பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து அறிஞர் அண்ணா தலைமையில் திமுகழகம் உருவானபோது 1949-ல் திராவிடக் கூட்டரசு உருவாக வேண்டும் என்பது அக்கட்சியின் கொள்கைகளில் முதன்மையாக இருந்தது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ்பேசும் மக்கள் வாழும் மாநிலங்கள் சேர்ந்த கூட்டரசு. வடநாட்டிலிருந்து துண்டித்துக்கொண்டு தென்னாட்டை மையமாகக் கொண்ட திராவிடர் கூட்டரசு. அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை இதுதான்.
1953-ல் ஆந்திரமாநிலம் பிரிந்து சென்றபோது திமுகவின் முக்கிய தலைவர்கள் சிறையில் இருந்தார்கள். அப்போது திமுகவின் தலைமை நிலையச் செயலாளராக இருந்த ஆ.கோவிந்தசாமி ஆந்திரமாநிலத்தை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பிற்காலத்தில் அமைய இருக்கும் திராவிடக் கூட்டரசில் ஆந்திரமும் இணையவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் பின்னாளில் தேர்தல் அரசியலில் திமுக குதித்தது. 1956-ல் திருச்சி மாநாடு போட்டு தேர்தலில் இறங்க முடிவெடுத்தனர். 1957-ல் தேர்தல். அதில் சட்டமன்றத்தில் 15 இடங்கள் வரை வெற்றி பெற்றனர். ஆனால் இதையடுத்து பிரிவினைவாதம் பேசும் கட்சிகள் தேர்தலில் நிற்பதைத் தவிர்க்க தடைவிதிக்கும் பிரிவினைவாதத் தடை சட்டம் வந்தது. இந்நிலையில் 1962-ல் வந்த இந்திய -சீனபோரைச் சாக்கிட்டு திராவிட நாடு கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன. இருப்பினும் இந்த கோரிக்கையை தற்காலிகமாகக் கைவிடுகிறோம் என்று அண்ணா முற்றிலுமாக இக்கோரிக்கையைக் கைவிட்டார். திராவிட நாடு என்ற பெயரில் வெளிவந்த வார இதழை நிறுத்தி விட்டு காஞ்சி என்ற வார இதழைத் தொடங்கவும் செய்தார்.
தேசியக் கொள்கை உடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு இது பெரிதும் உதவியது. இதை அடுத்துத் தான் முற்றிலும் மாறுபட்ட கொள்கைகள் உடைய ராஜாஜியின் சுதந்திரா கட்சி மற்றும் பொதுவுடைமைக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து 1967-ல் திமுக காங்கிரசை வீழ்த்தமுடிந்தது.
67-ல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார். ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் மூன்று முறை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்காக தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு(55, 62, 66) தோல்வி அடைந்திருந்தன. காங்கிரசுக்கு இதைச் செய்யக்கூட மனம் இல்லாதிருந்தது. இந்த நிலையில் அண்ணா தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தது தனித் தமிழ்நாடு கேட்போருக்கு இனிப்பாக அமைந்தது. ஆனால் அதுவும்கூட சர்க்கரை என்று தாளில் எழுதி சுவைத்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற சுவைதான்!
அண்ணா அவர்களின் மரணத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி, தில்லியில் காங்கிரஸ் உடைந்தபோது இந்திரா அணி பக்கம் நின்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா விவிகிரியை நிறுத்தினார். காங்கிரசின் வேட்பாளராக நின்றவர் நீலம் சஞ்சீவி ரெட்டி.
தந்தை பெரியார் கி.வீரமணியை அனுப்பி பிராமணர் அல்லாதவரான சஞ்சீவி ரெட்டிக்கு திமுக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோதும் திமுக, வி.வி. கிரியையே ஆதரித்தது. இதை அடுத்துதான் 1971 தேர்தலில் திமுக- இ காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. தேசிய நீரோட்டத்தில் திமுக இப்படிக் கலந்துவிட்டாலும் பழைய நினைவு போகவில்லை. எனவே மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்று தனிநாடு கோரிக்கை புது வடிவம் எடுத்தது. ராஜமன்னார் குழுவை அமைத்து இதற்கான பரிந்துரைகளை கருணாநிதி பெற்றார். எமர்ஜென்சி இதற்கெல்லாம் இடியாக அமைந்தது.
இ.காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் வேறொரு கூட்டாளியாக திமுகவின் பங்காளிக்கட்சியான அதிமுகவின் எம்ஜிராமச்சந்திரன் அமைந்தார். 1977-நாடாளுமன்றத் தேர்தலில் இ.காங்கிரசுடன் அவர் கூட்டணி அமைத்திருந்தாலும் சில மாதங்களில் ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து சரண்சிங் ஆட்சியில் முதல் முதலில் டெல்லி அரசில் பங்கேற்ற மாநில கட்சி ஆனார். அதிமுகவைப் பொறுத்தவரை திராவிட கொள்கைகளான வருணாசிரம எதிர்ப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு போன்ற ’சுமைகள்’ ஏதுமில்லை என்பதால் இந்த கூட்டணிப் பங்கேற்பு சுலபமாக அமைந்துவிட்டது. ஆனால் திமுக இதற்காக இன்னும் பத்து ஆண்டுகள்(1989-ல் அமைந்த விபி சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு) காத்திருக்க வேண்டி இருந்தது.
இந்த பத்தாண்டுகளில் காங்கிரஸுடனான அதிமுகவின் உறவு பலப்பட்டுப் போயிருந்தது. திமுகவுக்கு தேசிய அளவிலான பெரிய கட்சிகளின் உறவு இல்லை. காங்கிரசுக்கு மாற்றாக அப்போது தேசிய அளவில் எழுந்து வந்த பாஜகவுடன் 1999-ல் கூட்டணி வைத்தது. திராவிட இயக்க சிந்தனையாளரும் திமுகவின் டெல்லி விவகாரங்களைக் கவனித்தவருமான முரசொலி மாறன் பாஜக தீண்ட தகாத கட்சி அல்ல என்று சொல்லி கொள்கை முரண்பாட்டைச் சமாளிக்க தளம் ஏற்படுத்தினார். இதற்கு முன்பாகவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து, திராவிடக் கட்சிகள் இந்துத்துவம் பேசும் கட்சியுடன் சேர்வதில் தவறில்லை என்ற நிலைப்பாட்டை 1998-ல் உருவாக்கி இருந்தது இதற்கு வசதியாக இருந்தது.
1980க்குப் பின்னால் காங்கிரஸுடன் திமுகவுக்கு உறவு இல்லை. 91-ல் நடந்த ராஜீவ் படுகொலையும் இக்கட்சிகளுக்கிடையிலான உறவைப் பாதித்து இருந்தது. ஆனால் 2004-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தனர்.
மத்தியில் கூட்டாட்சிக் கோரல் இன்று கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி என்ற அளவில் வந்து நிற்கிறது. மத்தியில் அமையும் அரசில் பங்கேற்றால் மாநிலத்துக்கு நல்லதுதானே கிடைக்கும்? நிறைய திட்டங்களைக் கொண்டுவரலாமே என்று கேட்கலாம். சேலம் உருக்காலை போன்றவற்றை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டவும் செய்யலாம். ஆனால் நாம் இழந்ததும் அதிகம். உதாரணத்துக்கு 70களில் காவிரிப் பிரச்னையில் உச்சநீதிமன்ற வழக்கை திமுக வாபஸ் பெற்றது கூட்டாளிக்கட்சித் தலைவரான இந்திராவின் வேண்டுகோளால்தான்.
பின்னாளில் மத்தியில் கூட்டணி அரசுகளில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கியது கூட்டணி ஆட்சியில் பங்கேற்றதால் தான். 1938-ல் தொடங்கிய வடவர் ஆதிக்க எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு எல்லாம் வீழ்ந்து தமிழக அமைச்சர்களின் பெயர்ப்பலகைகளே டெல்லியில் இந்தியில் தொங்கின. வடவர் பெயர் ஊர்ப்பெயராக இருக்கக்கூடாது என்று தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தவர்களுக்கு இன்று வடவர்கள் பங்காளிகள் ஆகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல ஈழப்போரின் போது வலுவான குரலை தமிழகம் எழுப்ப முடியாததும்கூட மத்திய அரசின் கூட்டணியில் தமிழகக் கட்சிகள் இடம்பெற்றிருந்ததனால்தான். கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசில் இடம்பெற்றிருந்த நிலையில் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடியது? செய்துகொண்டதெல்லாம் மாநில நலன்களில் சமரசம்தானே? (வாலாசா வல்லவன், அரசியல் ஆய்வாளர். நமது செய்தியாளரிடம் பேசியதிலிருந்து.)
ஜூன், 2015.