எல்லாமே மாறும் எனில் அது சினிமாவுக்கும் தகும். சினிமா கிளம்பிய இடத்திலிருந்து பல்கிப் பெருகிப் பல காதம் கிளைத்துக் கொண்டே இருக்கும் கனா நதி. கதையின் தன்மையும் சொல்லும் விதமும் நேற்றிருந்த சினிமா இன்றைக்கு வெறும் ஞாபகம். இன்றைய சினிமா நாளையைக் கிழித்துக் கொண்டு ஓடுகிற மாயப்புரவி. அதுவே ஆசுவாசமாய் எண்ணிப் பார்க்கையில் ஆயிரம் அர்த்தவாசல்களைத் திறந்தும் தருகிறது. தமிழ் சினிமாவின் தனித்துவங்கள் பல. பிற நிலத்தைச் சார்ந்த படங்களின் வெற்றிக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்வதும் அதன் இயல்பு.
நாயகிகள் காதல் பதுமைகள். முந்தைய தலைமுறையில் கண்ணாம்பா, டி.ஆர்.ராஜகுமாரி தொடங்கிப் பலரும் வில்லி வேடம் ஏற்றுப் புகழெய்தினர். ஆனாலும் கருப்பு வெள்ளைக் காலத்தில் காதல் என்பது பெரும்பாலும் நல்லவர்க்கான தனிச்சொத்தாகத் தான் இருந்தது. அடுத்த காலத்தில் குற்ற உலகைத் திறந்து பார்க்கும் படங்களில் குருதிக்கு அடுத்தாற் போல் காதலுக்கு இடம் கிடைத்தது விசித்திரமே.
படத்தின் நாயகன் என்றால் ஒன்று நல்லவனாக இருக்க வேண்டும் அல்லது இரு வேடங்களில் ஒருவன் சூழல் காரணமாகக் கெட்ட சகவாசியாக இருந்து பிறகு உண்மை தெரிந்து நல்ல பக்கம் வந்து சேர வேண்டும் என்று தான் பலகாலப் படங்கள் இருந்தன. இதனை முதன்முதலாகத் தைரியமாக மீறிய படம் என்று சலீம் ஜாவேத் எழுதி, சந்திர பரோத் இயக்கிய டான் படத்தைச் சொல்வேன். அதன் தமிழ்ப்பதிப்பு நமக்கெல்லாம் பில்லா. ரஜினி மற்றும் ரஜினி. முன்னவர் வில்லன். அவர் கொல்லப்பட்ட பிறகு அடுத்தவர் அவர் இடத்தை நிரப்பி நன்மைகளை நோக்குவார். இருந்தாலும் அந்தப் படத்தைக் கண்டு களித்த கண்களுக்கெல்லாம் ரஜினி என்றால் நிஜ பில்லா தானே தவிர அடுத்தவரான ராஜப்பா அல்லவே அல்ல. ஆயிரம் ஸ்டைல்களுக்கு நடுவே ரஜினிக்கும் ஹெலனுக்கும் நடுவே ஒரு பாடலும் அதனுள் பொங்கிப் பிரவகிக்கும் காதலும் ஈர்த்தன. பில்லா வெறும் டான். காதல் மீது பற்றுக் கொண்டவர் அல்ல. ராஜப்பா பில்லாவாக மாறிய பிறகு தான் காதல் லேசாய்க் கிளம்பிற்று.
தளபதி படத்தில் மம்முட்டிக்காக உயிர் தரவந்த நண்பர் ரஜினி. ரஜினியின் நிறைவேறாக் காதல் ஷோபனாவுடன் ஆயிரம் காகிதங்களில் எழுதினாலும் தீராத காதலைத் தன்னிரு கண்களின் வழியே தோற்றுவித்திருப்பார் ஷோபனா. சேராக் காதலின் தீராத் துயர் அந்தப் படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலாகவும் நிறைந்து வழிந்தது. இன்னொரு பக்கம் சூழல் நிமித்தம் ரஜினியின் கரம் பிடித்தவராக வரும் பானுப்ரியாவோ காதலற்ற காதலைத் தன் கண்களினூடே சமரசம் செய்திருப்பார். அந்தப் படம் முன்வைத்த காதல் துன்பியல் பெருக்கு.
வெற்றிவிழா படத்தில் அபிலாஷா சின்ன கதாபாத்திரத்தில் வருவார். குற்ற மன்னன் ஜிந்தாவின் காதலி அவர். தான் பெரிய புத்திசாலித் தனமாய்ச் செய்த ஒரு காரியத்துக்காக ஜிந்தாவின் துப்பாக்கி குண்டுக்கு இரையாகிச் சாவார். துப்பாக்கியைக் காதலித்தால் தோட்டாவுக்கு உயிர் தந்தாக வேண்டும் என்கிற புதுமொழியைப் பறைசாற்றிய பாத்திரம் அது.
அமரன் படத்தில் கார்த்திக் தீயவர்களை அழிக்க வந்த தீயவர். அவர் காதல் இணையராகத் தோன்றும் பானுப்ரியா பாத்திரம் அதிக வசனங்கள் ஏதுமின்றிக் கண்களும் காதலுமாகப் படமுழுக்க வலம் வந்தார். மறக்க முடியாத காதல் அது.
தெலுங்கு சிவா, தமிழில் உதயம் என்று வந்தது. ராம் கோபால் வர்மா இந்தியத் திரையுலகத்தின் திருப்புமுனை மனிதர்களில் ஒருவர். அவர் கட்டமைத்து விரிவாக்கித் தந்த செலுலாய்ட் குற்றவுலகம் மாபெரும் நீட்சியைக் கொண்டது. அவர் புனைவின் அருகமைந்த மெய்மை ஒன்றை சாத்தியப்படுத்தினார். அது முன்னர் வேறாரும் செய்து பாராதது.
ஜென்டில்மேன் உட்பட ஷங்கரின் படங்களில் நாயகனே கொஞ்சம் குற்றவாளியாகவும் இருப்பது தான் வழக்கம். நாயகன் கெட்டவன் வில்லன் ரொம்பக் கெட்டவன் என்பதை ஆரம்பித்து வைத்த படங்கள் அவை. அந்த அடிப்படையில் ஜென்டில்மேன் இந்தியன் அந்நியன் எனப் பல படங்களில் அந்தக் காதல் தொடர்ந்தது. எனக்குப் பிடித்தது எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ கெட்ட ரோபோவாக மாறி சனா அலையஸ் ஐஸ்வர்யா ராயைத் துரத்திக் காதலடித்தது தான்.
இந்தி சத்யாவில் மனோஜ்பாஜ்பாய் மற்றும் அவர் மனைவியாக வரும் ஷெஃபாலி ஷாவ்க்கும் இடையே காணவாய்த்த காதல் அபூர்வமான அழகியல். சீண்டலும் துரத்தலுமாக அச்சு அசலான காதலாகப் பெருகி இன்றும் நினைவாலே சிலை செய்கிறது. நிழலுலகத்தின் வரைபடப் புள்ளிகளை எல்லாம் அட்சரம் பிசகாமல் தோற்றுவித்த படம் என்றே ராம் கோபால் வர்மாவின் பல படங்களைச் சொல்ல முடியும். தமிழில் இதயமே இதயமே என்று வந்ததே, தெலுங்கில் அதன் பெயர் குலாபி. அந்தப் படத்தினளவு குற்றமும் நட்பும் துரோகமும் காதலும் பின்னிப் பிணைந்த இன்னொரு படத்தைச் சொல்லவியலாது.
ஜெமினி குற்றச்சக்கரவர்த்தி. அவன் வாழ்வில் காதல் மட்டும் வந்திராவிட்டால் என்கவுண்டரிலோ அல்லது எதிரிகளின் கொலைவெறியாலோ தீர்ந்து போயிருக்க வேண்டியது அவன் வாழ்வு. ஒரு காதல் பல மாற்றமலர்களைத் தோற்றுவிக்கும் வல்லமை கொண்டது என அந்தப் படம் மெய்ப்பித்தது. தீனாவுக்கும் சித்ராவுக்கும் இடையே உண்டாகும் காதல் இயல்பானது. ரத்தத்துக்கு நடுவாந்திரமாய் அரும்புகிற வலிகூடிய புன்னகை போன்றது. ஊடலும் விலகலும் பின் சேர்தலும் என எல்லாமே குருதியூடிய காற்றாய்த் தான் நினைவில் ஆழ்கிறது.
வட்டாரம், சரண் எடுத்த படம். ஆயுத பேரம், பன்னாட்டு வியாபாரம் என்றெல்லாம் கதை நகரும் என்றாலும் ஆர்யா எப்படி நெப்போலியன் குடும்பத்தைத் தன் வசம் செய்து அந்தத் தொழிலின் உச்சத்தைத் தொடுகிறார் என்பதே கதை. அந்தப் படத்தில் ஆர்யாவுக்கும் கீரத்துக்குமான காதலை விட என்னை ஈர்த்த இன்னொரு காதல் உண்டு. அதுதான் ராகவ் மற்றும் வஸுந்தராவுக்கும் இடையிலான காதல். படத்தின் மொத்த எடையில் சில மில்லி கிராம்களே வந்தாலும் கூடப் பொன் நிகர்க் காதல் அது. ஆயுத எழுத்து படத்தில் மாதவனுக்கும் மீரா ஜாஸ்மினுக்கும் இடையே மலரும் காதல் முட்களாலான பூ என்றால் தகும். விஷால் நடித்த திமிரு படத்தில் வித்யாசமான கதாபாத்திரம் ஒன்றினை ஏற்றிருந்தார் நடிகை ஷ்ரேயா ரெட்டி. அந்தப் படத்தின் பார்வையாளர்களிடம் இருந்து ஒட்டு மொத்த உணர்வுப் பரிவை அறுவடை செய்தது அந்தப் பாத்திரம்.
புதுப்பேட்டை படத்தின் அடி நாதமே சினேகா மீது தனுஷ் கொள்ளும் ஆழக்காதல் தான். பாலியல் தொழிலில் பலரது கொடுமைகளுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கும் கிருஷ்ணவேணி மீது குமார் காதல் கொள்வதை அறியும் போது தன் வாழ்வு முழுவதுமாக ஒரு இதிகாசமாய் மாற்றமெடுப்பதை கிருஷ்ணவேணி உணர்வதும் பார்வையாளர்களுக்குக் கடத்துவதும் அபாரம் என்றால் தன் காதலை ஒரு அத்தியாயமாக்கி அடுத்த காதலை நோக்கி குமார் நகர்ந்து செல்வதை உணர்ந்து குமுறும் போது சொற்களின் துணையின்றியே ஒரு காவியபாரத்தைத் தன் முகமொழி மூலம் வெளிப்படுத்தினார் சினேகா.
ஆரண்ய காண்டம் முன் நிறுத்திய நிழல் உலகம் நிஜமானது. அந்தப் படத்தில் ரவிகிருஷ்ணா கதாபாத்திரத்தை மெல்ல மூளைச்சலவை செய்து தன் விடுதலைக்கான உபகரணமாக அவரை மாற்றுவார் யாஸ்மின் பொன்னப்பா. அவரது கண்கள் உதடுகள் தொடங்கி மனம் வரை எல்லாமே பொய் எனினும் துளிக்கூட அதனை ரவிகிருஷ்ணா உணர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்குத் தன் புன்னகையை ஒரு புல்லட் ப்ரூஃப் போலப் பயன்படுத்தியிருப்பார் யாஸ்மின். அதே படத்தில் பசுபதி கஸ்தூரி இருவருக்கும் இடையே இருக்கும் லேசான காதலின் இழைதல் நரம்பைப் போல் உறுதிபடச் சொல்லப்பட்டிருந்தது. சம்பத்தும் ஜெயஸ்ரீயும் அந்த வேடங்களில் வந்தனர்.
மெட்ராஸ் படத்தில் அன்புவுக்கும் மேரிக்கும் இடையே சொற்பகாலமே வாழக்கிடைத்த பேரன்பு ஒன்றைக் காணச்செய்தார் ரஞ்சித். ரஜினியின் சமீபங்களான கபாலியாகட்டும் காலாவாகட்டும் இரண்டு வெவ்வேறு அழகிய காதல் சதுக்கங்களைத் தனதே கொண்டிருந்தன. ரஞ்சித் தன் கதாவுலகத்தின் பெண்களைக் கண்ணியமாகத் தோற்றுவிப்பதில் முதன்மையான இயக்குனர். அதற்கு மேற்சொன்ன படங்களின் காதல்களும் கட்டியம் கூறுபவையே. ரஜினி ரசிகர்களை மிகவும் உஷ்ணப் படுத்திய படமான பாட்ஷாவில் அவர் தான் அண்டர்வேர்ல்ட் டான் என்பதே தெரியாமல் ஆட்டோ ட்ரைவர் மாணிக்கம் என்று நம்பி அவரைக் காதலிப்பார் நக்மா. தன் புரிதல் விரிந்து உண்மை உடைந்த பின்னரும் காதல் மாறாது.
நயந்து பேசி நயவஞ்சகம் செய்யும் பெண்ணாக ஜோதிகா. அவர் அந்தப் படத்தில் லாரன்ஸ் என்ற பெயரில் வில்லனாக வருகிற மிலிந்த் சோமனுடைய காதலி. உயர் மத்திய வர்க்க ஆண்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை சபலத்திற்கு உட்படுத்தி வீழ்த்துவார். அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கீதா எனும் போலிப்பெயர் தாங்கிய ஸ்மிதா பாத்திரத்தில் வலம் வந்தார் ஜோதிகா. திட்டத்தைக் காதலன் தீட்டித் தர அதனை நிறைவேற்றுகிற ஆசைக்கிளியாக அந்தக் காதலி வேடம் கனகச்சிதம்.ஜோதிகாவுடைய திருமணத்துக்கு முன்பாக நடித்த இறுதிப் படங்கள் என பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் சந்திரமுகி இரண்டையும் சொல்லலாம். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் உள்ளார்ந்த காதலும் எஃகை விட உறுதியான உறவின் நம்பகமும் கொண்ட இணையராகவே மிலிந்த் மற்றும் ஜோதிகா இருவரையும் கட்டமைத்தார் கௌதம் வாசுதேவ். அந்தப் படம் பார்க்கும் யார்க்கும் அவர்கள் கெட்டவர்கள் என்பதைத் தாண்டிக் காதலின் சாம்பல் ஆழமொன்றைக் காண முடிந்தது.
வடசென்னை படமே ஆன்ட்ரியாவைச்சுற்றித் தான் இயங்கியது. நாயகனைச் சுற்றிச்சுழலும் படமுறைக்கு மத்தியில் அப்படியான சுழற்சியை நீக்குவதாகவோ தகர்ப்பதாகவோ அரிதாகச் சில படங்கள் நிகழும். ஆனால் அரிதினும் அரிய வருகை எப்போதேனும் நிகழும் போது தான் இப்படியான வேடமொன்றைக் காண வாய்க்கும். அடுத்த பாகம் இருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கும் வடசென்னை படம் தொடர்ந்தாலும் அந்த வேடம் இதே முக்கியத்துவத்தோடு திகழும் என்கிற நம்பிக்கையையும் சேர்த்தே உண்டாக்கித் தந்தார் ஆன்ட்ரியா. காதலும் ஈரமுமாய் ஒரு துவக்கம்; வெறியும் வன்மமுமாய் ஒரு இடைத் திருப்பம்; தீர்மானமும் தீர்க்கமுமாய் ஒரு பூர்த்தி என அந்தப் பாத்திரத்தின் வடிவமைப்பு அத்தனை பாந்தம்.
பட்டாம்பூச்சிகளுக்கு ஒப்பான, காலம் குன்றிய வாழ்தலைத் தமக்குத் தாமே சபித்துக் கொண்ட வாழ்முறை என்றே வன்முறையைக் கருதமுடிகிறது. வெங்காயத்தின் மேற்தோல் போன்ற சருகுத் தன்மையும் சரிகைப் பொன் பளபளப்பும் ஒருங்கே அமையப் பெற்ற குற்ற உலகத்தின் நிழலுக்கு இருளென்றும் இரவுக்கு சூன்யமென்றும் புனைப் பெயர்கள். அதீதமாய்ச் சிரித்து அட்டகாசமாய்க் கொண்டாடி பெருங்குரலில் பேசி காசை வீசி இறைந்து எனப் பற்பல வழிகளில் எல்லோரும் எப்போதும் இன்புற்றிருப்பதைப் போன்ற மாயப் போலிச் சித்திரமொன்றை வரைய முற்பட்டு ஒரு கணம் எல்லாம் மாறி ஒரு தோட்டா அல்லது அரிவாள் நுனியினூடாகக் கதாமாற்றம் கண்டு பாதியே முடிவென்றாவது குற்ற உலகின் நியமம். இதற்கு மத்தியில் காதல் ஒரு பலமான கதாபீடமாகத் தொடர்ந்து வருகிறது. பேசா உதடுகளும் பொங்கும் கண்களுமாகப் பல மறக்க முடியாத காதலி கதாபாத்திரங்களுக்காகவும் இத்தகைய படங்கள் காலம் கடந்து தமைக் குறித்த ஞாபகத்தை மேலெழுதிக் கொள்ளுகின்றன.
காதலுக்கு முடிவே இல்லை.
ஜூலை, 2022