் பாராட்டுவதற்குக் கூடத் தயக்கமாக இருக்கிறது. அந்த அளவுக்கு சினிமாத் திருட்டு  சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது.

இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், வசனகர்த்தா என்று ஒரு படத்தின் உருவாக்கத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை குறித்த தர்ஸனம் இருந்தால்தான் இங்கே நல்ல சினிமா தோன்றும். தர்ஸனம் என்றால் என்ன என்று சில வாக்கியங்களில் சொல்கிறேன். இத்தாலிய சினிமா மேதையான ஃபெலினி இயக்கிய La Strada (தெரு) (1954) என்ற படத்தில் ஒரு காட்சி. ஜெல்ஸோமினா ஒரு வறுமையான குடும்பத்தில் வாழும் இளம்பெண். அவளுடைய சகோதரி ரோஸா, ஸம்ப்பானோ என்ற கழைக்கூத்தாடியிடம் விற்கப்பட்டு அவனோடு ஊர் ஊராகச் சுற்றும் போது இறந்தும் விடுகிறாள்.  ஸம்ப்பானோவாக நடித்திருப்பவர் அண்டனி க்வின். ஸம்ப்பானோ மீண்டும் அந்த ஊருக்கே வந்து ரோஸாவின் அம்மாவைச் சந்தித்துப் பணம் கொடுத்து அவளுடைய இன்னொரு மகளான ஜெல்ஸோமினாவை அழைத்துக் கொண்டு போகிறான். ஒரு குரங்காட்டிக்குக் குரங்கு எப்படியோ அப்படியே ஸம்ப்பானோவுக்கு ஜெல்ஸோமினா. அவளுடைய பிரியமும் காதலும் அவனுக்குப் புரிவதில்லை. அவளை ஒரு மிருகத்தைப் போல் நடத்துகிறான்; அடித்து உதைக்கிறான். ஒரு கட்டத்தில் வாழ்வின் மீது நம்பிக்கை அற்று “நான் எதற்குமே லாயக்கில்லாதவள்; வாழ்க்கை எனக்கு சலிப்பைத் தருகிறது” என்று தான் சந்திக்கும் கோமாளி ஒருவனிடம் கூறுகிறாள் ஜெல்ஸோமினா. அப்போது அந்தக் கோமாளி அவளிடம் சொல்கிறான்.

உன்னை விரட்டி விடாமல் ஸம்ப்பானோ தன்னுடன் வைத்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்? உன்னால் அவனுக்கு லாபம் இருப்பதால்தானே? இல்லா விட்டால் வைத்திருப்பானா? அப்படியானால் நீ எதற்கும் லாயக்கற்றவள் என்று நினைப்பது தவறுதானே? நானாக இருந்தால் உன்னை ஒரு நிமிடம் கூட வைத்திருக்க மாட்டேன். ஸம்ப்பானோ உன்னை விரும்புகிறான் என்றே நினைக்கிறேன்.

என்ன ஸம்ப்பானோவா?

ஆமாம். பாவம் அவன். அவன் ஒரு நாயைப் போன்றவன். நாய்கள் குரைப்பதன் மூலம்தானே தங்கள் பிரியத்தைக் காட்ட முடியும்? நானும் அவனைப் போல் இருந்திருக்கலாம். ஆனால் ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்துத் தொலைத்து விட்டேன். இந்த உலகத்தில் எதுவுமே பயனில்லாமல் இருந்து விடவில்லை. இதோ என் காலடியில் கிடக்கும் இந்தக் கூழாங்கல் கூட வீணாக இங்கே இல்லை. இதற்குக் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது.

எந்தக் கூழாங்கல்?

இதோ இந்தக் கூழாங்கல். இது மட்டும் அல்ல. இந்த உலகத்தில் எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருக்கிறது. எதுவுமே பயனில்லாமல் இல்லை. இதற்கு என்ன பயன்பாடு இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது. இருக்க வேண்டும். இந்தக் கூழாங்கல்லுக்கு அர்த்தம் இல்லாவிட்டால் பிறகு எதற்குமே அர்த்தம் இல்லை. ஏன் அந்த நட்சத் திரங்களுக்குக் கூட.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்த அந்தக் காட்சி எனக்கு ஒரு தரிசனத்தை அளித்தது. இது போன்ற காவியங்களை எடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் உலக நாயகர்கள் என்பதை மறந்து விட்டு ஃபெலினியின் தெரு படத்தில் வரும் கோமாளிகளாக மாற வேண்டும். ஏனென்றால், நாயகர்கள் என்று நம்மை நாமே சொல்லிக் கொண்டாலும் உலகம் நம்மைக் கோமாளிகளாகப் பார்க்கிறது. இதற்கு மாறாக நாம் கோமாளிகளாக மாறினால் நம்மால் தெரு போன்ற காவியங்களை உருவாக்க முடியும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? தெருவின் கோமாளி சொல்வது போல் ஒன்றிரண்டு புத்தகங்களைப் படித்துத் தொலைக்க வேண்டும்.

ஏப்ரல், 2013.