அடுத்த தலைமுறைக்கு கிடைக்க வாய்ப்பில்லாத, இந்த தலைமுறையினரான நாம் மட்டுமே நுகரக்கிடைத்த, சில அனுபவங்களை அசைபோடும் பக்கங்கள் அடுத்தடுத்து அணிவகுக்கின்றன.
மைப்பேனா - கறை படிந்த சட்டை
மறந்து போன பொருட்களின் பட்டியலை பார்க்கும்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு பொருள் மையூற்றும் பேனா. வழிந்த குருதிகளின் ஈரம் வற்றிப்போகும் முன்னே நீதி வழங்கிய வரலாற்றுப் பெருமையும் இதற்கு உண்டு. மை பேனாக்கள் ஜீவ சக்கரத்தின் அச்சாணியாய் இருந்தது ஒரு காலம். இன்னமும் பூட்டன்களின் ஞாபகமாய் நமது வரலாற்றுப்பெட்டிக்குள் அடைபட்டு கிடப்பது இந்த பேனா மட்டும்.
படிக்கின்ற காலத்தில் சட்டைக்குப் பின்னால் ஒட்டியிருக்கும் மைத்துளிகளை வைத்து நண்பர்களை (எதிரிகளை) கணக்கிட்ட காலம் அது. உடைந்த நிப்பை மாற்ற ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கியது கஜினிமுகமதுவிற்குகூட பாடம் கற்பிக்கும். பேனா ஒரு ஜட பொருளானது இந்த 21ம் நூற்றாண்டில் தான். சட்டைப் பையில் ஒட்டிய மை கிராமத்து வீதிகளில் இவன் பெரிய கெட்டிக்காரன் என்று சமூகத்திற்கு பறைசாற்றிய சாதனமாய் இருந்தது. கறைபடியாத கைகளுக்குச் சொந்தகாரர்களுக்கும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்ட கறை இந்த பேனா கறை.
சட்டைக்கு பொத்தான்களை சரிபார்ப்பது போல் பேனாவிற்கு மை ஊற்றுவதையும் சரி பார்த்து செல்லும் வழக்கத்தை கொண்டிருந்த காலத்தில் மை உண்மையாய் இருந்திருக்கிறது. இன்றைக்கு வார்த்தைகளின் பொருளை தொலைத்துவிட்டு எழுத்தை தேடி அலையும் இளம் சமுதாயத்தின் கையில் இருப்பது ஆயிரம் மைல் தூரம் ஓடக்கூடிய ஜெல் பேனாக்கள். ஓடி கொண்டிருப்பவர்களுக்கு பக்கத்தில் இருப்பவன் கூட எதிரியாய் தோன்றுகிறான். ஓடுகின்ற வேகத்தில் காட்சிகளை மட்டுமில்லை வரலாற்றையும் மறந்த சமூகத்தில் மை பேனாவை பால்ய காலத்தில் பார்வையில் பார்த்து, லயித்து மறந்து போன காதலியின் பேரை நினைவுபடுத்த முயற்சிக்கும் செயலாகத்தான் பார்க்கிறேன். மை பேனாவின் காரல் வாசத்திற்காகவும், அழுத்திப் பிடித்து அழிக்க முடியாத கறையை கழுவிக் கொண்டே இருக்கும் சிறுவனாக மாறுவதற்காகவும் ஏங்கிக்கொண்டேதான் ஒவ்வொரு முறையும் தடவிப்பார்க்கிறேன் என்னுடைய பழைய மைப்பேனாக்களை.
தேவேந்திர பூபதி
எளிமையான அரசியல் : முன்னுதாரணங்கள்
1967ஆம் ஆண்டு தேர்தலின்போது ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக இருந்தவர் உடுமலை ப.நாராயணன். அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில், மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம், நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் போன்ற பெரும் ஜாம்பவான்கள், பணம், பதவி, ஆட்சி, அதிகாரம் , சாதி அனைத்தையும் ஒருங்கே கொண்டு அரசியல் செய்து வந்தனர். உடுமலை நாராயணன், மிக, மிக, மிக, சிறுபான்மை சமுதாயமான ராஜபுதன சமுதாயத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் அவர்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை ஓரிடத்தில் குவித்தாலும் ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்லமுடியாது. மிக, மிக சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் திமுக மாவட்ட செயலாளர் என்கிற பெரும்பொறுப்போடு, மத்திய அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களை தேர்தல் காலத்தில் தோற்கடிப்பேன் என்று அவர் முழங்கிய போது, சி.சுப்பிரமணியம், ‘என்னைத் தோற்கடிக்க இந்த உடுமலை நாராயணன் மட்டுமல்ல, அந்த வைகுந்த நாராயணன் வந்தாலும் முடியாது’ என்று பதில் கூறினார். ஆனால் தோற்றது சி.சுப்பிரமணியமே.
1967இல் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற ஏ.பி.சண்முகசுந்தரம், அர்த்தநாரிபாளையம் என்ற கடைக்கோடி கிராமத்திலிருந்து வந்தவர். டவுன் பஸ்ஸில் நின்றுகொண்டே பயணிக்கும் எளிமைக்கு சொந்தக்காரர்.
1967இல் கோவை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக நின்று வென்றவர் , சைக்கிள்கடை கோவிந்தராஜன். அண்ணாவின் வழியில் கலைஞர் அவர்களும் 1971இல் கோவை மேற்கு தொகுதியில் ப.கோபால் என்னும் சிறிய தேநீர் விடுதி நடத்தியவரை வேட்பாளராக நிறுத்தி வைத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். இவையெல்லாம் பொய்யாய் பழங்கனவாய் போய்விட்டனவா என்றால் இல்லை. 1996 இல் கோபி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோபி வெங்கிடு. சாதாரண பெட்டிக்கடை நடத்திவந்தவர். இப்போது கூட கோவை சிங்காநல்லூரில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் நா.கார்த்திக் ஒரு ஆலைத் தொழிலாளியின் மகன் தான். இவ்வாறு பல கட்சிகளிலும் எளிமையான அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த காலங்கள் இருந்தன என்பதை நம் அடுத்த தலைமுறைக்கு நினைவுகளாய்ப் பகிர்வோம்.
பொள்ளாச்சி மா.உமாபதி
மஞ்சள் பூச்சும் தோள் துண்டும் : அம்மாவின் வாசனை
ஏறக்குறைய ஒரு வார காலமாகவே என் அப்பா எப்பொழுதும் தோள்மீது போட்டுக் கொண்டிருக்கும் கருப்பு சிவப்புத் துண்டு என் நினைவில் வந்து கொண்டே இருந்தது. சிறுவயதில், என் அப்பா மட்டுமல்ல, ஊரில் இருந்த ஆண்கள் யாரையுமே தோளில் துண்டு இல்லாமல் பொது இடங்களில் பார்க்க முடியாது. வெற்று உடம்போ, முண்டா பனியனோ, கையில்லாத பனியனோ, சட்டையோ போட்டுக் கொண்டிருந்தாலும் தோள்மேல் ஒரு துண்டுடந்தான் வெளியில் கிளம்புவார்கள். என் அப்பா துண்டை மடித்து இரண்டு தோளின்மீதும் நன்றாகப் படிந்திருக்கும்படி போட்டுக்கொள்வார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழக்கம் இருக்கும். தோளில் ஒற்றையாகத் துண்டைத் தொங்கவிட்டுக் கொள்வார்கள். அரசியல் கட்சிகளின் கொள்கையடிப்படையிலான செல்வாக்கு அன்று அதிகம் இருந்ததால், பெரும்பாலும் தோள் துண்டிலும் அது பிரதிபலிக்கும்.
அப்பாவுக்கு வீட்டைப் பற்றிய சிந்தனைகள் குறைவுதான் என்றாலும், கடைவீதிக்குச் செல்லும் சில நேரங்களில் வழியில் துவரங்காய், வேர்க்கடலை, அல்லது காய்கறிகள் வந்துவிட்டால், தன்னுடைய துண்டில் வாங்கிக் கையில் பிடித்துக் கொண்டுவருவார். இரவு நேரங்களில் நள்ளிரவு வரை நீளும் ஊர்க் கதைகளிலும், அரசியல் விவாதங்களின்போதும், ஆண்களின் கைகளிலும், விசிறியாகத் துண்டுகளே சுழன்று கொண்டிருக்கும். யாருக்காவது கோபம் வந்தாலோ, துண்டை தூக்கி தூர எறிவார்கள். அல்லது துண்டை தாண்டி சத்தியம் பண்ணுவார்கள். ஆண்கள் தோள் துண்டுடன் இருப்பதைப்போல் பெண்கள் எப்பொழுதும் மஞ்சள் பூசிய முகத்துடன்தான் இருப்பார்கள். பெரும்பாலும் வீட்டுவேலைகள் முடிந்தபின் மாலையில்தான் பெண்கள் குளிப்பார்கள். வீட்டில் சோப்பு இல்லையென்றாலும், கட்டாயம் மஞ்சள் போட்டுக் குளிப்பார்கள். முதல் நாள் மாலை போடும் மஞ்சள் அடுத்தநாள் மாலை வரை முகத்தில் இருக்கும். அவ்வளவு அழுந்தப் போடுவார்கள்.
மஞ்சள் சிறந்த ஆண்டிபயாட்டிக் என்று இன்று பல காரணங்கள் சொன்னாலும், அன்று மஞ்சள் பெண்களின் அடையாளமாக இருந்தது. எனக்கு மஞ்சளும் தேங்காய் எண்ணெயும் கலந்த ஒரு வாசமே என் அம்மாவின் வாசம். இரவு நேரங்களில் தூங்கும்போது அம்மாவின் பின்கழுத்தில் இருந்து வரும் அந்த வாசனை எப்பொழுதுமே என் நாசிகளில் தங்கியிருக்கும்.
அ.வெண்ணிலா
கடிதங்கள் : யாருக்கு எழுதுவது?
அது ஒரு அரை டவுசர் காலம்.. நான் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு சென்று கொண்டிருந்தேன் பள்ளிவிட்டு வரும் போது ‘எத்தா மருமவனே’, ‘ஏ கொழுந்தப் புள்ளே’ ‘ஏல தம்பி’ என பாசமாக ஏதேனும் ஒரு அழைப்பு தெருப் பெண்களிடமிருந்து வந்தால் அதற்குப் பின்னால் ஒரு கடிதம் எழுதி தாயேன் என்கிற கோரிக்கை ஒளிந்திருக்கும்.
ஏ செருக்கியுள்ள இங்க வாரும் என எனது புத்தகப் பையை பிடுங்கி வைத்துக்கொண்டு வன்முறையாக கடிதம் எழுதச் சொல்வாள் பொரிகடலை மாமி. போன சந்தனக்கூட்டுக்கு வந்தியோ ..! இன்னைக்கெல்லாம் ஒரு வருசமாவப் போவுது கீழப் பள்ளிவாசல்ல கந்துரி குடுக்கப் போறாவோ வரி வசூல் நடக்கு.. ஒரு எட்டு நீங்க வந்துட்டுப் போனியன்னா நல்லா இருக்கும்.பெரியவ மீரம்மா உங்கள ரொம்பத் தேடுதா..!எனக்கும் தேடுது எனச் சொல்லும் போதே மாமிக்கு வெக்கம் வரும். கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டு மாமியை ஏறிட்டுப் பார்த்தால் புடவை முந்தானையால் வெட்கத்தைத் துடைத்துக் கொள்வாள்.
ஒருநாள் தெருவில் நின்று மேற்கு பக்கமாக மண்ணள்ளித் தூத்தி நீ விளங்குவியா உம் வம்சமே கட்டமண்ணாப் போவும் என திட்டித் திர்த்துக் கொண்டிருந்தாள். அன்று பொரிகடலை மாமி அத்தனை உக்கிரமாக இருந்தாள். அவள் சத்தத்திற்கு பயந்து வீட்டிற்கு ஓடினேன். அம்மா “பொரிகடலை மாமி யின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஓடிப் போய்விட்டார் என்று சொன்னாள். அதன் பின் மாமி ஒரு போதும் என்னை கடிதம் எழுத அழைக்க வில்லை.
சென்னைக்கு வந்த புதிதில் ஒரு நாள்.. வறுமை என்னைத் தின்று கொண்டிருந்த பொழுதில் அம்மாவிற்கு ஒரு போஸ்ட் கார்ட் எழுதிப் போட்டேன். இன்றைய பொழுது இனிதே கழிந்தது, அம்மா நாளைய வாழ்க்கை யார் கையிலோ எவர் பையிலோ..இந்த நான்கு வரி அம்மாவை சென்னைக்கு வர வைத்தது. கையில் ஒரு ஐந்தாயிரம் பணம் கொடுத்து நீ நல்லா வருவே மக்களே.. என வாழ்த்திவிட்டுச் சென்றாள். காகிதங்கள் உடைந்த நிலையில் ஒரு நூறு காதல் கடிதங்களை பத்திரமாக வைத்திருக்கிறாள் மனைவி.
காலம் மாறிவிட்டதறியாமல், எத்தா ஒரு கடிதம் எழுதிப் போட்டா என்னத்தா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள் அம்மா. கடிதம் எழுதும் பழக்கம் தொலைந்து போனது, தற்போது அம்மாவும்.. இனி யாருக்கு எழுதுவது...
தாமிரா
பாம்படப்பாட்டிகள் : காதுவளர்த்தல்
அது என்ன தண்டட்டி என்று இப்போது எனது பிள்ளைகளே கேட்கிறார்கள். அதனை பாம்படம் என்றும் சொல்வார்கள். அடியில் உருண்டைபோல் பெருத்து மேல்பக்கம் குழைவாக அதாவது பூட்டுபோடும் கொக்கிபோல இருக்கும். உண்மையிலேயே அது ஒரு பூட்டுத்தான். காதின் ஓட்டையில் கோர்த்து பூட்டிவிடுவார்கள். அதுபாட்டுக்கு ஆடிக்கொண்டே இருக்கும். சிலபேர் காதுக்கு இரண்டு இரண்டு தண்டட்டி அணிவதும் உண்டு. பணவசதி, காதின் கெட்டித்தன்மை அதில் வெளிப்படும்.
அதனை காது வளர்த்தல் என்பார்கள். அதனை வளர்ப்பதற்கென்று சிலபேர் அந்தக்காலத்தில் இருந்திருக்கின்றனர். அப்படி காதுவளர்த்து தருபவர்களுக்கு கூலியாக நெல், சோளம், கேழ்வரகு முதலிய தானியங்கள் தந்திருக்கிறார்கள்.
சிறுவயசில் காதுகுத்தியதும், ஒரு பத்துவயசிற்குப் பின் காதுகள் கொஞ்சம் கெட்டித்தன்மையடைந்த பிறகு காதுவளர்ப்பவரிடம் கொண்டுபோய்விடுவார்கள். அவர் காதின் ஓட்டையை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கும் வழி முறையினை செய்வார். ஒரு அங்குலம் விட்டத்துடன் துவாரம் காதில் விழுந்தபின் தனது கூலியை வாங்கிக் கொண்டு பெண்ணுக்கு தண்டட்டியை மாட்டிவிடுவார். எந்நேரமும் காதுகளில் ஆடிக்கொண்டிருக்கும் தண்டட்டி தனது எடை மற்றும் ஆட்டத்தின் இழுவையால் கொஞ்சம் கொஞ்சமாக காதின் தொங்கலைப் பெரிதாக்கிக் கொண்டே வரும் பெண்ணின் வயதைப்பொருத்து, அவள் அணிந்து வரும் நாட்களைப் பொறுத்து காதுகளின் நீளம் இருக்கும். இதில் சிலபேருக்கு காதுகள் அறுந்துவிடுவதும் உண்டு. ஆனாலும் ஒரு காலத்தில் இதுவும் ஒரு நாகரீகமாக உலாவந்தது. அத்தகு பெண்மணிகளை காணுகிற பாக்கியம் எத்தனைபேருக்கு வாய்த்திருக்கும் ? இப்போதெல்லாம் கிராமங்களில்கூட ஏதோ ஒன்றிரண்டு வயசாளிகளைப் பார்க்கமுடியுமானால் அதிர்ஷ்டம்தான்.
ம. காமுத்துரை.
தையல்காரர்கள் : தீபாவளிக் கடவுளின் அருள்
கோவில்பட்டி 1960-70 களில் ஒரு சிறிய நகரம். அங்கு இரண்டு பெரிய ஸ்பின்னிங் மில்கள் இருந்தன. என்னுடைய அப்பா ஒரு மில்லில் வேலை பார்த்தார். இரண்டிலும் குறைந்தது ஒரு ஐயாயிரம் தொழிலாளிகள் வேலை பார்த்தனர். தீபாவளி, பொங்கல், என்றால் மட்டும் தான் புதுச் சட்டை, டவுசர். எட்டாவது வகுப்பு தாண்டிய பிறகு தான் துணி எடுத்து தைக்கக் கொடுக்கிற வழக்கம் வந்தது. முதலில் அப்பா வழக்கமாக தன்னுடைய சட்டைகளை அவருடைய நண்பரான கம்யூனிஸ்ட் தையல்காரரிடம் தான் கொடுப்பார். முதலில் நானும் அவரிடமே கொடுத்தேன். அவர் அளவு எல்லாம் எனக்கு எடுத்ததில்லை. சீத்தக்குஞ்சி மாதிரி இருந்த எனக்கு எதுக்கு அளவு என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அது எனக்கு கௌரவக்குறைச்சலாக இருந்தது. அதனால் அழுது புரண்டு என்னுடைய சட்டை, டவுசரை மட்டும் கிருஷ்ணன் கோவில் சத்திரத்து வளாகத்திலிருந்த ராஜ் டெய்லர்ஸ் கடையில் கொடுத்தேன். என்னைச் சுத்திச் சுத்தி வந்து சட்டை, டவுசருக்கு அளவு எடுத்தார். ஒரு கொயர் நோட்டில் என்னவோ நம்பர்களை எழுதினார். பெயரைக் கேட்டு எழுதிக்கொண்டார். ரெம்பப்பெருமையாக இருந்தது. அப்புறம் போட்டாரே ஒரு குண்டை. ” தம்பி..தீவாளிக்கு முதநா ராத்திரி எட்டு மணிக்கு வந்து வாங்கிக்கோ “ அதுவரை இருந்த கம்பீரம் போய்விட்டது. “ அண்ணே..அண்ணே.. சீக்கிரம் கொடுங்கண்ணே.. தீபாவளிக்கு ஊருக்கு போய்ருவம்ணே..” என்று வாய்க்கு வந்ததைச் சொல்லிப்பார்த்தேன். அவர் தெளிவாய் சொல்லி விட்டார். “ துணி ஏகப்பட்டது கெடக்கு.. எப்படி முடிக்கப்போறேன்னு தெரியல.. தம்பி தெரிஞ்ச பையனா இருக்கேன்னு தான் வாங்குறேன்” என்று பிகு பண்ணினார். என்ன செய்ய முடியும்? ஒருவேளை முடியாதுன்னு சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டால்? “ அண்ணே தீவாளி முதநா கரெக்டா எட்டு மணிக்கு வந்திருவேன்..ரெடியா வைச்சிருங்கண்ணே..” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். தீபாவளி வர இருந்த ஒரு வாரமும் இதே சிந்தனை தான்.
அன்றைக்கு கடைக்கு முன்னால் போய் நின்றேன். பார்த்தால் என்னை மாதிரி ஒரு பத்துப்பேர் கடையை அடைச்ச மாதிரி அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர் என் துணியைத் தைத்திருக்கவில்லை. எனக்கு அழுகை வரத்தொடங்கியது.
“எப்பண்ணே கிடைக்கும் ? “ என்று கேட்டேன். அவர் இறுக்கமான முகத்திலிருந்த வாயைத் திறந்து, “ காலையில் ஆறு மணிக்கு வந்து வாங்கிக்கோ “ என்று சொன்னார். நான் எதுவும் பேசாமல் அழுகையை அடக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம் சொன்னேன். அவ்வளவுதான் என்னை வசவுக்காடு உரித்து விட்டார்கள். அத்துடன் என்னைக் கூட்டிக் கொண்டு ராஜ் டெய்லர்ஸ் கடைக்குப் போய் அந்த டெய்லருக்கு வசவு. அவ்வளவு தான். டெய்லர் அண்ணன் பயந்து விட்டார். எல்லாவேலையையும் நிறுத்தி விட்டு என் துணியை எடுத்து வெட்ட ஆரம்பித்தார். அப்படியே,“ எக்கா நீங்க வீட்டுக்குப்போங்க..தம்பி இருக்கட்டும்..கொடுத்து விடுதேன்..” என்று சொல்லி என்னுடைய அம்மாவை அனுப்பி வைத்தார். அதன் பிறகு இரண்டு மணிநேரம் இருந்து வாங்கிட்டு தான் வந்தேன்.. சும்மா சொல்லக்கூடாது. அவசர அவசரமாகத் தைத்திருந்தாலும் அம்சமாக தைத்திருந்தார் அந்த அண்ணன். அதற்குப் பிறகு கல்லூரி முடியும் வரை அவரிடம் தான் என்னுடைய துணிகளைத் தைத்தேன் என்றாலும் அந்தத் தீபாவளிக்கு நான் அடைந்த பதட்டமும் கிடைத்தபிறகு நான் அடைந்த மகிழ்ச்சியும் இன்று வரை அடைந்ததில்லை.
இது ஆயத்த ஆடைகளின் காலம். இப்போதும் ராஜ் அண்ணன் இருக்கிறார். பழைய கிழிசல்களைத் தைத்துக் கொண்டு..பழைய துணிகளை ஆல்டர் செய்து கொண்டிருக்கிறார். அவர் கண்களில் பழைய கனவுகளின் சாயம் நிறமிழந்து விட்டது. அவரும் ஒரு காலத்தில் கலைஞனாக இருந்திருக்கிறார் என்ற சாயல் அவர் பழைய துணிகளிலும் செய்கிற ஜாலங்களில் தெரியும்.
உதயசங்கர்
மாட்டுவண்டி : காலச்சக்கரம்
ஸ்டார்ட் செய்ய சாவி கிடையாது,ஓட்டுவதற்கு ஸ்டீயரிங் கிடையாது,மேடு பள்ளங்களில் சொகுசாக பயணிக்க காற்றடைத்த சக்கரங்கள் கிடையாது,வேகத்தை கூட்ட குறைக்க கிளட்ச், கியர், பிரேக் கிடையாது. ரிலாக்ஸ்டாக அமர்ந்து பயணிக்க குஷன் இருக்கைகளும், நெக் ரெஸ்டும் கிடையாது.. இப்படி எதுவும் இல்லாத இந்த வண்டிக்கு பெயர்தான் மாட்டுவண்டி..அந்த வண்டியில் பயணித்த காலங்களில் அது கொடுத்த மகிழ்ச்சியை கொடுக்க இன்று சாலையில் பயணிக்கிற எந்த வண்டியாலும் முடியாது. அது ஒரு கனாக்காலம்.
வண்டி ஓடும்போது, பின் பக்கம் துருத்திக் கொண்டிருக்கிற பலகைகளில் தொங்கியபடி பயணிக்கிற குழந்தைகளின் குதூகலத்தை பார்த்ததுண்டா? மரச்சக்கரத்தின் குறுக்கு கட்டைகளின் கால்வைத்து, ஓடிக் கொண்டிருக்கிற வண்டியில் லாவகமாக ஏறியதுண்டா? பாரம் சுமக்கும் பலகையின் அடிப்பக்கத்தில் மாடுகள் உண்பதற்காக கொண்டு செல்லப்படும் துணியில் கட்டிய வைக்கோல் படுக்கையில் உறங்கியபடியே பயணித்தது உண்டா? அல்லது பிரம்மாண்டமான வைக்கோல் பாரத்தின் மீதமர்ந்து பயணித்ததுண்டா? குறைந்தபட்சம் இரவு நேரத்தில், நிலவொளியில் வரிசையாக செல்லும் மாட்டு வண்டிகளின் கீழ் தொங்கும் லாந்தர் விளக்குகளையாவது ரசித்ததுண்டா? இவையெதுவும் இல்லாது போனால் எங்காவது பயன்பாடில்லாமல், அடுப்புக்கு விறகாக்க மனம் வராமல், சுவரோரமாய் சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மாட்டு வண்டியோடு சேர்ந்து ஒரு புகைப்படமேனும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த தலைமுறையிடம் மனதார பீற்றிக்கொள்ளலாம், நானும் மாட்டு வண்டியில் பயணித்திருக்கிறேன் என..
ஆர்.ஆர்.தயாநிதி
தமிழ் பேசும் சர்வர் :க்யா ஹை?
தமிழ்நாட்டு உணவுவிடுதிகளில் இன்று அருகி வரும் விஷயங்களில் ஒன்று தமிழ் பேசும் சர்வர்கள். குக்கிராமங்கள் வரை விடுதிகளில் இந்தி பேசும் வட இந்தியர்கள் சர்வர்களாக வேலை செய்கிறார்கள். தமிழ் பேசும் சர்வரைத் தேடியதில் பிரகாஷ் சிக்கினார். 35 வருடமாக சென்னையில் பாம்குரோவ் விடுதியில் உள்ள உணவகத்தில் உணவு பரிமாறும் தொழிலில் இருக்கிறார். அவரிடம் பேசியபோது “ நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். அப்பா ஹோட்டல் வைத்திருந்தார். அந்த தொழில் நலிவடைந்தது.வேறு வழியில்லை, வீட்டிற்கு மூத்த பையன், குடும்ப பொறுப்புகள் இருந்தது. வேறு வேலை கிடைக்காமல் இந்த வேலையில் வந்து சேர்ந்தேன்.
1981 -ல் இந்த தொழிலுக்கு வரும் போது 400 ரூபாய் சம்பளம். வாடிக்கையாளர்களை பொறுத்த வரை இந்த தொழிலில் பரிமாறும் பக்குவம் மிகவும் முக்கியம். எனக்கு தொலைபேசியில் அழைத்து நீ இருக்கிறாயா என்று கேட்டுக்கொண்டு வரும் வாடிக்கையாளர்கள் இப்பவும் உள்ளனர். பொதுவாக முன்புபோல் இப்போதைய நிலை இல்லை. சாப்பிட்டு முடித்துவிட்டு அன்பளிப்பாக பணம் கொடுக்க நிறைய யோசிக் கிறார்கள்.
தற்போது பரிமாறும் வேலையில் பீகார் ஆட்கள், நேபாளிகள் அதிகம் உள்ளனர். மேலும் அவர்களிடம் பத்து மணி நேரம் வேலை வாங்கலாம். தங்கும் இடம், சாப்பாடு கொடுத்தால் போதும், அதிக சம்பளம் கொடுக்க வேண்டாம் என பல காரணங்கள். நம் ஊர்க்காரர்கள் நிறைய பேர் இந்த வேலைக்கு வருவதில்லை, வந்தாலும் நீண்ட நாட்கள் இருப்பதில்லை. இப்போதைய நிலையில் இந்த வேலைக்கு வரும் நம் ஊர்காரர்களுக்கு சோம்பேறித் தனம் அதிகம்.” என்கிறார். பிரகாஷுக்கு பையன், ஒரு பெண். பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது, பையன் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.
திருமால்
ஒற்றை ஸ்கிரீன் தியேட்டர் : இழந்த கொண்டாட்டம்
இன்றைக்கு போல ஊரில் உள்ள தியேட்டரில் எல்லாம் ஒரே படம் கிடையாது. ஒவ்வொரு தியேட்டருக்கு பின்னாலும் ஒரு நடிகரின் நிழலிருக்கும். அடையாளம் இருக்கும். வேர்த்து வழிய, சண்டைப் போட்டு குட்டியூண்டு கவுண்டரில் நான்கு கைகளுக்கு இடையே பணம் கொடுத்து, வாங்கும் கசங்கிய டிக்கெட்டுகளை கைகளை உயர்த்தி இறுக்கமாய் பிடித்தபடி வந்த வெற்றி தருணம். படம் பிடித்திருந்தால் கொண்டாட்டமும், பிடிக்கவில்லையென்றால் வாயார கமெண்ட்டும் அடிக்கும் சுதந்திரம். தோரணம் கட்டி, மேளம் கொட்டி, ஆட்டம் பாட்டத்துடன் கிடைக்கும் உற்சாக பொங்கும் தருணங்கள். தியேட்டர் வாசலில் அடுத்த காட்சிக்காக காத்திருக்கும் ரசிகர்களிடையே படம் மொக்கையாய் இருந்தாலும் “நான் பார்த்துட்டேன்” என்கிற பெருமிதத்துடன் “படம் சூப்பர்” என்று கத்தியபடி ஓடி வரும் உசுப்பேத்திவிடும் நரித்தனம் கொடுக்கும் மிதப்பு. அடுத்த நாள் காலையிலோ, அல்லது மாலையிலோ படம் ஓடும் தியேட்டர் வாசலில் வந்து நின்று கொண்டு “நான் மொத நாளே பாத்துட்டேன் மச்சி. அன்னைக்கே சொன்னேன் இது ஆகாதுன்னு” என்று கூட்டம் இல்லாததால் வருத்தத்தில் இருப்பவனை சொறிந்துவிட்டு போகும் சுகம். இவை எதுவும் இன்றும் இல்லை. மல்டிபிளெக்ஸ்கள் என்ற பெயரில் வெறும் 200 பேருடன் படம் பார்க்கும் அவலம். ஆடம்பர பார்க்கிங் எனும் எண்ட்ரிஃபீ. செல் போன் ரிங்கினாலும் முகம் சுளித்து திரும்பிப் பார்த்துவிடுவார்களோ என்று சட்டென அணைக்கத் தோன்றும் பதற்றம். வசதிகளும் தரமும் அதிகம்தான் என்றாலும் மல்ட்டி ப்ளெக்ஸ் மூலமாய் நாம் இழந்தது சினிமா எனும் கொண்டாட்டத்தை.
கேபிள் சங்கர்
ஆகஸ்ட், 2016.