சிறப்புப்பக்கங்கள்

கொத்தவால் சாவடியும் கோழி மார்க்கெட்டும்!

கரன்கார்க்கி

சென்னைக்கு வெளியே உள்ள மற்ற ஊர்களைப்போல் இங்கு சந்தை என்கிற வார்த்தையே புழக்கத்தில் இல்லை, காரணம் தமிழகம் முழுக்க உள்ள எப்போதேனும் அல்லது குறிப்பிட்ட நாட்களில் கூடும் சந்தை முறை  சென்னையில் கிடையாது.

ஆனால் நிரந்தரமான மார்க்கெட் அமைப்புகள் மட்டுமே உண்டு, வடசென்னையில் பட்டாளம் மார்க்கெட், சூளை மார்க்கெட், சிந்தாதிரி மார்க்கெட், பெரம்பூர் மார்க்கெட், என ஒவ்வொரு பகுதிக்கும் நிரந்தர மார்க்கெட்டுகள் உண்டு. தொண்ணூறுகள் வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கொத்தவால்சாவடி மார்க்கெட் காய்கறி மொத்த விற்பனையில் கொடிகட்டி பறந்த காலமொன்று உண்டு. இப்போது அந்த இடத்தை கோயம்பேடு மார்க்கெட் பிடித்துக்கொண்டது. எங்கள் சிறு வயதில் பறைச்சேரிகடை என்ற வார்த்தைகள் AiUPi கேட்டிருக்கிறேன். இப்போது அதுவும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றாலும் அதைப் போன்ற கடைகள் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் இப்போது இருக்கிறது. பறைச்சேரி கடையென்பது ஆங்கிலேயர் கால வரலாற்றுப் பின்னணி கொண்டது. ஆங்கிலேயர்கள் தங்களுக்கான மாட்டிறைச்சி, மீன், மசாலைகளை, குறைந்த விலையில் வாங்க உருவாக்கிய மார்க்கெட் அது.  கறுப்பர் நகரத்தில் அதாவது இன்றைய ஜார்ஜ்டவுன் பகுதியில் இருந்த பறைச்சேரி கடைப்பகுதி 1890களில் எரிந்துவிட்டது. அதற்கு மாற்றாக கட்டப்பட்டதுதான் மூர் மார்கெட். அம்மா அப்பாவை தவிர அனைத்தையும் அங்கே வாங்கலாம் என்கிற சொல் வழக்கு மெட்ராஸில் உண்டு. ஆர். இ. எல்லிஸ் என்கிற வெள்ளையர் வடிவமைத்த அழகிய செந்நிற கட்டிடம் 1898ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1900ல்  கவர்னர் சர் ஜார்ஜ் மூர் அவர்களால் திறக்கப்பட்டது.

உலகின் அனைத்து விதமான பொம்மைகளும் அங்கு கிடைக்கும். மூர்மார்க்கெட் வாசலில் பெரிய இரும்புத் தொட்டியில் பொம்மைப்படகு ஒன்று சுற்றிக்கொண்டிருக்கும் டபடபவென்ற ஓசை நினைவுகள் வழியே இன்றும் கேட்கிறது. ஆனால் அந்த அழகிய கட்டிடம் அரசியல் பகடைகளால் உருட்டி சாம்பலாகி விட்டது.

அந்த வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் அன்றைக்கு சென்னையில் அரிதாக இருந்த அத்தனை கார்களையும் நிறுத்துமளவு வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதன் பாதி இடம் கூட கார்களால் நிரப்பப்படவில்லை. தலைசிறந்த ஆங்கில புத்தகங்கள் அங்கு கிடைக்கும். அந்த வளாகத்தில் ஒட்டு மொத்த மெட்ராஸுக்குமாக வண்ணமீன் கடைகள், பறவைகள், வீட்டு வளர்ப்பு விலங்குகளுக்கான கடைகள் இருந்தன. இப்போது தெருவுக்கு தெரு அது போன்ற கடைகள் வந்துவிட்டன. சென்னையின் குஜிலிக்கடைகள் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை, காரணம் அது ஆங்கிலேயர் காலத்தோடு முடிந்துப்போன ஒன்று. கந்தக்கோட்டம் கோவிலருகில் இந்த இரவு நேரக்கடைகள் நடந்த நாட்களில் பழையத்துணி வியாபாரங்களினூடே பாலியல் சார்ந்த புத்தகங்கள் விற்கப்படுமாம், இன்று ஒரு கடைக்குள் நுழைந்தால் பெரிய வாகனங்களை தவிர்த்து மற்ற அனைத்தையும் வாங்கிவிட முடியும். அந்தளவு பெரிய கடைகள் நகரமெங்கும் வந்துள்ளது. சினிமா வளாகங்களே இப்போது பெரியப் பெரிய அங்காடிகளுடன் இருக்கிறது.

நகர எல்லைகளில் சந்தைகள் இருந்தன. உதாரணமாக பல்லாவரம் சந்தை. அது இப்போது நகர எல்லைக்குள் இருப்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது. எல்லா காலத்திலும் பிராட்வேயில் மாசஞ்சாவடி மார்க்கெட் ஞாயிற்று கிழமைகளில் நடக்கிறது.

பேர் தான் இதற்குக் கோழி மார்க்கெட் ஆனால் அங்கு புறா, நாய், சண்டைக் கோழிகள், வண்ணக் கிளிகள் என வளர்ப்புப் பிராணிகள் விற்பனை காலையில் மட்டும் நடக்கும்.

 பட்டாளம் மார்க்கெட் அன்றைய

பி &சி மில், பேசின் பிரிட்ஜ் அனல் மின் நிலைய ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையது, முதல் பத்து நாட்களுக்கு ஆள் நுழைய முடியாதளவு கூட்டம் நெறியும், தெற்கு வடக் காக அதன் நுழைவாயில்கள். கிழக்கு புறத்தில் மீன் கடைகள். அங்கு விற்பனைப் பெண்களின் வாய்வீச்சு அதிகம் என்றாலும் புத்தம்புதிய மீன்கள் கிடைக்கும், காசுக்கேற்ற மீன்கள், நண்டுகள், இறால்கள், வடகிழக்கில் கருவாட்டுக்கடை, தெற்கே  பழக்கடைகள், தென்மேற்கில் பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் துணிகளென, வட மேற்கில் காய்கறிகள், தட்டுமுட்டு சாமான்களென அனைத்தும் கிடைக்கும். கிராமங்களில் இருந்து வரும் உறவினர்கள்

வேடிக்கை பார்க்கவிரும்பும் இடங்களில் ஒன்றாக அது இருந்தது. யானைகவுனி பாலம் இறக்கத்தில் இருந்த பட்டாணிக்கடை இப்போது இல்லை. அன்றைக்கு நகரில் உலாவி சிறுவர்களை கிறங்கடித்த குச்சி ஐஸ் வண்டிக்காரர்கள், பஞ்சு மிட்டாய் வண்டிகள், ஜவ் மிட்டாய்காரர்களின் கை தட்டும் பொம்மைகள், தள்ளுவண்டி பயாஸ்கோப்புகள், என எல்லாம் காணாமல் போனது போல் சந்தை என்ற வார்த்தையும் சென்னைப்பட்டினத்தில் காணாமல் போய் இப்போது சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் என வந்துவிட்டன.

ஆகஸ்ட், 2018.