சிறப்புப்பக்கங்கள்

கொரோனாவும் எழுத்தாளர்களும்

சாரு நிவேதிதா

சென்னை போன்ற ஒரு நகரத்தில் வாழ்ந்தால் ஒருவரிடம் இருக்கும் empathy என்ற உணர்வே காணாமல் போய் விடும் என்று தோன்றுகிறது.  என் நண்பர் ஒருவர் empathyயின் - ஈகை, கருணை போன்ற தன்மைகளின் மொத்த உருவம்.  அவர் தற்செயலாக ஒரு மாணவனைச் சந்தித்தார்.  பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து, படிப்பைக் கைவிட்ட மாணவன்.  பையனுக்குப் பொறியியலில் சேர்ந்த பிறகுதான் தனக்குப் பொறியியலில் ஆர்வம் இல்லை, இலக்கியத்தில்தான் ஆர்வம் என்று தெரிந்திருக்கிறது.  இம்மாதிரி ‘லக்‌ஷுரி'க்கெல்லாம் வசதியில்லாத குடும்பம்.  அம்மா, அப்பா இருவரும் தினக்கூலி வேலை செய்பவர்கள்.  எப்படியோ அரும்பாடு பட்டு பையனை பொறியியல் கல்லூரி வரை கொண்டு வந்து விட்டார்கள்.  பையன் இலக்கிய ஆர்வத்தினால் பொறியியல் படிப்பை விட்டு விட்டான்.  நண்பனின் அறையில் தங்கியிருப்பதால் தங்குமிடம் பிரச்சினை இல்லை.  ஆனால் சாப்பாட்டுக்கு வழியில்லை.  படிப்பை விட்டு விட்டு வீட்டில் காசு கேட்க முடியாது.  ஒரு இடத்தில் தினக்கூலி வேலைக்குச் சேர்ந்தான்.  சேர்த்து விட்டவர் என் நண்பர்.  சேர்ந்த இடம் ஒரு பதிப்பகம் என்பதால் இவனுக்கும் பிடித்துப் போயிற்று.  வேலையில் சேர்ந்து ரெண்டு மூணு நாள் இருக்கும்.  காலையில் பத்து மணிக்கு ஒரு விற்பனையாளரிடம் கொஞ்சம் புத்தகங்களைச் சேர்க்க வேண்டும்.  மிக முக்கியம், மிக அவசரம்.  பையனோ ஆளையே காணோம்.  சாவகாசமாக மதியம் வந்திருக்கிறான்.  என்னப்பா என்று கேட்டால், ‘‘ஸாரி சார், தூங்கிட்டேன்'' என்று பதில். என் நண்பர் அவனை மேற்கொண்டு படிக்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.  வேலை போய் விட்டது.  நண்பரும் ‘‘இனி என் முகத்தில் விழிக்காதே'' என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இப்படி தினமும் ஒருவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எப்படி எனக்குள் கருணையும் சக மனித அன்பும் சுரக்கும்?  எங்கள் குடியிருப்பின் வாட்ச்மேன் தன் மகளுக்குத் திருமணம் என்றார்.  என் மனைவி அவந்திகா அஞ்சாயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுத்தாள்.  எல்லோரும் ஐநூறு ரூபாய் கொடுப்பார்கள்.  இவள் அஞ்சாயிரம் கொடுத்ததால் மற்ற குடும்பத்தினருக்குப் பிரச்சினை.  அவர்களால் இப்போது ஐநூறு கொடுக்க முடியாது.  ஒரு மூவாயிரமாவது கொடுத்து கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். மொத்தம் நாற்பதாயிரம் சேர்ந்தது போல.  வாங்கிக் கொண்டு வேலையை விட்டு நின்று விட்டார் வாட்ச்மேன்.

பூனைகளுக்கு உணவு கொடுக்கப் போனால் பூனைகளைக் கம்பை எடுத்து விரட்டும் மனிதர்களிலிருந்து வீட்டில் எல்லோரும் பட்டினி என்று சொல்லி காசு வாங்கி அந்தக் காசை வட்டிக்கு விடும் மனிதர்கள் வரை இப்படி ஒரு ஐநூறு கதைகள் என்னிடம் உண்டு.  இம்மாதிரி சென்னைவாசிகளை எந்தக் கொரோனாதான் என்ன செய்து விட முடியும்?  எப்போதும் பணமே உலகம்.  பணமே தெய்வம்.  ஆனாலும் அன்றாட வாழ்வின் ஆதார சுனைகள் அடைபட்டு விட்டதால் மனிதர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண முடிகிறது.  இருந்தும் திரும்பத் திரும்ப நான் கேட்ட ஒரு கதைதான் ஞாபகம் வருகிறது. கடலின் அருகே அமர்ந்திருந்த ஒரு தாயின் குழந்தையை அலை அடித்துக் கொண்டு போய் விட்டது.  ஐயோ யாராவது காப்பாற்றுங்களேன் என்று கதறுகிறாள் தாய்.  ஏதோ ஒரு பைத்தியத் தருணத்தில் கடவுள் ஒரு மீனவனாக வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றி எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் கொடுக்கிறான்.  ஐயோ, ரொம்ப விலை கொடுத்து வாங்கிய குழந்தையின் ஷூ போச்சே என்று கதற ஆரம்பித்து விட்டாளாம் தாய்.

இப்படிப்பட்ட மனிதக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நான் கொரோனா காலத்தில் பணத்துக்கு என்ன செய்கிறேன் என்பது கேள்வி.  ஒரு வார்த்தைக்குப் பத்து ரூபாய் என்பதே எழுத்தாளனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கூலி.  ஆனால் கிடைப்பது என்னவோ வார்த்தைக்கு அம்பது பைசா.  பல சமயங்களில் அதுவும் தருவதில்லை.  எனவே நிரந்தரப் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை பொருளாதார ரீதியாக எந்தக் கொரோனாவும் எதுவும் செய்ய முடியாது. இன்னமும் எனக்குக் கிடைக்கும் ராயல்டியை வைத்து பற்பசைதான் வாங்கிக் கொள்ள முடிகிறது.  எப்போதும்போல் என்னை என் வாசகர்களே காப்பாற்று-கிறார்கள், இந்தக் கொரோனா காலத்திலும்.

கடந்த ஆண்டு மார்ச்சிலிருந்து வெளியில் போக முடியாத சூழ்நிலையில் - கொரோனாவுக்கு அஞ்சி ஸ்விக்கி போன்ற உதவி-களையும் அவந்திகா நிறுத்தி விட்ட  நிலையில் உணவுப் பிரச்சினை மட்டும் எனக்கு முன் பூதாகாரமாக நின்று கொண்டிருக்கிறது.  அவந்திகாவும் நானும் ஈருடல் ஓருயிர் என்றாலும் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் நான் அவளோடு கூட்டு சேர்ந்ததில்லை.  ஆனால் இப்போது ஸ்விக்கி என் வீட்டில் தடை செய்யப்பட்டு விட்ட நிலையில் காலை உணவு மதியம் பதினொன்றுக்கும் மதிய உணவு மாலை நான்கு மணிக்கும் உண்டு பத்து கிலோ குறைந்து விட்டேன்.  ஆனால் அவந்திகாவுக்கு மகிழ்ச்சி. வாழ்விலே முதல் முறையாக என் கொழுப்பு, சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் அளவாக இருக்கிறது!

ஜூலை, 2021